எஸ்.. எம்…எஸ்!” (6)”

அட.. புனிதா ஆரம்பத்தில் மெசேஜ் அனுப்பத் தெரியாதவளாய் இருந்தாள். நான் தான் க்ரியேட் மெசேஜ்.. டைப் பண்ணு.. அனுப்பு.. அப்போது எந்த செல்லுக்கு அனுப்ப வேண்டுமோ அந்த நம்பரை டைப் பண்ணு.. ஸ்டெப் பை ஸ்டெப் ஆக சொல்லிக் கொடுத்தேன். மறுபடியும் தலைக்குள் பளிச்!

அனுப்பியதில் போய் பார்த்தேன். ‘ஐ லவ் யூடா செல்லம்’ புனிதா அனுப்பிய முதல் மெசேஜ். எந்த நம்பருக்கு.. அட கஷ்ட காலமே.. என் எதிரிக்கு!

கற்றுக்குட்டித்தனமாய் அவள் அனுப்பிய முதல் மெசேஜ் எண்களைத் தப்பாய் அடித்ததில் இவனுக்குப் போய் விட்டது. அதனால் அவனுக்கு குஷியாகி தொடர் தாக்குதல். இவளுக்கோ தான் செய்த தவறு புரியாமல் போனதில் தொடர்ந்து வருகிற மெசேஜை தப்பாய் வருகிறது என்று அலட்சியப்படுத்தி விட்டிருக்கிறாள். ‘ஸாரிடா.. செல்லம்..’

திரும்பி நிச்சலனமாய்த் தூங்குகிறவளைப் பார்த்தேன். ஊஹூம். இப்போது அவளிடம் எதுவும் பேச வேண்டாம். அவனை ஒரு வழி செய்து விட்டு பிறகு இவளிடம் மன்னிப்பு கேட்கலாம். நானும் திரும்பிப் படுத்து தூங்கிப் போனேன், நள்ளிரவில் அவன் அனுப்பிய மெசேஜ் வந்தபோது செல் சிணுங்கியது கூடத் தெரியாமல்.

காப்பி சுடச் சுடக் கிடைத்தது. புனிதா என்னைப் பார்க்கிறாளா என்று ரகசியமாய்ப் பார்த்தபோது அவளிடம் எவ்வித மாற்றமும் இல்லை. பரவாயில்லை. அவள் கோபம் நியாயமானதுதான்.

மறக்காமல் இரண்டு மொபைல்களையும் எடுத்துக் கொண்டேன்.

டெலிபோன்ஸ் நண்பர் போன் செய்தார்.

"சொல்லியிருக்கேன். கண்டுபிடிச்சுரலாம்"

எனக்குள் ஒரு படபடப்பு. பேசிப் பார்த்தால் என்ன.

முதல் தடவை ரிங் போனதும் சட்டென்று கட் செய்து விட்டேன். இரண்டாவது முறை இணைப்பு கிடைக்கவில்லை. மூன்றாவது முறை ‘பிளீஸ் ஹோல்ட் ஆன். தி லைன் ஈஸ் பிஸி’.

சற்று தாமதித்ததில் அவனே பேசினான். இப்போது அவன் குரலில் ஒரு துள்ளாட்டம்.

"சொல்லுடா. ரொம்ப கஷ்டமா இருக்கா.. பார்க்காம"

"ஆமாண்டா"

"அட. நீயும் டா போடறியா"

வாய் தவறி கோபத்தில் சொன்னதை அவன் உற்சாகமாய் எடுத்துக் கொண்டு விட்டான்.

"ஸாரி.."

"சேச்சே.. நீ அப்படி கூப்பிடும்போது சும்மா அதிருதுல்ல"

"எப்ப பார்க்கலாம்" என்றேன் மிக இயல்பான பெண் குரலில்.

"ஷ்யூர்.. இனிமேல டிலே பண்ண மாட்டேன்.. நாளைக்கு?" என்றான். "நாளைக்கா"

"ஜஸ்ட் ஒன் டே வெயிட்டிங்"

"நாளைக்கு ஏமாத்தக் கூடாது" என்றேன் குரலில் குழைவுடன்.

"கூல்" என்றான்.

மனசில் பெர்ரிய ஹீரோ என்று நினைப்பு.

"காலைல முதல் மெசேஜ்ல நாம எங்க சந்திக்கறோம்னு தகவல் இருக்கும். ஓக்கே"

"தேங்க்ஸ்"

"சீச்சீ.. நமக்குள்ளே என்ன பார்மாலிட்டி.. பைடா"

நாளைக்கு இருக்குடா மகனே உனக்கு தீபாவளி.. என்றேன் மனசுக்குள் அப்போது.

(தொடரும்)

About The Author