கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

தேர்தல் முடிவுகளும் எதிர்நோக்கும் சவால்களும்

அரசியல் நோக்கர்களின் கணக்குகளையும், ஊடகங்களின் கணிப்புகளையும் ஆச்சரியத்திலும், திகைப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது 2009ம் ஆண்டில் நடந்து முடிந்த ‏இந்திய நாடாளுமன்றத் தேர்தல். எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காமல் ஒரு தொங்கு நாடாளுமன்றமே அமையும் என்ற எதிர்பார்ப்புகள் பொய்யாகி காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைக்கும் வலிமை பெற்றிருக்கிறது.

பொறுப்பில்லாமல் வெளியிலிருந்து ஆளும் கட்சியை அதட்டிக் கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்த்த இடதுசாரிகளும், தங்கள் தயவு இல்லாமல் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியாது என்று மிரட்டிக் கொண்டிருக்கலாம் என்று நப்பாசை கொண்டிருந்த பல உதிரிக் கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணியி‎‎ன் இந்த வெற்றியைக் கண்டு அசந்து போயிருக்கின்றன. மூன்றாவது அணி, நான்காவது அணி என இல்லாத தங்களின் பலத்தை நம்பியவர்கள் இப்போது சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில்இருக்கிறார்கள்.

தேர்தலுக்கு முன்பிருந்த கட்சிகளின் கூட்டணி இல்லாமலேயே காங்கிரஸ் 200க்கும் மேலான தொகுதிகளைப் பெற்றிருக்கிறது. இந்தத் தேர்தலில் கவனிக்கப்பட்ட முக்கிய அம்சம் – பொதுவாக தேர்தலில், ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிராகவே வாக்குகள் (anti incumbency factor) என்ற பொதுவான கருத்தும் பொய்த்துப் போயிருக்கிறது. மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவை தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி ஏற்க இருக்கிறது.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அடைந்த பொருளாதார வளர்ச்சி, உலகப் பொருளாதார மந்த நிலையில் மற்ற நாடுகள் பாதிக்கப்பட்ட அளவிற்கு இந்தியா பாதிக்கப்படாதது, விவசாயக் கடன்கள் ரத்து ஆகிய சில பொதுக் காரணங்களுடன் ராகுல் காந்தியின் பிரச்சார அணுகுமுறையும், மன்மோகன் சிங்கின் எளிமையான ஆளுமையுமான தனிப்பட்ட காரணங்களும் வெற்றிக்கு வழிவகுத்தன. மேலும், மிக முக்கியமான காரணம் ஒன்றும் உண்டு. இந்திய நாட்டு மக்கள் ஐந்தாண்டுகளுக்கு சுதந்திர செயல்பாட்டுடன் இயங்கக் கூடிய ஒரு நிலையான ஆட்சியை விரும்புகிறார்கள் எ‎ன்பதுதான் அது.

இந்தப் பெரும்பான்மை அதிகார அகங்காரத்தில் புதிய அரசு மயங்கி விடாமல், தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த செயல்பாட்டு சுதந்திரத்தை நாட்டை எதிர்நோக்கியிருக்கும் முக்கியமான சவால்களை பொறுப்புடன் சமாளிக்க ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

வறுமை ஒழிப்பு, விலைவாசிகளை கட்டுப்படுத்துவது, வேலை வாய்ப்பு, சுகாதார, மருத்துவ வசதிகள், அனைவருக்கும் தரமான கல்வி, உள்நாட்டுக் கட்டமைப்புகள் பெருக்கம், அதிகமான தொழில் பயிற்சிக் கூடங்கள், கீழ்த்தர மக்களையும் சென்றடையும் பொருளாதார சீர்திருத்தங்கள், நம் சுய கௌரவத்திற்கு பங்கம் வராத அன்னிய நாட்டு உறவுகள் ஆகியவை சமாளிக்க வேண்டிய சவால்கள் என சமுதாய அக்கறை கொண்டவர்கள் பட்டியலிடுகிறார்கள்.

நிலையான, சுதந்திரத்துடன் செயல்படக்கூடிய ஒரு அரசு தேவை என உணர்ந்து வாக்களித்திருக்கும் மக்களின் நம்பிக்கை வீண் போகாமல் ஒரு நல்லாட்சி மலருமென நம்புவோம்!

நாடாளுமன்றம் என்பது என்ன?

ஆங்கில அரசியல் அறிஞர் எட்மண்ட் பர்க் 1774 ல் தன்னை இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த பிரிஸ்டல் நகர மக்களுக்கு ஆற்றிய உரையில் ஒரு பகுதி ‏இது :

"நாடாளுமன்றம் என்பது ஒன்றுக்கொன்று எதிரான, முரண்பட்ட குழுக்களிலிருந்து வந்த தூதர்களின் (ambassadors) கூட்டமல்ல. அங்கு ஒவ்வொருவரும் தனது குழுவின் ஏஜண்ட் அல்லது வக்கீல் போல் வாதிட்டு தனது குழுவின் நலனை நிலைநிறுத்தும் வகையில் செயல்படக்கூடாது. நாடாளுமன்றம் என்பது ஒரே நாட்டின் ஒரே நோக்கத்தை நிலைநிறுத்துவது பற்றிக் கலந்து ஆலோசிக்கும் மன்றமாகும். இங்கே குறுகிய உள்ளூர் நோக்கங்களும், உள்ளூர் விருப்பு வெறுப்புகளும் இருக்கக் கூடாது. நாட்டின் ஒட்டு மொத்த அறிவின் அடிப்படையில் உருவாகும் ஒட்டு மொத்தமான நலன்தான் வழிகாட்டியாக இருக்க வேண்டும்."

(நன்றி : குடிமக்கள் முரசு)

About The Author