கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

சுதா ரகுநாதனுடன் ஒரு சங்கீத சந்திப்பு

கர்நாடக இசை உலகில் கொடி கட்டிப் பறக்கும் சுதா ரகுநாதன், தன் இனிய குரலால் உலகமெங்கும் ரசிகர்களை மயங்கச் செய்தவர். இப்போது திரையுலகிலும் இவரது இன்னிசைப் பயணம் தொடர்கிறது. இந்த ஆண்டு இசை விழாவில் ‘சங்கீதா கலாநிபுணர்’ பட்டம் பெற்றார். கலைமாமணி, பத்மஸ்ரீ போன்ற பல விருதுகளுக்குச் சொந்தமானவர். இவரோடு ஒரு இசை சந்திப்புக்கு சங்கீதா ஹோட்டலில் உலக சங்கீத இசை மன்றம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. அந்த சந்திப்பில் அவர் தனது இசைப் பயணம் பற்றியும் தனது குறிக்கோள் மற்றும் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் பற்றியும் ரசிகர்களோடு மனம் திறந்து கலந்துரையாடினார். இசைக் கலைஞரின் விழாவில் கவிஞர் வைரமுத்து வந்து வாழ்த்தியது இசைக்கு கவிதை பெருமை சேர்த்தது போலிருந்தது!

சுதா அவர்கள் வைரமுத்துவைப் பற்றிக் குறிப்பிடும்போது, "அவருடைய பெயரில் வைரமும் முத்தும்தான் இருக்கின்றன. ஆனால், அவர் ஒரு நவரத்தினம்" என்று கூறினார். வைரமுத்து அதனைத் தன் பேச்சில் குறிப்பிட்டு சுதா அவர்கள் இசையில் மட்டும்தான் கெட்டிக்காரர் என்று அறிந்திருக்கிறேன். அவர் தமிழ் மொழியிலும் கெட்டிக்காரர்தான் என்பதை இன்று நிரூபித்திருக்கிறார்" என்று கூறினார்.

"இசையும், மொழியும் ஒன்றொடொன்று கலந்தவை; ஒன்றால்தான் மற்றொன்று முழுமை அடைகிறது" என்று சொன்ன வைரமுத்து, திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமியை மகாத்மா காந்தி பாராட்டியதைக் குறிப்பிட்டார். "திருமதி எம்.எஸ் தன் பாட்டின் மூலம் கடவுளுக்குப் பக்கத்தில் சென்றுவிடுகிறார். அதோடு ரசிகர்களையும் கடவுளுக்குப் பக்கத்தில் அழைத்துச் சென்று விடுகிறார் என்று காந்தி சொன்னார். இப்போது திருமதி சுதா அவர்களோ நம்மை எம்.எஸ்சுக்குப் பக்கத்தில் அழைத்துச் செல்கிறார்" எனக் கூறினார். "எம்.எல். வசந்தகுமாரியிடம் பயின்றவர் சுதா; இவர் போன்ற கலைஞர்களைப் பாதுகாப்பதன் மூலம் சமூகம் நம்பிக்கை பெறுகிறது, பாதுகாப்படைகிறது" என்றார்.

"தன்னுடைய வாழ்க்கையை தனக்காக வாழாமல் மண்ணுக்கு, வானுக்கு, நிலவுக்கு, சூரியனுக்கு என்று பகிர்ந்து கொடுக்கிற அசாதாரணமானவர்கள் சுதா ரகுநாதன் போன்ற கலைஞர்கள் என்று குறிப்பிட்டவர், வானத்தை, பூமியை, நிலவை, ஜனனத்தை, மரணத்தை இவைகளையெல்லாம் சுதா அவர்கள் தமிழில் பாட வேண்டும்; தமிழுக்காக தமிழில் முழுக் கச்சேரி செய்ய வேண்டும்; அதற்குத் தான் பாடல்கள் படைக்கத் தயார்" எனவும் வைரமுத்து குறிப்பிட்டார்.

கூடுதல் சொலிசிடர் ஜெனரலாகப் பணிபுரியும் மோஹன் பராசரன், சுதா ரகுநாதனின் கடுமையான பயிற்சி பற்றிக் குறிப்பிட்டார். அவர் பாடும்போது எம்.எல்.வி அவர்களையும் எம்.எஸ் அவர்களையும் நினைவுபடுத்துவதாகக் கூறினார்.

இனி, ரசிகர்களின் கேள்விகளுக்கு சுதா ரகுநாதன் அளித்த சில பதில்கள் :

இளமையின் ரகசியம்

சங்கீதம் என்பது ஒரு தியானம். அது ஒருவரைக் கடவுளுக்கு அருகில் அழைத்துச் செல்கிறது. இசை சக்தியை நமக்குக் கொடுக்கிறது. கட்டுப்பாட்டைத் தருகிறது. அதைத் தவிர நான் நடைப்பயிற்சி, யோகா செய்கிறேன். மவுனமாக இருப்பதுபோல சிறந்த சக்தி எதுவும் கிடையாது. எட்டு மணி நேரம் மவுனம் இருந்தால் அது தரும் அபார சக்தியை உணரலாம். மார்கழி முப்பது நாளில் இருபது கச்சேரி செய்வதென்றால் அதற்கேற்ப உடலை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும். திட்டமிடுதலும் அதை நடைமுறைப்படுத்துதலும் அவசியம்.

இசைப் பயணம்

எனது முதல் குரு எனது தாய்தான். ஆனால் அம்மாவிடம் கற்றுக் கொள்வது மிகவும் கஷ்டம். அம்மாதானே என்று ரொம்ப சுதந்திரம் எடுத்துக் கொள்வோம். நான் மூன்று வயது இருக்கும்போதே சுப்ரபாதம் நன்றாகப் பாடுவேன். அம்மாவிடம் வர்ணம் வரை கற்றுக்கொண்டேன். பிறகு பி.வி.லக்ஷ்மணனிடம், பின்னர் மத்திய அரசு ஸ்காலர்ஷிப் கிடைத்ததும் அம்மா திருமதி எம்.எல்.வசந்த குமாரியிடமும் இசை பயின்றேன்.

இசைதான் என் வாழ்க்கை என்று நான் கல்லூரியில் பயின்றபோதுதான் தெரிந்து கொண்டேன். டாக்டராக வேண்டும் என்பதுதான் எனது எண்ணமாக இருந்தது. எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்த புதிதில், ஒரு விழாவில் ‘திக்குத் தெரியாத காட்டில்’ பாடியபோது, எனது இசைப் பயணத்திற்கு திசை காட்டினார் கல்லூரி முதல்வர். அவர் என்னைக் ‘கடவுள் அவர்களுக்கு அளித்த பரிசு’ என்று கூறினார். பின்னர்தான் இசையில் ஈடுபடுவதற்கு வசதியாக மருத்துவத்திற்கான படிப்பிலிருந்து பொருளாதாரப் பிரிவில் என்னைக் கல்லூரியில் மாற்றிக் கொண்டேன்.

குரு எம்.எல்.வி பற்றி

இன்று நான் ஒரு பேசப்படுகிற பாடகியாக விளங்குகிறேன் என்றால் அதற்கு முழுக் காரணம் அம்மா எம்.எல்.விதான். மற்றவர்கள் எல்லாம் அவரை அக்கா என்று அழைப்பார்கள். என்னைப் பொறுத்தவரை அவர் எனக்கு அம்மாதான். அவர் எனக்கு சங்கீதத்தை மட்டும் கற்றுக் கொடுக்கவில்லை. நம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்டி வளர்த்தார். மனிதநேயம், வாழ்க்கை முறை, ஒவ்வொருவரிடமும் காட்ட வேண்டிய மரியாதை, ரசிகர்களிடம் காட்ட வேண்டிய அன்பு, என எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தது அம்மாதான். தைரியம், மனோதிடம் எல்லாவற்றையும் அவர் சொல்லிக் கொடுத்தார். ஒவ்வொரு மொழியையும் அர்த்தம் புரிந்து பாட வேண்டும்; ரசிகர்களின் மனதைப் புரிந்து கொள்ளவேண்டும்; ரசிகர்களிடமிருந்து விமர்சனங்களையும் கண்டனங்களையும் சரியான மனோநிலையில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும் என அறிவுரை சொல்லுவார். இந்த மாதிரி ஒரு குரு கிடைக்க மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

சுதாவின் திருமணம் பற்றி குரு எம்.எல்.வி

திரு. ரகுநாதன் பெண் பார்த்து கல்யாணம் நிச்சயமாகும் நிலையில்தான் அம்மாவிடம் (எம்.எல்.வி) சொன்னேன். அதனால் அம்மாவிற்கு வருத்தம் இருந்தாலும், பின்னர் திரு. ரகுநாதனைப் பார்க்க வேண்டுமே என்றார். அடுத்த நாள் ரகுநாதனைப் பார்த்தபோது அவரிடம் , "சுதாவிடம் நல்ல திறமை இருக்கிறது. அதை வளர்க்க நீங்கள் அவளுக்குத் துணையாக இருக்க வேண்டும்" என்று சொன்னார். அதேபோல் எனக்கு ஒரு பெரிய உந்து சக்தியாக என் கணவர் இருக்கிறார்.

திருவையாறில் பாடுவதற்கும் சபாக்களில் பாடுவதற்கும் உள்ள வேறுபாடு

நிச்சயமாக இரண்டும் ஒன்றில்லை. அங்கே பாடும்போது ஒரு தெய்வீகம் இருக்கும். ராமனுக்கு அருகிலே செல்வது போலிருக்கும். எல்லாப் பாடகர்களும் சேர்ந்து பஞ்சரத்ன கிருதி பாடும்போது கடவுளுக்கருகில் செல்வது போலிருக்கும். அதனால் கச்சேரிகளில் பாடுவதற்கும் திருவையாறில் பாடுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

சமுதாய உணர்வு

கச்சேரிகளில் பாடிப் பெயர் பெறுவதால் மட்டும் வாழ்க்கை முழுமை பெறுவதில்லை. இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வில் 1999ல் ஆரம்பிக்கப்பட்டதுதான் சமுதாய அறக்கட்டளை.

சமுதாய அறக்கட்டளை இதுவரை…

1999ம் ஆண்டு கார்கில் உதவி நிதிக்கு 5 இலட்சம், ஒரிஸா புயல் நிவாரண நிதிக்கு ஒரு இலட்சம், காக்கும் கரங்கள் மற்றும் பான்யன் நிறுவனத்திற்கு ஒரு இலட்சம், குஜராத் பூகம்பத்தின்போது நிதி உதவியாக மூன்று இலட்சம், புற்றுநோய் மருத்துவமனைக்கு பத்து இலட்சம், ஆதரவற்ற குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு 25 இலட்சம், மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக 5 இலட்சம் என்று இந்த பத்து ஆண்டுகளில் நிதி உதவி செய்திருக்கிறது. இன்னும் இந்தப் பணிகள் பெரிய அளவில் தொடரும்.

இசை விமரிசகர்கள்

இசை விமரிசனங்கள் பாரபட்சமாக இருக்கின்றன என்று ஒப்புக் கொள்ள முடியாது. விமரிசகர்கள் ஒரே நேரத்தில் பல கச்சேரிகளுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் முழுக் கச்சேரியையும் கேட்டு விமரிசனம் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு சிலர் தவறாக நடக்கலாம். ஆனால் பொதுவாக விமரிசனங்கள் குறை நிறைகளை சரியாகவே எடுத்துச் சொல்கின்றன.

அயல் நாட்டில் இசை நிகழ்ச்சிகள்
இந்த வருஷம் ஆகஸ்டில் பாரிஸில் நடந்த 24 மணிநேர இந்திய இசை விழாவில் கலந்து கொண்டேன். இரண்டு கச்சேரிகள் எனக்கு. அவர்கள் இசையிடம் காட்டும் பக்தியையும் அர்ப்பணிப்பையும் கண்டு அதிசயித்தேன். பாடும் நேரத்தில் யாரும் கச்சேரியை விட்டு வெளியே போவதில்லை. தனி ஆவர்த்தனத்தின்போது கூட அனைவரும் அப்படியே அமர்ந்திருந்தார்கள். கச்சேரி முடிந்ததும் எட்டு அல்லது பத்து நிமிஷங்களுக்கு எழுந்து நின்று கை தட்டுவார்கள். ஒரு நிலையில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, அப்படியும் இப்படியுமாக கழுத்தை அசைக்கத்தான் முடிந்தது.

அமிர்தவர்ஷினி பாடினால் மழை வருமா?

எல்லா நேரமும் மழை வந்ததில்லை. ஆனால் இரண்டு முறை அப்படி நடந்திருக்கிறது. ஒருமுறை டென்மார்க்கில் அமிர்தவர்ஷினி பாடிய பிறகு மழை கொட்டியது. அதுவரை இதுபோல் மழை பெய்ததில்லை என்று சொன்னார்கள். தோஹாவிலும் ஒருமுறை நான் பாடிய அடுத்த நாளிலிருந்து மழை நிற்காமல் பெய்ததாம்! அங்கிருந்து கணேசன் என்பவர் என்னை ஃபோனில் கூப்பிட்டு உடனே வந்து மழை நிற்பதற்கு ஏதாவது ராகம் பாட முடியுமா என்று கேட்டார்!

சத்யசாய்பாபா நிகழ்த்திய அதிசயம்

எனது அப்பாவும் அம்மாவும் சத்ய சாய்பாபாவின் தீவிர பக்தர்கள். அறுபதுகளில் பாபா பெங்களூர் வரும்போது, எங்கள் வீட்டு மாடியில்தான் தங்குவார். பின்னர் ஒயிட் ஃபீல்டிற்குச் சென்றார். எனது அன்னப் பிராசனம், பெயர் சூட்டல் எல்லாமே பாபாவின் மடியில்தான். அவர் எனக்கு ‘கீதசுதா’ என்று பெயரிட்டார். உலகிற்கு சுதா என்ற பெயர். அவர் கீதா என்ற பெயரிலேயே அழைப்பார்.

எனக்கு மூன்று வயது இருக்கும்போது புட்டபர்த்தியில் பாபாவை தரிசித்துவிட்டு பெங்களூர் திரும்பினோம், ஆந்திரா எல்லை வழியாக. அப்போது அந்த இடமெல்லாம் காடாக இருக்கும். திடீரென எனது உடல் விறைத்து நீலமாகத் தொடங்கியது. எனது அப்பாவும் அம்மாவும் என்ன செய்வதென்று தெரியாமல் காரிலிருந்து இறங்கியபோது தாடி மீசையுடன் இருந்த முதியவர் இன்னும் இருவரோடு வந்தார். அவர் என்ன ஆயிற்று என்று கேட்க, அப்பா நடந்ததைச் சொன்னார். முதியவர் நாட்டு வைத்தியர்தான் அவர் பார்க்கட்டும் என்று மற்ற இருவர் கூற, குழந்தையை அந்த முதியவரிடம் கொடுத்தார்கள். அவர், "நீங்கள் புட்டபர்த்தியிலிருந்து வருகிறீர்களே, அந்த விபூதி இருக்குமே, அதைக் கொடுங்கள்" என்று கேட்டு வாங்கி அதனைத் தனது செருப்பில் தேய்த்து நெருப்புப் பொறி பறக்க வைத்து உருக்கினார். பின்னர் அந்த விபூதியை என் நெற்றியில் பூசினார். பூசிய சில விநாடிகளில் நான் நினைவுக்கு வந்து எழுந்து விட்டேனாம். திரும்பிப் பார்த்தபோது அந்த முதியவரையும் மற்றவர்களையும் காணவில்லை! அதே சமயம் பாபா அவர்கள் புட்டபர்த்தியில் இரண்டு நிமிஷங்கள் நினைவிழந்திருந்தாராம். அவர் பக்தர்களுக்கு உதவி செய்யச் செல்கையில் இவ்வாறுதான் நிகழுமாம். பின்னர் பாபா தனது உதவியாளரிடம், "நான் கீதசுதாவிற்கு உதவி செய்யச் சென்றேன்" என்றாராம்! இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி. அவரது அருள்தான் என்னை வழி நடத்திச் செல்கிறது.

பின்னர் நேயர் விருப்பமாக ‘ராதாசமேதா கிருஷ்ணா’வும், ‘சின்னஞ் சிறு கிளியே’யும் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.”

About The Author