இப்பவும் நான் தயார்!

நிமிர்ந்து பார்க்காமலே எதிரில் நிற்பவள் விஜி என்று உணர முடிந்தது. குனிந்திருந்த முகத்தின் எதிரே மருதாணியிட்ட விரல்களை அசைத்தாள்.

வேறு வழி? நிமிர்ந்து பார்த்தேன்.

"என்ன விஜி?"

உரிமையாய் இருக்கையை இழுத்துப் போட்டு என் எதிரில் அமர்ந்தாள்.

"என் கேள்விக்கென்ன பதில்.." என்றாள் ராகமாய் இழுத்து.

"எது?" என்றேன் புரியாதவன் போல்.

"மாலை சூடும் மணநாள்.." மீண்டும் மெட்டுக்கு பேச்சு.

காதலைச் சொல்லி கல்யாணம் எப்போது என்று துணிந்து ஒரு பெண் கேட்ட பிறகும் என் மௌனம் தப்புத்தான். ஆனால்..

"இன்னிக்கு என்னோட வீட்டுக்கு வரியா?" என்றேன்.

"ஹை.." விஜியின் முகத்தில் பூரிப்பு, என் முகம் இறுக்கமாய்..

"அப்புறம் பார்க்கலாம் விஜி.."

உற்சாகமாய் எழுந்து போனாள்.

வீட்டு வாசலில் அம்மா நின்றிருந்தாள். என்னுடன் ஒரு பெண் வருவதில் திகைப்பு.

"அம்மா! இவங்க என் கொலீக். பேரு விஜி."

"உள்ளே வாம்மா.." ஹாலில் அமரச் சொன்னாள்.

விஜி எதிர் சுவரில் கனத்த பிரேமில் சின்ன விளக்கு ஒளிரும் என் அப்பாவின் புகைப்படத்தைப் பார்த்தாள்.

"நீங்க மட்டுதானா வீட்டுல..?"என்றாள் என்னிடம்.

அம்மா சமையலறைக்குள் போய் இருந்தாள். நான் பதில் சொல்வதற்குள் ‘ழே..’ என்று சப்தம் கேட்டது.

விஜி திடுக்கிட்டுத் திரும்பினாள்.

இடுப்புக்குக் கீழ் சுவாதீனமற்றவனாய் தரையோடு நகர்ந்து வந்தவனைத் திகைப்புடன் பார்த்தாள்.

"குமார்.. வணக்கம்.." என்றான் என்னிடம்.

"சேகர்.. இந்த ஆன்ட்டிக்கு நமஸ்தே சொல்லு.." என்றேன்.

சற்று கோணலாய் உதட்டைப் பிதுக்கி கையை உயர்த்தினான். நகர்ந்து விஜியைத் தொட முயன்றான்.

"சேகர்.. இங்கே வா" என்றேன் குரலை உயர்த்தி.

"இ..இருக்கட்டும். இவர் யாரு?" என்றாள்.

"என் தம்பி.. பிறவியிலேயே இப்படி. ஆனால் சூட்சுமம் அதிகம். ஒரு தடவை சொன்னால் போதும் டக்குன்னு புடிச்சுப்பான்…"

"ஓ.." என்றாள்.

"போன வருசம் திடீர்னு இவனுக்கு உடம்பு சரியில்லே. டெஸ்ட் பண்ணதுல கிட்னி பெயிலியர்ன்னு தெரிஞ்சது. என்னோடது பொருந்தி வந்ததால… கொடுத்துட்டேன்."

விஜி எதிரே அம்மா வைத்த காபி, பிஸ்கட் தட்டைக் கூடக் கவனிக்காமல் என்னையே வெறித்தாள்.

அம்மா சொன்னாள். "நாங்ககூட எவ்வளவோ சொன்னோம். குமார்தான் பிடிவாதமாக கொடுத்துட்டான்." அம்மாவின் குரலில் உள்ளூர பெருமிதம்.

நான் சிரித்தேன். "இது ஒண்ணும் பெரிய சாதனை இல்லே. மனுஷனாய் பொறந்தவன் உடன் பிறப்புக்கு செய்த சாதாரணக் கடமை. எனக்கொரு கஷ்டம்னா இப்ப எங்கம்மா உதவ மாட்டாங்களா?"

விஜி அவனையே பார்த்தாள். சேகர் மீண்டும் கையை உயர்த்தி நமஸ்தே சொன்னான்.

"காபி குடிங்க.." என்றேன்.

அம்மாவின் பக்கம் திரும்பினேன்.

"இவங்க என்னைக் கல்யாணம் செய்துக்க பிரியப்பட்டாங்க. அதனாலதான் இங்கே வரச் சொன்னேன்."

மறுபக்கம் திரும்பினான். "விஜி..எனக்கு என் தம்பின்னா உசிரு. அவனோட விதி அப்படின்னு கை கழுவற உத்தேசம் எனக்கு இல்லே. என்னால முடிஞ்சதை செய்யவே ஆசை. இப்ப சொல்லுங்க. இப்ப கூட நீங்க தயார்தானா..?"

விஜி என்னைப் பெருமையாகப் பார்த்தாள்.

"இப்பவும் நான் தயார். இந்த மாதிரி நல்ல மனசு உள்ளவங்களுக்கு இவங்க நல்ல குணமே அவங்க வாழ்க்கையிலே ஒரு தண்டனையாக ஆகக் கூடாது. இப்பவும் என் மனசு மாறலே. இன்னும் பிடிவாதமாக உங்களை நேசிக்கிறேன்.." என்றாள்.

சேகர்.. "ழே.." என்றான் சந்தோஷமாக!”

About The Author