பெண் சக்தி பெரும் சக்தியாக மாற புது வழி!

பெண்ணுக்கு உரிமை வேண்டும் என்று தினமும் முழங்கும் கால கட்டத்தில் இன்னும் கோடானு கோடி பெண்கள் உலகில் அரை வயிற்றுக்கும் கஞ்சி இல்லாமல் அல்லல் படுவது ஏன்? திறமை இருந்தும் அதிகாரமோ அந்தஸ்தோ அல்லது பணம் சம்பாதிக்கவோ முடியாதது ஏன்?

இந்த விஷயத்தை ஆராய்ந்த பெண்கள் முன்னேற்றக் குழுக்கள் ஒரு புதிய உண்மையைக் கண்டுபிடித்தன. உலகெங்குமுள்ள பெண்களுக்கு எம்பவர்மெண்ட் என்னும் சுய அதிகார சக்தி வேண்டுமெனில் அவர்கள் பொருளாதார ரீதியாக மேம்பட வேண்டும் என்ற உண்மைதான் அது!

இதற்காக 49 நாடுகளில் ஒரு புதிய மைக்ரோ லோன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது! தன் திறமை மற்றும் சக்தியின் மூலம் ஆதார வளங்களை மேம்படுத்தி ஒரு பெண் சுயமாக பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால் அவளுடைய குடும்பத்தின் அந்தஸ்தே மாறி விடுகிறது என்பதை இந்தக் கடன் நிதியுதவியில் முன்னேறிய ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிரூபித்து வருகின்றன!
இதில் குறிப்பிடத் தகுந்த அம்சம் என்னவென்றால் 98.7 சதவிகிதம் பேர் கடனைக் குறித்த காலத்தில் திருப்பித் தந்து விடுவதுதான். ஒரு பெண் முன்னேறினால் 40 பேரை அவள் முன்னேற்றி விடுகிறாள் என்று ஆய்வு கூறுகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம்:

பிரேஸில் நாட்டின் குக்கிராமம் ஒன்றில் ஏழையாக வாழ்ந்து வந்த நில்ஜா பார்போஸா பணமே இல்லாத தன் நிலையை எண்ணி எண்ணி வருந்தினாள். தன் சகோதரியை அழைத்து பொம்மை செய்து விற்கலாமா என்று கேட்டாள்.

எங்கு எந்த உப்யோகமற்ற பொருட்கள் கிடைத்தாலும் அதை சேகரித்து அழகான பொம்மைகளை விதம் விதமாகத் தயாரிக்க ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் பொம்மைகள் விற்றன. ஆனால் அந்த வெற்றி தொடரவில்லை. தயாரித்த பொம்மைகள் பெருமளவில் குவிந்து விட்டன. மாற்று உடை வாங்கக் கூடப் பணம் இல்லாத நிலை ஏற்பட்டது.

அப்போதுதான் அவள் மைக்ரோ லோன் பற்றிக் கேள்விப்பட்டாள். உடனடியாக ஒரு நிதியுதவிக்கு விண்ணப்பித்தாள். மைக்ரோ லோன் குழுவினர் அவள் திறமையைக் கண்டு வியந்து அவளுக்கு ஆதரவளித்ததுடன் ஒரு புதிய விற்பனைக்கான சந்தை உத்தியையும் கற்றுத் தந்தனர். ஐந்தே வருடங்களில் நில்ஜா பெரும் பணத்தை சம்பாதித்ததோடு புதிதாக ஐந்து பேருக்கு மைக்ரோ லோனைப் பெற்றுத் தந்தாள்.

இதே போல பேக்கரி ஷாப் வைத்து பெரும் பணக்காரியான ஏழைத் தாய் உள்ளிட்ட ஏராளமானோரின் வெற்றிக் கதைகள் ஆயிரக்கணக்கில் 49 நாடுகளில் உலா வருகின்றன! இந்த வெற்றிக் கதைகளை அறிந்த ஐ.நா இந்தியாவில் உள்ள பெண்களுக்கு 300 லட்சம் டாலர் கடனை சென்ற வருடம் அளிக்க முன் வந்துள்ளது ஒரு பெரிய நற்செய்தி ஆகும். இதன் மூலம் 108000 கிராமப் பெண்கள் பயனடையப் போகிறார்கள். இந்த மைக்ரோ லோன் திட்டம் வட இந்தியாவில் கங்கை பாயும் சமவெளியில் மிக அதிகமாக வரவேற்கப்படுகிறது. 6000 சுய உதவி குழுக்கள் இந்த கடன் உதவியை பெற்று முன்னேறப் போகின்றனர்.

ஐ.நா குழுவினர் ஊர் ஊராக இப்படி திறமை வாய்ந்து நிதி உதவி இல்லாமல் வாடும் பெண்களை இனம் கண்டு வருகின்றனர். பெண் சக்தி பெரும் சக்தியாக மாறுவதற்கு பண பலமே பெரும் பலம்! இதை முதலில் பெற மைக்ரோ லோன் உதவித் திட்டம் ஒரு நவீனத் திட்டம்! திறமையான பெண்மணியா நீங்கள்? . நிதி உதவி பெற்று முன்னேறி ஒரு நாற்பது பெண்மணிகளை நீங்களும் ஏன் முன்னேற்றக் கூடாது? முயன்றால் முடியாததில்லை!

About The Author

2 Comments

  1. paru

    கொந் டொ கெட் தெ மிcரொ லொஅன்? டொ ந்கொம் நெ கவெ டொ ரெfஎர்? ப்லெஅசெ இf அன்யொனெ நில்லிங் டொ கிவெ தெ இன்fஒர்மடிஒன்?

  2. இரா.சேகர்(ஷக்தி)

    இந்திய உதாரணங்கள் அதிக ஊக்குவிப்பாக இருக்குமே?

Comments are closed.