கார் வித்த காசு (1)

ந‎ன்றி : ஆனந்த விகடன், 28.04.2002 (காரும் காதலியும்)

கார்த்தால கண்ணு முழிக்கறச்ச மணி பதினொண்ணரை. பதினொண்ணரை கார்த்தால சேர்த்தியா மதியத்துல சேர்த்தியா?

அஞ்சரை மணிக்கி எழுந்துண்டு, மெரினாவுல ஒரு டிரைவ் போய் வந்து எக்ஸஸ்ஸைஸ் பண்ணிக் குளிச்சிட்டு அந்த நாளை ஸ்டார்ட் பண்ணி, நைட் பத்துப் பதினொண்ணு வரைக்கும் பம்பரமாய் சுத்திண்டிருந்த காலமெல்லாம் மலையேறிடுத்து.

கார்த்தால ஒம்போதிலயிருந்து நைட் ஒம்போது வரைக்கும் நம்மக் கடையிலதான் வாசம். நடுவுல நடுவுல வேற ஆக்ட்டிவிட்டீஸ். வியாபாரிகள் சங்கத்துல தீவிர உறுப்பினர். ரோட்டரி க்ளப் செக்ரட்ரி. ஃபில்ம் ஸென்சார் போர்டுல மெம்பர். ஹிண்டு லெட்டர்ஸ் ட்டு எடிட்டர்ஸ்ல நறுக் நறுக்னு வாரத்துக்கு ரெண்டு லெட்டர். அதைவிட முக்கியம், மாசத்துக்கொரு தமிழ்ப்பத்திரிகைல மாசத்துக்கொரு சிறுகதை.

புனைப்பெயர்- பீபிஜான்.

இதென்ன சாமி பீபிஜான்? சம்மந்தமேயில்லாம இருக்கே! அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் அநியாயமா முடிச்சுப் போடறேளே சாமீன்னு கேட்பேள். தெரியும். போகப் போக நீங்களே தெரிஞ்சிப்பேள்.

மேலே வாசியுங்கோ.

எப்படீன்னா இத்தனை பிஸியா இருந்துண்டு ராத்திரியும் ஃப்ரஷ்ஷா, ஆக்ட்டிவ்வா இருக்கேள்னு சரஸ்வதியே சமயத்துல ஆச்சர்யப்பட்டுப் போவா. ஆக்டிவ்வான்னு உச்சரிக்க அவளுக்கு வெக்கம் வேற வந்துரும். ஆவொ ஆச்சர்யப்பட்டது ஓக்கே. வேற யார் யார் ஆச்சர்யப் பட்டாளோ, எவா, எவா திருஷ்டி போட்டாளோ, பதினைஞ்சு வருஷ பிஸினஸ் அஞ்சே மாசத்துல அஸ்தமிச்சுடுத்து.

பிராமணாளுக்கு எதுக்குங்காணும் பிஸினஸ், இதெல்லாம் நாடார்ஸ், செட்டியார் கம்யூனிட்டிக்குத் தானே சரியா வரும்னுட்டு இப்ப ஒரு காமென்ட். இதெல்லாம் நா நல்லா இருக்கச்ச இவா சொல்லலை. சொல்லவும் மாட்டா. இவாள்ளாம் பூனை மெலிஞ்சுடுத்துன்னா கொண்டாட்டம் போடற எலிகள்.

அஞ்சு வருஷத்துக்கு முந்தி செங்கல் செங்கலாய்ப் பாத்துக் கட்டின வீடு. அதைப் பாங்க்ல வச்சு வாங்கின கடனுக்கு வட்டி ஏறிண்டே போறது. வாரத்துக்கொரு வாட்டி அந்த லேடி மானேஜர் ஃபோன் பண்றா. எப்படியோ சமாளிச்சிண்டிருக்கேன்.

போன வாரம் போன் பண்றச்ச சித்த வருத்தப்பட்டுப் பேசினா. "சார், ஸென்ட்ரல் ஆபீஸ்லருந்து ப்ரஷர் குடுக்கறா. இன்ட்ரஸ்ட் மட்டுமாவது அப்பப்ப ஸெட்டில் பண்ணிண் டிருந்தேள்னா, என் பொஸிஷன் ஸேபாயிருக்கும்."

"அது கரெக்ட்தான் மேடம், என் பொஸிஷன் இன்னும் ஸேபாகலியே, என்ன பண்ணச் சொல்றேள்! ச்சப்பர் பாட்கேன்னுட்டு ஒரு ப்ரோக்ராம் ஸோனி டிவில வக்கிறா பாத்திருக்கேளா? கூரையப் பிச்சுண்டு கொட்டுன்னு அர்த்தம். அது மாதிரிக் கூரையப் பொத்துண்டு எதாச்சும் கரன்ஸிக் கட்டு எம் மடியில வந்து விழுந்தாத்தான் உண்டு. அதுக்குத்தான் பகவானை வேண்டிண்டுருக்கேன்."

"என்னோட சங்கடம் புரியாம தமாஷ் பண்றேள். சார் நீங்க தப்பா நினைக்கலைன்னா நா ஒரு ஸஜஷன் சொல்லட்டுமா?."

"சம்மந்தமில்லாதவாள்ளாம் சொல்றா. நீங்க ரைட் இருக்கறவா சொன்னா என்ன. சொல்லுங்கோ."

"வந்து… ஒங்கக் காரை இன்னும் வச்சிண்டிருக்கேளா, வித்துட்டேளா?"

"எதுக்குக் கேக்கறேள்?"

"இல்ல… நீங்க இப்ப ஸிங்கிள் மேன். ஒங்களுக்கு கார் அதிகம் தேவைப்படாது. அதை டிஸ்ப்போஸ் பண்ணிட் டேள்னா இந்த இன்ட்ரஸ்ட்டை அடைச்சுரலாம்."

"ஓஹோ…"

"என்ன சார், தப்பா எடுத்துண்டுட்டேளா?"

"நோ, நோ, ஒரு க்ரிட்டிக்கல் பொஸிஷன்ல இருந்துண்டு இவ்வளவு டீஸன்ட்டா ஒரு டிஃபால்ட்டர்ட்ட நீங்க பேசறதே பெரிய விஷயம். நேக்கு இது தோணவே யில்லை பார்த்தேளா! கன்ஸிடர் பண்றேன் மேடம். நீங்களும், ஒங்க க்ளையன்ட் யாராச்சும் ஸெகண்ட் ஹாண்ட் மாருதி வாங்கற ஐடியால இருக்கான்னு தெரிஞ்சா சொல்லுங்கோ."

நேக்கு ஒண்ணும் இது தோணாம இல்லை. பிஸினஸ் போயிடுத்து. வீடு கிட்டத்தட்ட போன மாதிரிதான். ஸெல் ஃபோன் பேச்சு மூச்சில்லாத ஒரு மூலையில கெடக்கறது. நோ மோர் இன் ஸென்சார் போர்டு. பந்தாவாப் பாக்கெட்ல வச்சுண்டு அலஞ்ச அமெரிக்கன் எக்ஸ்ப்ரஸ் க்ரெடிட் கார்டை ஸரண்டர் பண்ணச் சொல்லி நோட்டீஸ் வந்து அவமானப் பட்டாயிடுத்து.
மிஞ்சியிருக்கிறது ரோட்டரி க்ளப்பும் இந்தக் காரும்தான். ரெண்டும் ஒன்ணோட ஒண்ணு கனக்ஷன் உள்ளது. ரோட்டரி மீட்டிங்குக்குக் கார்ல போய் எறங்கினாத்தான் மதிப்பா இருக்கும்!

சரஸ்வதி ஒருநாள் ஒரு கம்ப்ளய்ன்ட்டோட வந்தா. "பிஸினஸ் லாஸ் ஆகி ஒங்க ஹஸ்பண்ட் கடைய க்ளோஸ் பண்ணிட்டாராமேன்னு ரோட்டரி ஆன்ஸ் நைட்ல லேடீஸெல்லாம் கேக்கறா. அவாளையெல்லாம் ஃபேஸ் பண்றதுக்கே நேக்கு ரொம்ப சங்கடமாயிருக்குன்னா. நேத்திக்கிக்கூட ரொட்டேரியன் விஸ்வநாதனோட மிஸஸ் ஃபோன் பண்ணி துக்கம் விசாரிக்கிறா. மெட்ராஸ்ல இருக்கவே நேக்குப் பிடிக்கலைன்னா. நா நம்ம உமாட்ட போயிடறேனே."

"எங்க, அமெரிக்காவுக்கா! அமிஞ்சிக்கரைக்கிப் போற மாதிரி சர்வசாதாரணமாச் சொல்றாய்?"

"கஷ்டமொண்ணும் இல்லைன்னா, கலெக்ட் கால் போட்டு ஏற்கனவே உமாட்ட பேசிட்டேன். ஸ்பான்ஸர்ஷிப், டிக்கட் எல்லாம் அனுப்பறேன்னிருக்கா. நாம இங்கே யு.எஸ். எம்பஸில போய் விஸா எடுக்கணும்."

யு எஸ் விஸா! அதுக்கு என்ன ஒரு ரஷ்!

அதிகாலை நாலரை மணிக்குப்போய் காத்துண்டிருந்து டோக்கன் வாங்கி க்யூல கால்கடுக்க நின்னுட்டிருந்து அல்லோகோலப்பட்டு, போலீஸ்காரன்கிட்ட திட்டு வாங்கி, ஸெக்யூரிட்டிச் செக்ல அவஸ்தைப்பட்டு, இவாள்ளாம் அமெரிக்காவுக்குப் போய்த்தான் ஆகணுமான்னு தோணித்து. கூடவே, இந்த ஷார்ட் ஸ்டோரி ரைட்டருக்கு ஒரு கவிதையும் தோணித்து.

எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பலை. சும்மா ஒரு ஆத்ம திருப்திக்கு எழுதி வச்சிண்டேன். இப்பத்தான் ரிலீஸ் பண்றேன். நன்னா வந்திருக்கான்னு சொல்லுங்கோ.

அதிகாலையில் ஆவின் க்யூ
அதன் பிறகுக் கார்ப்பரேஷன் டாங்க்கரின் பின்னால்
வால்போலக் குடங்களின் அணிவகுப்பு
எட்டு மணி பஸ்டாப்பில்
கும்பல் கும்பலாய்க் கலர்க் கலராய் க்யூ
பத்து மணி ஷோவுக்கு ஒன்பதுக்கே த்யேட்டரில்
வயிற்றுப் பசியற்றவரின் வர்க்க பேதமில்லா க்யூ
சர்க்கரைக்கும் மண்ணெண்ணைக்கும்
ரேஷன் கடையில்
வறுமைக்கோடு மாதிரி நீளமாய் ஒரு க்யூ
பட்ஜெட்டுக்கு முந்தின நாள்
பெட்ரோல் பங்க் நிரம்பி வழிய
திமிறிக் கொண்டொரு வாகன க்யூ
இத்தனையும் போதாதென்று
வெயிலிலும் மழையிலும் அதிகாலைப் பனியிலும்
புடவை சுரிதாரிலும் ஜீன்ஸ் பான்ட் ஷர்ட்டிலும்
அண்ணா மேம்பால அடிவாரத்தில்
அநியாயத்துக்கு ஒரு க்யூ
அமெரிக்கா போவதற்கு

கார் போயிடுத்துன்னா தொட்டுக்கோ தொடச்சிக்கோன்னு இருக்கற ரோட்டரி க்ளப் டச்சும் விட்டுப் போயிடும். என்னோட கடேசி ஸ்டேட்டஸ் ஸிம்பல் ரெண்டும் கழண்டுண்டுரும்.

தாடையைத் தடவித்தடவிப் பாத்து மொழு மொழுன்னு டெய்லி ஷேவ் பண்ணிண்ட காலமெல்லாம் காலாவதியாகிப் போய். இப்பல்லாம் சனிக்கிழமை ரோட்டரி மீட்டிங்குக்குக் கிளம்பறச்ச ஒரு ஷேவ், நடுவுல செவ்வாயோ, புதனோ ஒரு ஷேவ்னு ஆயிடுத்து.

இன்னிக்கி மன்டே, ஷேவிங் டே இல்லை. ஆனாலும், ஒரு விசேஷமான நாள்ங்கறதால பண்ணிக்கலாம். விசேஷம்னா, சந்தோஷமான விசேஷம் இல்லை. சோகமான விசேஷம்.

இந்தக் கார் என்னை விட்டுப் பிரியப் போற நாள்.

(தொடரும்)

About The Author