சில்லுனு ஒரு அரட்டை

ஹலோ ஃபிரெண்ட்ஸ்,

எல்லோரும் நல்லா இருக்கீங்கதானே? நான் இங்கே எப்பவும் போல நலமா இருக்கேன்.

என்னடா இது? வளைச்சு வளைச்சு பின்னூட்டங்கள் அனுப்புகிறவராச்சே நம்ம முனைவர் ஸார். கொஞ்ச நாளா ஆளையே காணலையேன்னு தேடிகிட்டு இருந்தேன். வந்துட்டீங்களா? முனைவர் ஸார் என்ன இது? உங்க மேலே இருக்கும் அன்பினாலதானே (நிஜமா ஸார்! நம்புங்க…) நான் உங்களுக்கு ஒரு பெயர் தேடினேன். இன்னமும் தேடிக்கிட்டுதான் இருக்கேன் கிடைக்கலை. கிடைச்சதும் கண்டிப்பாக உங்களுக்கு சொல்றேன். சரியா…?

பெரிய பெரிய நகரங்களில் இருக்கும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ரொம்பவும் பிரசித்தி பெற்றது ‘Candle Light Dinner’. உணவு மேஜைகளைத் தவிர மற்ற இடங்களில் இருண்டு இருப்பதே இந்த டின்னரின் முக்கிய அம்சம். மூன்றில் ஒரு பகுதியாக இருட்டாக இருக்கும். அந்த இருட்டில் மேஜையைப் போய் சேரும்முன் போதும்.. போதும்.. என்றாகிவிடும். கொஞ்ச நேரம் நடக்கும் நமக்கே இப்படி இருக்கே.. அங்கே பணி செய்யும் வெயிட்டர்கள் என்ன பாடுபடுவார்களோ என்று நினைத்து பலமுறை கவலைப்பட்டதுண்டு.

இது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயமாக இருந்தாலும், பெங்களூரில் இருக்கும் ‘Dark’ என்ற ஹோட்டலில் நடக்கும் ‘Candle Light Dinner’ நடைமுறையில் ஒரு பெரிய வித்தியாசம் கண்டிப்பாக உண்டு. அது என்ன தெரியுமா? இங்கே பணிபுரியும் வெயிட்டர்கள் அனைவருமே பார்வையற்றவர்கள். ஹோட்டலுக்குள் விருந்தினர்கள் நுழைந்ததுமே இவர்களுடைய வேலை ஆரம்பிக்குமாம். விருந்தினர்களை மேஜையில் அமர்த்துவதில் தொடங்கி அவர்களுடைய உணவிற்கான ஆர்டர்களைப் பெற்று, உணவு தயாரானதும் விருந்தினர் ஆர்டர் செய்த உணவினை அவர்களுக்குப் பரிமாறி, உணவு உண்டு முடித்து வெளியேறும் விருந்தினர்களை வழியனுப்பவதோடு அவர்களுடைய பணி நிறைவடைகிறது.

இதுவரை பார்வையற்றவர்களுக்கு ஹோட்டல்களில் டெலிஃபோன் ஆப்பரேட்டர்களாக (அ) ரிஷப்ஷினஸ்ட்களாக மட்டுமே வேலை வாய்ப்புகள் இருந்த நிலை இங்கே மாறியுள்ளது. பொதுவாக இது மாதிரியான வேலைகளில் பார்வையற்றோருக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை. ஆனால் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அங்கு பணிபுரியும் பார்வையற்ற வெயிட்டர்கள் தங்களின் கேட்கும் உணர்வின் வழிகாட்டுதலின் உதவியுடன் விருந்தினர்களுக்கான சரியான உணவினைப் பரிமாறுகிறார்கள் என்கிறார் ஹோட்டலின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.ஸ்ரீனிவாஸ். National Association for the Blind (NAB)ல் இதற்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த செய்தியைப் படித்ததும், பார்வையற்றவர்கள் ஏதேனும் செய்ய முடியுமா என்ற நிலை மாறி இவர்களால் எதுவும் செய்ய முடியும் என்ற நிலை உருவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.

உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உங்களுடைய ‘கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை’ மின்னஞ்சலாகவோ, குறுஞ்செய்திகளாகவோ அனுப்புவதை விட உங்களுடைய வாழ்த்துகளை நிலாச்சாரலின் வண்ணமயமான வாழ்த்து அட்டைகளின் வழியாக வெளிப்படுத்தினால் அவர்கள் மட்டுமில்லாமல் உங்களுக்கும் சந்தோஷம் கிடைக்கும். என்ன சரிதானே? கீழேயுள்ள சுட்டியை லேசாகத் தட்டினால் வண்ணமயமான பல கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை நீங்கள் பார்வையிட முடியும். உங்களுடைய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துகளை அனுப்பி மகிழுங்கள்.

https://www.nilacharal.com/nilagreeting/christmas_greetings.asp

பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு இப்படி கவலைப்படறதுக்கு பல விஷயங்கள் இருந்தாலும், மின்சாரக் கட்டண உயர்வு பற்றி நான் கவலைப்படப்போறதில்லை. மின்சாரம்னு ஒண்ணு இருந்து அதை உபயோப்படுத்தினாதானே கட்டணத்தைப் பற்றியோ அதன் உயர்வைப் பற்றியோ கவலைப்படணும்! தமிழ்நாடு முழுக்க ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மின்சாரம் இருக்காது. இது எல்லோருக்கும் தெரிஞ்ச அதிகாரப்பூர்வமான அறிவிப்பு. அறிவிக்கப்பட்டது என்னவோ 2 மணி நேரம்தான். ஆனால் அறிவிப்பில்லாம மின்சாரம் போகும் நேரங்களைக் கணக்கிலிடவே முடியாது. கார்த்திகையும், மார்கழியும் சித்திரை அளவுக்கு கொதியோ கொதின்னு கொதிச்சாலும் மின்சார வாரியத்திற்கு இதைப் பற்றியெல்லாம் கவலையே கிடையாது. அவங்களுடைய கடமையில அவங்க ரொம்ப கண்டிப்பாகவும் தெளிவாகவும் இருக்காங்க. (‘Why this கொலைவெறி’ன்னு பாட்டு பாடினா எப்படியிருக்கும்?) இதுகூட பரவாயில்லைன்னு பொறுத்துக்கலாம். ஆனால் பராமரிப்புங்கிற பேர்ல மாசத்துல ஒரு நாளைக்கு காலை 9 மணிக்கு ஆரம்பிச்சா சாயந்திரம் 6 மணி வரைக்கும் – மற்ற நாட்களில் ஒப்புக்காவது அப்பப்போ இருக்கும் மின்சாரம் – சுத்தமா நம்மோட ‘டூ’விட்டு காணாமல் போகும் கொடுமையிருக்கே… என்னத்தச் சொல்றது! ஹூம்… இதே மாதிரி மாசத்துல ஒரு நாள் முழுக்க (கொஞ்சம் பேராசையோ?) மின்சாரம் தடையில்லாம இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்னு நானும் அடிக்கடி நினைக்கிறதுண்டு. போனாபோகுதுன்னு ஏதோ சில மணி நேரங்களாவது மின்சாரம் இருக்கு, அதுவும் உனக்கு பிடிக்கலையான்னு அடிக்க வரீங்களா… இவ்வளவு தூரம் நான் சொன்னதுக்கு அப்புறமும் மின்சாரக் கட்டண உயர்வை நினைச்சு கவலைப்படறீங்களா? கவலையை விடுங்க. மின்சாரத்தை சிக்கனமா உபயோகப்படுத்துவது எப்படிங்கிறதை கவிதா பிரகாஷ் சின்னச் சின்ன வழிமுறைகளா நூல் வடிவில் சொல்லியிருக்காங்க. ‘பசுமை பூமி’ எனும் தலைப்பிலான இந்த மின்னூலை கீழே உள்ள சுட்டி மூலமாக வாங்கலாம்.

https://www.nilacharal.com/ebooks_list.asp

சரி… கடைசிக் கட்டி மாம்பழத்துக்கு வருவோம். பெல்ஜியத்தில்உள்ள ‘De Lijn’ என்கிற மக்கள் போக்குவரத்து கழகம் வியாபார நோக்கத்துடன் பல விளம்பரங்களை அனிமேஷன் படங்களாக வெளியிட்டிருக்காங்க. அனிமேஷன் படங்களின் வாயிலாக அவர்கள் சொல்ல விரும்பும் செய்தி – ‘இப்போ புரிஞ்சுதா குழுவினராகவோ/கூட்டமாகவோ பயணம் செய்வதின் நன்மை என்னன்னு?’. அவர்கள் வெளியிட்டுள்ள பல அனிமேஷன் படங்களில் எனக்கு எறும்புகள் மற்றும் நண்டுகளைக் கொண்டு உருவாக்கிய விளம்பரப் படங்கள் ரொம்பவும் பிடிச்சிருக்கு. எனக்கு பிடிச்ச விளம்பரப் படங்களின் சுட்டியை கீழே கொடுத்திருக்கேன். நீங்களும் பார்த்து ரசிக்கலாம்.

http://youtu.be/mgCIKGIYJ1A

http://youtu.be/LuVPnW0s3Vo

சரிங்க… நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீயூ…

About The Author

2 Comments

Comments are closed.