இறந்தவன் எழுதுகிறேன் (1)

தயவு செய்து புதிர் கொள்ளாதீர்கள். நீங்கள் நினைக்க நினைப்பது சரிதான்.

நீங்கள் இதை வாசிக்கிற நேரத்தில், இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கிற நான் இறந்து போயிருப்பேன்.

என்னைப் போன்ற இளம் ஸீனியர் ஸிட்டிஸன்களுக்கும், ஸீனியர் ஸிட்டிஸன்களாய் அங்கீகாரம் பெற வெய்ட்டிங்கில் இருக்கிற கனவான்களுக்கும் ஞாபகமிருக்கலாம், அறுபதுகளின் ஆரம்பத்தில் குமுதத்தில் வந்த இறந்தவன் பேசுகிறேன் என்கிற புதுமையான சிறுகதையை.

அந்தக் கதையின் கதாநாயகன் ஒரு விஞ்ஞானி. தன் மேலேயே பரிசோதனை செய்து பார்த்துக் கொள்கிற ஒரு வித்யாசமான விஞ்ஞானி. தன்னுடைய பரிசோதனைக்குத் துணையாய்த் தன்னுடைய இளம் மனைவியை அமர்த்துகிறான்.

ரெண்டாந்தாரமாய்க் கட்டிக் கொண்ட இளம் மனைவி.
இறந்து போன மனிதனைத் திரும்ப உயிர்ப்பிக்கிற பரிசோதனை.
கதாநாயகன் ‘இறந்து போய்’ப் படுத்திருக்கிறான்.

படுப்பதற்கு முன்னால் பதிவு செய்யப்பட்ட அவனுடைய குரல், டேப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது. மனைவிக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கிற குரல். அந்தக் குரல் பணிக்கிறபடி இவள் செய்து கொண்டே வந்தால், அதன்படியே ரசாயனங்களை ‘இறந்து போன’ உடம்பில் செலுத்திக்கொண்டே வந்தால், கதாநாயகன் திரும்பவும் உயிர் பெறுவான்.

டேப் ஓடிக் கொண்டே இருக்கிறது. கதாநாயகனின் குரல் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டேயிருக்கிறது. ஆனால் நம்ம கதாநாயகியோ ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்கிறாள்.

கட்டளைகள் நிறைவு பெற்றுக் கொஞ்ச நேரம் டேப் சத்தமில்லாமல் சுத்திக்கொண்டே இருக்கிறது. பிறகு, கதாநாயகனின் குரல் தொடர்கிறது, பயங்கர சிரிப்பொலியோடு.

என்னுடைய குரலின் கட்டளைப்படி நீ செய்தேயிருக்க மாட்டாய் என்று எனக்குத் தெரியும் பெண்ணே. நான் சொன்ன ரசாயனங்களை, சொன்ன நேரத்தில் என்னுடைய உடம்பில் நீ சேர்க்காததால் பரிசோதனை தோல்வியடைந்து விட்டது. பரிதோதனை தோல்வியடைந்ததேயொழிய, பரிதாபத்துக்குரிய பெண்ணே, நான் வெற்றியடைந்து விட்டேன். உன்னையும் என்னையும் தவிர ஒரு மூன்றாவது நபர் இந்த சோதனைச்சாலைக்குள்ளே பிரவேசித்தால் இதன் கதவுகள் தானாக மூடிக் கொள்ளும். திறக்கவே திறக்காது. இப்போது உன்னோடு ஒரு மூன்றாவது நபர் இருக்கிறானென்பது எனக்குத் தெரியும். இன்னும் சில விநாடிகளில் இந்த சோதனைச் சாலை பற்றியெரியப் போகிறது. வெடித்துச் சிதறப்போகிறது. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் – உனக்கும் உன்னுடைய கள்ளக்காதலனுக்கும்.

அடுத்த நாள் காலையில் கருகிய உடல்கள் மூன்று கண்டெடுக்கப்பட்டன. அந்த மூன்றாவது உடல் யாருடையது என்று அறியவே முடியவில்லை என்று கதை முடியும். அந்த விஞ்ஞானி கம் கதாநாயகன் கூட ஒரு ஸீனியர் ஸிட்டிஸன்தான்.

ஸீனியர் ஸிட்டிஸன்களின் வாழ்க்கையே சோகமானதுதான்.
வாழ்க்கையின் முடிவு இன்னும் சோகமானது.
மரணம்.
முதியவர்களுக்கு மட்டுந்தானா மரணம்?
ஒட்டு மொத்த மனித குலத்துக்கே எதிர்காலம் என்பது மரணந்தானில்லையா?

நாளைக்குப் பிறக்கப் போகிற குழந்தைகளெல்லாம் கி.பி.2200ல் நிச்சயமாய் மறைந்து போயிருக்கும்! நூறாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்துவதெல்லாம் வாழ்த்தல்ல, வசவு.

"வாழ்த்து"ப் பெறுகிற அந்த ஆசாமிக்கு அந்த வாழ்த்து தப்பித்தவறிப் பலித்து விட்டதென்றால், நூறு வயசை எட்டி, கண் பார்வை மங்கி, காது மந்தமாகி, பற்களெல்லாம் கழண்டு கொண்டு, கை கால்கள் விழுந்து, தோல் சுருங்கி, எறால் மீன் மாதிரி உடல் சுருண்டு, படுத்த படுக்கையாகிப் போய், கட்டிலுக்கும் குடும்பத்துக்கும் பாரமாகி, சனியன் எப்போது போய்ச் சேரும் என்கிற சாபங்களைச் சுமந்து கொண்டு, இந்த நூறு வயசு வாழ்க்கை தேவை தானா?

நீண்ட நாள் வாழ்கிற பேராசை எல்லாருக்கும் இருக்கிறது.
ஆனால் முதுமை எய்த எவருக்குமே விருப்பமில்லை.

எப்படியும் சாகப் போகிறாய். என்றோ ஒரு நாள் சாகப் போகிறாய். கடைசிவரை கட்டிலைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு படுத்துக்கிடந்து, கல்லடிபட்டு, சொல்லடிபட்டுப் புறப்படுவதற்கு, காலாகாலத்திலேயே புறப்பட்டுப் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்தால் புண்ணியம் இல்லையா!

எவ்வளவு துரிதமாய் நீ செத்துப் போகிறாயோ, அதுவே நல்லது, உனக்கும் உலகத்துக்கும்.

***

நிற்க. திரும்ப அந்த விஞ்ஞானிக் கதைக்கு வருவோம்.

கல்லூரிக் காலத்தில் என்னை ரொம்ப ரொம்பப் பரவசங்கொள்ளச் செய்த சிறுகதை அது.

கதை இப்போது முக்கியமல்ல. இறந்தவன் பேசுகிறேன் என்கிற அந்தத் தலைப்புதான் முக்கியம்.

ஏனென்றால், அந்தத் தலைப்புதான் இறந்தவன் எழுதுகிறேன் என்கிற என்னுடைய இந்தத் தலைப்புக்கு இன்ஸ்ப்பிரேஷன்.

***

மரணம் என்பது ஒரு படுபயங்கரமான விஷயம்தான். ஆனால் மரணத்தை விடவும் படு படு படு பயங்கரமானது அந்தத் கடைசி நிமிட மரண வேதனை. அந்த இறுதி நேர இழுபறிக்கு இஸ்லாத்தில் அம்சமாய் ஒரு வார்த்தை வைத்திருக்கிறார்கள்.

சக்ராத்.

அந்த சக்ராத்தின் கொடுமையை நான் பல வருஷங்களுக்கு முன்பே கண்ணால் பார்த்து உணர முடிந்தது, பெங்களூரில் என்னுடைய தூரத்து சித்தப்பா ஒருவர் செத்துப் போக சபிக்கப்பட்டிருந்தபோது.

(தொடரும்)

About The Author