மனிதரில் எத்தனை நிறங்கள்! (75)

I am the Love that dare not speak its name.
– ‘Two Loves’ Lord Alfred Douglas.

மூர்த்தி சொன்னதை எப்படி எடுத்துக் கொள்வது என்று ஆர்த்திக்கு நிறைய நேரம் விளங்கவில்லை. ஆகாஷுக்கு அவள் இதயத்தில் தந்த இடத்தை வேறு ஒருவருக்குத் தருவது என்பது அத்தனை சுலபமல்ல என்று அவள் அறிவாள். ஆனால் மூர்த்தி பேசிய விதம் மிகவும் கண்ணியமாக இருந்தது. அவள் சொத்துக்கு அவன் ஆசைப்பட்டது போல் தெரியவில்லை. மாறாக சொத்தைத் திருப்பித் தரும் பட்சத்தில் தான் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி சொல்கிறான். அவன் கடைசியில் ‘இந்த அனாதைப் பையன் என்னை எப்படி இப்படிக் கேட்கலாம்னு மட்டும் நினைச்சுடாதே, ப்ளீஸ்’ என்று சொன்னது அவளுக்குப் பாவமாக இருந்தது. மொத்தத்தில் அவன் நல்லவனாகவும், இரக்கப்படத் தகுந்தவனாகவும் தான் அவளுக்குத் தோன்றியது.

இதைப்பற்றி அவள் யாரிடமும் சொல்லத் துணியவில்லை. பாட்டி தாத்தாவிடம் சொல்லலாம் என்றால் பாட்டி அதைக் கேட்டவுடன் மூர்த்தியைக் கண்டபடி திட்டுவாள் என்பதில் அவளுக்குச் சந்தேகமில்லை. அவன், அவர்கள் பஞ்சவர்ணத்திடம் பேசியதை, ஆகாஷிடம் உடனடியாகச் சொன்னது முதல் பார்வதியைப் பொறுத்தவரை சந்தேகத்துக்கு உரிய பேர்வழி ஆகி விட்டான். அவன் பின்னர் வந்து மன்னிப்பு கேட்ட பிறகு ஆர்த்திக்கு அவனை நம்பத்தான் தோன்றியது. ஆனால் பாட்டி இப்போதும் ‘அழற ஆம்பிளையை நம்பக்கூடாது’ என்று சொல்லி வருகிறாள். தாத்தாவிடம் சொல்லலாம் என்றால் அவர் எத்தனை தான் பாட்டியிடம் சண்டை போட்டாலும் பாட்டியிடம் எதையும் மறைத்தது இல்லை என்பதால் உடனடியாக அது பாட்டி காதுக்குப் போய் விடும். சந்திரசேகரிடம் சொன்னால் கூட அது மூர்த்தியைப் பாதிக்கும் என்று தோன்றியதால் அதைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் இருப்பதே நல்லது என்று முடிவெடுத்தாள். அதே போல் இப்போதைக்கு அவன் சொன்னதை வைத்து எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று அவள் தீர்மானித்தாள்.

சந்திரசேகர் மகள் அறைக்கு நுழைந்த போது மகள் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதைப் பார்த்தார். தந்தையைக் கண்டதும் மகள் முகத்தில் ஒரு சந்தோஷப் புன்னகை மலர்ந்தது. ஒரு கணம் அது ஆனந்தியை நினைவுபடுத்தி தர்மசங்கடப்படுத்தினாலும் மறு கணம் தன் மகள் தன் மீது வைத்துள்ள பாசத்தில் அவர் மனம் பெருமிதப்பட்டது.

"சாரிம்மா"

"எதுக்குப்பா?"

"உன் பிறந்த நாள் போன வாரம் வந்து சத்தமில்லாமல் போயிடுச்சு. அப்பாவுக்கு ஞாபகமே வரலை"

"பரவாயில்லைப்பா"

"ஆனா வர்ற ஞாயிறு நட்சத்திரப்படி பிறந்த நாள் வருதுன்னு அக்கா சொன்னா. நாம அமர்க்களமாய் கொண்டாடிடலாம். ஓ.கே"

"ஆடம்பரம் எல்லாம் வேண்டாம்ப்பா"

"சரி சிம்பிளா கொண்டாடலாம். உனக்கு என்ன வேணும் சொல்லு. அப்பா வாங்கித் தர்றேன்"

ஆர்த்திக்குத் தந்தையிடம் என்ன கேட்பதென்று தெரியவில்லை. "முதல்லயே எல்லாமே வாங்கித் தந்துட்டீங்களேப்பா. இன்னும் வாங்கித் தர என்ன இருக்கு"

மகளை மன நெகிழ்வுடன் சந்திரசேகர் பார்த்தார். மகளுக்கு எதிலும் பேராசை இல்லை என்று தோன்றியது. இருப்பதில் திருப்தியாக இருக்கிறாள். ஆனால் சில சமயங்களில் வெளிக்காட்டாத துக்கம் அவளிடம் உள்ளது என்றும் தோன்றியது. எல்லாம் இந்த ஆகாஷ் அவளிடம் கோபமாக இருப்பதால் தான் என்று எண்ணிய போது அவன் மீது அவருக்குக் கோபம் பொங்கியது. "கோபம் ஏதாவது இருந்தால் ஒரு நாள் ரெண்டு நாள்ல சரியாகணும். இவன் என்னடாவென்றால் ஓவராகப் போகிறான்".

அவர் மருமகன் மீது கோபப்பட்ட அதே நேரத்தில் சங்கரனும் மகனை அழைத்து சொல்லிக் கொண்டிருந்தார். "…சில நாளாவே நீ சந்தோஷமாய் இல்லை. முகத்தைப் பார்க்கவே சகிக்கலை. உனக்கு என்னடா ஆச்சு?"

ஆகாஷுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இயல்பாகவே ஜாலியாக இருக்கக் கூடிய அவன் தந்தையின் செல்லப்பிள்ளை. அவரிடம் கூட சந்தோஷமாய் நான்கு வார்த்தை பேசி பல நாளாகிறது என்ற உண்மை அவனுக்கு உறைத்தது. எல்லாம் இந்த ஆர்த்தியை சந்தித்த நேரம்! இன்னும் சரியாகச் சொல்வது என்றால் ஆர்த்தி அவன் அம்மாவை சந்தேகப்பட்ட நேரம்.

"ஒண்ணுமில்லைப்பா. இப்ப கொஞ்ச நாளா வேலை டென்ஷன். அதான்…"

சங்கரன் அவன் சொன்னதை நம்பியதாகத் தெரியவில்லை. அவர் அவனிடம் கனிவாகச் சொன்னார். "பாரு. சந்தோஷமாய் இருக்கிறது ஒரு கலைடா. எதுவுமே இல்லாதவன் கூட சந்தோஷமாய் இருக்கறதுண்டு.எல்லாமே இருக்கிறவன் கூட வாய் விட்டு சிரிக்கத் தெரியாத துரதிர்ஷ்டசாலியாய் இருக்கிறதும் உண்டு. எல்லாமே நாம வாழ்க்கையை எப்படி எடுத்துக்கறோம்கிறதைப் பொறுத்துதாண்டா இருக்கு. இப்ப அம்மாவைப் பாரு. அவளுக்கு இல்லாத டென்ஷனா? ஆனா அவள் எப்பவுமே முகத்தை உர்ருன்னு வச்சு பார்த்திருக்கிறியா?"

ஆகாஷ் தன் மனநிலையை அவருக்கு விளக்க முடியாத நிலையில் இருந்தான்.

சங்கரன் மெள்ளக் கேட்டார். "ஆகாஷ், நீ யாரையாவது காதலிக்கிறியா? அதுல ஏதாவது பிரச்சினையா?"

"சேச்சே அப்படியெல்லாம் இல்லைப்பா. இனி கண்டிப்பா உர்ருன்னு இருக்க மாட்டேன் சரியா?"என்றவன் அவசரமாகப் பேச்சை மாற்றினான். "அம்மா எங்கேப்பா?"

"அர்ஜுன் கிட்ட பேசிகிட்டிருக்கா."

அதே நேரம் அர்ஜுனிடம் டாக்டர் அனுப்பி இருந்த முகங்களின் படங்களை சிவகாமி காண்பித்துக் கொண்டிருந்தாள்.

"இந்த நாலுல ஏதாவது தேர்ந்தெடுக்கச் சொல்லியிருக்கார். உனக்கு எந்த மாதிரி முகம் வேணும்னு பார்"

நான்கும் அழகாகவே இருந்தன. அர்ஜுன் அதிக நேரம் அவற்றைப் பார்க்கவில்லை. அவனுக்கு இன்னும் நடப்பதை நம்பி சந்தோஷப்பட முடியவில்லை. "மேடம் இவ்வளவு செலவு செஞ்சு எனக்கு ஒரு புது முகம் வேணுமா?"

"வேணும்"

"நான் இந்தக் கடனை எத்தனை ஜென்மம் எடுத்து அடைக்கணும்னு எனக்குத் தெரியலை"

"ஏன் அப்படி நினைக்கிறாய். நான் பழைய ஜென்மத்துல உனக்குப் பட்ட கடனை இப்போ அடைக்கிறேன்னு கூட நினைக்கலாமே. நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லலை. எந்த முகம் வேணும்?"

"நீங்களே தேர்ந்தெடுங்க மேடம். எனக்கு சொல்லத் தெரியலை"

சரி நீ போகலாம் என்பது போல தலையசைத்தவள் அந்தப் படங்களை ஆராய ஆரம்பித்தாள். அவன் நகராமல் நிற்பதைக் கவனித்து "என்ன?’" என்றாள்.

அர்ஜுன் தன்னைப் பார்த்து கோயமுத்தூரில் ஒரு சிக்னலில் ஒரு நபர் தலை தெறிக்க ஓடியதைச் சொன்னான். "…. நான் நேத்தே சொல்லணும்னு நினைச்சேன். நீங்க பிசியா இருந்ததால் சொல்ல முடியலை. அது ஆணா, பெண்ணான்னு கூடத் தெரியலை. ஆனா ஓடுனது என்னைப் பார்த்துதான்கிறதில் சந்தேகமில்லை. இன்னொரு விஷயம்…"

அவன் பாதியில் நிறுத்தித் தயங்கினான்.

"ஊம்… சொல்லு" கம்ப்யூட்டர் ஸ்கிரீனிலிருந்து கண்ணை எடுக்காமல் சொன்னாள்.

"எனக்கென்னவோ உள்ளுணர்வு சொல்லுது – அந்த நபர் பதினெட்டு வருஷங்களுக்கு முன்னால் நமக்கு ஏதாவது விதத்தில் சம்பந்தப்பட்ட ஆளாய் இருக்கலாம்னு……"

சிவகாமி கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் இருந்து கண்களை விலக்கி அவனைக் கேள்விக் குறியுடன் பார்த்தாள்.

(தொடரும்)

About The Author