பாதாள லோகத்தில் மாயசீலன் ( 2)

மாயசீலன் அதிவேகமாய் வளர்ந்தான். வளர்ந்து கொண்டே இருந்தான். வயதில் சிறியவனாக இருந்தாலும் உருவத்தில் பெரியவனாகவும், ஒப்பற்ற வலிமை உடையவனாகவும் திகழ்ந்தான்.

ஒருநாள் விவசாயியும், மாயசீலனும் ஒரு கிணறு வெட்டத் தொடங்கினர். ஓரளவு தோண்டிய பிறகு, அதற்கு மேல் செல்ல முடியாதபடி ஒரு பெரிய பாறை தடுத்தது. அவ்வளவு பெரிய பாறையைத் தங்கள் இருவரால் நகர்த்த முடியாது என்று நினைத்த விவசாயி அக்கம்பக்கத்தில் உள்ள ஆட்களை அழைத்து வரச் சென்றார். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே மாயசீலன், தான் ஒருவனே அந்தப் பாறையைத் தூக்கி வெளியே எறிந்துவிட்டான். வந்தவர்கள் அதைப் பார்த்து ஆச்சரியமடைந்ததோடு, பீதியும் கொண்டு விட்டனர். மாயசீலன் இப்படித் தம்மில் யாரையும் விட பலசாலியாய் இருப்பதைக் கண்டு பயந்து, அவனை ஒழித்துக் கட்ட நெருங்கினர். அவர்கள் நோக்கத்தை அறிந்த மாயசீலன் அந்தப் பெரிய பாறாங்கல்லை மேலே தூக்கிப் போட்டு விளையாடத் தொடங்கினான். இந்த அசுர சாதனையைக் கண்டதும் அவர்கள் அங்கிருந்து ஓட்டமாய் ஓடி விட்டனர்.

மாயசீலனும் அவன் தந்தையும் தொடர்ந்து கிணறு வெட்ட ஆரம்பித்தனர். அப்போது ஒரு பெரிய இரும்புப்பாளம் கிடைத்தது. எதற்கும் பயன்படும் என்று மாயசீலன் அதை எடுத்து வைத்துக் கொண்டான்.

மாயசீலன் ஒரு நாள் தன் பெற்றோரைப் பார்த்து, "எனக்குக் கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லையா?" என்று கேட்டான். அதற்கு இருவரும் "மகனே மாயசீலா! உனக்கு ஒரு சகோதரியும், ஆறு சகோதரர்களும் இருந்தார்கள். ஆனால்…" என்று தொடங்கி முழு விவரத்தையும் சொன்னார்கள். அவர்களை எவ்வளவு தேடியும் கிடைக்காததைப் பற்றியும் கூறினார்கள்.
உடனே மாயசீலன். "நான் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கிறேன்" என்றான்.
வேண்டாம் என்று தாயும் தந்தையும் அவனைத் தடுத்தனர்.

"மகனே! ஆறு பேராகப் போன உன் சகோதரர்களே இன்னும் திரும்பவில்லை! நீ தனியாகப் போனால், உன் நிலைமை என்னாகும் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட அச்சமாக இருக்கிறது. சொன்னால் கேள்! போகாதே!" என்றனர்.

அதற்கு மாயசீலன், "இல்லை! நான் போகத்தான் வேண்டும். என் உடன் பிறந்தவர்களை மீட்க வேண்டியது என் கடமை!" என்று உறுதியாகக் கூறிவிட்டு, தான் எடுத்து வைத்திருந்த இரும்புப் பாளத்தை எடுத்துக் கொண்டு நேராகக் கொல்லுப் பட்டறைக்குச் சென்றான்.

கொல்லனிடம், "இதில் எனக்கு ஒரு போர் வாள் செய்து கொடு! எவ்வளவுக்கு எவ்வளவு பெரியதாய் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது" என்று கூறினான்.

கொல்லன், அதில் ஒரு மிகப் பெரிய போர் வாளைச் செய்து கொடுத்தான். அதைத் தூக்க ஆள் இல்லாமல் போகவே, அவன் மாயசீலனையே வந்து எடுத்துச் செல்லும்படி கூறினான். அவ்வளவு பளுமிக்க பெரிய வாளை மாயசீலன் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்டு வந்ததோடு இல்லாமல், வீட்டு வாசலை அடைந்ததும் வாளை வானோக்கி வீசியெறிந்தான்.

பிறகு தன் தாய் தந்தையைப் பார்த்து, "அந்த வாள் இன்னும் பத்து நாட்களில் கீழே திரும்பி வரும். அப்பொழுது என்னை எழுப்புங்கள். அது வரை நான் தூங்கப் போகிறேன். என்னை எழுப்பாதீர்கள்" என்று கூறித் தூங்கச் சென்றான். தன் மகனின் விசித்திரமான திடீர் நடவடிக்கைகளால் விவசாயியும் அவன் மனைவியும் பிரமித்து நின்றனர்.

பத்து நாட்கள் வரை, உணவோ நீரோ இன்றித் தூங்கினான் மாயசீலன். பதினோராம் நாள் அந்த வாள் மிகுந்த ஓசையுடன் கீழ்நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டு மாயசீலனின் தந்தை அவனை எழுப்பினார். மாயசீலனும் உடனே துள்ளி எழுந்து தன் கையை மடக்கி அது விழும் இடத்திற்கு நேராக நின்றான். வாள் அவன் கை மேல் மோதி இரண்டாகப் பிளந்து விழுந்தது.

மாயசீலன் அந்த உடைந்த வாளை எடுத்துக் கொண்டு மீண்டும் கொல்லனிடம் போனான். "இந்த வாளை வைத்துக் கொண்டு என் சகோதரர், சகோதரியை நான் மீட்க முடியாது. வேறொன்று வேண்டும்!" என்று கேட்டான்.

நடந்தவற்றையெல்லாம் கேள்விப்பட்டுத் திகைத்துப் போன கொல்லன், முதலில் செய்ததை விடப் பெரிய, வலுவான ஒரு புதிய போர்வாளைச் செய்து தந்தான். முன்பு செய்தவாறே மாயசீலன் மீண்டும் விண்ணோக்கி அதை எறிந்துவிட்டுப் பத்து நாட்கள் வரை படுத்து உறங்கினான். பதினோராம் நாளன்று அது பேரிரைச்சலோடு கீழே வரத் தொடங்கியது. அது வந்த சத்தத்தில் தரையே அதிர்ந்தது. தந்தையும், தாயும் மாயசீலனை எழுப்பினர். உடனே அவன் துள்ளியெழுந்து தன் கை முட்டியை உயர்த்தினான். வாள் இந்த முறை அவன் கையில் மோதித் தரையில் விழுந்து சிறிது வளைந்ததே அன்றி உடையவில்லை.

"இது மிகவும் அரிதான போர்வாள்!" என்று சிலாகித்த மாயசீலன், "இனி நான் தைரியமாக என் சகோதரர், சகோதரியைத் தேடிச் செல்லலாம்" என்று கூறி, தன் தாயை நோக்கி, "அம்மா! எனக்கு வழியில் சாப்பிட உணவு தயாரித்துக் கொடு! நான் புறப்பட வேண்டும்" என்றான்.

அவன் தாயும், விதவிதமான உணவு வகைகளைச் செய்து ஒரு மூட்டை நிறையக் கட்டித் தந்தாள். மாயசீலன் அதை ஒரு சாதாரணச் சோற்றுப் பை போல தூக்கிக்கொண்டு, அந்தப் போர்வாளையும் எடுத்துக்கொண்டு பெற்றோரிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.

–தொடரும்…

About The Author