கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

"ஜெயிலுக்குப் போய் வந்த தேச மக்களைச் சீர்திருத்துவாங்க" என்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு படத்தில் பாடுவார். அது தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நிஜமாகவே ஆகி விடும் போல இருக்கிறது.

தமிழகச் சிறைத்துறை தலைமை இயக்குநர் ஆர்.நட்ராஜ், ஐ.பி.எஸ். அவர்களின் முன் முயற்சியின் பேரில் (தெரியுமா? இவர் பூர்ணம் விஸ்வநாதனின் சகோதரர் எழுத்தாளர் உமாசந்திரனின் புதல்வர்!) நமது சிறைச்சாலைகள் "மாங்குயில் கூவிடும் பூஞ்சோலைகளாக" மாறி வருகின்றன! காற்றோட்டமான வளாகம், நூலகம், மருத்துவமனை, பிரார்த்தனை மண்டபம், கலை அரங்கம் இப்படி சகல வசதிகளும் உள்ளன.

வாழும் கலை, அறிவொளி இயக்கப் பயிற்சி, இந்திராகாந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பட்ட, பட்ட மேற்படிப்புகள் படிக்க வசதிகள் செய்து தந்திருக்கிறார்கள். நாம் பார்த்த வேலூர் சிறையில் மட்டும் ஏறத்தாழ நூறு பேர் எம்.பி.ஏ, எம்.சி.ஏ போன்ற உயர் படிப்பு படிக்கிறார்கள். சிறைத்துறையே பணம் கட்டி படிக்க வைக்கிறது. தொழில் நுட்ப உயர் வசதிகளுடன் கூடிய கணினிகள் அளிக்கப்பட்டுள்ளன. சிறைக்கே வந்து வகுப்புகள் நடத்தவும், தேர்வுகள் எழுதவும் ஏற்பாடுகள் செய்துள்ளார்கள்.

சேவாலயாவின் சார்பில் தமிழகச் சிறைகளில் காந்தி, பாரதி, விவேகானந்தர் ஆகியோரின் வாழ்க்கையையும், செய்திகளையும் அனைத்து சிறைகளிலும் எடுத்துரைக்க ஏற்பாடாகியுள்ளது. அந்த வகையில் சிறைகளுக்குச் சென்று வந்த அனுபவம் புதுமையாக இருக்கிறது.

கைதிகள் என்று சொல்லக்கூடாது; இல்லவாசிகள் என்றுதான் அழைக்க வேண்டுமாம். அவர்கள் ஒதுக்கப்படவோ கண்டிக்கப்படவோ வேண்டியவர்கள் அல்லர்; பரிவுடன் பராமரிக்கப்பட்டு அரசின் பாதுகாப்பில் உள்ளவர்களாகக் கருதப்பட வேண்டுமாம்!

பண்டிகை நாட்களில் குடும்பத்துடன் இருக்க முடியாது என்பதுதானே குறை? விழாக்களுக்கு இல்லவாசிகளின் குடும்பத்தினரையும் சிறைக்கு அழைத்து அவர்களுடன் சிறைக் குடும்பங்கள் ஒன்று கூடிக் கொண்டாடிக் களிக்கின்றன.

புழல் சிறைவாசிகள் ‘உள் ஒளி’ என்ற பத்திரிகை நடத்துகிறார்கள். அதில் வரும் செய்திகள் அமைதியையும் நன்னடத்தையும் வலியுறுத்துவனவாக இருக்கின்றன. சிறை அதிகாரிகளுடன் பேச்சுக் கொடுத்ததில் அவர்களும் இத்தகைய புதிய சிந்தனைகளுக்குப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. இல்லவாசிகளுடன் தடையின்றிப் பேசும் உரிமையையும் நமக்குத் தந்தார்கள். அவர்களுடன் பேசியதில் திருந்திப் புது வாழ்வு வாழ வேண்டும் என்ற விருப்பம் பலரிடம் தெரிந்தது. வரதட்சிணைக் கொடுமை வழக்கில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு சிலர் சிறைக்குள் தள்ளப்படுவதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.

வெளியே வந்து பார்க்கும் போதுதான் உள்ளே இருக்க வேண்டியவர்கள் சிலர் தப்பித்துக் கொண்டு வெளியே இருப்பது தெரிகிறது. மற்றபடி, மெகா சீரியலில் பார்ப்பதுபோல், கன்னத்தில் வெட்டுடன், முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு கையில் ஆசிட் பாட்டிலுடன் யாரையும் பார்க்க முடியவில்லை.

நிகழ்ச்சிகளில் சிறைத்துறை தலைமை இயக்குநர் நட்ராஜின் பெயரைச் சொல்லும்போதெல்லாம் ஆரவாரமான கரவொலி எழுகிறது. இல்லவாசிகள் மத்தியில் அவர் பாராட்டுக்குரியவராக இருப்பது புரிகிறது.

வேலூர் பெண்கள் சிறையில் நாம் படித்த ஒரு திருக்குறள்.

"சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை"

‘பாளையங்கோட்டை சிறையில் பாம்புகளுக்கும் பல்லிகளுக்கும் துணையாக’ என்றதெல்லாம் இனி பழங்கதைதான்!

About The Author

2 Comments

  1. Rishi

    நட்ராஜ் அவர்களின் சீரிய முயற்சி பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்!

Comments are closed.