உயரத்தில் ஒருவன்

தன்னுடைய தங்கைக்கு இஞ்ஜினியரிங் காலேஜில் ஸீட் கிடைத்து விட்டால், ரெண்டு பிச்சைக்காரர்களுக்கு சாப்பாடு போடுவதாய் நம்ம வீட்டுக்காரி வேண்டிக் கொண்டாளாம்.

ரெண்டு சாப்பாடு பாக்கெட்டோடு பைக்கில் நான் அவென்யூ அவென்யூவாய் அண்ணாநகரில் அலைந்த போது என் மச்சினிக்கு ஸீட் கிடைக்காமலேயே இருந்திருக்கலாமே என்று தோன்றியது.

இந்தியா திடீரென்று பணக்கார நாடாகி விட்டது மாதிரி இருந்தது. பிச்சைக்காரன் ஒருவனுமே கண்ணில் படவில்லை. அரைமணி நேரம் சுற்றிய பிறகு, பேப்பர் பொறுக்குகிறவன் ஒருவன் கண்ணில் பட்டான். ஒரு பொட்டலத்துக்கு ஆள் மாட்டிக் கொண்டான்.

குனிந்து பேப்பர் பொறுக்கிக் கொண்டிருந்தவனின் பக்கத்தில் போய் பைக்கை நிறுத்தினேன். நிமிர்ந்து என்னைப் பார்த்தான். ஒரு பாக்கெட்டை எடுத்து நீட்டினேன். கையிலிருந்த கோணியைக் கீழே போட்டு விட்டு கண்கள் விரிய ரெண்டே எட்டில் என்னை சமீபித்துப் பொட்டலத்தைப் பெற்றுக் கொண்டு கை கூப்பினான்.

அங்கிருந்து கிளம்பி அடுத்த பசித்தவனைத் தேடிப் புறப்பட்டேன். இன்னொரு இருபது நிமிஷம் அலைந்த பின்னால் இன்னொரு பேப்பர் பொறுக்குகிறவன் கண்ணில் இடறினான்.

அப்பாடா வேலை முடிந்தது. அவனருகில் போய் பைக்கை ஓரங்கட்டினேன்.

நான் போய் நின்றதும் அவன் தலை நிமிர்ந்து பார்க்க வேண்டாமோ?

பார்க்கவில்லை.

குனிந்த நிலையில் ரொம்ப பிஸியாய்க் குப்பையைத் தரம் பிரித்துக் கொண்டிருந்தான்.

ரெண்டு நிமிஷம் அவன் தலை நிமிரக் காத்திருந்து பொறுமையிழந்து, இந்தாப்பா என்று அழைத்தேன்.

என் குரலுக்குப் பார்வையைத் திருப்பினான். பார்ஸலை எடுத்து நீட்டினேன். அவன் அலட்டிக் கொள்ளவேயில்லை.

பிரித்த குப்பையில் தரமானதை எடுத்து கோணியில் போட்டுக் கொண்டு எழுந்தான்.

என்னிடம் வந்தான். "நா.. பிச்சக்காரன் இல்ல சாமி."

சொல்லிவிட்டு கோணியைத் தோளில் போட்டுக் கொண்டு நடந்தான்.

சில விநாடிகளில் ஸ்தம்பித்து நின்றேன்.

பிறகு, அவன் போன திசையில் கை கூப்பினேன்.

(ஆனந்த விகடன், 05.09.2004)

About The Author