பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! – 19

வெர்டிகல் லிமிட்

Vertical Limit

வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் என்று மஹாகவி பாரதியார் பாடி நம்மை மலை மீது உலவ உத்வேகம் ஊட்டுகிறார். ஆனால் அந்தப் பனிமலையில் உலவுவது எவ்வளவு சிரமம் என்பதை நன்கு உணர வைக்கிறது 2000ஆம் ஆண்டு வெளியான ‘வெர்டிகல் லிமிட்’ ஹாலிவுட் படம். உலவுவதே சிரமம் என்று நாம் நினைக்கையில் மலை ஏறும் சாகஸ வீரர்கள் தொங்கு கயிற்றில் சங்கிலியைப் பிணைத்து, கணுக்களை மலையில் பூட்டித் தங்கள் உயிரைத் திரணமாக மதித்து மலை ஏறும் அற்புதத்தைப் பார்த்து வியந்து, அசந்து போகிறோம்.

இதில் த்ரில்லிங்கான கதை வேறு. அதில் ‘மரணம்’ என்ற நான்கு எழுத்து ‘உயிர்’ எழுத்தாகத் திகழ்கிறது. 

எங்கு நோக்கினும் பனி படர்ந்த வெள்ளை பிரதேசம், பார்ப்பதற்கே கண்ணுக்கு ரம்மியமாக நம்மைக் ‘குளிர்விக்கிறது’. ஜில்லென்ற உணர்வுடன், என்ன நடக்கப் போகிறதோ என்று படத்தைப் பார்க்க ஆரம்பித்தால் உயிரைத் தியாகம் செய்து தன் பெண்ணைக் காப்பாற்ற நினைக்கும் ஒரு தந்தையைக் காண்கிறோம்.

பீட்டரின் சகோதரி அன்னி. பீட்டர், அன்னி ஆகிய இருவரும் தந்தையுடன் மலை ஏறுகின்றனர். திடீரென சங்கிலிக் கணுக்கள் அறுந்து போக, மூவரும் கயிற்றில் தொங்குகிறார்கள். கயிறு மூவரின் எடையையும் தாங்க முடியாது எந்த நிமிடமும் அறுந்து போகும் நிலை. "கயிறை அறு! அன்னியைக் காப்பாற்று" என்று கீழே உள்ள தந்தை பீட்டரிடம் கெஞ்சுகிறார். தன்னாலேயே தந்தை சாவதா என்ற பெரும் மனப் போராட்டத்தில் பீட்டர் தவிக்க, வினாடிகள் நகர்கின்றன. உயிரைக் காப்பாற்ற வைக்கும் வினாடிகள் நகர நகர, தந்தை அலற அலற இறுதியில் பீட்டர் கயிற்றைக் கீழே அறுக்கிறான். தந்தை கீழே விழுகிறார். மேலே தொங்கிய அன்னி காப்பாற்றப்படுகிறாள்.

தொழில்ரீதியாகப் பீட்டரும் அன்னியும் பிரிகின்றனர். பீட்டர் மலை ஏறுவதையே விட்டு விடுகிறான். நேஷனல் ஜியாகிரபிகல் நிறுவனத்தில் வேலைக்கு அமர்கிறான். அன்னியோ மலை ஏறுவதில் சர்வதேச வீராங்கனையாக மாறுகிறாள். இருவருமே தந்தை இறந்த அந்தக் கோர விபத்து நிகழ்ந்ததிலிருந்து பேசுவதில்லை. தற்செயலாக இருவரும் பாகிஸ்தானில் வெள்ளிப் பனிமலையின் அடிவாரத்தில் சந்திக்கிறார்கள்! கே2 என்ற மலைச் சிகரம் உலகின் இரண்டாவது உயரமான சிகரம். எலியட் வான் என்ற பெரும் கோடீஸ்வரன் தனது புதிய விமானக் கம்பெனியின் விளம்பரத்திற்காக அந்த மலை மீது ஒரு குழுவுடன் சாகஸம் புரிய ஏறுகிறான். அந்தக் குழுவில் அன்னியும் இணைகிறாள். தன் பணி நிமித்தமாக அதே இடத்திற்கு வந்த பீட்டர் அன்னியைச் சந்திக்கிறான்.

"காலநிலை சரியில்லை; மலை மீது ஏறுவதை ஒத்தி வைப்போம்" என்று நிபுணர் கூற, அதை மறுத்து விளம்பர வெறி பிடித்த எலியட் நிச்சயம் ஏறியே ஆக வேண்டும் என்று ஆணையிடுகிறான். பனிப்புயல் அடிக்கிறது. அன்னி மலைக்குகை ஒன்றில் மாட்டிக் கொண்டு உயிருக்குப் போராடுகிறாள். நேரமோ ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வினாடியும் உயிர் காக்கும் வினாடி. 22 மணி நேரத்திற்குள் அன்னி காப்பாற்றப்பட வேண்டும். அன்னியின் நிலை அறிந்த பீட்டர் மலை மீது ஏற வேண்டியிருக்கிறது. குழுவினரின் பல பிரிவுகள் மலையில் ஏறுகின்றனர். உயிரை இழக்கின்றனர். பெரும் சாகஸத்திற்குப் பிறகு பீட்டர் அன்னியை மீட்கிறான். அனைவரையும் இதில் சிக்க வைத்த எலியட் தன் உயிரை இழக்கிறான்.

‘வெர்டிகல் லிமிட்’ அற்புதமான படம்! அன்னியாக நடிக்கும் ராபின் டன்னி அழகாக நடிக்கிறார். கோல்டன் குளோப் நாமினி என்ற சிறப்பைப் பெற்ற க்ரிஸ் ஓ டானல் பீட்டராக அற்புதமாக நடித்து நம் பாராட்டைப் பெறுகிறார். எலியட் வானாக நடித்து பில் பாக்ஸ்டன் தன் வில்லத்தனமான பாத்திரத்தைச் சிறப்பிக்க வைக்கிறார்.

‘சபாஷ் டைரக்டர்!’ என்று சொல்லும் அளவு மார்டின் காம்ப் பெல் இயக்கிய படம் இது. இயற்கை அழகு சொட்டும் வெள்ளிப் பனிமலையில் மரணம், உயிர் ஆகிய வார்த்தைகளின் முழு அர்த்தத்தைக் காட்டி மனிதனின் லிமிட்டை வெர்டிகல் லிமிட்டில் உணர வைத்து டைரக்டர் நம்மைச் சிந்திக்க வைக்கிறார். சினிமாடோகிராபி செய்திருக்கும் டேவிட் டாட்டர்சால் சிறப்பான பாராட்டுக்கு உரியவர் என்று படக்காட்சிகளைப் பார்ப்போர் அனைவரும் கூறுவர்.

அலுத்துப் போகும் கதைகளை அசராமல் பார்க்கும் நம்மவர்கள் ஒரு வித்தியாசத்திற்காக நிச்சயம் பார்க்க வேண்டிய படம் ‘வெர்டிகல் லிமிட்’!

–அடுத்த வாரம் ‘படித்ததில் பிடித்தது’…

About The Author