பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! – 20.2

கடவுளைத் தேடி ஒரு பயணம்! – 2

மங்களூரிலிருந்து காலையில் கிளம்பிய ரயில் மாலையில் ஈரோட்டை அடைந்தது. ராமதாஸ் (விட்டல்ராவ் பழைய பெயராகி விட்டது!) ரயிலை விட்டு இறங்கினார். கையில் கீதையும் நியூ டெஸ்டமெண்டும் இருபத்தைந்து ரூபாயும் இருந்தன. எங்கு போவதென்ற திட்டமும் இல்லை; யாரையும் தெரியவும் தெரியாது. ராமன் காட்டிய வழியில்தான் இனி பயணம்.

ஒரு சின்னக் குடிசை. அதில் நடுத்தர வயதுப் பெண்மணி. அவரிடம் பிக்ஷை கேட்க, சாதமும் தயிரும் சிறிது கிடைத்தன. நேராக ஸ்டேஷனுக்கு வந்தார். நள்ளிரவில் மணி அடிக்க, ஒரு ரயில் வந்து நின்றது. அதில் ஏறினார். திருச்சியில் காலையில் வந்து அது நிற்க, அதிலிருந்து இறங்கிய ராமதாஸ் நேராகக் காவிரிக்குச் சென்று ஸ்நானம் செய்தார். பழைய ஆடைகள் நதியோடு போக, சந்யாசிக்கே உரித்தான காவி உடையை அணிந்தார். புதிய பிறவி!

உடம்பெல்லாம் புல்லரிக்க நதிக்கரையில் இருந்த ஒரு தர்மசாலையை அடைந்தார். அங்கு வாசலில் ஒரு சிறிய கோஷ்டி ராம நாமத்தை பஜனை செய்து கொண்டிருந்தது. ராமதாஸும் கோஷ்டியில் சேர்ந்தார். நடுப்பகலில் பஜனை முடிவுக்கு வர, எதிரில் போட்டிருந்த துண்டில் முக்கால் அணா (ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள். ஒரு அணாவுக்கு நான்கு காலணாக்கள்) சேர்ந்திருந்தது. இவ்வளவுதானா என்று பஜனை செய்த சாதுக்கள் ஏமாற்றம் அடைய, "இல்லை! ராம நாமமே பெரிது" என்று கூறிய ராமதாஸ் ஒரு ரூபாயை அவர்களிடம் தர, அவர்கள் வியப்பின் உச்சிக்கே சென்று விட்டனர். தனது லோட்டாவைப் பார்த்தார். அதில் இரண்டு தம்பிடிகள் இருந்தன. முதல் பிச்சையில் அவருக்குக் கிடைத்தவை அவை!

அப்போது அருகில் அமர்ந்திருந்த சாது ராமதாஸிடம் "எங்கே போகிறீர்கள்" என்றார். ராமதாஸிடமிருந்து பதில் வரவில்லை. ஆகவே, அவர் தன்னுடன் அவரை ராமேஸ்வரம் அழைத்துச் சென்றார். இனி வரும் பயணங்களும் அப்படியே, யாராவது அழைத்துச் செல்பவையாகவே அமைந்தன!

ராமேஸ்வரத்தில், கையில் மீதம் இருந்த ஒன்பது ரூபாயையும் தர்மமாக ஏழைகளுக்குத் தந்து விட்டார். இன்னும் ஆறே மைல்களில் ராமேஸ்வரம் என்ற நிலையில் டிக்கட் கலெக்டர் டிக்கட்டைக் கேட்க, ராமதாஸ் மற்றும் சாதுராம் (ராமதாஸுடன் கூட வருபவர் யாராக இருந்தாலும் அவர் சாதுராம் என்று அவரால் அழைக்கப்படலானார்) ஆகிய இருவரும் இறக்கி விடப்பட்டனர்.

ராமேஸ்வரம், சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பாண்டிச்சேரி என்று பயணித்தவர் இறுதியில் திருவண்ணாமலை அடைந்து பகவான் ரமணரைத் தரிசித்தார். அவரது அருட்பார்வை ராமதாஸ் மீது விழுந்தது.

பின்னர் திருப்பதியில் வெங்கடேஸ்வரனைத் தரிசித்து ஜகந்நாத் பூரிக்குக் கிளம்பினார் அவர். இடையில் பெஜவாடா தாண்டி ஒரு ஸ்டேஷன். அங்குள்ள டிக்கட் விற்பனையாளரும் ஸ்டேஷன் மாஸ்டரும், எந்த சாதுவையும் ரயிலில் ஏற விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு, யாரையும் டிக்கட் இன்றி ஏற அனுமதிக்கவில்லை. ரயில் கிளம்ப இருக்கும் தருணத்தில் ஒரு போலீஸ்காரர் அவர்களுடன் வாதிட்டு, சாதுக்கள் பணத்தைத் துச்சமாக மதிப்பவர்கள் என்றும் அவர்களிடம் டிக்கட்டை எதிர்பார்க்கக் கூடாது என்றும் வாதிட்டார். ஆனால் ரயில்வே அதிகாரிகளோ மசியவில்லை. போலீஸ்காரர் சாதுக்களை அழைத்து வண்டியில் ஏறச் சொன்னார். ரயில்வே அதிகாரிகள் கோபத்துடன் "எந்த அதிகாரத்தில் நீங்கள் இவர்களை வண்டியில் ஏறச் சொன்னீர்கள்" என்று கத்தினர். "என் மனச்சாட்சியை விட வேறு பெரிய அதிகாரம் என்ன வேண்டும்" என்று கடுமையாகக் கூறிய போலீஸ்காரரை ராம தூதுவனாகவே சாதுக்கள் நினைத்தனர்.

இதே போன்ற அதிசய வழிகாட்டல்கள் ஜகந்நாத் பூரியிலும் தக்ஷிணேஸ்வரத்திலும் ஏற்பட, அவை அனைத்தையும் ராமனின் அருள் விளையாடல் என்று ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு தலமாக ராமதாஸ் சென்றார்.

ஜான்ஸியில் அவர் உடல்நிலை மோசமானது. திடீரென்று ஒருவர் அவர் அருகில் வந்து "ஒரு சேட் உங்களை அழைக்கிறார்" என்றார். ராமதாஸ், ராமனின் அடுத்த விளையாடல் என்று நினைத்து அவரிடம் செல்ல, அவரும் ராமதாஸை அன்புடன் ஆதரிக்கலானார். மஹாதேவ் என்பது அவர் பெயர்.

தலம் தலமாகச் சென்று இறைவனைத் தரிசித்த புனிதருக்கு இமயமலை செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. வெள்ளிப் பனிமலை ஒருபுறம், சலசலவென ஓடும் கங்கையாறு ஒருபுறம், ஆங்காங்கே தவம் செய்யும் தபஸ்விகள் வாழும் குடிசைகள் ஒருபுறம் என்று அனைத்தையும் பார்த்தவாறே பயணித்த ராமதாஸ், ஒரு ஆலமரத்தின் கீழ் மண்மேடை ஒன்றை அமைத்துத் தவம் புரியலானார். பின்னர் இமயமலைத் தொடரில் ஒவ்வொரு மலையாக ஏறலானார். உடல் என்ற உணர்வே போனது. ராம சிந்தனையே அவரை ஆக்கிரமித்தது. கடுமையான பயணங்கள் எளிதாயின. செங்குத்தான மலையில், வழுக்கி விழும்படியான பாதை. பிடிப்பதற்கோ புல்தான். அதில், அளப்பற்ற ராமனின் கருணையால் ஏறி மலை உச்சிக்குச் சென்றார். இறங்கி வருவதோ இன்னும் ஆபத்தாக இருந்தது. கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களில் வழி நெடுக சாதுக்கள், ரிஷிகளின் தரிசனத்தையும் பெற்றார்.

இமயமலைப் பயணம் முடிந்த நிலையில் சமவெளிக்கு வந்தார். கிருஷ்ணனின் லீலையால் நிரம்பிய மதுரா, ப்ருந்தாவன் ஆகியவை அவருக்குப் புத்துணர்ச்சியைத் தந்தன. யமுனை நதிக்கரையில் அருமையான மணலையே தனது படுக்கையாக்கிக் கொண்டு அருகிலிருந்த மரங்களின் நிழலில் ஆனந்தமாகப் பதினைந்து நாட்கள் தங்கினார். ‘ராதே ஸ்யாம்!’ என்ற வார்த்தைகள் அவரைப் புல்லரிக்க வைத்தன; மெய்மறக்கச் செய்தன!

–தொடரும்…

About The Author