கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

மணிக்கொடியின் மணியான எழுத்துக்கள்

தமிழ் இலக்கிய உலகில் பரிச்சயமுள்ளவர்கள் மணிக்கொடி சீனிவாசன் பெயரைக் கேள்விப்படாமல் இருக்க முடியாது. சிறந்த எழுத்தாளர்; பத்திரிகையாளர்; தேசியவாதி.

மணிக்கொடி சீனிவாசன் எழுத்துக்கள்” என்ற தொகுப்பிலிருந்து (தொகுப்பாளர்: ஜயதேவ் சீனிவாசன், பதிப்பு: கணையாழி படைப்பகம்) அவரது பல பரிமாணங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த நூலிலிருந்து சில தேன் துளிகள்.

அவதூறு – “ரூபாய் நாணயத்தைக் கொடுத்தால் தட்டி வாங்குவார்கள். பழியைச் சொன்னால் ஆராய்ந்து கொள்ள மாட்டார்கள். அதிலும் நல்லவர்களைப் பற்றி, பெரிய மனிதர்களைப் பற்றி அவதூறு சொல்வதென்றால் சொல்கிற நாக்குக்கு ருசி. கேட்கிற காதுக்கு ருசி. வேம்பில் விருப்பம் காக்கைக்கு; பழி பேசுவதில் விருப்பம் கயவர்க்கு.”

ஜனத்தொகை – “உலகில் கூட்டம் பெருத்து விட்டது. இவ்வளவு பேரும் சுகத்துடன் ஜீவிக்க வழியில்லை. ஆகவே, உலகில் ‘நோ வேகன்ஸி’ என்று போர்டு எழுதித் தொங்க விட வேண்டும்!”

ஆபத்துக்கும் விபத்துக்கும் என்ன வித்தியாசம்?

பிரசிடெண்ட் வில்சன் ஒரு கிணற்றில் விழுந்து விட்டார் என்றால் அது விபத்து. அவரை யாராவது கரையேற்றி விட்டார்கள் என்றால் அது ஆபத்து!

இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி ஒரு முறை கடலில் மூழ்கி விடத் தெரிந்தார். அவரை ஒரு மீனவர் காப்பாற்றி விட்டார். முசோலினி நன்றியுடன் கேட்டார், “நீ யாரைக் காப்பாற்றியிருக்கிறாய் தெரியுமா? முசோலினியை! உனக்கு என்ன வேண்டும்? கேள்.”

மீனவன் சொன்னது, “தயவு செய்து இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்!”

“ராமையாவும் மணிக் கொடியும்” என்ற கட்டுரையில் நச்சென்று ஒரு பத்தி :-

“வாய் விட்டுச் சிரிக்கத் தெரிந்த பாக்யவான் ராமையா. வ.ரா சிரித்தால் ஆகாய வெடி. சொக்கலிங்கம் சிரித்தால் கேட்பது பாதி விசிப்பு; பாதி குரல். சிவராமன் சிரிப்பு பானைக்குள் வெடிக்கும் ஊசி வெடி . விருத்தாசலம் சிரித்தால் கனைப்பும் கர்ஜனையும். சிட்டி சிரிப்பைப் பார்க்க முடியும்; கேட்க முடியாது. ராமையாவின் சிரிப்பு பட்டாசு வெடி. ராமையாவின் மன எழுச்சிக்குப் புன்னகை போதாது. சிரிக்கும்போது கேவிக் கேவி சிரிப்பார். கண்களில் நீர் துளிக்கும். அவ்வளவு ஆழ்ந்த ரசானுபவம்!”

ராஜா ஒருவரைப் பற்றி கேலியாக ஒரு கதை சொல்வதுண்டு. உபன்யாசகர் ஒருவர் காசிக்கு கால் நடையாகச் சென்று கங்கையில் நீராடினால் கோடிப் புண்ணியம் என்று சொன்னதைக் கேட்டு ராஜாவுக்கு காசிக்கு நடந்து செல்ல ஆசை வந்து விட்டது. அவரோ உப்பரிகையை விட்டு ஒரு போதும் வெளியே வந்தவரல்லர். மாடியிலிருந்து கீழே இறங்குவதற்குள் களைப்படைந்து விட்டார். இறங்கியவுடன் அவர் கேட்ட கேள்வி : “காசி வந்து விட்டதா?”

இந்தக் கதைக்கு கம்பராமாயணத்தில் மூலம் இருக்கிறது என்கிறார் மணிக்கொடி. அனுமனைத் தூது அனுப்பியபோது, சீதையிடம் அடையாளம் காட்டுவதற்காக, ராமனுக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்த நிகழ்ச்சி ஒன்றைச் சொல்லி அனுப்புகிறார் ராமபிரான்.
ராமன், இலக்குவன், சீதை மூவரும் கானகத்துக்குப் புறப்படுகிறார்கள். அதுவரை சீதை அரண்மனையை விட்டு வெளியே வந்ததில்லை. வெளியே வந்ததும் சீதை கேட்கிறாள்:- “எங்கே காடு?”

பாடல் இதுதான்:-

“நீண்டமுடி வேந்தனருளேந்தி நிறை செல்வம்
பூண்டதனை நீக்கி நெறி போதலுறு நாளில்
ஆண்ட நகராரையொடு வாயிலகலாமுன்
யாண்டையது கானென இசைத்ததும் இசைப்பாய்!”

1952ல் சீனிவாசனுக்கு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருந்தார்கள். கடைசி நிமிடத்தில் வேறோரு வேட்பாளரை நியமனம் செய்து விட்டார்கள். நெருங்கிய நண்பர்கள் அவரை சுயேச்சையாகவாவது அல்லது வேறு கட்சி மூலமாவது நிற்குமாறு கேட்டுக் கொண்டார்கள். சீனிவாசன் மறுத்து விட்டார். அவர் சொன்ன காரணம்:

“நான் கட்சியின் வேட்பாளராக நிற்க ஒப்புதல் கேட்டபோது, என் மனு நிராகரிக்கப்பட்டால் கட்சி அங்கீகாரம் பெற்ற வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிட மாட்டேன் என்று உறுதி கொடுத்திருக்கிறேன்”

அவர் வால்மீகி ராமாயணத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார்.

கைகேயிக்குக் கொடுத்த வாக்கிலிருந்து தப்பத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார் தசரதர். ஒரு யோசனை வந்தது. ராமனிடம் சொன்னார், “நீ என்னை சிறையில் அடைத்து விட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்; நீ அரசன் ஆகி விடுவாய்; மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். சுதந்திரத்தை இழந்தவனாகையால், நான் வாக்குத் தவறிய பாவத்திலிருந்து விடுபடுவேன். இது என் ஆணை.”

ராமன் தந்தையின் ஆணையை, அது தனக்கு அனுகூலமானதாக இருந்தும், பொது மக்கள் ஆதரவைப் பெறக்கூடியதாக இருந்தும், மறுத்து விட்டார். எங்கோ, எப்போதோ, எந்த சூழ்நிலையிலோ கொடுத்ததாக எந்த சாட்சியும் இல்லாத தந்தையின் வாக்கைக் காப்பாற்ற ராமன் முன் வந்தான். ராமன் தந்தை ஆணையைத் தட்டியவனா? அது அல்ல கேள்வி. ராமன் எப்பேர்ப்பட்டவன்? அவன் ஸ்வபுத்தி வீரன்!”

About The Author

1 Comment

Comments are closed.