கண்ணில் தெரியுதொரு தோற்றம் -9

முந்தைய தினம் தன் தாயுடன் நடந்திருந்த உரையாடலிலிருந்து தன் பெற்றோருக்குள் குறிப்பிடும்படியாய் ஏதும் பிரச்சினை இல்லை என்றும் பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்றும் யூகித்திருந்தாள் யமுனா. அவற்றைக் களைவதற்கான ஆலோசனைகளை இணையத்தில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தேடித் தேடி சேகரிக்க ஆரம்பித்திருந்தாள். ஒரு வாரமாய் இதையே படித்துப் படித்துக் குழம்பிப் போயிருந்தது.

ஆனால் பல தளங்களிலும் ஒரு குறிப்பிட்ட புத்தகம் பரிந்துரை செய்யப்பட்டிருந்ததைக் கவனித்து அதனை வாங்கலாம் என்று கல்லூரி முடிந்ததும் அந்தப் பெரிய புத்தகக் கடைக்குச் சென்றாள் யமுனா.

உறவுகள் சீர்படுவதற்குத்தான் எத்தனை யோசனைகள்! எவ்வளவு புத்தகங்கள்! அவள் தேடிக் கொண்டிருந்த புத்தகத்தை எடுப்பதற்குக் கை நீட்டியபோது, "ஹாய்… வாட் எ சர்ப்ரைஸ்" என்று வந்து நின்றான் விக்ரம்.

யமுனாவின் மனம் மலர்ந்ததை முகம் பிரதிபலித்தது. "ஹாய்…" அதற்கு மேல் வார்த்தை கிடைக்காமல் திணறினாள்.

"ஐஸ் க்ரீம்?" அவன் அவளை ஐஸ் க்ரீம் சாப்பிட அழைத்துப் போக விரும்புகிறான் என்று தெரிந்தும், பதில் யோசிக்க வேண்டியிருந்ததால்

"ம்???" என்றாள் புரியாத தினுசில்.

"பக்கத்தில ஒரு நல்ல ஐஸ்க்ரீம் பார்லர் இருக்கு. போலாமா?" ஒவ்வொரு வார்த்தையாய் நிறுத்தி குழந்தையைக் கேட்பது போலக் கேட்டான்.

"ம்ம்ம்"

"புக் வாங்கலையா?"

அவன் முன் அவள் வாங்க வந்த புத்தகத்தை எடுக்க சங்கோஜமாய் இருந்தது.

"இல்லை"

அவன் தோள் குலுக்கி, "ஆல்ரைட்" என்றான். ‘என்ன ஸ்டைல்!’ என்று யமுனா அவனில் லயித்தாள்.

எதிரெதிரில் அமர்ந்தபின் அவளுக்கும் சேர்த்து அவனே தேர்வு செய்து ஆர்டர் செய்து கொண்டிருக்க, அவள் திருட்டுத்தனமாய் அவனை அளந்து கொண்டிருந்தாள். ஆரஞ்சு வண்ண டி-ஷர்ட்டில் பளிச்சென்றிருந்தான். சமீபத்தில்தான் முடிவெட்டியிருக்க வேண்டும். மளமளவென்று ஷேவ் செய்த முகம். கழுத்தை ஒட்டி அதிக தடிமனில்லாத செயின்…

"அப்புறம்… பார்த்து ரொம்ப நாளான மாதிரி இருக்கு" என்றான் கண்ணுக்குள் பார்த்து.

அவன் பார்வையின் கூர்மையைத் தாங்க முடியாமல் கைப்பையில் ஏதோ தேடுவதாய் பாவனை செய்து, "நீங்கதான் ரொம்ப பிஸி போலருக்கு" என்றாள்.

"அப்படின்னு யார் சொன்னா?"

அபத்தமாய் பதில் சொல்வானேன்! இப்படி மாட்டிக் கொள்வானேன்!

"சும்மா கெஸ் பண்ணினேன்"

"என்னைப் பற்றி வேறென்ன கெஸ் பண்ணினே?"

"ம்ம்ம்??"

"பரவாயில்லை. சொல்லு"

"புத்திசாலி… ஆனா கொஞ்சம் கர்வம் இருக்கு… அப்புறம்…" அவனை வெறுப்பேற்றும் எண்ணத்தை செயல்படுத்திவிட்டு ஓரக் கண்ணால் அவனின் முகபாவத்தைக் கவனித்தாள்.

அவன் ஒன்றும் அலட்டிக் கொள்ளாமல் கைகளைக் கோர்த்து முகத்துக்கு முட்டுக் கொடுத்தபடி மிக சுவாரஸ்யமாய் அவள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

"ஐ… ஸீ… கர்வமான ஆளுங்க எப்படி நடந்துக்குவாங்க?" லேசாய்ப் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

"அடுத்தவங்களைக் கண்டுக்க மாட்டாங்க" சட்டெனத் தோன்றிய பதிலைச் சொன்னாள். அவனிருக்கையில் யோசிக்க முடிந்தால்தானே! அவளுக்குப் பரபரவென்று ஏதோ பற்றிக் கொண்டாற்போலல்லவா இருக்கிறது!

"நான் யாரைக் கண்டுக்கலை?" அவன் மர்மமான சிரிப்போடு கேட்டபோதுதான் திரும்பவும் தான் மாட்டிக் கொண்டது புரிந்தது. இதற்கு மேல் இவனிடம் இப்படிப் பேசிக் கொண்டிருந்தால் மானம் போவது நிச்சயம் என்று புரிந்து சட்டென்று பேச்சை மாற்றினாள்

"எனக்கு உங்க ஹெல்ப் வேணும்"

அவன் உடனே "ஷ்யூர்… லவ்தானே?" என்றதும் யமுனாவின் இதயம் வாய்வரை எகிறிக் குதித்தது.

‘என்ன சொல்ல வருகிறான் இவன்?!’

"ஆங்????" அவள் அதிர்ச்சியாய் நிமிர்ந்து பார்த்ததும்

"இல்லை… இந்த வயசுப் பொண்ணுங்களுக்கு பிரதான பிரச்சினையே அதுதானே! யாரையாவது லவ் பண்ணிட்டு சொல்ல முடியாம திணறுவீங்க, இல்லைன்னா பிரிஞ்சு போயிட்டான்னு உருகுவீங்க"

யமுனாவுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாய் இருந்தது.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஏன் எப்பப் பாத்தாலும் இதே கேள்வியைக் கேக்கறீங்க. என்னைப் பார்த்தால் லவ் பண்ற பொண்ணு மாதிரியா இருக்கு?"

"சந்தேகத்துக்கே இடமில்லாம…" அவன் ஸ்பஷ்டமாய் பதில் சொன்னான்.

"எனக்கிருக்கிற பிரச்சினையில லவ் பண்ணவெல்லாம் நேரமில்லை." கடுகடுவென்று குரலை மாற்றிக் கொண்டாள்

"ஆல்ரைட்… வேறென்ன ப்ராப்ளம்?"

"என் அப்பாவையும் அம்மாவையும் ஒண்ணு சேர்க்கணும்"

அவன் அவளை அக்கறையும் வாஞ்சையுமாய்ப் பார்த்தான். பின் சுவாதீனமாய் அவள் விரல்களைப் பற்றி, "டைவர்ஸ் ஃபைல் பண்ணிட்டாங்களா?" என்று ஆதரவாய்க் கேட்டான்.

அவன் ஸ்பரிஸத்தில் தனக்குள் ஏற்பட்ட அதிர்வுகளில் குழைந்தாள் யமுனா.

"நோ… நோ… நான்தான் சொன்னேனே, நான் செட்டிலாகிற வரைக்கும் பண்ணமாட்டாங்க" என்றாள். தன் பெற்றோரை சேர்த்துவைப்பதைவிட விட அவன் தன் கையை விட்டுவிடக் கூடாதே என்ற கவலைதான் அப்போது அவளுக்குப் பெரிதாக இருந்தது.

இதற்குத்தானா என்பதுபோல அவன் கையை விலக்கிக் கொண்டு, "ரைட், இதில நான் என்ன பண்ண முடியும்?"

"ரொம்ப குழப்பமா இருக்கு. அதான் என்ன செய்யலாம்னு உங்ககிட்ட கேக்கலாம்னு…"

"நேரடியா பேசிப் பார்க்கறதுதானே?"

"சான்ஸே இல்லை. எனக்கு எங்கப்பாகிட்டேயோ அல்லது அம்மாகிட்டேயோ அப்படியெல்லாம் பேசமுடியாது" அவசரமாய் அவன் யோசனைக்கு மறுப்புத் தெரிவித்தாள்.

"அப்படின்னா எழுது"

யோசித்து, "ம்ஹும்… சரியா வராது’

"பின்னே?"

"அவங்களுக்குத் தெரியாமலே அவங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிற மாதிரி சூழ்நிலை உருவாக்கணும்"

அனிச்சையாய் அவன் இதழ்களில் ஒரு ஏளனப் புன்னகை எழுந்ததைப் பார்த்தாள்.

"ஏன் சிரிக்கறே?" யமுனாவிடம் முணுக்கென எழுந்த கோபம் அவனை ஒருமையில் விளித்தது…

"என்னது… மரியாதை குறையுது?" விக்ரம் அவள் கோபத்தை ரசித்தவாறு அவளை ஆழம் பார்த்தான்.

"உனக்கெதுக்கு மரியாதை… நீ என்ன பெரிய ப்ரைம் மினிஸ்டரா?" அன்பு இருக்கிற இடத்தில்தானே இந்த உரிமை எடுத்துக் கொள்ள முடியும்!

"உன்னைவிட ஆறுவயசு பெரியவன்மா…"

"இருந்தா என்னவாம்?" உதடு குவித்து அவள் குழந்தை போல வாதித்ததைப் பார்த்த போது அவனறியாமல் ஒரு முன்புறுவல் பூத்தது.

"பாரு… பாரு… திரும்ப சிரிக்கறே" சுட்டுவிரலை நீட்டிச் சீறிய யமுனாவின் முகம் கோபத்தில் சிவந்ததைக் கண்ட விக்ரம்,

"ரிலாக்ஸ் யமுனா" என்றான் அந்த சுட்டுவிரலை இறுக்கமாய்ப் பற்றி.

அவனின் செய்கை தன் கோபத்தைச் சுட்டிக் காட்டியது போலத் தோன்ற கையை உதறி எழுந்து, "உன் ஹெல்பும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்" அவன் விளக்குவதற்கு இடம் தராமல் புயலாய் வெளியேறினாள்.

ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் சரியாய் வந்து சேர, அவள் போவதைப் பார்த்துக் கொண்டே அவளுக்காக ஆர்டர் செய்ததை முதலில் சுவைக்க ஆரம்பித்தான் விக்ரம். பாதி வழியில் அவள் திரும்பிப் பார்த்து அவன் பின் தொடராததில் ஏமாற்றம் அடைவதைக் கண்டு வாய்விட்டுச் சிரித்தான்.

(தொடரும்)

About The Author