மனிதரில் எத்தனை நிறங்கள்! (95)

Strike the enemy when he is in disorder.
Avoid the enemy when he is stronger.
If your opponent has a temper, irritate him.
If he is arrogant, encourage his egotism.
Attack the enemy when he is unprepared.

– Sun Tzu

ஆர்த்தி வெளியே வரும் வரை ஆகாஷிற்கு இருப்பு கொள்ளவில்லை. ஒரு தடவை கேட்டதற்குப் பிறகு மீண்டும் அந்த அலறல் கேட்கவில்லை. அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஊட்டிக்கு வந்த ஆரம்பத்தில் அவள் கனவில் இருந்து விழித்து அழுது கொண்டு உட்கார்ந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அப்படி அழுது கொண்டு அமர்ந்திருப்பாளோ? அந்த நாள் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டு அழுதாள். இப்போது ப்ரசன்னா தோளில் சாய்ந்து கொண்டு அழுது கொண்டிருப்பாளோ? அந்த எண்ணமே கசந்தது. ப்ரசன்னா டாக்டர் என்பதையும் மீறி அவன் மீது பொறாமையாக இருந்தது.

இந்த மாதிரி சிகிச்சைகளுக்கெல்லாம் பெண் டாக்டர்களிடம் அழைத்துப் போவது தான் நல்லது என்று தோன்றியது. மேலும் சில மனம் சம்பந்தமான கேஸ்களில் பேஷண்டிற்கு டாக்டர் மீது ஒரு கவர்ச்சி ஏற்பட்டு விடுவதாக எங்கோ படித்தது நினைவுக்கு வந்து தொலைய அவன் பொறாமைத் தீயில் வேக ஆரம்பித்தான்.

ஆர்த்தி வெளியே வந்த போது புன்னகையுடன் இருந்தாள். அதைப் பார்த்தவுடன் ஏக காலத்தில் நிம்மதியும், கோபமும் அவனுள் எழுந்தன. இண்டர்காமில் பேசிய செக்ரட்டரி "ஆகாஷ் உங்களை இரண்டு நிமிஷம் டாக்டர் கூப்பிடறார்" என்று சொல்ல ஆர்த்தியைக் கண்டு கொள்ளாமல் ஆகாஷ் உள்ளே போனான். உள்ளே ப்ரசன்னா முகத்தில் ஒருவித திருப்தி தெரிந்தது. ஆர்த்தியின் புன்னகையைப் பார்த்து விட்டு வந்த ஆகாஷிற்கு ப்ரசன்னாவின் திருப்தி அடிவயிற்றைக் கலக்கியது. அவன் முகம் போன போக்கைப் பார்த்த ப்ரசன்னா வாய் விட்டுச் சிரித்தான்.

"டேய் நான் ஒரு டாக்டர்டா. அதுவும் உன் ப்ரண்டுடா"

ஆகாஷ் ஒரு கணம் அசந்து போனான். ஒரு நோட்டத்திலேயே தன் எண்ணங்களை எப்படி இவனால் கண்டுபிடிக்க முடிகிறது என்று வியந்தவன் மறு கணம் அமைதியாக நண்பனிடம் கேட்டான். "இப்ப எதுக்கு இதை சொல்றே"

ப்ரசன்னா சிரித்தபடியே சொன்னான். "இது உன் தப்பு இல்லை. காதல் வந்தாலே இப்படித் தான்"

ஆகாஷ் லேசாக அசட்டுப் புன்னகை பூத்து "நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்குத் தெரியலை. சரி எதுக்குக் கூப்பிட்டாய்னு சொல்லு"

இனி மூன்று பேஷண்டுகளைப் பார்க்க வேண்டும் என்பதால் ப்ரசன்னா அவனிடம் வம்புக்குப் போகாமல் விஷயத்துக்கு வந்தான். "இன்னும் ஒரு செஷன்ல அவள் கனவுகளோட காரணங்களை முழுசா தெரிஞ்சுக்கலாம். அப்புறமா அவள் ஆழ்மனசை அமைதிப்படுத்தி அந்தக் கனவுகள் வராமல் பார்த்துக்க ஒரு செஷன் தேவைப்படும். நான் நினைச்சதை விட நல்ல முன்னேற்றம் இருக்கு."

அவன் திருப்திக்குக் காரணம் தெரிய வந்த போது ஆகாஷிற்குத் தன் மேலேயே கோபம் வந்தது. "தேங்க்ஸ்டா"

வெளியே வந்த போது தன் மீதே வந்த கோபம் ஆர்த்தி மீது மாறியது. என்னை இப்படிப் பைத்தியமாக்கிட்டாளே. வெளியே வந்த ஆகாஷிடம் செக்ரட்டரி நளினி "ஹாய் ஆகாஷ். சென்ட்ரல் தியேட்டர்ல மூணாவது தடவையா டைட்டானிக் போட்டுருக்கான். கூட்டமே இருக்காது. என்னைக் கூட்டிகிட்டு போறீங்களா?"

ஆகாஷின் அப்போதைய மனநிலை அவனைப் பேச வத்தது. "போலாமே. வர்ற சண்டே போலாமா?"

நளினி இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. "கண்டிப்பா தானே. சண்டே ப்ர்ஸ்ட் ஷோக்கு டிக்கெட் புக் செய்து வைக்கட்டா"

ஆகாஷ் தன் பர்ஸிலிருந்து ஒரு ஐநூறு ரூபாய் தாளை எடுத்து அவளிடம் தந்தான். "ஷ்யூர். ரெண்டு பால்கனி டிக்கெட் புக் பண்ணிடு"

திரும்பி வருகையில் ஆர்த்தியின் முகத்தை அவனால் பார்க்க சகிக்கவில்லை. சிறிது நேரத்திற்கு முன் இருந்த புன்னகை போய் தன்னுடைய பழைய மனநிலையில் அவள் இப்போது இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. வழக்கமாக நிம்மதியாக கண்ணயரும் அவள் ஊட்டி வந்து சேரும் வரை தூங்கவுமில்லை, தன் முகத்தை ஜன்னல் பக்கமிருந்து திருப்பவுமில்லை. ‘தியேட்டரில் கூட்டமே இருக்காது. என்னைக் கூட்டிகிட்டுப் போறீங்களா?’ என்று ஒரு பெண் ஒரு அன்னியனைப் பார்த்துக் கேட்கிறாளே. இவரும் சரி என்று ரிசர்வ் செய்யக் காசைத் தருகிறாரே. என்று உள்ளே அவள் குமுறிக் கொண்டிருந்தாள்.

இத்தனை நாட்கள் எவ்வளவு தான் ஆகாஷ் கோபப்பட்டாலும் பதிலுக்கு ஆர்த்தி கோபப்பட்டதில்லை. அவன் ஒரு சிறு புன்னகை பூத்து விட்டால் எல்லாவற்றையும் மறந்து விடும் ஆர்த்தியின் இந்தக் கோபம் ஆகாஷிற்கு சிறிது சந்தோஷத்தைக் கொடுத்தது. பொறாமை அந்தப் பக்கமும் இருக்கிறது. அதே நேரத்தில் கொஞ்சம் ஓவராகப் போய் விட்டோமோ என்ற சந்தேகமும் அவனுக்கு வந்தது.

++++++++++++++++

அசோக் ஒரு பெரிய கவர் ஒன்றைத் தந்து மூர்த்தி கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டான்.

"அந்தம்மா யார் யாரைப் பார்த்தாங்கங்கறது போட்டோ, அட்ரஸோட உள்ளே இருக்கு. முதல்ல ஒரு காலேஜ் பொண்ணைப் பார்த்துட்டு அவள் கிட்ட அட்ரஸ் வாங்கிட்டு அவள் அப்பாவைப் போய் பார்த்தாங்க. ரொம்ப நேரம் அந்த ஆள் கூட வீட்டுகுள்ளேயே இருந்து பேசிகிட்டு இருந்தாங்க. சாயங்காலம் அந்தப் பொண்ணும், அந்த ஆள் பொண்டாட்டியும் வந்த பிறகு நாலு பேரும் பீச்சுக்குப் போனாங்க. அதுக்கப்பறம் பாலோ செய்யறதுல அர்த்தம் இல்லை, இனி யாரையும் பார்க்கப் போறதில்லைன்னு புரிஞ்சுடுச்சு. நான் கிளம்பி வந்துட்டேன்."

"அந்த ஆள் யார்? என்னவா இருக்கான்?"

"சென்னையில் ஒரு கெமிக்கல் கம்பெனி பேக்டரியில் மெக்கானிக்காய் இருக்கான். அந்த பேக்டரி அட்ரஸம் உள்ளே இருக்கு. ஓகே. நாளைக்கு சாயங்காலம் அஞ்சரை மணிக்கு கார்டன் வாசல்ல பணத்தோட நில்லு. அந்த ஹிப்னாடிஸ சிடியோட வர்றேன்."

அடுத்து ஒரு வார்த்தை கூட பேசாமல் அவன் போய் விட்டான்.

+++++++++++++++++

நேற்று வீட்டுக்கு வந்ததிலிருந்து ஆர்த்தியின் மாறாத முக வாட்டத்தைக் கண்ட பார்வதிக்கு திக் என்றது. டாக்டரிடம் போய் விட்டு வந்த பின் இந்த வாட்டம் என்பதால் பேத்தியிடம் கவலையுடன் கேட்டாள். "என்ன ஆர்த்தி இன்னைக்கு ரொம்பவே வாட்டமாயிருக்கிறாய்.?"

ஆர்த்திக்கு யாரிடமாவது சொல்லா விட்டால் தலை வெடித்து விடும் போல் இருந்தது. பாட்டியிடம் நளினி ஆகாஷ் விவகாரத்தைச் சொன்ன போது பார்வதிக்கு சிரிப்பு வந்து விட்டது. "இவ்வளவு தானா விஷயம்" என்றாள்.

"என்ன பாட்டி இது என்ன சின்ன விஷயமா?" ஆர்த்திக்கு பாட்டி அதை எடுத்துக் கொண்ட விதம் ஏமாற்றத்தை அளித்தது.

"அசடு. சும்மா அவன் உன்னை சீண்டறான் அவ்வளவு தான். அதைப் புரிஞ்சுக்காம கோபப்படறாய். நீ யார் கூடவாவது சினிமாவுக்குப் போ. அவனுக்கும் இப்படி தான் பொறாமையாய் இருக்கும்"

"எனக்கு ஒண்ணும் பொறாமை இல்லை"

"சரி விடு. எனக்குத் தான் பொறாமை"

சமயசந்தர்ப்பம் தெரியாமல் கிண்டல் செய்யும் பாட்டி மேலும் ஆர்த்திக்குக் கோபம் வந்தது. "போங்க பாட்டி"

அசோக் தந்த கவரைப் பிரித்துக் கூட பார்க்காமல் பாட்டியிடம் தர வீட்டுக்கு வந்த மூர்த்தி பாட்டியின் அறைக்குப் போகும் வழியில் ஆர்த்தியின் அறையில் ஒட்டுக் கேட்ட அந்தத் தகவலை எடுத்துக் கொண்டு பஞ்சவர்ணத்திடம் போனான். பஞ்சவர்ணம் கேட்டு சந்தோஷப்பட்டாள். "விதி நமக்கு சாதகமா இருக்குடா?"

"எப்படி"

"வர்ற ஞாயித்துக் கிழமைன்னா சிவகாமி பம்பாய் போயிருப்பா. நான் அன்னைக்கு சொன்ன திட்டத்தை செயல்படுத்த அந்த நாள் அருமையான சந்தர்ப்பம். நீ சந்தேகத்தை ஏற்படுத்தாம சரியான விதத்துல கூப்பிட்டாய்னா ஆர்த்தி கண்டிப்பா வருவா. நீ அதுக்கு ஆள்களை முதல்லயே ரெடி செஞ்சுடு. சரியான ஆள்கள் இருக்காங்களா? இல்லாட்டி அந்த அசோக் கிட்டயே ஏற்பாடு செய்யச் சொல்லு. பணம் போனா பரவாயில்லை"

"வேண்டாம் பாட்டி. அதுக்குத் தேவையான ஆள்கள் எங்கிட்டயே இருக்கானுக. எல்லாத்துக்கும் அவன் கிட்டயே போறது அவ்வளவு நல்லதில்லன்னு தோணுது…."

"சரி. உன் இஷ்டம். ஆனா கச்சிதமா செய்யணும். சொதப்பக் கூடாது. ஞாபகம் வச்சுக்கோ. எதுலயுமே டைமிங் தான் ரொம்ப முக்கியம். எதிரியை எந்த நேரத்துல எப்படித் தாக்கணும்கிறதுல எப்பவுமே தெளிவா இருக்கணும். நீ இடத்தையும் ஆள்களையும் தீர்மானிச்சு என் கிட்ட நாளைக்குள்ள சொல்லு. சிவகாமி வெளியூர் கிளம்பிப் போகிற வரை ஆர்த்தி கிட்ட எதுவும் மூச்சு விடாதே…. சரி பவானி யாரைப் பார்த்தாள்னு அசோக் சொன்னான்"

"யாரோ கெமிக்கல் பேக்டரி மெக்கானிக்காம். உள்ளே போட்டோவும், அட்ரஸம் இருக்காம்"

"மெக்கானிக்கா?" என்று முகம் சுளித்த பஞ்சவர்ணம் ஆர்வத்துடன் கவரைப் பிரித்தாள். முதல் போட்டோவில் பவானி ஒரு கல்லூரி மாணவி கையில் தன் விலையுயர்ந்த கடிகாரத்தைப் போட்டுக் கொண்டிருந்தாள்.

"இது யாருடா?"

"அந்த மெக்கானிக் மகளாம். இவ கிட்ட அட்ரஸ் வாங்கிகிட்டு தான் அந்த மெக்கானிக்கைப் பார்க்கப் போயிருக்காங்க"

"ரொம்ப தாராளமா குடுக்கறா. நாம ஏதாவது கேட்டா, அக்காங்கறா, புருஷன்கிறா, தெரிஞ்சா பிரச்சினைங்கறா…:" என்று சொல்லியபடியே அடுத்த போட்டோவை எடுத்த பஞ்சவர்ணம் தீயைத் தொட்டது போல போட்டோக்களை நழுவ விட்டாள்.

பாட்டி அதிர்ச்சியாகி இது வரை பார்த்திருக்காத மூர்த்தி கீழே சிதறி இருந்த போட்டோக்களை ஆச்சரியத்தோடு பார்த்தான். "அந்த ஆள் அப்… அப்பா மாதிரி இல்லை"

பஞ்சவர்ணம் அந்தப் புகைப்படங்களை வெறித்துப் பார்த்தபடி சிறிது நேரம் உட்கார்ந்திருந்தாள். பேரன் சொன்னதற்குப் பதிலாக எதையும் சொல்லவில்லை. பிறகு மெள்ள தன்னை சுதாரித்துக் கொண்டு தானே குனிந்து சிதறியிருந்த புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தாள். பாட்டியளவு சுதாரிக்கும் சக்தியில்லாத மூர்த்தி சிலை போல நின்று அந்தப் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பஞ்சவர்ணம் நிதானமாக ஒவ்வொரு புகைப்படத்தையும் குறைந்தது ஐந்தந்து நிமிடங்களாவது உற்றுப் பார்த்தாள். இரண்டாம் புகைப்படத்தில் பவானியும் இளங்கோவும் ஒரு வீட்டு வாசலில் நின்று இருந்தனர். மூன்றாவது புகைப்படத்தில் பவானி, இளங்கோ, அவனது இரண்டாம் மனைவி, மகள் நான்கு பேரும் வீட்டிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தனர். நான்காவது புகைப்படத்தில் கடற்கரையில் அந்த நான்கு பேரும் மகிழ்ச்சியாக கடலலையில் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

பாட்டி பார்த்த புகைப்படங்களை அவள் பின் நின்றபடி தானும் பார்த்த மூர்த்தி கடைசியில் ஈனசுரத்தில் கேட்டான். "அப்படின்னா அம்மா?”

பஞ்சவர்ணத்திடமிருந்து அவனுக்கு பதில் கிடைக்கவில்லை.

—-

பவானி வீட்டுக்கு வந்து சேர்ந்த ஒரு மணி நேரத்திற்குள் பஞ்சவர்ணத்தால் அழைக்கப்பட்டாள். மூர்த்தி பாட்டி அருகில் நின்று கொண்டு பவானியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"கனிமொழி வீட்டுக்காரர் எப்படியிருக்கார்?" பஞ்சவர்ணம் மகளிடம் கேட்டாள்.

பவானி சொன்னாள். "இப்ப பரவாயில்லை"

பஞ்சவர்ணம் அசோக் எடுத்த போட்டோக்களை மகளிடம் கொடுத்தாள். "இதுல கனிமொழி யாரு அவங்க வீட்டுக்காரர் யாரு?"

பவானிக்கு சில வினாடிகள் இதயம் ஸ்தம்பித்துப் போயிற்று. தன் தாய் தன்னைப் பின்தொடர ஒரு ஆளை ஏற்பாடு செய்திருப்பாள் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏன் உயிருடன் இருப்பதை எனக்குத் தெரிவிக்கவில்லை என்று அவள் கேட்ட போது இளங்கோ சொன்ன பதில் நினைவுக்கு வந்தது. "உனக்குத் தெரிஞ்ச எதுவுமே உங்கம்மாவுக்குத் தெரியாமப் போகாது பவானி".

ஆனால் அந்த அதிர்ச்சி அவளிடம் நிறைய நேரம் நீடிக்கவில்லை. ஏதோ ஒருவித நிம்மதியே பிறகு மிஞ்சியது. எத்தனை நாட்கள் மறைக்க முடியும்? இன்றில்லா விட்டாலும் நாளை தெரியத்தான் போகிறது…. பீச்சில் எடுத்த போட்டோவில் நான்கு பேரும் மிக மகிழ்ச்சியாக இருந்தது அழகாக வந்திருந்தது. இரண்டாவது அண்ணியும் சரி, அண்ணனின் மகளும் சரி மிக அன்பானவர்களாக இருந்தார்கள். மனம் விட்டுப் பேசினார்கள். பவானியும் பெருமையாக ஆர்த்தியின் அழகைப் பற்றியும் அவளுடைய தங்கமான குணத்தைப் பற்றியும் அவர்களிடம் சொன்னாள். அவளுக்குப் பெருமையாகப் பேச வேறொன்றும் இருக்கவில்லை…

"தூங்கிட்டியா" பஞ்சவர்ணம் அவள் நினைவுகளைக் கலைத்தாள்.

"இல்லை"

"ஆரம்பத்துல இருந்து சொல்லு…."

பவானி பெருமூச்சு விட்டு ஆரம்பத்திலிருந்து சொன்னாள். தந்தையின் மறைவை அவர்கள் நினைவு கூர்ந்ததையும், பஞ்சவர்ணத்தைப் பற்றி இளங்கோ வெறுப்புடன் சொன்னவைகளையும் தவிர்த்து மற்றதை அப்படியே சொன்னாள்.

அவள் முடித்த போது பஞ்சவர்ணம் முகத்தில் அவள் இது வரை கண்டறியாத தளர்ச்சி தெரிந்தது. பஞ்சவர்ணம் கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாள். பவானிக்கு முதல் முறையாகத் தன் தாய் மேல் பச்சாதாபம் தோன்றியது.

"அப்படின்னா அவனுக்கும் கல்யாணிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல" கண்களைத் திறந்த பஞ்சவர்ணம் மூர்த்தியின் தாயைப் பற்றிக் கேட்டாள்.

"ஆமா. அண்ணனுக்கும் தெரியல"

"தெரியாமலேயே ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டான். சபாஷ்"

பவானி ஒன்றும் சொல்லவில்லை. பஞ்சவர்ணம் வெறுப்புடன் சொன்னாள். "இங்கிருந்து போயும் பெருசா சம்பாதிக்கல. மெக்கானிக்காவே இருக்கான். அவன் பொண்டாட்டி, மகள் கிட்ட பெருசா நகை எதுவும் காணோம்…."

பவானி சொன்னாள். "ஆனா சந்தோஷமா இருக்கான். நகை நட்டுக்கு என் கிட்ட பஞ்சம் இல்லை. ஆனா அவனோட ஒரு நாள் சந்தோஷத்தை இத்தனை வர்ஷங்கள்ல நான் பார்த்ததில்லை"

பஞ்சவர்ணம் மகளை ஏளனமாகப் பார்த்தாள். "உனக்கு வறுமைன்னா என்னன்னு தெரியுமாடி? நான் பார்த்துருக்கேண்டி. பணத்தோட மதிப்பு தெரியுமாடி. இன்னிக்கு உன் பெரியக்கா இத்தனை பவரோட இருக்கான்னா அதுக்குக் காரணம் என்ன தெரியுமாடி. பணம்தாண்டி. உன் அண்ணன் குடும்பம் உன் கூட இருந்தப்ப சந்தோஷமா இருந்த மாதிரி உனக்குத் தெரியும்டி. ஆனா தூங்கறப்ப நாளைக்கு என்ன செய்யறதுங்கிற யோசனையோட தாண்டி அவங்க தூங்க முடியும். நாளைக்கே ஒரு ஆஸ்பத்திரி செலவு வந்தா ஒவ்வொருத்தன் கிட்டயும் கையேந்திகிட்டு நிக்கறப்ப தெரியும்டி பணம் எவ்வளவு முக்கியம்னு…பெருசா சொல்ல வந்துட்டா அண்ணன் சந்தோஷமாயிருக்கானாம்…"

பவானி ஒன்றும் சொல்லவில்லை.

கோபம் ஓரளவு தணிந்த பஞ்சவர்ணம் "அப்புறம் என்னடி உங்கண்ணன் சொல்றான்?"

"பெரியக்கா கிட்ட ஜாக்கிரதையா இருக்கச் சொல்றான். அவங்க வழிக்குப் போகாம இருக்கறது உத்தமம்கிறான்."

பஞ்சவர்ணம் முகத்தில் இகழ்ச்சி தெரிந்தது. "கிழவி எனக்கு இருக்கிற தைரியத்துல கால்வாசி இருந்திருந்தா அவன் ஓடியிருப்பானாடி. அடுத்த தடவை அவனைப் பார்க்கப் போறப்ப சொல்லு. என் பழைய சேலைகள் நிறைய இருக்கு. தர்றேன். அவனை உடுத்திக்க சொல்லு."

‘இந்தம்மாவைப் போய் பாவம் என்று நினைத்தேனே’ என்று எண்ணிய பவானி ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சொல்லிக் கொள்ளாமல் வெளியேறினாள்.

"பாசமலர் சாவித்திரி. அண்ணனைப் பத்தி சொன்னா கோவம் வருது" என்று பஞ்சவர்ணம் மகளைக் கிண்டலடித்தாள்.

++++++++++++++++++++

நிச்சயித்தபடி அர்ஜுன் திருமணம் கோயிலில் எளிமையாக நடந்தது. சிவகாமியும், சங்கரனும் தாய் தந்தை ஸ்தானத்திலிருந்து திருமணத்தை நடத்தினார்கள். பஞ்சவர்ணம் மூர்த்தி தவிர வீட்டிலிருந்த எல்லோரும் திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.

அர்ஜுன் முகத்தில் இன்னும் நடப்பதை நம்ப முடியாத பிரமை தெரிந்தது. அவன் வசந்தியை விட அதிகமாக சிவகாமியைப் பிரமிப்புடன் பார்த்தான்.

சிவகாமி வசந்தியிடம் தனியாகக் கூப்பிட்டுச் சொன்னாள். "பாரும்மா. நான் அவனைப் பத்து வயசுல இங்க கூட்டிகிட்டு வந்தேன். என்னால அவனுக்கு சாப்பாடு போட முடிஞ்சுது. துணிமணி எடுத்துக் கொடுக்க முடிஞ்சுது. பண வசதி செஞ்சு தரமுடிஞ்சுது. இப்ப ஒரு முகத்தைக்கூட தர முடிஞ்சுது. ஆனா அந்த முகத்துல ஒரு சந்தோஷத்தை வரவழைக்க இத்தனை வருஷங்கள்ல என்னால் முடிஞ்சதில்லை. அது உன் ஒருத்தியால தான் முடியும். அவன் ரொம்ப நல்லவன். அவனை சந்தோஷமாய் வச்சுக்கறது உன் கைல தான் இருக்கு"

வசந்தி நெகிழ்ச்சியுடன் தலையாட்டினாள்.

அர்ஜுனை அழைத்து ஒரு கவரைத் தந்தாள். "இதுல குளு மணாலிக்கு ரெண்டு டிக்கெட் இருக்கு. ஒரு வாரத்துக்கு ஓட்டல்ல ரூமும் புக் பண்ணியிருக்கேன். அட்ரஸ் விவரம் எல்லாம் உள்ளே இருக்கு. நானும் பாம்பே போறதால் இங்கே உனக்கு பெருசா வேலையும் இல்லை. ரெண்டு பேரும் சந்தோஷமா போயிட்டு வாங்க"

(தொடரும்)

About The Author