மனிதரில் எத்தனை நிறங்கள்! (100)

Give me a kisse, and to that kisse a score;
Then to that twenty, adde a hundred more;
A thousand to that hundred; so kisse on,
To make that thousand up a million;
Treble that million, and when that is done,
Let’s kisse afresh, as when we first begun.
– Robert Herrick

சந்திரசேகர் அப்படிக் கேட்ட போது ஆர்த்திக்கு அந்தக் கணத்தில் செத்துப் போவது கௌரவம் என்று தோன்றியது. சிவகாமி இமயமாக அவள் எண்ணத்தில் உயர்ந்து போனாள். ஆனால் தான் கடுகாகக் குறுகியது போல் ஒரு உணர்வு அவளுள் எழுந்தது. ஆகாஷ் தன் மீது கோபம் கொண்டது போதாது என்று தோன்றியது. இயல்பாகவே நல்லவளான அவளுக்குத் தங்கள் சந்தேகத்திற்குப் பிராயச்சித்தமே இல்லை என்று தோன்றியது.

"ஆர்த்தி. அப்பா கிட்ட அவள் சொன்னதை நான் கேட்டது அக்காவுக்குத் தெரியாது. அவளாக ஒரு நாளும் அந்த உயில் விவகாரத்தை என் கிட்ட சொன்னதுமில்லை. நானும் ஒருத்தரைத் தவிர இதை யாருக்கும் சொன்னதில்லை. கல்யாணமான புதுசுல உங்கம்மா ஒரு தடவை என்னோட அக்கா பாசத்துல சலிச்சுப் போனப்ப அவள் கிட்ட சொல்லியிருக்கேன். நான் சொன்னதை அவள் தன்னோட டைரியில் எழுதினதைப் பார்த்து "எங்கப்பாவோட தனிப்பட்ட பலவீனத்தை எல்லாம் கூடவா டைரியில் எழுதறதுன்னு" கோபப்பட்டு நான் அந்தப் பக்கங்களைக் கிழிச்சு கூடப் போட்டுருக்கேன். அந்த நேரத்துல இருந்து கடைசி வரைக்கும் உன் அம்மா அக்கா மேல ரொம்பவே மரியாதை வச்சிருந்தாள்….."

"என்னை மன்னிச்சுடுங்கப்பா" என்று அவரிடம் கண்ணீரினூடே சொன்ன ஆர்த்தி "நான் போய் அத்தை கிட்ட நேரடியா மன்னிப்பு கேட்கட்டுமா?" என்று வெகுளித்தனமாய் கேட்க சந்திரசேகர் மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச கோபமும் காற்றில் பறந்தது.

"வேண்டாம். முதலாவது அக்காவுக்கு இந்த அழுகை, சென்டிமெண்ட் எல்லாம் பிடிக்காது. அப்புறம் ஆகாஷ் அக்கா கிட்ட கண்டிப்பா இதை சொல்லி இருக்க மாட்டான். நீ மன்னிப்பு கேட்கறதா இருந்தா அவன் கிட்ட கேள் ஆர்த்தி…."

ஆர்த்தி தலையாட்டினாள். அவன் மன்னிப்பானா என்று அவளுக்குத் தெரியாது. ஆனால் மன்னிப்பு கேட்க வேண்டியது நியாயம் என்று தோன்றியது.

அம்மாவின் டைரியில் இருந்து கிழிந்த பக்கங்களில் என்ன இருந்தது, யார் கிழித்தார்கள் என்று இப்போது தெளிவாகி விட்டது. ஆனால் காணாமல் போன டைரிகள்? அந்த நேரத்திலேயே கேட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வது நல்லது என்று தோன்ற தந்தையிடம் கேட்டே விட்டாள்.

"அப்பா, அம்மாவோட கடைசி ரெண்டு வருஷ டைரிகள் எனக்குக் கிடைக்கலை. அது என்ன ஆயிருக்கும்?"

சந்திரசேகர் தர்மசங்கடத்துடன் மகளைப் பார்த்தார். "அது எனக்குத் தெரியலை ஆர்த்தி"

+++++++++++

தனது அறை வாசலில் தயக்கத்துடன் நின்ற ஆர்த்தியை ஆகாஷ் கேள்விக்குறியுடன் பார்த்தான்.

கண்ணீருடன் ஆர்த்தி கேட்டாள். "என்னை மன்னிப்பீங்களா?"

"எதுக்கு?"

"நான் எங்கம்மா சாவுக்கு … உங்கம்மாவை சந்தேகப்பட்டதுக்கு"

"என்ன திடீர் ஞானோதயம்?"

உள்ளே வந்த ஆர்த்தி கண்ணீர் வழிய தன் தந்தை சொன்னதைச் சுருக்கமாகச் சொன்னாள். ஆகாஷ் திகைத்துப் போய் நின்றான். இது இன்று வரை அவன் அறியாதது. ‘என்ன ஒரு மனசு அம்மாவுக்கு’.

"நான் அத்தை கிட்டயே மன்னிப்பு கேட்கறதாய் சொன்னேன். அப்பா அவங்களுக்கு இந்த அழுகை செண்டிமெண்ட் எல்லாம் பிடிக்காது, அதனால் வேண்டாம்னார். நீங்களாவது என்னை மன்னீப்பீங்களா?"

ஆகாஷ் அவளையே பார்த்துக் கொண்டு ஒன்றும் சொல்லாமல் நின்றான். அவனுக்கு அவள் மேல் இருந்த உண்மையான கோபம் அவள் சந்தேகத்திற்கான காரணங்களை லிஸா சொன்ன அன்றே பெருமளவும் போய் விட்டிருந்தது. மீதியிருந்த கோபமும் இன்றைய அவள் அழுகையில் காணாமல் போய் விட்டது. இந்த அழுகையிலும் அவள் மிக அழகாகத் தெரிந்தாள்.

அவன் மௌனத்தை கோபம் இன்னும் குறையவில்லை என்று எடுத்துக் கொண்ட ஆர்த்தி துக்கத்துடன் சொன்னாள். "ப்ளீஸ். என்னை மன்னிச்சுட்டேன்னு ஒரு தடவை சொல்லுங்க. நான் உங்களை இனி வந்து தொந்தரவு செய்ய மாட்டேன்"

"இனி தொந்தரவு செய்ய மாட்டேன்னு எல்லாம் சொன்னாய்னா நான் மன்னிக்க மாட்டேன்…."

அவளுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. குழப்பத்துடன் விழித்தாள்.

ஆகாஷ் புன்னகையுடன் சொன்னான். "நீ என்னை வந்து தொந்தரவு செய்துகிட்டே இருக்கணும். அப்படின்னா தானே நானும் உன்னைத் தொந்தரவு செய்ய முடியும்?"

சந்தித்த ஆரம்ப நாட்களில் இருந்த அதே சிநேகம்….. அதே குறும்பு. அவளுக்கு இது கனவா நனவா என்று புரியவில்லை. மனதில் ஆனந்தம் புதுவெள்ளமாய் பாய அவனைப் பிரமிப்புடன் பார்த்தவள் நன்றியுடன் அவன் காலில் விழப்போனாள்.

ஆகாஷ் அவளைத் தடுத்து இழுத்து அணைத்துக் கொண்டான். அது வரை தான் அவன் கட்டுப்பாட்டில் நடந்தது. அடுத்ததாக அவனையும் மீறி அவன் அவள் உதடுகளில் லேசாக முத்தமிட, அவளும் தன்னையும் மறந்து இசைந்து கொடுத்தாள். லேசான முத்தம், ஆழமாகி, அதிகமாகி…. அவர்கள் இருவரும் காலத்தை மறந்தார்கள்…..

ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி பொறாமைத் தீயில் வெந்தான். அவர்களுடைய உதடுகள் பிரிவதாக இல்லை. அந்த அணைப்பையும், தொடர் முத்தங்களையும் அதிக நேரம் பார்க்க சகிக்காத மூர்த்தி அங்கிருந்து நகர்ந்தான்.

சுய நினைவுக்கு வந்த பின் ஆகாஷும், ஆர்த்தியும் உடனடியாக விலகிக் கொண்டார்கள். கடிகாரமுட்கள் எத்தனை தூரம் நகர்ந்திருக்கின்றன என்று இருவருக்குமே தெரியவில்லை. இருவரும் இப்போதும் அரை மயக்க நிலையில் தான் இருந்தார்கள்.

ஆகாஷிற்குத் தான் உடனடியாகப் பேச முடிந்தது. "சாரி ஆர்த்தி"

ஆர்த்தி ஒன்றும் சொல்லாமல் வெட்கத்தில் அங்கிருந்து தனதறைக்கு ஓடினாள்.

++++++++++

மூர்த்தி பவானி அறை வாசலில் நின்றான்.

"என்ன மூர்த்தி?" பவானி கேட்டாள்.

"உங்க கிட்ட ஒண்ணு கேட்கணும்"

"கேளு"

"நீங்க என் அப்பாவைப் பார்த்தப்ப அவர் என்னைப் பத்தி ஏதாவது கேட்டாரா?"

பவானியை அந்தக் கேள்வி என்னவோ செய்தது. அவன் எத்தனையோ கெட்டவனாக இருக்கலாம், அவனிடம் ஏகப்பட்ட பலவீனங்கள் இருக்கலாம், ஆனாலும் அவனும் மனிதன் தானே? அந்தக் கேள்வி அவளை முதல் முதலாய் யோசிக்க வைத்தது. அவளாகத் தான் அண்ணனிடம் கேட்டாள், ஓடிப் போகும் போது குழந்தையையும் எடுத்துக் கொண்டு ஓடியிருக்கலாமே என்று. அவன் ஏன் குழந்தையை எடுத்துக் கொண்டு போகவில்லை என்று சொன்னான். ஆனால் அவனாக மூர்த்தியைப் பற்றி எதுவும் கேட்கவில்லை….

ஆனால் பவானி சொன்னாள். "கேட்டான். உன்னோட சின்ன வயசு போட்டோவைக் கூட அலமாரில வச்சிருக்கிறான் மூர்த்தி"

ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டு சில நிமிடங்கள் நின்றவன் "சும்மா கேட்டேன்" என்று தெரிவித்து விட்டு நகர்ந்தான்.

++++++++++

அன்றிரவு ஆர்த்திக்கும், ஆகாஷிற்கும் சரியாக உறக்கம் வரவில்லை. எப்போது விடியும் என்று காத்திருந்த ஆகாஷ் காலையில் முதல் வேலையாக ஆர்த்திக்கு குட் மார்னிங் சொல்லி விட்டுக் கேட்டான்.

"ஆர்த்தி நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?"

ஆர்த்திக்கு அந்தக் கணம் வாழ்க்கையின் மிக அதிக சந்தோஷமான கணமாகத் தோன்றியது. ‘இது கனவில்லையே’. அவள் முகத்தின் அதீத மகிழ்ச்சியும், அவள் லேசாக வெட்கத்துடன் தலையசைத்த அழகும் இன்னொரு முத்தம் தரத் தூண்டினாலும் இன்று தன் கட்டுப்பாட்டில் இருந்த ஆகாஷ் கண்ணியமாக நகர்ந்தான். "நான் அம்மா கிட்ட பேசறேன். சரியா?"

அதிகாலை வாக்கிங் முடிந்து புல்தரையில் சங்கரனும் சிவகாமியும் சேர்ந்து அமர்ந்திருந்த போது போய் ஆகாஷ் சொன்னான். "அம்மா நானும் ஆர்த்தியும் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு இருக்கோம்"

சங்கரன் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. "உன் தம்பி கிட்ட பேசி சீக்கிரமா நாளை முடிவு செய் சிவகாமி. நாம் டூர் போறதுக்கு முன்னால் கல்யாணம் முடிச்சுட்டா நல்லது"

ஆகாஷிற்கு அப்பா சொன்னதில் சீக்கிரம் என்ற வார்த்தை பிடித்திருந்தது. அவன் மனதைப் படிக்க முடிந்தது போல் அவனைப் பார்த்து சிவகாமி புன்னகைக்க ஆகாஷ் அசடு வழிந்தான்.

+++++++++++

விஷயத்தைக் கேள்விப்பட்டதில் இருந்து பார்த்திபனுக்கு மனதே சரியில்லை. ஏதோ ஒரு நல்ல கனவை இழந்தது போல சோகம் அவனுள் பரந்து விரிந்தது. அன்று காலை டிபன் சாப்பிடும் போது எல்லோர் வாயிலும் கல்யாணப் பேச்சே. சந்திரசேகர் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தார். ஆர்த்தியும், ஆகாஷும் அதிகமாக பேசிக் கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் பார்வைகள் நிறைய பேசின. அதைப் பார்த்த போது மூர்த்தி வயிறெரிந்தான். பார்த்திபன் சோகமடைந்தான்.

பார்த்திபன் தாயிடம் தனியாகச் சொன்னான். "நான் வெளியே எங்காவது வேலை பார்க்கலாம்னு இருக்கேன்மா"

"ஏண்டா? அக்கா உன்னையும் சேர்ந்து கூப்பிட்டு தானே பிசினஸை பார்த்துக்க சொன்னாள். இப்ப என்ன திடீர்னு"

"சொத்துல 60 பர்சண்டும், 40 பர்சண்டும் கல்யாணம் பண்ணிக்க போகுது. இனி எனக்கு அதுல என்ன இருக்கு? வேலை பார்க்கிறவனுக்கு எங்கே பார்த்தா என்ன? சொந்தத்துல பார்க்கறதை விட வெளியே பார்த்தா கௌரவமாவது கிடைக்கும். உன்னோட 20 பர்சண்டை உங்கக்கா சாமர்த்தியமா வாங்கிக்காமல் இருந்திருந்தா எனக்கும் எதாவது இங்கே மிஞ்சி இருக்கும்…"

மகன் வார்த்தைகளில் கொப்பளித்த வெறுப்பைக் கவனித்த அமிர்தம் பெருமூச்சு விட்டாள். "சும்மா வாயிக்கு வந்தபடி பேசாதேடா. உங்கப்பா அந்த 20 பர்சண்டை வாங்கினா இவங்களை விடப் பெரிய பணக்காரரா ஆகிக் காட்டறேன்னு என் கிட்ட அப்ப சவால் விட்டார். அக்கா கிட்ட குடுக்க சொன்னப்ப அக்கா ரொம்ப புத்திமதி சொன்னா. தொலைச்சுடுவீங்கன்னு அடிச்சுகிட்டா. நான் தான் உங்கப்பா வீராப்பைக் கேட்டு பிடிவாதமா கொடுத்தேயாகணும்னு நின்னு வாங்கினேன். இப்ப அனுபவிக்கிறேன்…."

பார்த்திபனுக்கு இந்தத் தகவல் கசந்தது. அமிர்தம் சொன்னாள். "உன்னை அக்காவோ, ஆகாஷோ, ஆர்த்தியோ வேலைக்காரனா நினைக்க மாட்டாங்க. உன் மேல் எல்லாருக்கும் பிரியம் இருக்கு. சும்மா கண்டதை எல்லாம் யோசிக்காதே"

+++++++++++++

"கோயிலுக்கு உள்ளே போகிறீங்களா பாட்டி" மூர்த்தி கேட்டான்.

"இல்லை. சும்மா முருகனைத் தொந்திரவு செய்ய வேண்டாம். வெளியவே உட்காரலாம்." என்ற பஞ்சவர்ணம் வெளியே இருந்த கல் மேல் உட்கார்ந்து கொண்டாள். அவளுக்குக் கடவுள் நம்பிக்கை என்றுமே இருந்ததில்லை.

இன்று அவர்கள் கிளம்புவதற்கு முன் ஆர்த்தியும் ஆகாஷும் டாக்டர் ப்ரசன்னாவைப் பார்க்கக் கிளம்பிப் போயிருந்தார்கள். டாக்டர் ப்ரசன்னா இன்றைய செஷனில் ஆர்த்தி ஆழ்மனதிலிருந்து பெரும்பாலும் என்ன வெளிக் கொணர்வான் என்பதை பஞ்சவர்ணம் ஓரளவு அனுமானித்திருந்தாலும் அவள் சந்தேகத்தை ஆர்த்தியின் ஆழ்மனம் ஊர்ஜிதப்படுத்தக் காத்திருந்தாள்.

"ஏண்டா அவனுக்கு இன்னைக்கு டாக்டர் ப்ரசன்னா கிட்ட ஆர்த்திக்கு அப்பாயின்மென்ட் இருப்பது தெரியுமா?

"தெரியும்"

அதிகமாக வீட்டை விட்டு வெளியே வராத பஞ்சவர்ணம் பல வருடங்கள் கழித்து எல்க்ஹில் முருகன் கோயிலுக்கு அசோக்கைப் பார்க்க வந்திருக்கிறாள். அவனைப் பற்றி மூர்த்தி எத்தனை தான் சொல்லி இருந்தாலும் நேரில் பார்க்க ஆர்வமாக இருந்தாள். சரியாக நான்கு மணிக்கு அசோக் எதிரே வந்து நின்றான். கறுப்பு டீ ஷர்ட்டும், சாயம் போன நீல ஜீன்ஸ¤ம் அணிந்திருந்தான். முகத்தில் உணர்ச்சியே இருக்கவில்லை. கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தாலும் உள்ளே இருந்து அவன் கண்கள் பஞ்சவர்ணத்தை கூர்ந்து பார்த்தன. கோயில் வாசல் வரை வந்த போதிலும், சொன்னதற்குக் கால் மணி நேரம் முன்பே வந்து விட்டிருந்த போதிலும் கோயிலுக்குள்ளே போகாமல் வெளியிலேயே உட்கார்ந்திருந்த அந்தக் கிழவி அவனை ஆச்சரியப்படுத்தினாள். அரை மணி நேரத்திற்கு முன்பே வந்து மறைவிடத்தில் அவர்களை அசோக் கவனித்ததை அவர்கள் இருவருமே அறிந்திருக்கவில்லை.

பஞ்சவர்ணமும் வைத்த கண் வாங்காமல் அவனை ஆழமாகப் பார்த்தாள். அளவிட முடியாத தன்னம்பிக்கையையும், பயமின்மையையும் பஞ்சவர்ணம் அவனிடத்தில் பார்த்தாள். அவள் முகத்தில் திருப்தி படர்ந்தது.

"பாட்டி இது அசோக். அசோக் இது என் பாட்டி" மூர்த்தி அறிமுகப்படுத்தினான்.

அசோக் தலையை ஆட்டினான். பஞ்சவர்ணம் அவனை ஊடுருவிப் பார்த்தபடி சொன்னாள். "தம்பி. உனக்கு எதையும் சுருக்கமாய், நேரடியாய் சொன்னால் தான் பிடிக்கும்னு மூர்த்தி சொன்னதை வச்சு கணக்குப் போட்டேன். அதனால நேரடியாவே கேட்கறேன். நீ இது வரைக்கும் எப்பவாவது போலீஸ்ல பிடிபட்டிருக்கியா?"

வெளியே காண்பித்துக் கொள்ளாவிட்டாலும் அசோக் இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருக்கவில்லை. இது வரை யாரும் அவனை இந்தக் கேள்வியைக் கேட்டதில்லை. இந்தக் கிழவி வித்தியாசமானவள் என்று நினைத்த அசோக் லேசாகப் புன்னகைத்தான். அசோக்கின் புன்னகையை முதன் முதலாகப் பார்த்த மூர்த்தி ஆச்சரியப்பட்டான். "ஓ. இவனுக்குப் புன்னகையும் வருமா?"

அசோக் சொன்னான். "இதுவரைக்கும் பிடிபட்டதில்லை. இனிமேல் பிடிபடற உத்தேசமும் இல்லை"

பஞ்சவர்ணமும் தன் அபூர்வப் புன்னகை பூத்தாள். கடந்த காலத்தைப் பற்றி அவன் உண்மையைச் சொல்கிறான் என்பதைக் கணிக்க முடிந்தது. அதே நேரத்தில் எதிர்காலத்திலும் அவன் பிடிபடக்கூடியவன் அல்ல என்று அவள் உள்ளுணர்வு தெரிவித்தது.

"நடந்தது சரி. நடக்கப் போகிறதை எப்படி அவ்வளவு உறுதியா சொல்கிறாய்?"

"எதையும் கச்சிதமாய் திட்டம் போட்டு செயல்படுத்தறவன் நான். என்னல்லாம் தவறாய் போகலாம்னு முன்கூட்டியே தீர்மானிச்சி அதையெல்லாம் சரி செய்யாமல் எந்தக் காரியத்திலும் இறங்க மாட்டேன்"

"நல்லது. எனக்கும் அது தான் வேணும். நான் உன்னை நம்பறேன். நான் நேரா விஷயத்துக்கு வர்றேன். நான் சொல்லப் போறதை நீ கவனமாய் கேளு. முடியுமா, முடியாதான்னு தயங்காமல் சொல்லிடு. ஏன்னா இது பெரிய இடத்து சமாச்சாரம். முடியும்னா பணம் ஒரு பிரச்சனையே இல்லை……"

பஞ்சவர்ணம் அசோக்கை சரியாக அனுமானித்திருந்தாள். இவனைப் போன்றவர்கள் எதையும் முடியாதென்று சொல்லி அறியாதவர்கள். அதே நேரத்தில் பணத்தில் மிகவும் கறாராக இருப்பார்கள். இரண்டையும் தூண்டிலாக அவனுக்குப் போட்ட பஞ்சவர்ணம் தான் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்ல ஆரம்பித்தாள். அசோக் இடைமறிக்காமல் அவள் சொன்னது முழுவதையும் கவனமாகக் கேட்டான்.

கடைசியில் பஞ்சவர்ணம் அழுத்தமாகச் சொன்னாள். "இதுல ரெண்டு விஷயங்கள் நான் சொன்ன மாதிரியே நடக்கணும். ஒண்ணு அவங்க ரெண்டு பேரையும் சாகடிக்கறது நாங்க ரெண்டு பேராய் தான் இருக்கணும்."

அசோக் சொன்னான். "என்னைக் கேட்டால் கொல்றதை ப்ரொபஷனல் கைல விடறது தான் நல்லது…"

"சில காரியங்களை நாமளே செய்துக்கறது தான் திருப்தி" என்ற பஞ்சவர்ணம் தன் அடுத்த அம்சத்தைச் சொன்னாள். "இன்னொண்ணு அவங்க ரெண்டு பேர் பிணமும் யார் கையிலும் எந்தக் காலத்திலும் கிடைக்கக்கூடாது….."

அசோக் உடனடியாக ஒன்றும் சொல்லவில்லை. எல்லாவற்றையும் மனதில் வாங்கிக் கொண்டு பிறகு தலையசைத்தான். "பன்னிரெண்டு லட்ச ரூபாய் ஆகும்" என்று தன் விலையைத் தெரிவித்தான். "ஆரம்பத்திலேயே அஞ்சு லட்சம் தந்துடணும்"

பஞ்சவர்ணம் ஒத்துக் கொண்டாள். "சரி. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னாயே, எந்த ஓட்டையும் இல்லாமல் கச்சிதமாய் திட்டம் போடறவன் நீயின்னு. அப்படியொரு கச்சிதமான திட்டம் போட்டுட்டு என் கிட்ட வந்து சொல்லு.. நான் அஞ்சு லட்சத்தோட காத்திருக்கேன்….முடிஞ்சா ஆர்த்தியோட இப்னாடிச சிடி நாளைக்குக் கொண்டுவர்றப்பவே உன் திட்டத்தையும் சொல்லு. எவ்வளவு சீக்கிரம் காரியம் நடக்கிறதோ அவ்வளவுக்கு நல்லது. "

(தொடரும்)

About The Author

1 Comment

  1. நிஷா

    கதை நன்றாக போகின்றது,பாராட்டுக்கள். தொடருங்கள்.

Comments are closed.