கண்ணில் தெரியுதொரு தோற்றம் -7

யுவனைப் பார்த்துவிட்டு வந்த பிறகு அவனது பின்னணியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டே வந்தது யமுனாவுக்கு. கங்காவைத் தவிர வேறு யாரும் அந்தப் புதிரை விடுவிக்க முடியாது என்று உணர்ந்து கொண்டவள் அதற்காகத் திட்டமிட ஆரம்பித்தாள். அடுத்தவாரமே வந்த அவளது பிறந்தநாள் அதற்குப் பேருதவியாக இருந்தது.

முந்தினநாளே தன் பிறந்தநாளுக்குத் தான் ஒரு சர்ப்ரைஸ் தரப்போவதாகவும் காலையில் அவளுடன் பெற்றோர் இருவரும் இரண்டு மணி நேரம் செலவழிக்க வேண்டும் என்றும் சொல்லி வைத்துவிட்டாள்.

காலையில் கங்காதான் நெற்றியில் முத்தமிட்டு எழுப்பினாள். "ராஜாத்திக்கு பதினெட்டு வயசு ஆயிருச்சாடி!" என்று கொஞ்சி திருஷ்டி கழித்தாள்

"சீக்கிரம் கிளம்புங்க. எட்டு மணிக்கு அங்கே இருக்கணும்" என்று அவசரப்படுத்தினாள் மகள். கங்கா தன் அறைக்குத் திரும்பியதும் ரகுபதி கதவைத் தட்டினார்.

"யமுனா, மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ்டா. இளவரசிக்கு அப்பாவோட சின்ன கிஃப்ட்" என்று ஒரு நகைப் பெட்டியை நீட்டினார். ப்ளாட்டினத்தில் மெல்லிய நெக்லஸ்.

"வாவ்! ரொம்ப விலையா இருக்குமேப்பா!"

"பிடிச்சிருக்காடா?"

"ரொம்ம்ம்ம்ப"

ஏழரைக்கெல்லாம் மூவரும் கிளம்பி வெளியில் வந்ததும், "திருமங்கலம் ஜங்ஷன்லருந்து லெஃப்ட் திரும்பி முகப்பேர் ரோடில போய் அதில மூணாவது லெஃப்ட். நான் அங்கே வெயிட் பண்றேன். சரியா?" என்று அவள் ஸ்கூட்டியில் கிளம்பியதும் தாயும் தந்தையும் தத்தம் காரில் பின் தொடர்ந்தனர்.

அவள் சொன்ன இடத்தை மூவரும் அடையவும், அவள் முன்னே வழிகாட்ட ஊர்வலம் தொடர்ந்தது. கங்காவுக்கு மகள் கருணை இல்லத்துக்குத்தான் அழைத்துச் செல்கிறாள் என்று புரிந்துவிட்டது. ஆனால் எதற்கென்று புரியவில்லை. யமுனாவுக்கு யுவன் பற்றிப் புரிந்து கொள்ளும் முதிர்ச்சி வந்துவிட்டதால் அவளிடம் உண்மையைச் சொல்லும் நேரம் வந்துவிட்டதென எண்ணிக் கொண்டாள் கங்கா.

"வாங்க, வாங்க… டைனிங் ரூம்ல பசங்கல்லாம் உங்களுக்காகத்தான் வெயிட் பண்றாங்க" கருணை இல்லத்தின் மேலாளர் ரமணி காத்திருந்து அழைத்துப் போனார்.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு யமுனா அன்னையின் முகத்தைக் கூர்ந்து பார்த்து அவள் உணர்ச்சிகளைப் படிக்க முயன்று தோற்றாள். ‘அம்மா அழுத்தக்காரி’ யுவனைப் பார்த்ததும் கங்கா என்ன செய்வாள் என்பதைப் பார்க்க யமுனாவுக்கு ஆர்வமாய் இருந்தது. ‘அப்பாவுக்கு இப்படி ஒரு மகன் இருப்பது தெரியுமோ?’

"அப்பா, என் பிறந்த நாளுக்காக இன்னிக்குக் காலைச் சாப்பாடு ஸ்பான்ஸர் பண்ணிருக்கேன்" என்று தந்தைக்கு விளக்கினாள்

அவர் இயந்திரத்தனமாய், "வெரி குட்" என்று சொன்னது யமுனாவுக்கு ஊக்கமளிக்கவில்லை.

"நீங்க இங்கே வந்திருக்கீங்களாப்பா முன்னாலே?"

"நோ"

"அம்மா, நீங்க?"

"யெஸ்… நிறைய முறை" அம்மா உண்மையைச் சொல்வாளென்று யமுனா எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த பதில் ரகுபதியிடம் லேசான பாதிப்பை ஏற்படுத்தியது போலத் தோன்றியது யமுனாவுக்கு.

‘எல்லா மர்மத்துக்கும் இன்று பதில் கிடைக்கப் போகிறது’ யமுனாவின் எதிர்பார்ப்பு அதிகமானது.

டைனிங் ரூமில் குழந்தைகள் யமுனாவின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்துவிட்டு உணவருந்தத் தொடங்கியதும் ரமணி, "நீங்களும் குழந்தைகளோட சேர்ந்து சாப்பிடலாமே!" என்றார்

"நோ… தாங்க்ஸ். சாப்பிட்டுத்தான் கிளம்பினோம்" என்று அவசரமாய்ப் பொய் சொன்ன ரகுவை முறைத்தாள் கங்கா. அதனைப் பொருட்படுத்தாத ரகு வாட்சைப் பார்த்துவிட்டு, "நான் ஆஃபீஸுக்குக் கிளம்பறேண்டா, யமுனா. ஹாவ் ஃபன்" என்று தோளில் தட்டிக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.

"இன்னும் கொஞ்சம் நேரம் இருந்துட்டுப் போலாமேப்பா" என அவள் கெஞ்ச, "ஸாரிடா. ஸீ யூ லேட்டர்" என்று போயே விட்டார்.

யமுனாவின் முகத்தில் படிந்த ஏமாற்றத்தை உணர்ந்தவளாய் கங்கா, "அவர் அப்படித்தான். விடு. உனக்கு முக்கியமான ஒருத்தரை அறிமுகப் படுத்தணும். பசங்க சாப்பிட்டு முடிக்கட்டும். வெளில வெயிட் பண்ணலாம்" என்று அவளைக் கையைப் பிடித்து வெளியிலழைத்து வந்தாள்

"உங்களுக்கு இங்கே அடிக்கடி வர நேரம் இருக்காம்மா?"

"அடிக்கடி வருவேன்னு சொல்ல முடியாது. வருஷத்துக்கு அஞ்சாறு முறை"

‘அவ்வளவுதானா? பாவம் யுவன்’ என்று நெஞ்சில் பரிதாபம் தோன்றியது.

சுற்றுமுற்றும் அனுபவித்துப் பார்த்தவள், "ஒவ்வொரு முறையும் நான் இங்கே வரும்போதும் இந்த இடத்தில ஏதாவது ஒரு வித்தியாசம் செய்யறாங்க. தொடர்ந்து இந்த அமைப்பு வளர்ந்துகிட்டே இருக்கு. நல்ல விஷயம்" என்றாள் கங்கா.

அதற்குள் குழந்தைகள் உணவருந்தி முடித்துவிட்டு ஒவ்வொருவராய் வெளியில் வர யமுனாதான் யுவனை முதலில் பார்த்தாள். குழப்பமும் தயக்கமுமாய் அவர்களை நோக்கி வந்த யுவனை கங்கா கவனித்ததும்,

"ஹாய், யுவன்… எப்படி இருக்கே?" என்றாள் முகமலர்ந்து.

"நல்லாயிருக்கேம்மா…" என்றவன் யமுனாவைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.

"இந்த மேடம்தான் இன்னிக்கு உன்னைப் பார்க்க என்னை இங்கே கூட்டிட்டு வந்தாங்க" என்று யமுனாவைக் காட்டினாள் கங்கா.

"யாருன்னு தெரியுதா, யுவன்?"

"யமுனாக்காவாம்மா? ஃபோட்டோவில பாத்த மாதிரியே இருக்காங்க"

சமர்த்தாய்ப் பாசாங்கு செய்தவனின் மேல் பாசமாயிருந்தது யமுனாவுக்கு.

"யமுனா, இது யுவன். உன் தம்பி" சந்தோஷமாய் அறிமுகம் செய்தவளைப் புரியாமல் பார்த்தாள் யமுனா.

‘அம்மா என்ன சொல்ல வருகிறாள்?’

"தம்பியா?" என்று பொய்யாய் ஒரு அதிர்ச்சி காட்டிவிட்டு,

"நைஸ் டு மீட் யூ, யுவன்." என்று கங்காவுக்குத் தெரியாமல் கண்சிமிட்டிவிட்டுக் கைகுலுக்கினாள்

"யமுனா நேத்தைக்கே இங்கேதான் வரப் போறோம்னு சொல்லிருந்தா நான் அரைநாள் லீவு போட்டிருப்பேன். ஆனா இப்ப நான் கிளம்பணும்’ என்று கங்கா சொன்னபோது பள்ளி மணி ஒலித்தது.

About The Author