ஆடிப்பட்டம் (2)

வயிற்றுப்பாடு! ஹும்…

"நான் வேலை வாங்கித் தர்றேன். போறீங்களா?" எப்படியேனும் செல்விக்கு ஒரு சராசரி வாழ்க்கை அமைந்துவிடாதா என்ற ஆதங்கத்தில் கேட்டேன்.

"எனக்கு என்னங்க தெரியும்?" ராதாவுக்கு என் யோசனையில் பிடிப்பில்லை.

"சமைக்கத் தெரியுமில்லை?"

"சமையல் வேலைக்கா?" ராதா தன் சுயமரியாதைக்கு இழுக்கு வந்துவிட்டதைப் போலக் கேட்டாள்.

அவளின் தன்மானத்தின் அளவீடு எனக்கு விநோதமாய் இருந்தாலும் அவளை நான் வற்புறுத்த விரும்பவில்லை.

"தாலி ஏறின பிறகு பிரிச்சு என்னங்க ஆகப் போகுது?" சாக்கு சொன்னாள். அவள் அன்பழகனோடு தன் பெண்ணை அனுப்ப முடிவு செய்துவிட்டள் எனத் தெளிவாகத் தெரிந்தது.

"உங்க பெண்ணைக் காணும்னு புகார் தந்தீங்க. கண்டுபிடிச்சுக் கொடுத்துட்டோம். இனி உங்க பாடு. அவள் பாடு" நான் தூண்டிலைப் போட்டுப் பார்த்தேன்

பொறுப்பை நான் அவள் மேல் சுமத்தியதும் அதிர்ந்து குழம்பினாள். பொறுப்பைக் கையாளுகிற திறமை இருந்திருந்தால் இத்தனை நடந்திருக்காதே!

"அவ எங்கேயாவது நல்லா இருக்கட்டுங்கம்மா. நீங்கதாம்மா எப்படியாவது அவளைக் காப்பாத்தணும்", என்று என் காலில் விழப்போனாள்.

அவளை அவசரமாய்த் தடுத்து, "உங்க பொண்ணு எங்கேயாவது சந்தோசமா இருக்கணும். அவ்வளவுதானே?" என்றேன். ‘ஆமாம்’ என்று தலையசைத்தவள் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, "அவரு சாப்பிட வர்ற நேரமாச்சும்மா.." எனப் பதற்றமானாள்.

நான் யோசனையாய், "சரி, நீங்க கிளம்புங்க. தேவைன்னா சொல்லி அனுப்புறேன்" என்றதும் அவள் தயக்கத்தோடு, "செல்வி எங்க இருக்கான்னு அவருக்குத் தெரிய வேண்ட்டாம்மா" என்ற வேண்டுகோளை வைத்தாள்.

"சரி, நான் பாத்துக்கறேன்" என்று நான் உறுதியளித்ததும் அவள் முகத்தில் நிம்மதி பரவியது. கலங்கிய கண்களுடன் செல்வியைப் பார்த்து, "பாத்து, பத்திரமா இருடி" என்று சொல்லிவிட்டு வெளியேற யத்தனித்தவள் நின்று "கொஞ்சம் பாத்துக்கங்க" என்றாள் அன்பழகனிடம்.

"ரொம்ப நன்றிங்கம்மா" என்று என்னைப் பார்த்து மூன்றாவது முறையாய்ச் சொல்லிவிட்டு விடுவிடுவெனச் சென்றவளைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு,

"உங்க வீட்ல என்ன சொல்வாங்க, அன்பழகன்?" என்றேன் அவனிடம் திரும்பி.

என்னைப் பார்க்க தைரியமில்லாமல், "சொந்தத்தில பொண்ணு இருக்குங்க, மேடம். ரொம்ப தகராறு பண்ணுவாங்க" என்றான்.

இவனோடு இந்தப் பெண்ணை அனுப்பி வைத்தால் இவளைக் கொலை செய்தால் கூட கேட்க ஆளில்லை என்ற உண்மை எனக்குக் கசந்தது. மனசொப்பவில்லை.

"ரெண்டு பேரும் நெஜமாவே லவ் பண்றீங்களா?"

என் கேள்வி அவர்களுக்கு அபத்தமாய்த் தெரிந்திருக்க வேண்டும். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி ஆமெனத் தலையசைத்தார்கள். அவர்களின் கண்களில் நான் காதலைத் தேடினேன்.

"சட்டப்படி கல்யாணம் நடக்கணும்னா இன்னும் நாலு வருஷம் ஆகணும். ரெண்டு பேரும் வெயிட் பண்ணுவீங்களா?"

சரியெனத் தலையசைத்தார்கள் அவசரமாய். தங்கள் காதலை நிரூபிக்க வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தது அந்த அவசரத் தலையசைப்பில்.

"எனக்குத் தெரிஞ்ச பெண்கள் விடுதில கொண்டு விடுறேன், இருக்கறியா?" என்றேன் செல்வியைப் பார்த்து.

செல்வி மிரட்சியுடன், "நான்… இவர் கூட போறேங்க, மேடம்" என்றாள். விளைவுகளைக் குறித்து யோசிக்கிற பக்குவமில்லாத வயசு.

"நாளைக்கு இவங்க வீட்லருந்து வந்து உன்னைத் துரத்திவிட்டால் என்ன செய்வே?" என்றேன்.

செல்வி அன்பழகனின் முகத்தைப் பார்த்தாள்.

"அப்படியெல்லாம் விட்டுற மாட்டேங்க, மேடம்" என்றான் அவன் அவளுக்கு ஆதரவாக. ஆனால் அவன் குரலிலிருந்த நடுக்கத்தை என்னால் உணர முடிந்தது.

"நாளைக்கே இவங்கம்மா ஏதோ கட்டாயத்தில மனசு மாறி உங்க மேல புகார் கொடுத்தா, நீங்க ஜெயிலுக்குப் போகணும், தயாரா?"

ஜெயில் என்றதும் நான் எதிர்பார்த்தபடியே அன்பழகன் மிரண்டான். என்னை நிமிர்ந்து பார்த்து ஏதோ சொல்ல முயற்சிப்பதும் பின் தலை குனிந்து கொள்வதுமாய் இரண்டு நிமிடங்களை ஓட்டினான். அவனை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல், "சேவாசிரமம் தெரியுமா?" என்றேன்.

"கேள்விப்பட்ருக்கேங்க, மேடம்" என்றான்.

"அங்கதான் விடலாம்னு இருக்கேன். நல்லா பாத்துக்குவாங்க" என்று உறுதியளித்தேன்.

செல்வி மெல்லிய குரலில் விசும்ப ஆரம்பித்தாள். அன்பழகன் மன்னிப்புக் கேட்கிற பாவனையில், "நான் உன்னை அடிக்கடி வந்து பாக்கறேன், செல்வி" என்று ஆறுதல் சொன்னான்.

கான்ஸ்டபிளிடம் பணம் கொடுத்து ஒரு சுரிதார் வாங்கி வரச் சொல்லி செல்வியை மாற்றிக் கொள்ளச் சொன்னேன்.
"நகையெல்லாம் யாருது?" என்றேன்.

"அவர் வாங்கிக் கொடுத்தது" என்றாள்.

"கழற்றிக் கொடுத்துரும்மா"

"கம்மல் மட்டுமாவது போட்டுக்கட்டும், மேடம்" என்றான் அன்பழகன். கம்மல் தவிர்த்து எல்லாவற்றையும் கழற்றி அவனிடம் நீட்டினாள். கழுத்தில் மஞ்சள் கயிறு மட்டும் பளிச்செனத் தெரிந்தது.

"இது வேணுமா?" என்றேன்.

தாலியைக் கையில் பிடித்துக் கொண்டு, உதடுகள் துடிக்க, "ப்ளீஸ், மேடம். தாலி இருக்கட்டும், மேடம்" என்றவளைக் கண்டு நான் உள்ளுக்குள் நகைத்துக் கொண்டேன். சினிமாவும் தொலைக்காட்சியும் செய்கிற வேலை!

ஒரு வாரம் கழித்து ஒரு மாலை வேளை அன்பழகனின் வீட்டுக்குப் போனபோது வாயிலில் மிதிவண்டிகளும் இரு சக்கர வாகனங்களும் நிறைந்திருந்தன. ஜன்னல் வழியே பார்த்தேன். அன்பழகன் பொறுப்பாய் பாடம் நடத்திக் கொண்டிருந்தான். ஒரு வாரத் தாடியில்லை, கலைந்த தலையில்லை, கசங்கிய உடைகளில்லை, கண்களில் சோகமில்லை. எனக்குத் திருப்தியாயிருந்தது. பாடம் முடியும் வரை காத்திருந்தேன்.

மாணவர்கள் வெளியேற ஆரம்பிக்கவும் உள்ளே நுழைந்த என்னைப் பார்த்ததும், "மேடம், ஏதும் பிரச்சனையா?" என்றான் சற்று பதற்றத்தோடு. சுற்றுமுற்றும் பார்த்து மீதியிருந்த மாணவர்களை வெளியிலனுப்பினான்

"ஒண்ணுமில்லை, அன்பழகன். உங்க ஒய்பைப் பாக்கப் போறேன். வர்றீங்களா?" என்றேன் புன்னகையில் கேலி சேர்த்து.

அவன் சில விநாடிகள் தயங்கிவிட்டு என்னுடன் கிளம்பினான். காரில் செல்லும்போது வேறேதும் பேசிக் கொள்ளவில்லை. அவன் தீவீர யோசனையிலிருந்ததைக் கவனித்தேன்.

சேவாசிரமத்திலிறங்கியதும் வார்டன் புவனா வாசலில் வந்து வரவேற்றழைத்துப் போனார்.

"செல்வி எப்படி இருக்கா, புவனா?" என்று விசாரித்தேன்.

"முதல் ரெண்டு நாள் யார் கிட்டேயும் பேசாமல் கொஞ்சம் அழுதுக்கிட்டேதானிருந்தா, மேடம். ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சதுமே கொஞ்ச கொஞ்சமா சரியாயிட்டா. இப்பக் கூட ஸ்கூல் ப்ளே கிரெண்டல கோகோ மேட்ச் பாத்துக்கிட்டிருக்கா, மேடம். கூட்டிட்டு வரச் சொல்லட்டுங்களா? என்ற புவனாவிடம், வேண்டாம், புவனா. அவளுக்குத் தெரியாம நாங்க அவளைப் பாக்க முடியுமா?" என்றேன்.

"முதல் மாடி க்ளாஸ் ரூம்லருந்து ஜன்னல் வழியா பார்த்தா நல்லா தெரியும், மேடம்"

கைதட்டலும் ஆரவாரமுமாய் இருந்த கூட்டத்தில் செல்வியைத் தேடினோம் ஜன்னல் வழியே.

"மேடம், இந்தாதானிருக்கா பாருங்க" புவனா காட்டிய திசையில் ஒரு இருபதடி தூரத்தில் செல்வி தெளிவாய்த் தெரிந்தாள். கைதட்டிச் சிரித்துக் கொண்டிருந்தாள். அருகிலிருந்த பெண்ணின் தோளில் கைவைத்து எம்பிக் குதித்தாள். "ஓட்றீ… ஓடு, ஓடு" என்று கூச்சலிட்டாள்.

பட்டாம்பூச்சி போலப் படபடத்துக் கொண்டிருந்த அவளின் வெறுமையான கழுத்தைக் கவனித்த நான், அன்பழகனைத் திரும்பிப் பார்த்தேன். அவன் சலனமற்று செல்வியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

About The Author