கண்ணில் தெரியுதொரு தோற்றம்(2)

விஜியின் அறை அலங்கோலமாய்க் கிடந்தது. கட்டிலில் வெவ்வேறு அளவுகளில் நாலைந்து கரடி பொம்மைகள். டிரஸ்ஸிங் டேபிளிலும் நாற்காலியிலும் இறைந்து கிடந்தன ஆடைகள். காலி காபி டம்ளர்கள் காய்ந்து போய் உருண்டு கொண்டிருந்தன.

"என்ன பாக்கறே! நாமெல்லாம் இயற்கையாதான் வாழறது. மனசுக்கு என்ன தோணுதோ அப்படித்தான் நடந்துக்கறது" என்று அந்த அலங்கோலத்துக்கு விளக்கமளித்தாள் விஜி.

சுவர் முழுவதும் அத்தனை திசைகளிலும் போஸ்டரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விதவிதமான போஸ்களில் சிரித்துக் கொண்டிருந்தான். அதற்கு நடுவில் மூலையில் சின்னதாய்ப் பிள்ளையார் படத்தைப் பார்த்ததும் தன் துக்கத்தையும் மீறிய சிரிப்பு வந்தது யமுனாவுக்கு.

"ஏண்டி சிரிக்கறே…" என்ற விஜி, யமுனாவின் பார்வை சென்ற திக்கைப் பார்த்து, "ஓ கணேஷைப் பாத்தா? கணேஷ் நம்மளோட பெஸ்ட் ஃப்ரண்ட்தான். ஆனாலும் ரொனால்டோதான் நம்ம பாய் ஃப்ரண்ட்! அதான் கணேஷுக்குக் கொஞ்சூண்டு இடம்." என்று சொல்லிவிட்டு, "நீ சமத்துதானே, கோச்சுக்கமாட்டேல்லே கணேஷு" என்று பிள்ளையாரைப் பார்த்துக் கொஞ்சினாள்.

யமுனா பொறுக்காமல் விஜியின் ஆடைகளை மடிக்க ஆரம்பித்தாள். "அய்யய்யே… இதெல்லாம் செய்யவா நீ இங்கே வந்தே? ஒவ்வொரு சண்டேயும் என் ரூம் க்ளீன் பண்ற சுசீலாக்கா இந்த வாரம் வரல்லே. அதான் ரூம் கொஞ்சம் கேவலமா இருக்கு. கண்டுக்காதே" என அவளைத் தடுத்த விஜி, ஒரு நாற்காலியைக் காலி செய்து படுக்கையின் அருகில் போட்டு யமுனாவை அமரச் சொன்னாள்.

"சொல்லுடி… என்னாச்சு?" என்று விஜி கேட்டதும், "ஒண்ணும் இல்லையே, ஏன் கேக்கற?" என்றாள் யமுனா போலியான மலர்ச்சியை முகத்தில் வரவழைத்து.

"பொய் சொல்லாதேப்பா. சொல்ல இஷ்டமில்லைன்னா வேண்டாம். ஆனா அழணும்னு தோணிச்சின்னா இந்த் தோழியின் தோள் இருக்கு" என்றாள் கொஞ்சம் மிகையான பாவனையை முகத்தில் கொணர்ந்து.

அவள் அப்படிச் சொன்னதும் அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகையும் பீறிட்டு வர தோழியின் மடி வடிகாலாய் அமைந்தது.

சற்று நேரம் ஆதரவாய்த் தலையைத் தடவிவிட்ட விஜி, யமுனா அழுகையை நிறுத்துவதற்கான அறிகுறி இல்லாதது கண்டு திகைத்துப் போனாள்.

கதவில் மெலிதான தட்டலுக்குப் பின், "விஜி, ஏதாவது பிரச்சினையா?" என்ற விக்ரமின் குரல் கேட்டது.

விஜி என்ன சொல்வதென்று தெரியாமல் குழம்பி, "நோ… நோ… ப்ராப்ளம்" என்றாள் குழறலாய்.

"கதவைத் திற" சற்று அதிகாரமாயும் அக்கறையாயும் வந்தது விக்ரமின் கட்டளை.

"பெட்ல படுத்துக்கோடி" என்று யமுனாவை எழுப்பிப் படுக்க வைத்துவிட்டு கதவைத் திறந்தாள் விஜி.

காஃபி ட்ரேயுடன் நின்று கொண்டிருந்த விக்ரம், "என்னாச்சு?" என்றான் சூழலைப் பார்வையால் அளந்தபடி.

"தெரியலை… ரொம்ப அழறா" ; "தெரியலைங்கறேன்ல" எரிச்சலாய்ச் சொன்னாள் தங்கை.

"தள்ளு. நான் பேசறேன்"

"ஒண்ணும் வேண்டாம். உன் வேலையைப் பாரு" அவனை அங்கிருந்து விரட்டுவதில் குறியாய் இருந்தாள் விஜி.

"மண்டு. நான் இதுக்குத்தாண்டி படிக்கறேன். உன்னைவிட என்னால ஒழுங்கா ஹாண்டில் பண்ண முடியும்"

அதற்குமேல் அவளைப் பொருட்படுத்தாமல் படுக்கை அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான் விக்ரம். யமுனா இவன் முன் அழுகிறோமெயென்ற அவமானத்தில் தலையணைக்குள் முகத்தைப் புதைத்துக் குலுங்கிக் கொண்டிருந்தாள்.

"யமுனா…" மென்மையாய் அழைத்தான்.

அவளிடம் பதிலில்லாமல் போக அவள் முதுகில் கை வைத்து, "என்ன பிரச்சினைன்னு சொல்லும்மா. எதுவானாலும் சமாளிக்கலாம்" என்றான் ஆதரவாய்.

விஜி அவனை அக்கினிப் பார்வை பார்த்து வாயசைப்பில் "கையை எடுறா" என்றாள்.

அவன் மறுகை ஆள்காட்டி விரலை உதட்டுக்குக் குறுக்கே வைத்து எச்சரித்துவிட்டு, "இட்ஸ் ஓகே, யமுனா. அழுறது தப்பில்லே. ஆனா என்ன ப்ராப்ளம்னு தெரிஞ்சா நாங்க ஏதாவது ஹெல்ப் பண்ணலாமே" அவன் சொன்னதும் மெல்ல யமுனாவின் அழுகை மட்டுப்பட்டது. ஆனாலும் அவர்களை நிமிர்ந்து பார்க்க தைரியம் வந்திருக்கவில்லை.

"வீட்ல சண்டை போட்டியா?" அவன் அவளை ஒருமையில் விளித்துக் கொண்டிருந்ததை விஜி கவனித்தாள்.

இல்லை என்பது போல யமுனாவின் தலையசைந்தது.

"காலேஜ்ல யாராவது கேலி பண்ணாங்களா?"

"காலேஜ்லர்ந்து கிளம்பும்போது நல்லத்தானிருந்தா" விஜி தோழிக்குப் பதிலாய்ப் பேசினாள்.

"ஏதாவது தொலைச்சிட்டியா யமுனா?"

மறுபடியும் இல்லையெனத் தலையசைப்பு.

‘இப்பப் பாரு’ என்று சைகையில் விஜியிடம் சொல்லிவிட்டு, "பாய் ஃப்ரண்ட் ஏமாத்திட்டானா?" என்றான் அவளிடமிருந்து காரசாரமான பதிலை எதிர்பார்த்து.

விஜி எக்கி அவன் தலையில் குட்டப் போனாள். யமுனாவுக்கு சுர்ரென்று கோபம் வந்தாலும் பதில் சொல்லவில்லையென்றால் இப்படித்தான் ஏடாகூடமாய் ஏதாவது கேட்டுக் கொண்டிருப்பானென்று எண்ணி,

"எங்கப்பாம்மா டைவர்ஸ் பண்ணிக்கப் போறாங்க" என்றாள் திணறலுடன்.

இதனை விஜி, விக்ரம் இருவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. விக்ரம் மெல்ல சுதாரித்து, "உங்கிட்ட சொன்னாங்களா?"

"ம்ஹும்… அவங்க பேசிக்கிட்டிருந்ததை நான் கேட்டேன்"

அவள் அழுகை முற்றிலுமாய் நின்று உரையாடத் தயாரானதை நிம்மதியோடு பார்த்தாள் விஜி.

"ஐ… ஸீ. எப்போ ஃபைல் பண்றாங்களாம்?"

"தெரியாது. நான் செட்டிலாகற வரைக்கும் வெயிட் பண்ணப் போறாங்களாம்"

"கூல்… அப்புறமென்ன?"

விசுக்கென எழுந்தமர்ந்தாள். "ரெண்டு பேரும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டாங்க" உதடுகள் துடிக்கச் சொன்னாள்.

"ம்ம்ம்… புரியுது. ஆனா அவங்க நிலைமை என்னவோ?"

"என்ன பொல்லாத நிலைமை? அவங்க எப்படி டைவர்ஸ் வரைக்கும் போகலாம்?"

இது நிமிடங்களில் சரிசெய்யக் கூடிய காயமல்ல என்று புரிந்து கொண்டான் விக்ரம்.

"உன் கோபத்தில நியாயமிருக்கு, யமுனா. என்ன செய்யறதுன்னு பொறுமையா யோசிக்கலாம். இப்போ சூடா காஃபி சாப்பிடு" என்றவன் எழுந்து ஃப்ளாஸ்கிலிருந்து காஃபியை ஊற்றித் தந்தான்.

தனக்கும் தங்கைக்கும் எடுத்துக் கொண்டு அமர்ந்தவன், "ஏண்டி ரூமை இவ்வளவு கேவலமா வச்சிருக்கே?" என்று கடிந்து கொண்டான். பின், "குடிச்சிட்டுக் கீழே வாங்களேன் ரெண்டு பேரும். டேபிள் டென்னிஸ் ஒரு கேம் போடலாம். யமுனா, நீ டிடி விளையாடுவியா?"

"ம்ஹும்"

"நோ ப்ராப்ளம். நான் கத்துத் தர்றேன்" விக்ரம்

"அழகான பொண்ணுங்களைப் பார்த்தா ஃபிலிம் காட்டுவீங்களே" என்று விஜி கலாய்த்ததை அலட்சியம் செய்து கீழே இறங்கிப் போனான்.

டேபிள் டென்னிஸ் விளையாடிய பின் விஜியும் யமுனாவும் டிவி பார்க்க அமர, விக்ரம் சமையலறைக்குள் புகுந்தான்.

"நிஜம்மா உங்கண்ணாதான் சமைக்கப் போறாரா?"

"பயப்படாதேடி… நல்லாவே சமைப்பான். அவன் சிக்கன் பிரியாணிக்கு நான் அடிமை" என்றாள் விஜி சிரித்தபடியே.

"மணி ஆறாகுது. உங்கம்மாவுக்கு ஃபோன் பண்ணி லேட்டாகும்னு சொல்லிடு, யமுனா. தேடப் போறாங்க"

"நல்லா தேடட்டும்" என்ற யமுனா வன்மத்துடன் அலைபேசியை அணைத்தாள்.

ஏழு மணிக்கு நேர்த்தியாய் அலங்கரிக்கப் பட்டிருந்த பதார்த்தங்களை ஆசையாய் விக்ரம் பரிமாறியபோது சமையலில் அவனுக்கிருந்த ஈடுபாடு யமுனாவுக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியிருந்தது.

"ரொம்ப டேஸ்டியா இருக்கு எல்லாமே. அழகா டெகரேட் வேற பண்ணி இருக்கீங்க" தன் பாராட்டுக்களைத் தெரிவித்தாள் யமுனா.

"உன்னைக் கவர் பண்ணப் பாக்கறாண்டி. விழுந்திறாதே" கண்ணடித்துச் சிரித்தாள் விஜி

"சரியான லூஸுடி, நீ. எப்ப என்ன பேசணும்னே தெரியாது" என்றான் விக்ரம் தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த யமுனாவைப் பார்த்தபடியே.

(தொடரும்)

About The Author