கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

அன்புள்ள மான்விழியே! ஆசையில் ஓர் கடிதம்..
ஃபிப்ரவரி 14 – காதலர் தினம்.

மின் அஞ்சல், ஃபேக்ஸ், எஸ்.எம்.எஸ் என்று காதல் குறுகிவிட்ட காலம். வார்த்தைகள் மனதைப் பரிமாறிக் கொள்வதில்லை. இந்த இயந்திர எழுத்துக்களில் உயிர், ஜீவன் இருப்பதில்லை. காதலன் அல்லது காதலி தன் கைப்பட கடிதம் எழுதி அதைப் படிக்கும்போது ஏற்படும் சந்தோஷம், ஏனோ இந்த வெளிப்பாடுகளில் இருப்பதில்லை. அந்தக் காலத்தில் (இருபது வருஷங்களுக்கு முன்னால்!) ஒரு காதல் கதை என்றால் இப்படித்தான் அமையும்.

"சாந்தா வாசலுக்கும் சமையல் கட்டுக்குமாக குட்டி போட்ட பூனைபோல் சுற்றி சுற்றி வந்தாள். வாசலுக்கு வருவாள்; கண்களை இடுக்கி தெருக் கோடி வரை பார்ப்பாள்; ‘ஹூம், இன்னும் காணும்’ என்று உள்ளே திரும்புவாள். அம்மா, ஏன்டி, காலம்பறலிருந்து இங்கேயும் அங்கேயும் சுத்திண்டிருக்க, தபால்காரன் வரப்போ வருவான், உங்கிட்ட லெட்டர் வந்தா குடுக்காமலா போகப்போறான்?’ என்பாள். ஒரு வழியாகத் தபால்காரன் வந்து தன் கணவனின் கடிதத்தைக் கொடுத்தவுடன் ஓடிச் சென்று அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு படிப்பதற்குள் அவளுக்குள் ஓடும் அந்த மகிழ்ச்சி! – ஏனோ திரும்பத் திரும்பப் படிப்பாள்."

இன்றைய காதலிலும் அந்த மகிழ்ச்சி திரும்பி வந்தால் எப்படியிருக்கும்?

நீங்கள் அவனை/அவளைக் காதலிக்கிறீர்கள். எப்படி வெளிப்படுத்துவதென்று தெரியவில்லை. உங்கள் காதலியை/காதலனைப் பார்க்கும்போது பேச்சு வரமாட்டேன் என்கிறது; நாக்கு உலர்ந்து விடுகிறது. ஆனால், நீங்கள் காதலிக்கும் போதும், உங்களைக் காதலிப்பவர் உங்களை விட்டுத் தள்ளி வேறு ஊரில் இருக்கும் போதும் கடிதப் பரிமாறல்கள் செய்யும் அந்த ஜாலவித்தையை, உங்கள் கடிதங்கள் ஏற்படுத்தும் அந்த மகிழ்ச்சியை எத்தனை கோடி எஸ்.எம்.எஸ்.களும், மின்னஞ்சல்களும் தர முடியாது.

சரி, கடிதம் எப்படி அமைய வேண்டும்?

உண்மையாக இருங்கள். கடிதத்தில் உங்களது மன உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள். நீங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்களோ அதைச் சொல்லுங்கள். காதல் மனதில் உண்மையாக இல்லாவிட்டால் வார்த்தைகளில் வெளிவராது.

ஏதோ கசங்கி, கிழிந்துபோன காகிதத்தில் உங்கள் கடிதங்களை எழுதாதீர்கள். நல்ல வெண்மையான காகிதமாக இருக்கட்டும். அதுவே உங்கள் காதல் உணர்வுகளை இன்னும் அதிகமாக வெளிப்படுத்தும்.

டைப் அடிக்காதீர்கள். கடிதம் உங்கள் கையெழுத்தில் இருக்கட்டும். அதில்தான் ஓர் உயிரோட்டம் இருக்கும். கடிதத்தில் படங்கள், ஓவியங்கள் இருந்தால் இன்னும் அழகாக இருக்கும். உங்கள் ஃபோட்டோவையோ அல்லது காதலியின் ஃபோட்டோவையோ, ஓவியம் வரையத் தெரிந்தால் – நல்ல காட்சியையோ ஓவியமாக கடிதத்துடன் இணையுங்கள்.

கடிதத்தை முதலில் ஒரு பேப்பரில் எழுதி பிறகு அடித்தல் திருத்தல்கள் இல்லாமல் வேறு ஒரு காகிதத்தில் எழுதுங்கள். என்னதான் உங்கள் காதலி உங்களைக் காதலித்தாலும் தப்புத் தப்பாக எழுதினால் அவள் மனதில் உங்களைப் பற்றிய மதிப்பு குறையலாம்!

(விசு ஒரு படத்தில், "ஏண்டா கண்ணா, ‘காதலிக்கு’ன்னு எழுதறப்போ ‘கதாலிக்கு’ன்னு எழுதக்கூடாது. ‘க’க்குப் பின்னால கால் போடணும்டா, ‘த’க்குப் பின்னால இல்ல…” என்று சொல்ல காதலன், "அவ என் மனைவி, நான் எங்க வேணும்னாலும் கால் போடுவேன்; அதை நீங்க கேட்க வேண்டாம்" என்று சொல்வது போல விதண்டாவாதம் வேண்டாம்!)

உங்களுக்குத்தான் தெரியும் என்று புலமையைக் காண்பிக்க கடினமான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம். சின்னச் சின்னதாகப் புரியும்படியான அழகான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். கவிதை மழை பொழிய வேண்டாம். கடிதத்தை ஆரம்பிக்கும்போது உங்களுக்கு இப்போதுதான் சில நாட்களாக அறிமுகமானவராக இருந்தால், ‘ஹாய்..’, ‘டியர்’ போன்று சாதாரண வார்த்தைகளால் துவங்குங்கள். ‘என் ஆருயிரே,’ ‘எனக்கு மட்டும் சொந்தமானவளே!’ என்றெல்லாம் எழுத வேண்டாம்.

எழுதும் கடிதத்தில் சிறிது நகைச்சுவை இருக்கட்டும். உங்கள் கடித்தைப் படிக்கும்போது அவர் முகத்தில் புன்னகை மிளிர வேண்டும். அந்தக் கடிதத்தைப் பொக்கிஷமாகக் கருதி வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும்.

பிரபல நாடக எழுத்தாளர் பெர்னார்ட்ஷா எழுதிய ஒரு காதல் கடிதம் மாதிரிக்கு:

ஃபிப்ரவரி 27,1913

ஸ்டெல்லா பியட்ரிஸ் காம்பெல்லிற்கு,

என்னுடைய ரவுடியும் ஊர் சுற்றியும் எனக்கு வேண்டும்.
என்னுடைய கருப்புப் பெண், என்னுடைய தேவதை எனக்கு வேண்டும்.
என்னைத் தூண்டில் போட்டு இழுப்பவள் எனக்கு வேண்டும்.
அவளுடைய ஆப்பிள் கன்னங்கள் வேண்டும்.
என் வாழ்க்கையின் அழகு, நேர்மை,சிரிப்பு,
இசை, காதல், உயிர், என்றும் இறவா வரம் என்ற
ஏழு தீபங்களை ஏற்றும் அவள் வேண்டும்.

என்னுடைய தூண்டுகோல், எனது தவறுகள், எனது மகிழ்ச்சி
என்னுடைய தெய்வீகம், என்னுடைய மூடத்தனம்,
என்னுடய தன்னலம், என்னுடைய விவேகம், என்னுடைய புத்துயிர்
என்னை மாற்றியவள், என்னைத் தூய்மைப்படுத்தியவள்
கடலுக்கு அப்பாலான கலங்கரை விளக்கம்
பாலைவனச் சோலை
பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம்
என்னுடைய லட்சக்கணக்கான அளவில்லாத சந்தோஷங்கள்
எல்லாம் எனக்கு வேண்டும்.
என்னுடைய தினச் சம்பளம்
என்னுடைய இரவுக் கனவு
என்னுடைய ஆருயிர்
என்னுடைய நட்சத்திரம்
எல்லாம் எனக்கு வேண்டும்.

— பெர்னார்ட் ஷா”

About The Author

1 Comment

  1. SATHIK

    என்னுடைய ரவுடியும் ஊர் சுற்றியும் எனக்கு வேண்டும்.
    என்னுடைய கருப்புப் பெண், என்னுடைய தேவதை எனக்கு வேண்டும்.
    என்னைத் தூண்டில் போட்டு இழுப்பவள் எனக்கு வேண்டும்.
    அவளுடைய ஆப்பிள் கன்னங்கள் வேண்டும்.
    என் வாழ்க்கையின் அழகு, நேர்மை,சிரிப்பு,
    இசை, காதல், உயிர், என்றும் இறவா வரம் என்ற
    ஏழு தீபங்களை ஏற்றும் அவள் வேண்டும்.

    என்னுடைய தூண்டுகோல், எனது தவறுகள், எனது மகிழ்ச்சி
    என்னுடைய தெய்வீகம், என்னுடைய மூடத்தனம்,
    என்னுடய தன்னலம், என்னுடைய விவேகம், என்னுடைய புத்துயிர்
    என்னை மாற்றியவள், என்னைத் தூய்மைப்படுத்தியவள்
    கடலுக்கு அப்பாலான கலங்கரை விளக்கம்
    பாலைவனச் சோலை
    பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம்
    என்னுடைய லட்சக்கணக்கான அளவில்லாத சந்தோஷங்கள்
    எல்லாம் எனக்கு வேண்டும்.
    என்னுடைய தினச் சம்பளம்
    என்னுடைய இரவுக் கனவு
    என்னுடைய ஆருயிர்
    என்னுடைய நட்சத்திரம்
    எல்லாம் எனக்கு வேண்டும்.

Comments are closed.