மது – 1

இந்திய ரயில்களுக்கு ஒரு விசேஷமான குணாதிசயம் உண்டு. யாரையவாது ரிஸீவ் பண்ணுவதற்கு நாம் அரைமணி நேரம் முன்னதாய் வந்து காத்துக்கிடக்கிற போது இந்த ரயில், சாவகாசமாய் அறுபது நிமிஷம் தாமதமாய் வந்து சேரும். நாம் ஒரு அஞ்சு நிமிஷம் தாமதமாய் வந்தால், ரெயில் பத்து நிமிஷம் முன்னதாக வந்து அசத்தும்.

இன்றைக்கு அப்படித்தான் ஆகிவிட்டது. அயனாவரத்திலிருந்து காலத்தைக் கணக்குப் பண்ணித்தான் அறையைவிட்டுக் கிளம்பினான் இவன். பூந்தமல்லி ஹைரோடைக் கடக்கிறபோது, ஸ்கூட்டரில் பெட்ரோல் காலி. அரைக் கிலோமீட்டர் உருட்டிக் கொண்டு வந்து எக்மோர் ஸ்டேஷனை அடைந்த போது நாலாவது ப்ளாட்ஃபாமில் வைகை எக்ஸ்ப்ரஸ் வந்து சேர்ந்து பழசாகிவிட்டிருந்தது.

பெரியப்பாவைக் காணவில்லை. இவனைக் காணவில்லையென்று கடுப்பாகிக் கிளம்பி விட்டாரா? கென்னத் லேனில் ஏதாவது ஒரு லாட்ஜில் தஞ்சமடைந்திருப்பார். அல்லது கென்னத் லேன் மலபார் மசூதிக்குப் போயிருப்பார்.

அவ்வப்போது படியளக்கிற பெரியப்பா. அவரை அதிருப்திப் படுத்துவது கட்டுப்படியாகாது. இன்றைக்கு பெரியப்பாவை சந்தித்தே ஆக வேண்டும். ஸ்கூட்டரில் பெட்ரோல் டாங்க்கை நிரப்பவும், இவனுடைய வயிற்றை நிரப்பவும்.

மணி ஒண்ணே முக்கால். காலையில் டிஃபனும் சாப்பிடாததால் வயிற்றுக்குள்ளே விசேஷ அவஸ்தை.

கடவுளே, எப்படியாவது பெரியப்பாவின் கண்ணில் பட்டாக வேண்டுமே.

‘ஹாய் ஹசீன்!’ என்றொரு குரல் கேட்டது.

பெரியப்பா இல்லை. அவர் ஹாய் போட்டுக் கூப்பிடமாட்டார். தவிரவும், இது பெண் குரல்.

பின்னால் திரும்பிப் பார்த்தான்.

கண்கள் பிரகாசமடைந்தன.

மதுபாலா!

"மது, என்ன திடீர்னு!"

"திடீர்னு இல்லியே. பேப்பர்ல போட்ருந்துச்சே, பாக்கலியா?"

"தமிழ் பேப்பர்ல போட்டிருப்பான். நா இங்கிலீஷ் பேப்பர் தான் படிக்கிறது."

"ஐயே, ஜோக் அடிக்கறியாக்கும்?"

"ஏன், நீ மட்டுந்தான் ஜோக் அடிப்பியாக்கும்?"

"நா சொன்னது ஜோக் இல்ல ஹசீன். சரி அதப்பத்தி அப்புறமா வெலாவாரியாப் பேசுவோம். நா இன்னிக்கி வைகைல வர்றேன்னு சித்தப்பாக்கு எஸ்ஸெம்மஸ் பண்ணினேன். அவர் பாக்கலன்னு நெனக்கிறேன்."

மது சித்தப்பாவைச் சொன்னதும், இவனுக்கு ரெண்டு நிமிஷம் மறந்து போயிருந்த பெரியப்பா திரும்பவும் நினைவுக்கு வந்தார்.
கடவுளே, எப்படியாவது பெரியப்பாவின் கண்ணில் படாமல் தப்பிக்க வேண்டுமே!

பெரியப்பாக் கவலையிலிருந்த இவனை அதை விடப் பெரிய கவலையொன்றில் ஆழ்த்தினாள் மதுபாலா.

"ஹசீன், பசி. அகோரப் பசி. கன்னாபின்னான்னு பசி. எமர்ஜன்ஸி. ஒரு ஆம்புலன்ஸ் அரேய்ஞ்ஜ் பண்ணி ஒடனடியா ஒரு ரெஸ்ட்டாரன்ட்டுக்கு என்ன ஷிஃப்ட் பண்ணேன்."

மதுபாலாவின் பசி ரசிக்கிற மாதிரியிருந்தாலும் இவனால் செயற்கையாய்த்தான் சிரிக்க முடிந்தது.

‘பெட்டியக்குடு மது, நா கொண்டு வர்றேன்’ என்று அவளிடமிருந்து பெட்டியைப் பெற்றுக் கொண்டு மெல்ல நடந்தான். மது புரிந்து கொண்டாள்.

‘ஏய், என்ன திடீர்னு அப்ஸெட் ஆய்ட்ட’ என்றாள்.

"கவலையேப் படாத ஹசீன், எங்கப்பாவோட கருப்புப் பணத்துல ஒரு அஞ்சாயிரம் ரூபா இந்த ஸூட்க்கேஸ்ல இருக்கு. நாம ரெண்டு பேரும் அத ஷேர் பண்ணிக்கலாம்."

மது சொன்னது இவனுக்கு சந்தோஷத்தைத் தந்ததா அல்லது இவனுடைய காலிப் பர்ஸைக் குறித்து விசனத்தை அதிகப்படுத்தியதா என்று தெரியவில்லை.

‘ஐ’ம் ஸாரி மது என்றான், அவள் பக்கம் திரும்பாமலேயே.

"ஒன்ட்ட சொல்றதுக்கென்ன மது, இன்னிக்கி லஞ்ச்க்கு எங்கப் பெரியப்பவத்தான் நம்பியிருந்தேன். அவர ரிஸீவ் பண்றதுக்குத்தான் வந்தேன். ஸ்கூட்டர்ல பெட்ரோல் காலி. பெட்ரோலுக்குக் காசில்ல. உருட்டிட்டு வந்தேன். அதான் லேட். பெரியப்பா காணாமப் போய்ட்டார்."

"பெரியப்பாவ மீட் பண்ணியிருந்தா, என்ன மிஸ் பண்ணி யிருப்ப. அவர மிஸ் பண்ணிட்டு என்ன மீட் பண்ணினது ஒனக்கு சந்தோஷம் இல்லியா ஹசீன்?"

"ஐயோ, இப்படி அப்படி சந்தோஷமா மது, ஒன்னப் பாப்பேன்னு நெனக்யவே இல்லியே மது."

"அப்ப, சந்தோஷத்த மொகத்ல காட்டு, கொரல்ல காட்டு. ச்சீயர் அப் ஐ ஸே. பணத்த ஷேர் பண்ணிக்கலாம்னு நா சொல்றேன்ல்ல, சும்மா சொல்றேன்னு நெனக்கிறியா? ஐ மீன் இட் ஹசீன். வா, மொதல்ல சாப்புடுவோம். அப்புறம் ஒன்னோட ஸ்கூட்டருக்கு சாப்பாடு போடுவோம்."

கல்லூரியில் ஃபேர்வல் டே அன்றைக்கு, ‘பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே பறந்து செல்கின்றோம்’ என்று நெஞ்சங்கள் கனக்க, பிரிவுப்பாட்டு பாடிவிட்டுக் கலைந்து போன பின்னால் தன்னுடைய அபிமான சிநேகிதி மதுபாலாவை இத்தனை விரைவில் சந்திக்க வாய்க்கும் என்று இவன் கற்பனைகூடப் பண்ணியிருக்கவில்லை. பணப் பிரச்சனையைப் புறந்தள்ளிவிட்டு, இனிமையான இந்த கணங்களை முழுமையாய் வாழ்ந்து விடுவது என்று முடிவெடுத்தான்.

(தொடரும்)

About The Author