கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 21

தன் குடும்பப் பிரச்சினையோடு விஜியின் கவலையும் சேர்ந்து கொள்ள அன்று முழுவதும் சோர்வாகவே கழிந்தது யமுனாவுக்கு. மறுநாள் விஜி கல்லூரி வராததில் இன்னும் கலவரமாகி வகுப்பு இடைவேளையில் அலைபேசியில் அழைத்தாள்.

"என்னடி ஆச்சு?"

"ஜுரம்" விஜியின் குரல் பலவீனமாயிருந்தது.

"காதல் ஜுரமாடி?" யமுனா கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாள்

"அப்டி இருந்தா தேவலையே"

"அப்புறம் நேத்திக்கு என்னாச்சு? வீராவேசமா போனியே, போர் நடந்துதா?"

"இல்லைடி வர்ற வழியிலேயே ஞானம் வந்திருச்சு. விக்கி கல்யாணம் வேண்டாம்னு சொல்றாங்கற காரணத்தினால என்னை வேண்டாம்னு சொன்னாங்கன்னா, அவங்க எனக்காகப் பொண்ணு கேக்கலைன்னுதானே அர்த்தம்? அப்படின்னா எனக்கும் அவங்க வேண்டாம்டி"

விளையாட்டாய்ப் பேசினாலும் விஜிக்குள் ஒரு பக்குவப்பட்ட மனுஷி இருப்பது யமுனாவுக்கு வியப்பாய் இருந்தது.

பின் அவளே, "ஸாரிடி, விக்ரமால நீ ஹர்ட் ஆயிடுவியோன்னு நான்தான் அவனைத் தள்ளி இருக்கச் சொன்னேன். இல்லைன்னா நீ எனக்கு அண்ணியா வந்திருப்பியோ என்னவோ?"

"கவலைப்படாதேடி. உங்கண்ணன் என் டைப் இல்லை" என்றாள் யமுனா. கிடைக்காத திராட்சை புளிப்புதானே!

விஜியிடம் பேசிய பின் மனம் நிம்மதியடைந்தது. மதியம் சில வகுப்புகள் ரத்தாகிவிட, யமுனா நேரே கங்காவின் அலுவலகத்துக்குச் சென்றாள்

"யம்மூ, என்னடா இப்படி திடீர்னு சர்ப்ரைஸ்? ஏதாவது ப்ராப்ளமா?"

"இல்லைம்மா. சும்மாதான். க்ளாஸ் கேன்சல் ஆச்சு. அதான்"

கங்காவின் அலுவலறை பெரிதாக இருந்தது. கதவில் அவள் பெயருக்குப் பின் ‘ஜெனரல் மேனேஜர் – ஹெச்.ஆர்’ என எழுதியிருந்தது.

"அம்மா, உங்க ஜாப் உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமோ?"

"அஃப் கோர்ஸ்… ஜாப்ல மட்டும்தான் எனக்கு முழு திருப்தி. போன வருஷம் டபுள் ப்ரமோஷன். பத்து வருஷத்தில நிறைய சேஞ்ச் கொண்டு வந்திருக்கேன். 11 ப்ராஞ்சஸ்ல என் ப்ராஞ்ச்லதான் எம்ப்ளாயீஸ் சேடிஸ்ஃபேக்ஸன் அதிகம். அப்புறம் பெஸ்ட் மேனேஜர் அவார்ட் கூட வாங்கிருக்கேன்" ஆர்வம் கொப்பளிக்க கங்கா சொல்லிக் கொண்டு போனபோது இத்தனை பணியாளர்களை திருப்தியாய் வைக்கத் தெரிந்திருக்கிற தன் அன்னைக்கு தன் தந்தையை திருப்திப் படுத்த இயலாததின் சூட்சுமம் புரிய மறுத்தது. தன் பணியின் மேல் இவ்வளவு பிடிப்பு வைத்திருப்பவளை இவள் வழியிலேயே சென்றுதான் தன் வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்ற சூத்திரம் மட்டும் தெளிவாகியது யமுனாவுக்கு.

***

இரண்டு நாள் கழித்துத்தான் விஜி கல்லூரி வந்தாள்.

"இன்னும் வீட்ல ஒரே கலவரம்தாண்டி. விக்கியை ஃபோன்ல கூட பிடிக்கமுடியலைன்னு நேத்திக்கு அப்பாவும் அம்மாவும் ஹாஸ்டலுக்கு நேர்லயே போயிருக்காங்க. ஒரேடியா வேண்டவே வேண்டாங்கறானாம். இதை எப்படி அவங்க கிட்ட சொல்லமுடியும்னு அப்பா தயங்கினதுக்கு நானே வேணா சொல்றேங்கறானாம். அப்பா கொதிச்சிட்டிருக்கார்," என்றவள் சில விநாடிகளுக்குப் பின்,"அப்பாவாவது அவன் வேண்டாம்னு சொன்னா விட்றலாம். அவருக்கு ஈகோ. எப்படி தன் பிள்ளை தன் பேச்சைக் கேக்க மாட்டேங்கறான்னு குமரன் அங்கிள்கிட்ட சொல்றதுங்கறதுதான் அவரோட பிரச்சினை. ஒண்ணும் புரியலைடி… இந்தக் கூட்டம் வந்தே இருக்க வேண்டாம்" எப்போதுமில்லாமல் விஜி வருந்தியதைக் கண்டு யமுனாவுக்கு நெஞ்சு பொறுக்கவில்லை. அவள் கையைத் தன் கையிலெடுத்துக் கொண்டு, ஆறுதலாய் அழுத்திவிடத்தான் முடிந்தது.

"இந்த நேரம் பார்த்து இன்டர்னல் எக்ஸாம்ஸ் வேற வந்து தொலைக்குது" என அலுத்துக் கொண்டாள் விஜி.

மாலையில் கல்லூரி விட்டுத் திரும்புகையில் பிரதான சாலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் சிக்னலில் காத்திருந்தபோது, "கும்பிடப் போன தெய்வம்" என்றான் அருகில் யமஹாவில் வந்து நின்ற விக்ரம்.

யமுனா சற்றுத் திகைத்து, அவன் பில்லியனில் யாரையோ தேடுவது போல பாவனை செய்தாள்.

"என்ன?" புருவம் உயர்த்திக் கேட்டான்.

"பின்னாலே யாரையும் காணோமேன்னு பார்த்தேன்"

‘ஓ… பாத்துத் தொலைச்சிட்டியா?’ என்று மனதுக்குள் சபித்தவன் அலட்டிக் கொள்ளாமல், "இப்போதைக்கு காலியாத்தான் இருக்கு" என்றுவிட்டு, "ஓகே… உன்னைப் பார்க்கத்தான் உங்க வீட்டுக்கு வந்துக்கிட்டிருந்தேன்" என்றான்.

‘உன் சாகஸத்துக்கு மயங்க வேறெவளையாவது பார்’ என கடுப்புடன் நினைத்துக் கொண்டே அவனை முறைத்தவள், சிக்னல் விழுந்ததும் அவன் அவள் வீட்டுக்குப் போகும் வலதுபுறம் திரும்ப, அவள் நேராய்த் தன் வண்டியை செலுத்தினாள்.

அவன் முகத்தில் கரியைப் பூசிவிட்டதில் ஏகப்பட்ட த்¢ருப்தி. ‘என்னைப் பார்க்க வீட்டுக்கு வர்றானாம். இனியும் இவன் கதையெல்லாம் நம்ப நான் ஒண்ணும் முட்டாளில்லை’ என மனதுக்குள் கறுவிக் கொண்டாள். ஷாப்பிங் மாலில் நிறுத்தி அலைபேசியை அணைத்து விட்டு கால் போன போக்கில் வேடிக்கை பார்த்துக் கொண்டு திரிந்தாள்.

மனதுக்குள் பாடலொன்றை முணுமுணுத்தபடியே இரண்டு மணி நேரம் கழித்து வீட்டுக்குள் நுழைந்த போது, "விக்ரம்னு ஒரு பையன் வந்திருந்தான்" என்றாள் கங்கா சற்று விறைப்புடன்.

திடுக்கிட்டவளாய், "விக்ரமா? எதுக்கு?"

"ஏதோ பர்சனலாய்ப் பேசணுமாம். ஒரு மணி நேரம் காத்திருந்தான்"

யமுனாவுக்கு வயிற்றைப் பிசைந்தது. ‘படுபாவி… அம்மாவிடம் வந்து என்னென்னமோ சொல்லி வைத்திருக்கிறானே!’

"எங்கிட்டேயா?" ஆச்சர்யம் காட்டினாள் முகத்தில். தாயின் கண்கள் தன்னனக் கூர்மையாய் ஆராய்வதை உணர்ந்தவளாய்,

"விஜியோட பிரதர்மா. அவளைப் பற்றிப் பேச வந்திருப்பான்" என்று சமாளித்தாள்.

"நான் துருவித் துருவி கேட்டப்பறம் அப்படித்தான் சொன்னான். அவளுக்கு ஏதோ நல்ல வரன் வந்திருக்காமே. ஆனா அவ வேண்டாங்கறாளாம். ஏன்னு உங்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்னு வந்தானாம்"

‘அப்பாடி!’ யமுனா ஒரு விநாடி கண்மூடி பெருமூச்சு விட்டதை கங்கா கவனிக்கத் தவறவில்லை.

"பரவாயில்லை. வெளில கண்ட இடத்தில உன்கிட்ட பேசணும்னு நினைக்காம மரியாதையா வீட்டுக்கு வந்திருக்கான். ஆமா, வீடு எப்படித் தெரியும்?"

"ஆங்?" என்று தடுமாறியவள், "தெரியலைம்மா… அதைக் கண்டுபிடிக்கறது பெரிய கஷ்டமா என்ன!" என்று அலட்சியமாய்ச் சொல்லிவிட்டுத் தன் அறையை நோக்கி நடந்தாள்.

அறைக்குள் நுழைந்ததும் அவசரமாய் விஜியை அழைத்து, "டீ… உங்கண்ணன் எங்க வீட்டுக்கு வந்திருந்தாராம். ஒரு மணி நேரம் காத்திருந்தாராம்" படபடப்புடன் கங்கா சொன்ன காரணத்தையும் சொன்னாள்.

"ஹை… ஹை… பையன் நல்லா கதை விட்ருக்காண்டி. நான் சொல்லலை, அவன் உனக்கு ரூட் போடறான்னு" பரிகாசம் செய்தாள் விஜி.

"அம்மா, தாயே… நான் இப்போதான் கொஞ்சம் தேறியிருக்கேன். நான் வரலை இந்த விளையாட்டுக்கு" என்று மனதிலுள்ளது சட்டென வெளியே வந்துவிட,

"ஐ…ஸீ… அப்போ நான் கெஸ் பண்ணது சரிதான். அன்னைக்கு என்னவோ உங்கண்ணன் என் டைப் இல்லைன்னு சொன்னே?" கற்பூரம் போலப் பற்றிக் கொண்டாள் விஜி.

"சும்மா கிண்டாதேப்பா. போனதைப் பற்றிப் பேசி என்னாகப் போகுது?" சங்கோஜமாய் யமுனா சொன்னதும் தன்னிடம் மறைத்ததற்காக யமுனாவை கோபித்துக் கொண்டாள் விஜி.

பெருமூச்சு விட்ட யமுனா, "உங்கண்ணனுக்கு ஆசையா இருக்கற மாதிரி நடந்துக்கறதும் அப்புறம் இன்னொரு பொண்ணு பின்னால போறதும் வழக்கமா இருக்கலாம். அதையெல்லாம் நம்மால தாங்கிக்க முடியாதுடி" என்று சற்று காட்டமாய்ச் சொன்னதும் விஜிக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது.

"அவன் அப்படிப்பட்டவன் இல்லை, தெரியுமா? நீயா ஏதாவது கற்பனன பண்ணிக்கிட்டிருப்பே" சற்று உரக்கவே சொன்னாள் விஜி.

இதுவரைத் தன்னைக் கடிந்து ஒரு வார்த்தை சொல்லியிராத தோழி தன்னிடம் குரலுயர்த்தியதில் யமுனாவின் அனிச்ச மனது வாடியது

அவசரமாய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு உரையாடலை முடித்துக் கொண்டாலும் இந்த விக்ரமால் தனக்கு எவ்வளவு தொந்தரவு என்ற கோபம் எஞ்சி நின்றது.

About The Author