எங்கிருந்தோ வந்தான் (2)

இரண்டாம் முறை அவனைச் சந்தித்தது, பெங்களூரில் ஒரு ஹோட்டலில் வைத்து. அன்று கன்சல்டேஷனுக்காக மருத்துவனைக்குச் சென்றிருந்தேன். டாக்டருடன் பேசி முடிக்கும் பொழுதில், என்னிடம் கேட்டாள், "நைட் டின்னர் என்ன ப்ளான்?"

"ஒண்ணுமில்ல டாக்டர்! போயி சமைக்கணும்!"

"வெளிய சாப்பிடலாமா, வர்றியா?"

சம்மதித்தேன். அங்குதான் அவனை இரண்டாம் முறை பார்த்தது. வேறேதோ பெண்ணுடன் உணவு அருந்திக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவுடன், டாக்டர் அவனுடன் அமர்ந்து சாப்பிடலாமா என்று கேட்டாள். நானும் ‘சரி’ என்றேன். அவளுக்கு ‘ஹை’ சொன்னான். என்னைப் பார்த்து சிரித்தான்.

நான் கேட்டேன், "என்ன பொண்ணு பார்த்து, கலியாணம் பேசி, ஊர் சுத்தறளவுக்கு வந்தாச்சா?"

"சே… சே… இல்லீங்க! இது என்னோட பாஸ் பொண்ணு, காலேஜ்ல படிக்கறா! தம்மாதூண்டு! அவரு மூணு மாசம் அமெரிக்கா போயிருக்காரு! இது சரியாவே சாப்டாது. அதான் கூட்டிண்டு வந்தேன். அவ்வளவுதான்."

"அப்ப, அந்த பொண்ணு பார்க்கற கதையெல்லாம் என்னாச்சு?"

"அதுவா! போயே போச்சு! அந்தப் பொண்ணுக்கு என்னைக் கலியாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லேன்னு நினைக்கறேன்."

நால்வரும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினோம். அவன் என்னை மிகவும் பணிவுடன், "நீங்க, வாங்க" என்றே அழைத்துக் கொண்டிருந்தான். அதை மாற்றவே பத்து நிமிடம் ஆனது. அவன் பிறந்த நாள் கேட்டு, என் பிறந்த நாளைச் சொல்லி, நான் நான்கைந்து வருடங்கள் இளையவள் என்று தெரிந்த பின்னரே மாற்றிக் கொண்டான்.

நால்வரும், குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் இருப்பவர்கள். விரைவில் அனைவருக்கும் சிந்தனை ஒன்றாக இருந்ததைப் புரிந்து கொண்டோம். வாரத்திற்கு இரு முறை இப்படி ஒன்று கூடி உணவு உண்ணலாம் என்று முடிவெடுத்தோம். இரண்டு மூன்றானது, மூன்று நான்கானது. சில மாதங்கள் கழித்து அவனுடைய பாஸ் ஊர் திரும்பினார். அவரும் எங்களைப் பிரிக்கவில்லை.

அவருடைய மகள், தன் தந்தையையும் ஒரு முறை அழைத்து வந்தாள். "சின்னப் பசங்க நீங்க இருக்கற இடத்துல இந்த கிழவனுக்கென்ன!" என்று சொல்லிவிட்டு அவர் வருவதை நிறுத்திக் கொண்டார்.

சில நாட்கள் கழித்து ஹோட்டல் வீடாக மாறியது. நால்வரும் மாற்றி மாற்றி ஒவ்வொருவர் வீட்டிலும் கூடுவோம். ஒன்றாக சேர்ந்து சமைத்து சாப்பிட்டு…

அந்த நாட்கள்தான் என் வாழ்விலேயே மறக்க முடியாத நாட்கள். திடீரென்று என்னுடைய டாக்டருக்கு ஷிஃப்ட் மாறியது. தம்மாதூண்டு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை பார்க்க ஆரம்பித்தாள். அவர்கள் இருவரும் எப்பொழுதாவதுதான் வருவார்கள். இருந்தும் நானும் அவனும் சந்திப்பது மட்டும் நிற்கவில்லை.

தினம் ஒன்றாக உண்ண ஆரம்பித்தோம். ஒரு சில தினம், அவனே என் ஆஃபீஸிற்கு வந்து என்னை அவன் பைக்கில் அழைத்துச் செல்வான். சாப்பிடுவதற்காக ஒன்றாக இணைந்த நாங்கள் எங்களுக்குள் இருக்கும் ஒற்றுமைகளைப் புரிந்து கொண்டோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம், நிறைய பேசுவோம். அலுவலகக் கதைகள், உள்நாட்டு அரசியல், வெட்டி அரட்டை. எனக்கும் அவனுக்கும் ஒரே போன்ற எண்ணங்கள் இருந்ததைப் புரிந்துகொண்டேன். தன்னைப் போலவே எண்ணங்கள் கொண்டவரை சந்தித்தால், எவருக்குத்தான் பிடிக்காது!

வாரம் ஒரு முறை ஏதாவது பார்க் செல்வோம். புதிதாகக் கிடைத்த உறவு எனக்கொரு புத்துணர்ச்சியை அளித்தது. ஆனால், அதே சமயம், இது வெறும் நட்பல்லவென்று எனக்கு புலப்பட ஆரம்பித்தது. அப்பொழுதே அவனிடம் பழகுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். வேலை அதிகம் என்று பொய் சொன்னேன். "அதனால என்ன, உனக்கு முடியும் போது மீட் பண்ணலாம்" என்றான். தினம் அவனைப் பார்ப்பதை தவிர்த்தேன். வாரம் ஒரு முறை மட்டும் சந்திப்போம். அவனுடைய ஒவ்வொரு அசைவையும் என்னையறியாமல் நேசிக்க ஆரம்பித்தேன். நானா? நான் எப்படி காதலில் விழுவது? எனக்குத்தான் அது போன்ற உணர்வுகள் வரவே கூடாது என்று நான்கு வருடங்களுக்கு முன்பே தடை விதித்திருந்தேனே! எனக்கா? காதலா? ச்சீ …

ஒரு முறை அவன் ஏதோ என்னிடம் விளையாட்டாக சொல்லப் போக, எனக்கு சரியாகப் புரியாமல் அவனைத் திட்டிவிட்டேன். அதன் பிறகு அவன் என்னிடம் மூன்று நாட்கள் பேசவேயில்லை. நானும் பேசவில்லை. நான் ஏன் பேசவேண்டும்? அவனே என்னிடம் கோபித்துக் கொண்டு விலகினால், எவ்வளவு நிம்மதியாக இருக்கும்! ஆனால், நான் நினைத்த ஈகோ அவனிடம் இல்லை. அவனே ஃபோன் செய்து, "நான் சும்மா விளையாடினேன், யாரையும் புண்படுத்தணும்னு இல்லை, மன்னிச்சுரு!" என்றான். இதுதான் சாக்கென்று அவனிடம் பேசாமலிருப்பதை நீடித்தேன். மறுபடியும் மன்னிப்பு கேட்டான். பாழாய்ப்போன என் மனம் இளகியது.. என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. பேசிவிட்டேன். என்மேல் அவனுக்கு வெறுப்பு வரவேண்டும் என்பதற்காகவே அவன் செய்த தவறை மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டுவேன். ஆனால், ஒவ்வொரு முறையும் சலிக்காமல் மன்னிப்பு கேட்பான். அடுத்த தவறுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். நேரம் வந்தது. சனிக்கிழமைகளில் மட்டும் சந்தித்துக் கொண்டிருந்தோம்.

(தொடரும்)

About The Author