தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை!

தமிழ்த் திரைப்படங்களில் ஆரம்ப காலம் தொட்டு வாழ்க்கைக்கு இன்றியமையாத நகைச்சுவை தனியிடம் பெற்று வந்திருக்கிறது. பொழுதுபோக்கு அம்சம் என்ற நிலையைத் தாண்டி சிந்தனையைத் தூண்டிவிடும் அம்சமாகவும் அது மாறியது குறிப்பிடத் தகுந்தது.

முதலில் மிக மெதுவாக ஊர்ந்து சென்ற நகைச்சுவை, கலைவாணர் என்.எஸ்.கேயினால் நிலை மாறிச் சிறப்புப் பெற ஆரம்பித்தது.

அதற்குப் பின்னர் வந்த நகைச்சுவை யுகத்தில் தனி முத்திரை பதித்தவர் டணால் தங்கவேலு அவர்கள். ஆபாசமில்லாத, விரசமில்லாத நகைச்சுவையை அவர், டைமிங்குடன் தன் நடிப்பினால் மெருகேற்றி குடும்பம் முழுவதும் பார்த்து ரசிக்கச் செய்தார். ‘கல்யாணப் பரிசு’ படத்தில் வரும் மன்னார் அண்ட் மன்னார் கம்பெனி நகைச்சுவையை யாரும் மறக்கவே முடியாது.

எழுத்தாளர் பைரவனாக ரோஜா மாலையுடன் அட்டகாசமாக அவர் வந்து எழுப்பிய கலகலப்பு அலைகள் காலத்தால் சுலபத்தில் அழியக்கூடியது இல்லை. அறிவாளியில் அதான் எனக்குத் தெரியுமே – அதுதானே எனக்குத் தெரியாது என்ற நகைச்சுவை, அடுத்த வீட்டுப் பெண்ணில் அவர் டி.ஆர்.ராமச்சந்திரனுடன் செய்யும் கலாட்டா, நான் கண்ட சொர்க்கத்தில் சொர்க்கலோகத்தை ஆட்டி அவர் அடிக்கும் லூட்டி என பல வித்தியாசமான நகைச்சுவைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். தெய்வப் பிறவியில் எப்படி எடுத்துரைFAN என அவர் ஃபேனை சுட்டிக்காட்டி ஓட வைப்பது பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தி உருவாக்கிய நகைச்சுவை.

பின்னால் மைக்கேல் மத‎ன காமராஜன் படத்தில், சாம்பாரில் மீன் விழ டெல்லி கணேஷ், கமலஹாசன் திகைக்க, ‘வாட் ஐ மீன்’ என்று போகிற போக்கில் ஒருவர் பேசுவதைக் கேட்டவுடன், ‘இங்கேயும் மீனா’ என்ற நகைச்சுவை, எலி ஓடும் போது ‘ரியலி ரி..எலி’ என்ற நகைச்சுவையை சற்று ஞாபகப்படுத்திக் கொண்டால் தங்கவேலுவின் முன்னோட்ட நகைச்சுவை நமக்கு வியப்பூட்டும்.

அடுத்து வந்த யுகத்தில் குணசித்திரங்களுக்கு அர்த்தம் கொடுத்த நாயகனாகத் திகழ்ந்தார் நகைச்சுவை நாகேஷ். தில்லானா மோகனாம்பாளில் வைத்திக்கு உருவம் கொடுத்தார். கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் வைத்தியை நகைச்சுவை கலந்த எதற்கும் வெட்கப்படாத ஒரு பாத்திரமாக மாற்றி நடித்துக் காண்பித்தது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு தனிப் பாங்கு. அதை விட ஒரு படி மேல் – திருவிளையாடலின் தருமி.

அவரின் ஒல்லியான உடல்வாகு ஏழைத் தமிழ்ப் புலவனை அப்படியே சித்தரித்து விட்டது போலும். சின்னச் சின்ன வார்த்தைகளாகப் பேசி தமிழ்ப் புலவனை – தருமி என்ற கதாபாத்திரத்தை -அப்படியே உருவாக்கி சிவாஜிக்கு ஈடு கொடுத்தாரே அதை மறக்க முடியுமா?

காதலிக்க நேரமில்லை பாடத்தில் அவர் நடிப்பு பெரிதா, பாலையாவின் நடிப்பு பெரிதா? முடிவு சொல்ல இயலாத பட்டிமன்றத் தலைப்பு இது. குணசித்திர நடிகராகவும், சிறந்த வில்லனாகவும் தோன்றி வந்த பாலையா நகைச்சுவையில் ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இன்னும், வீரபாண்டிய கட்டபொம்மனில் ‘பொடியன் பொருத்தமானவன் போய் வா’ என்று அனுப்பப்பட்ட கருணாநிதி, ‘நான் ஒரு முட்டாளுங்க..’ என பாட்டுப் பாடி தனக்கென ஒரு தனி நகைச்சுவை உத்தியை வகுத்துக் கொண்ட சந்திரபாபு, பின்னால் வந்த சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன் போன்றவர்களால் வளம் பெற்றது தமிழ் திரையில் நகைச்சுவை.

‘அட சொட்டைத் தலையா, பறங்கி மண்டையா’ என்று வார்த்தைக்கு வார்த்தை திட்டலை ஒருவர் சொல்வதும் இன்னொருவர் ஏற்பதும் தமிழ்த் திரையுலகிற்கு புதிதாய் இருக்கவே கவுண்டமணி – செந்தில் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தனர். இந்த காலகட்டத்தில் இரட்டை அர்த்தம் உள்ள நகைச்சுவை புக ஆரம்பித்தது எனலாம். அப்பாவித்த‎னமான முகம் உள்ள செந்தில் டைமிங் தெரிந்த நடிகர். படையப்பாவில் ரஜினியுடன் அவர் செய்யும் மாப்பிள்ளை காமடி ஒரு பக்கம் என்றால் கரகாட்டக்காரனில் கவுண்டமணியுடன் அவர் செய்த வாழைப்பழ நகைச்சுவை காலத்தை வென்று நிற்கும் ஒரு நகைச்சுவையாக மாறி விட்டது.

பாம்பை வைத்து ரஜினி செய்யும் நகைச்சுவை, ஆங்கில ஷன் வார்த்தைகளை வைத்து அவர் அவிழ்த்து விடும் வசனம் காமடியில் இன்னொரு ரகம்.

அடுத்து வந்துட்டாரையா வந்துட்டார் – வடிவேலு. கவுண்டமணி – செந்திலுக்கு நேர் எதிராக எவர் மனதையும் நோகவிடாமல் தன்னைத் தானே வைது அடி வாங்கிக் கொள்ளும் பாணியை அவர் மேற்கொண்டார். சக்ஸஸ் ஆனார். பார்த்திபனுடன் கலாட்டா, விஜயுடன் கலாட்டா, அர்ஜுனுடன் கலாட்டா என்று அவர் படங்களில் ஒரு ஸ்டீரியோ டைப் இருந்தாலும் ஒவ்வொன்றிலும் ஒரு நுணுக்கமான வேறுபாடும் இருக்கவே செய்கிறது.

எட்டு போடுவதற்கு பதில் ஏழரையே போடும் விவேக் தனக்கென சிந்திக்க வைக்கும் காமடியை தர ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர். வசனத்தை உச்சரிக்கும் அவர் பாணி தனி. பராசக்தியை நகல் எடுப்பதிலிருந்து லார்ட் லபக்தாஸ் வரை அவரது காமடி ஒரு தனி ஜோரில் ஓடுகிறது.

ஆனாலும் இரட்டை அர்த்தம் தெறிக்கும் ஏராளமான காமடி, ஓடுகின்ற வாகனத்தில் பாட்டிலில் (விவேக்) சிறுநீர் கழிப்பது போன்ற விரசமான காட்சிகள் தமிழ் நகைச்சுவையின் ஒரு கரும் பக்கம் தான்!

விசுவின் விசுத்தனமான வசனங்கள் தனி! கிரேஸி மோகன், எஸ்.வி.சேகரின் உதிரி வெடிகள் ஆங்காங்கு பத்திரிக்கை ஜோக்குகளைக் கட்டி விட்ட தோரணங்கள்தாம்!

ஒரு லாரல் ஹார்டி, ஒரு ஜெர்ரி லூயி என்று பழைய காலத்தில் ஆரம்பித்து இன்றைய நாள் வரை மேலை நாட்டு படங்களில் வரும் ஆங்கில பாணியினாலான முழு நீளப்பட நகைச்சுவை சுத்தமாக தமிழில் இல்லை. இதை எதிர்கால காமடியன்கள் முயற்சி செய்து தமிழுக்குக் கொண்டு வந்து மெருகேற்றுவார்களோ என்னவோ, காலம்தான் பதில் சொல்லும்! இந்த வகையில் தங்கவேலுவின் ‘நான் கண்ட சொர்க்கம்’, வடிவேலுவின் ‘இம்சை அரசன் 27ம் புலிகேசி’ நல்ல முயற்சிகளாக இருந்திருக்கின்றனவோ?

காமடிக்கு தனி டிராக் எடுத்து இணைத்து ஓட்டினால்தான் படம் ஓடும் என்ற அளவு தமிழ் படங்களில் முக்கிய இடத்தை காமடி, பேசும் படம் தோன்றிய காலம் தொட்டு பிடித்து விட்டது. இந்த நகைச்சுவையை எழுதும் காமடி டிராக் எழுத்தாளர்கள், அதை படமாக்கும் டைரக்டர்கள், மற்றும் காட்சியை உருப்படியாக்கும் காமராமென், சவுண்ட் எஞ்சினியர் உள்ளிட்ட ஏராளமான திரைமறைவு டெக்னீஷியன்களையும் நாம் மறக்க முடியாது.

ஆராய்ச்சி செய்யப்பட வேண்டிய ஒரு பெரிய விஷயமாக தமிழ்ப் படங்களில் நகைச்சுவை திகழ்கிறது என்பது மட்டும் என்னவோ உண்மை!

About The Author

2 Comments

  1. முகம்மது அலி (மதுராப்புரி மதுரன்)

    எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் நம்ம சின்ன கலைவானர் அண்ணன் விவேக்” தானுங்கோ….”

Comments are closed.