இறந்தவன் எழுதுகிறேன் (3)

"மஹாத்மா காந்திக்கி நரகம்னா, மஹாப்பாவி, ஒனக்கும் நரகந்தான்யா!"

வெலவெலத்துப் போன அந்த மௌலானா அதற்குப் பிறகு நம்ம வீட்டுப்பக்கம் தலை காட்டவே இல்லை. மசூதிக்குக் கூட வந்தாரோ இல்லையோ!

மஹாத்மாவின் இந்த மலரும் நினைவு மேலெழுகிறபோதெல்லாம் ஒரு குற்றவுணர்ச்சி தலையெடுக்கும், மூணு வருஷங்களுக்கு முன்பு வாங்கிய சத்திய சோதனையைப் புரட்டிக்கூடப் பார்க்கவில்லையே என்று.

மரணம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிற இந்தத் தருணத்தில், அது நேரும் முன் சத்திய சோதனையை வாசித்து முடித்து விட வேண்டுமென்கிற வேகத்தில், அந்த அறுநூத்தியஞ்சு பக்கங்களையும் ஆறே அமர்வுகளில் படித்து முடித்தேன்.

ஆச்சு.
பெண்டிங் ஒர்க் எதுவும் கிடையாது.
கைவசமிருந்த சொற்ப ஆயிரங்களைத் தேவைப்பட்ட மூணு பேருக்கு தர்மம் பண்ணியாச்சு.
வாட்ச்மேன் அஜீஸ் பாய்க்கு ஆயிரம்.
ப்ளம்பர் சங்கருக்கு ரெண்டாயிரம்.
பூக்கார ஜோஸஃபைனுக்கு மூணு.

மிச்ச ஐயாயிரத்தை ஒரு கவரில் போட்டுத் தலைமாட்டில் வைத்துக் கொண்டு படுத்துக் கொள்ள வேண்டும்.

கவரின் மேலே வாசகம்: "என்னுடைய ஈமக் கிரியைகளுக்கு."

இப்போது உட்கார்ந்து இதை எழுதிக் கொண்டி ருக்கிற நான், இந்தக் கதையை எழுதி முடித்துத் தபாலில் சேர்த்த பின்னால் சில மணி நேரங்கள்தான் ஜீவித்திருக்கப் போகிறேன்.

இந்தக் கதை பிரசுரம் பெறும் முன் செத்துப் போய்விடப் போகிறேன்.

***

அறுபத்தெட்டு வயசில் மரணித்து விடுவாய் என்று ஒரு ஜோஸ்யன் சொன்னான், பத்து வருஷம் முந்தி.

ஜோஸ்யம் பார்க்கிறது இஸ்லாத்தில் ஹராம் என்று சொல்லப்பட்டிருந்தாலும், சும்மா விளையாட்டுப் போல ஒரு ஜோஸ்யனிடம் கையை நீட்டினேன், சிநேகிதர்களோடு. அந்த ஜோஸ்யன் 68 என்று சொன்னதற்கு ஸெகண்ட் ஒப்பீனியன் பெறுவதற்காக இன்னொரு ஜோஸ்யனிடம் போனேன், சிநேகிதர்களுக்குத் தெரியாமல்.

முதல் ஜோஸ்யன் சொன்னதை ரெண்டாவது ஜோஸ்யனிடம் சொல்லிக் கருத்துக் கேட்டேன்.

ரெண்டாவது ஜோஸ்யன் ஒரு படி மேலே போய் சரியாய் அறுவத்தெட்டாவது பிறந்த நாள் அன்றைக்கு மண்டையைப் போடுவாய் என்றான்.

க்யூரியாஸிட்டி தாளாமல் மூணாவதாய் ஒரு ஜோஸ்யனிடம் போய், முதல் ரெண்டு பேர் சொன்னதைச் சொன்னபோது அந்த ஆள், ரெண்டாவது ஜோஸ்யன் சொன்னதை ஆமோதித்தான்.

அறுவத்தெட்டாவது பிறந்த நாளில் மரணம்.
இன்றைக்குப் பதினஞ்சாந் தேதி.
நாளைக்குப் பதினாறு.
பதினாறாம் தேதி எனக்குப் பிறந்த நாள்.
68 ஆவது பிறந்த நாள்.

நான் ரெடி.

ஆனால் நாளை நிகழப் போகிற என்னுடைய மரணம் எப்படி நேரப்போகிறது என்பது இன்னும் ஒரு புதிராய்த்தானிருக்கிறது.

அறுபத்தேழு வயசு வரை உடம்புக்கு ஒரு வியாதியும் வரவில்லை. சர்க்கரை வியாதியோ, ரத்த அழுத்தமோ, நெஞ்சு வலியோ, எதுவுமே இல்லை. மருந்துக்குக் கூட உடம்புக்கு ஒரு நோய் வரவில்லை. இந்த ஆரோக்யத்தோடேயே போய்ச் சேர்ந்து விடுவது ஒரு வரப்ரசாதம்தான்.

கிழடு தட்டிப் போய் இழுத்துக் கொண்டு கிடப்பது நமக்கு வேண்டவே வேண்டாம். 68 வயசு என்பதில் எனக்குப் பூரண சம்மதம் என்பதால் எக்ஸ்டன்ஷனுக்காக ஆண்டவனிடம் அப்பீல் செய்யவில்லை.

நாளைக்கு எனக்கு மரணம்.
ஆனால் எப்படி?
மாரடைப்புக்கு வாய்ப்பே இல்லை.
சாலை விபத்து?
சாலை விபத்து என்றதும் டாக்டர் சித்தப்பா நினைவுக்கு வருகிறார்.
சாலை விபத்தில் செத்துப் போன சித்தப்பா.

வில்லிவாக்கத்திலிருந்த க்ளினிக்குக்கு அண்ணா நகரிலிருந்து தன்னுடைய மாருதி காரில்தான் போவார் சித்தப்பா. அவ்வப்போது எங்கேயாவது போய்த் தாராளமாய் மாருதியால் இடித்துக் கொள்வார்.

அவர் இடிக்காத வேளைகளில் வேறு வாகனங்கள் வந்து மாருதி மேலே மூட்டும். இடிபாடுகளின் பின்விளைவாக, முன்னும் பின்னும் மாருதியில் ஏழு குறும் பள்ளங்கள் இருந்தன.

அன்றைக்குப் பார்த்து சித்தப்பா காரில் போகாமல் ஸ்கூட்டியையெடுத்துக் கொண்டு க்ளினிக்குக்குப் போனார். சாலை விபத்தில் போய் விட்டார். கூட்டியில் போகாமல் மாருதியிலேயே போயிருந்தால் சித்தப்பா தப்பித்திருப்பார். மாருதியில் பள்ளங்களின் எண்ணிக்கை மட்டும் எட்டாய் உயர்ந்திருக்கும்.

காலையில் நான் சாலையில் போகப் போவதில்லை.
சாலையில் போனால்தானே விபத்து?
ஆகையால் சாலை விபத்தும் ரூல்டு அவுட்.

பின் எப்படி மரணம்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சரி, நாளைக்கு என்ன அஜெண்டா?
அதிகாலையிலெழுந்து காலைக்கடன்களை முடிப்பேன்.
ஷேவ் செய்து விட்டுக் குளிப்பேன்.
சுபுஹ் தொழுகை தொழுது விட்டு குர்ஆன் ஓதுவேன்.

பிறகு, கரன்ஸிக் கவரைத் தலைமாட்டில் வைத்துக் கொண்டு நல்ல பிள்ளையாய்க் கட்டிலில் படுத்துக் கொள்வேன்.

வீட்டில் யாருமே இல்லாதது பெரிய வசதி.

வெளிக்கதவைத் தாழிட மாட்டேன். என் அறைக் கதவும் சும்மாதான் சாத்தியிருக்கும்.

என்னுடைய மரணம் எந்த ரூபத்தில் வந்து என்னை ஆட்கொள்ளப் போகிறது என்பது இந்த விநாடி வரை பயங்கரப் புதிராய்த்தான் இருக்கிறது.

கட்டிலில் மல்லாக்கப் படுத்தபடி காலையில் காத்திருக்கப் போகிறேன்.

கொய்ட் இன்ட்ரஸ்ட்டிங்.

நன்றி சொல்லி விட்டு, விடைபெற்றுக் கொள்வதற்காக அந்த மூன்று ஜோஸ்யர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.

முதல் ஆள் எட்டு வருஷத்துக்கு முந்தியே போய்ச் சேர்ந்து விட்டாராம். தனக்குத்தானே அவர் ஜோஸ்யம் பார்த்துக் கொள்ளவில்லை போல.

மற்ற ரெண்டு பேரோடும் பேசினேன். அவர்களும் பாத்திரங்களாயிருக்கிற இந்தக் கதையைப் பற்றிச் சொன்னேன்.

அவர்கள் ரெண்டு பேரும் கணித்தபடி நாளைக்கு நான் இந்த உலகத்தைப் பிரியவிருப்பதைச் சொன்னேன்.

ரெண்டு பேரில் ஒருவர் மட்டும் என்னுடைய முகவரியைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். என்னுடைய இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறவராயிருக்கலாம்! அடுத்த ஜோஸ்யரோட நம்பரையும் வாங்கிக் கொண்டார். அவரையும் கூட்டிக் கொண்டு வருவார் போல!

சரி வாசகர்களே. இந்தக் காகிதங்களைக் கவரில் போட்டு ஒட்டி, பத்திரிகை முகவரி எழுதி, ஸ்டாம்ப் ஒட்டி, போஸ்ட் ஆஃபீஸில் போய்ப் பெட்டியில் போட வேண்டும்.

அண்ணாநகரில் நாலு இருபதுக்கு லாஸ்ட் க்ளியரன்ஸ்.
விடைபெற்றுக் கொள்கிறேன் நண்பர்களே.
அஸ்ஸலாமு அலைக்கும்.
அனைவருக்கும் வணக்கம்.

***

பிற்சேர்க்கை :

பதினாறாந் தேதி.

"ஐயா, அது ஜோஸ்பர் சார் வீடுங்களா?"

"ஆமா, நாந்தான் பேசறேன். நீங்க யார் சார் பேசறீங்க?"

"நானும் ஒங்களப் போல கை ரேகை பாக்கறவன்தான். ஒரு பத்து வருஷத்துக்கு முந்தி நீங்களும் நானும் ஒரு பாய்க்கு ரேகை பாத்துச் சொல்லியிருக்கோம். அந்த ஆள் நேத்து என்ட்ட ஃபோன்ல பேசினார். ஒங்கட்டயும் பேசியிருப்பாரே?"

"ஆமா சார் பேசினார். இன்னிக்கி அவருக்கு அறுவத்தெட்டாவது பிறந்த நாளாம். இன்னிக்கி சாகப் போறேங்கறார் சார். நீங்களும் நானுந்தான் அவருக்கு அப்டி ஜோஸ்யம் சொன்னோமாம். எனக்கு ஒரே ஷாக். பதட்டத்ல நா அவர் ஃபோன் நம்பரயும் வாங்கிக்கல, அட்ரஸயும் கேட்டுக்கல."

"நா கேட்டுக்கிட்டேன்.."

"வெரி குட் சார், வெரி குட். அந்த ஆள் செத்துப் போறேன்னு எதுவும் செஞ்சிக்கக் கூடாது சார்."

"அவர் ஒண்ணும் செஞ்சிக்க மாட்டார். நாம தான் செய்யணும்."

"சார், புரியல."

"தான் இன்னிக்கி செத்துப் போறதா அவர் ஒரு கதை எழுதிப் பத்திரிகைக்கி அனுப்பிச்சிருக்கார். அந்தக் கதை பப்ளிஷ் ஆகிறபோது, தான் செத்துப் போயிருப்பேன்னு எழுதியிருக்கார். ஆனா ஒரு அதிசயம் நடந்தாத்தான் இன்னிக்கி அந்த ஆளுக்கு சாவு வரும். அந்த அதிசயத்துக்கு நாமதான் ஏற்பாடு பண்ணனும்."

"என்ன சார் சொல்றீங்க?"

"ஜோஸ்யம் பொய்க்கக் கூடாதுங்கறேன்."

"அதுக்காக?"

"அதுக்காக அந்த ஆள் செத்தே ஆகணும்."

"நீங்க என்ன சார் இப்டிப் பேசறீங்க. அவரக் காப்பாத்த வழியே இல்லியா முருகான்னு நா தவிச்சிட்டிருக்கேன்! அவரோட அட்ரஸக் கொஞ்சம் சொல்லுங்களேன் சார், ப்ளீஸ்."

"ஒங்களுக்கு அட்ரஸ் குடுக்க நா என்ன மடையனா! நீங்க வேற மாதிரி ஆளா இருக்கீங்களே தம்பி. நம்ம தொழிலுக்கு துரோகம் செய்ற ஆளா இருக்கீங்க. இதை நா ஓரளவுக்கு எதிர்பாத்தேன். அதான் நானே ஸிங்கிளா இந்த மேட்டர ஹாண்டில் பண்ணிட்டேன்."

"சார், என்ன சார் பண்ணீங்க?"

"நா இப்ப சொல்றத ஒங்களுக்குள்ளயே வச்சிக்கிருங்க. இன்னிக்கிக் காலைல ஒம்போது மணிக்கி அந்த பாய் சாகப் போறார். அதுக்கு ஏற்பாடு பண்ணியாச்சு."

"ஏற்பாடு பண்ணியாச்சுன்னா?"

"போட்டுத்தள்றதுக்கு ஒரு ஏஜன்ஸிய செட்டப் பண்ணியாச்சு. இப்ப மணி எட்டு அம்பத்தஞ்சு. இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷத்ல போட்டுத் தள்ளிருவானுங்க. எழுத்தாளர் கதை சுமுகமா முடிஞ்சிரும். நம்ம ஜோஸ்யம் பலிச்சிரும். சரி, நா வச்சிர்றேன் தம்பி. பய்."

"சார் வச்சிராதீங்க, சார், சார்."

(வடக்கு வாசல், மே 2009)”

About The Author