சில்லுனு ஒரு அரட்டை

ஹலோ ஃபிரெண்ட்ஸ்,

எப்படியிருக்கீங்க? நான் இங்கே ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கேன். என்ன இது? அரட்டையின் ஆரம்பத்திலேயே எக்கசக்கமான ‘ரொம்ப’ வருதேன்னு யோசிக்கிறீங்களா? அதிகமா யோசிக்காதீங்க. எதனால் இத்தனை ‘ரொம்ப’ போட்டேன்னு நானே சொல்லிடறேன்.

நான் இங்கே கோயமுத்தூர் வந்து சேர்ந்த கொஞ்ச நாளிலேயே எழுத்தாளர் ராஜேஷ்குமார் இந்த ஊரில்தான் இருக்காரு, அதுவும் எங்க வீட்டுக்குப்பக்கத்திலேதான் இருக்காருன்னு மத்தவங்க சொல்லிக் கேள்விப்பட்டேன். அப்போதிருந்தே எப்படியாவது ஒரு முறையாவது அவரை நேரில் சந்திக்கணும்னு ஆசைப்பட்டேன். எங்க வீட்டுக்கு பக்கத்திலே இருந்தவங்களை விசாரிச்சதுலே யார்கிட்டேயிருந்தும் சரியான விவரம் கிடைக்கலை. நானும் முடிஞ்சவரை நான் சந்திக்கிற எல்லோர்கிட்டேயும் கேட்டுக்கிட்டே இருந்தேன்.

நான் வழக்கமா வார பத்திரிக்கைகளை எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு பெட்டிக்கடையில் வாங்குவதுண்டு. ஒருநாள் எதேச்சையா அவர்கிட்டே கேட்டதில் எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களுடைய இருப்பிடம் பற்றிய விவரம் தெரியவந்தது. நிறைய சந்தோஷம் + கொஞ்சம் டென்ஷனோட அவரை சந்திக்க கிளம்பினேன். (அவரை நான் சந்திக்கப் போகும் விஷயத்தை என் தங்கை அப்புறம் எங்க பாட்டி, ரெண்டு பேர்கிட்டேயும் சொல்லி கொஞ்சமில்லாம நிறையவே வெறுப்பேத்தினேன். ஏன்னா அவங்க ரெண்டு பேருமே அவருடைய தீவிர ரசிகைகள். இப்பவும் எங்க பாட்டியோட தலையணை அடியில் அவருடைய 4 நாவல்களாவது கண்டிப்பாக கிடைக்கும். என் தங்கை அவருடைய கதைகளை எத்தனை முறை திரும்ப திரும்ப வாசிச்சிருப்பாள்ன்னு அவளுக்கே ஞாபகமிருக்காது.)

முதல் முறை அவரை சந்திக்க போனபோது அவர் வெளியில் கிளம்பிட்டு இருந்தாரு. கொஞ்சம் ஏமாற்றமா நான் உணர்ந்தேன். இருந்தாலும் என்கூட 20 நிமிஷம் பேசிட்டுதான் கிளம்பினாரு. மறுபடியும் இன்னொரு நாள் அவரை சந்திக்கப் போனேன். அவருடைய கதைகள் பற்றி பேச ஆரம்பிச்சு கிடைத்த எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசினோம். பேசினோம்னு சொல்றதைவிட பேசினேன்னு (வழக்கமா நடக்கிறதுதானே!) சொல்றதுதான் சரியாயிருக்கும். அவரும் பொறுமையா நான் பேசினது எல்லாத்தையும் கேட்டுகிட்டு இருந்தாரு. அவருடைய மனைவியும் ரொம்ப அன்போட பழகினாங்க. மொத்தத்தில் அவரை சந்திச்சது ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல அனுபவமாயிருந்தது. அதோட மட்டுமில்லாமல் எனக்குள்ளே இருந்த பல கேள்விகளுக்கு பதிலும் கிடைச்சது. உதாரணமாக இப்போ நமக்கு ஒரு விவரம் தேவைபடும் பட்சத்தில் புத்தகங்கள் மூலமாகவோ கணினி, கைபேசியின் வாயிலாக இணையதளங்களின் உதவியுடன் விவரங்களை சேகரிக்கிறோம். ஆனால் 20 வருடங்களுக்கு முன்பு இந்த அளவிற்கு இணையத்தின் உபயோகம் கிடையாது. அவருடைய கதைகளுக்கு தேவையான அறிவியல் சார்ந்த விஷயங்களை எப்படி அவரால் சேகரிக்க முடிஞ்சுதுன்னு யோசிப்பேன். அதை அவர்கிட்டே கேட்டபோது, ஒரு கதை எழுதும்போது கதையில் அவர் சொல்ல நினைக்கும் அறிவியல் விவரங்களை சேகரித்திட அந்தத் துறை சார்ந்த பல நிபுணர்களை அணுகுவாராம். முழுமையான, தெளிவான தகவல் சேகரிப்புக்குப் பின்னரே அதைக் கதையில் உபயோகப்படுத்துவாராம். அவருடன் நான் பேசி தெரிஞ்சுகிட்ட விஷயங்களை சொல்ல ஆரம்பிச்சா இன்னும் பல அரட்டைகளுக்கு அது தொடரும். அதனாலே எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களுடனான என்னுடைய சந்திப்பு புராணத்தை இத்தோட நிறுத்திக்கிறேன்.

நாம் எல்லோருமே தினமும் பல விஷயங்களைப் பார்த்து தெரிஞ்சுக்க உதவும் நம்முடைய கண்களைப் பற்றி சில சுவாரசியமான தகவல்களை இன்னிக்கு உங்களோட பகிர்ந்துக்கப் போறேன்.

* நம்முடைய உடலில் மூளைக்கு அடுத்து மிகவும் சிக்கலான உறுப்புகளாக கருதப்படுவது நம்முடைய கண்கள்தான்.

* நம்முடைய கண்கள் தன்னுள்ளே 2 மில்லியன் வேலைப் பகுதிகளைக் கொண்டுள்ளது.

* ஒரு மணி நேரத்தில் 36,000 தகவல்களை பரிமாற்றும் ஆற்றல் நம் கண்களுக்கு உண்டு.

* பார்வை குறைபாடு இல்லாத ஒருவரால் 14 மைல்களுக்கு அப்பால் இருக்கும் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை கண்டுகொள்ள முடியுமாம்.

* மனிதனுக்கு கிடைக்கக்கூடிய மொத்த அறிவில் கண்களின் பங்களிப்பு மட்டும் 85%.

* மூளைக்கு செல்லும் பாதைகளில் 65% பாதைகள் கண்கள் தன்னுடைய செயல்பாடுகளுக்காக உபயோகிக்கிறது.

* ஒரு கண பொழுதில் நம் உடலில் உள்ள நூற்றுக்கணக்கான தசைகள் மற்றும் உறுப்புகளை இயக்கும் வல்லமை நம் கண்களுக்கு உண்டு.

* ஒரு வளர்ந்த மனிதனுடைய கண்விழியின் விட்டம் ஒரு அங்குகமாக (இன்ச்) இருந்தாலும், அதன் மொத்த மேற்பரப்பளவில் ஆறில் ஒரு பங்குதான் வெளிபார்வைக்குக் கிடைக்கிறது.

* கண் இமைகள் மற்றும் கண்களின் வெளிப்புற தசைகளுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. ஆனால் இரவு பகல் என்றில்லாமல் எந்த ஒரு நொடியிலும் முழுமையாக செயல்படும் கண்களுக்கு ஓய்வே கிடையாதாம்.

சரி.. கடைசி கட்டி மாம்பழத்துக்கு வருவோம். நம்மோட வாழ்க்கை நம் கையிலதான் இருக்கு. நம்முடைய எண்ணங்கள் மற்றும் செயல்களின் மூலமாக நம்முடைய வாழ்க்கையில் ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதை பலரும் பலவகையில் எடுத்து சொல்லி கேட்டிருக்கோம். புது முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாமல் எப்போதும் ஒரு பாதுகாப்பான சூழலில் மட்டுமே வாழ ஆசைப்படுவது சரியான்னு கீழேயிருக்கும் சுட்டியில் உள்ள வீடியோ கேள்வி கேட்குது. அந்த கேள்விக்கு உங்க மனசு சொல்லும் பதில் என்னவோ?

http://youtu.be/35fJvI1l-X4

சரிங்க… நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீயூ…”

About The Author

1 Comment

  1. விமலா ரமணி

    என்னிடம் கேட்டிருந்தால் நான் திரு ராஜேஷ் குமார் பறி சொல்லி இருந்திருப்பேன்
    ஏனெனில் அவர் என் நண்பர் நானும் கோவையில் தான் இருக்கிறேன்

Comments are closed.