கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

அபத்தமான சில ஆரூடங்கள் சில..

தொலைக்காட்சி என்பது கற்பனையில் வேண்டுமானால் சாத்தியமாகலாமே தவிர, நடைமுறையில் அதைக் கொண்டு வர முடியாது.
(லீ. டீ.ஃபாரஸ்ட்-1926- கேதோட் ரே ட்யூபைக் கண்டு பிடித்தவர்.)

உலகச் சந்தையில் ஐந்தே ஐந்து கணிப்பொறிக்கு மேல் வியாபாரமே கிடையாது.
(தாமஸ் ஜே. வாட்ஸன்- ஐ.பி.எம் தலைமை இயக்குனர்-1943)

அவன் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் அவன் எதற்கும் உருப்படியாக மாட்டான்.
(ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடைய ஆசிரியர் – ஐன்ஸ்டீனுடைய அப்பாவுக்கு எழுதியது)

லூயி பாஸ்டரின்(louis Pasteur) கிருமியைப் பற்றிய சோதனைகள், ஆய்வுகள் கவைக்குதவாது – வெறும் புனைகதைதான்!
(Pierre Pachet, Professor of Physiology at Toulouse, 1872 )

இதன் சப்தமே எனக்குப் பிடிக்கவில்லை – கிதார் சங்கீதத்திற்கு இனி எதிர்காலமே கிடையாது.
(Decca recording company- rejecting beatles—1962).

"தொலைபேசியில் எவ்வளவோ குறைகள் இருக்கின்றன. இவை எப்படி செய்தி பரிமாற்றத்திற்கு உதவுமென்றே புரியவில்லை!”
(Western Union internal memo, 1876)

விமானங்கள் விளையாட்டுப் பொம்மைகளே தவிர, ராணுவத்திற்கு எந்த விதத்திலும் பயன்படாது.
(Marechal Ferdinand Foch, Professor of Strategy, Ecole Superieure de Guerre.)

ஒரு ராக்கெட் பூமியின் சூழ்நிலையிலிருந்து எப்போதும் மேலே போகவே முடியாது.
(நியூயார்க் டைம்ஸ், 1936)

இந்த ஆரூடங்களை இப்போது படிக்கும்போது நமக்கு சிரிப்பாகத்தானே இருக்கிறது?

ஜோரான சில ஜோக்குகள் – திருவல்லிக்கேணி நகைச்சுவை மன்றத்தில் கேட்டவை:

(இதற்கும் சிரிக்கலாம்!)

"இப்போதெல்லாம் மென்பொருள் கம்பெனியில் வேலை பார்ப்பவர் என்றால் ஜாதகத்தைக் கேட்பதில்லை – கம்பெனியின் பாலன்ஸ் ஷீட்டைத்தான் கேட்கிறார்கள்"

"நீ வீட்டு வாடகையே சரியாக் கொடுக்கமாட்டியே, எப்படி புது வீடு வாங்கினே?"
"வீட்டு வாடகைப் பணத்தை எல்லாம் சேர்த்து வைத்துத்தான்."

"பக்திக்கும் பய பக்திக்கும் என்ன வித்தியாசம்?"
"நான் பாட்டியிடம் காட்டுவது பக்தி; மனைவியிடம் காட்டுவது பயபக்தி"

"பாகவதர் கச்சேரில தீவிரவாதிகள் நுழைஞ்சுட்டாங்களாம்!"
"அப்புறம் என்ன ஆச்சு?"
"பாகவதர் பாடியே அவர்களைக் கொன்னுட்டார்!"

"ஆபரேஷன் பண்னினா நான் பிழைப்பேனா டாக்டர்?"
"இதென்ன கேள்வி – நான் ஆபரேஷன் பண்ணித்தானே இத்தனை நாள் பிழைச்சுண்டிருக்கேன்"

"உன் அண்ணா நியூயார்க்ல இருக்கார், தம்பி லண்டன்ல இருக்கார்ங்கறே! பின்ன நீ ஏன் பிச்சை எடுக்கறே?"
"அவங்களும் அங்க பிச்சைதான் எடுக்கறாங்க!"

திரு.கார்த்திகேயன் என்பவர் சொன்ன உண்மைச் சம்பவம் இது :

"நான் கதை எழுதுபவன். அவ்வப்போது என் கதைகள் வெளிவருவதுண்டு. ஒருமுறை தினமலர் சிறுகதைப் போட்டியில் எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. என் போட்டோ கேட்டிருந்தார்கள். எனக்கு மிகவும் சந்தோஷம். ஒரு நாள் என் கதையும் போட்டோவுடன் வெளி வந்தது. இன்று என்னைப் பார்த்து எல்லாரும் வாழ்த்துத் தெரிவிக்கப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு நான் கொஞ்சம் மேக்கப் செய்து கொண்டு வெளியில் கிளம்பினேன். ஆனால் யாரும் என்னைக் கண்டு கொண்டதாகக் கூடத் தெரியவில்லை. எனக்கு ரொம்ப ஏமாற்றம். தினமலர் விற்பனையாளரிடம் கூடக் கேட்டேன். 200, 300 பேப்பர் போயிற்று என்றார். வீட்டுக்காவது போன் வரும் என்று நினைத்தேன். ஒரு போன் கூட வரவில்லை. பிறகு வருத்தத்துடன் கோவிலுக்குச் சென்று கும்பிட்டுவிட்டு பிரகாரத்தை சுற்றிவரும் போது ஒரு தாத்தாவும் பாட்டியும் என்னைப் பார்த்துவிட்டு குசுகுசுவென்று பேசிக்கொண்டார்கள். என் கதையைப் பார்த்துவிட்டுத்தான் பேசுகிறார்கள் என்று நினைத்து பக்கத்தில் போய்க் கேட்டேன். அந்த கிழவர் சொல்லிக்கொண்டிருந்தார். இவர் போட்டோவைப் பார்த்ததும் இறந்தவர்கள் ஃபோட்டோதான் (ஆபிசுவரி) போட்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் உயிரோடுதானே இருக்கிறார் என்றார். அந்தப் பாட்டி காணவில்லை விளம்பரம் என்றல்லவா நினைத்தேன்!" என்றார். எனக்குத் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார் அந்த இந்தியர். பக்கத்தில் ஒரு ஆங்கிலேயர். இந்தியர் விமானத்தில் கொடுத்த உணவைச் சாப்பிடாமல் தான் கொண்டுவந்திருந்த உணவை எடுத்து சாப்பிட்டார். அவர் மோரை எடுத்தபோது அது என்ன என்று கேட்ட ஆங்கிலேயருக்கு "பட்டர்மில்க் இந்தியா" என்றார். சப்பாத்தியைப் பார்த்து ஆங்கிலேயர், "அது என்ன?" என்று கேட்டபோது ‘ரோட்டி இந்தியா’ என்றார். ‘தாலை’ப் பார்த்து கேட்டபோது "தால் இந்தியா" என்றார். பின்னர் அவர் சாப்பிட்டுவிட்டு பலமாக ஒரு ஏப்பம் விட்டார். ஆங்கிலேயர் கேட்பதற்கு முன்னால் "இது ஏர் இந்தியா" என்றார்.

ஒரு ராணுவ பதவிக்கான நேர்முகத் தேர்வு. இரண்டு ஆண், ஒரு பெண் என மூவர் அந்த நேர்முகத் தேர்விற்கு வந்திருந்தனர். முதல் ஆணிடம் பேட்டி காணும் அதிகாரி, "நான் சொல்வதை ஏன் எதற்கு என்று கேட்காமல் செய்ய வேண்டும். அப்போதுதான் உனக்கு வேலை" என்று சொல்லி. ஒரு ஏகே 47 துப்பாக்கியைக் கொடுத்து, "5வது அறையில் உன் மனைவி இருக்கிறாள். அவளை சுட்டுவிட்டு வரவேண்டும்" என்றார். பேட்டிக்கு வந்தவர், " உன் வேலையே வேண்டாம்" என்று சொல்லிப் போய் விட்டார். இரண்டாவது ஆள் ‘சரி’ என்று பேட்டி காண்பவர் சொன்ன 10ம் நம்பர் அறைக்குச் சென்றார். பிறகு சுட மனமில்லாமல் தன் மனைவியை அழைத்துக்கொண்டு திரும்பிவிட்டார். மூன்றாவதாக வந்த பெண்ணிடம் துப்பாக்கி கொடுக்கப்பட்டது, கணவரை சுட்டுவிட்டு வரும்படி. அவர் தேர்வு செய்பவர் சொன்னபடி 31ம் நம்பர் அறைக்குச் சென்றார். பட படவென்று துப்பாக்கி சுடும் சத்தம் – பின்னர் ஒரே கூச்சல் – அறையிலிருந்து அவன், "என்னைக் காப்பாற்றுங்கள்" என்று ஓடி வந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு வெளிவந்த அந்தப் பெண் கோபமாகச் சொன்னாள், "நீங்கள் பொய்த் துப்பாக்கியைக் கொடுத்து ஏமாற்றிவிட்டீர்கள்."

About The Author

1 Comment

  1. ashrafah

    ககககக………கிகிகிகிகி……….
    என்னனு பார்க்கிரீங்கலா……. ஒன்னும் இல்லை…….. நீங்க எழுதிய ஜோக் படித்து சிரிச்சுக்கிட்டு இருக்கேன்………….

Comments are closed.