மனிதரில் எத்தனை நிறங்கள்! (25)

Difficult people have been trained and taught to act the way they do since they were children. In fact, they have been rewarded for their negative behavior throughout their entir lives. Difficult behavior worked for them as children – and more important, it continues to work for them as adults. – Connie Podesta

தாத்தா பாட்டிக்கு ஒதுக்கியிருந்த அறையிலும் சௌகரியங்களுக்குக் குறைவில்லை என்பதை நேரில் போய் பார்த்தபின் ஆர்த்தி திருப்தி அடைந்தாள். மனதில் ஆயிரம் சந்தேகங்களும், குழப்பங்களும் இருந்தாலும் சிவகாமி தன் தாத்தா பாட்டியை மலர்ந்த முகத்துடன் வரவேற்ற விதம் மனதுக்கு நிறைவாக இருந்தது. "அப்பா மாதிரி வேண்டா வெறுப்பாய் நடந்துக்கலை"

ஆனால் நீலகண்டன் மிகவும் விரக்தி நிலையில் தான் இருந்தார். சிவகாமியைப் பார்க்கும் போதெல்லாம் ஆனந்தி ஞாபகம் தான் வந்தது. கடைசியில் மகள் முகத்தை ஒரு தடவை கூடப் பார்க்க முடியாமல் போன துக்கம் புதுப்பிக்கப்பட்டது. சௌகரியங்கள் இருந்த போதும் முள் மேல் இருப்பது போல் இருந்தது. மனைவியைப் போல் அவருக்கு நடந்ததை எல்லாம் ஜீரணித்துக் கொண்டு இருக்க முடியவில்லை. ஆகாஷைப் பார்க்கையில் எல்லாம் ஆர்த்தியின் முகம் மலர்ந்ததைப் பார்க்கையில் வயிற்றைக் கலக்கியது. "கடவுளே நீ பொண்ணைக் காப்பாத்தாம போனதுக்கு உன்னை மன்னிச்சுடறேன். என் பேத்தியையாவது காப்பாத்து" என்று அடிக்கடி வேண்டிக் கொண்டார்.

"பாட்டி நீங்க அம்மாவைப் பத்தி ஏதோ சொல்லிட்டு இருந்தீங்க. அம்மாவால சுலபமா யாரையும் மன்னிக்க முடிஞ்சதில்லைன்னு….." ஆர்த்தி பாட்டி விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தாள்.

நீலகண்டனுக்கு மனைவி மேல் கோபம் வந்தது. "நம்பிக்கை துரோகத்தை அவளால் என்னைக்கும் சகிச்சுக்க முடிஞ்சதில்லை ஆர்த்தி. ஒருத்தர் கூட நல்லா பழகி அவங்களை நம்புனதுக்கப்புறம் அவங்க ஏமாத்துனாலோ துரோகம் செஞ்சாலோ அவளால் தாங்க முடிஞ்சது கிடையாது. அவ அதைக் கொலை மாதிரின்னு சொல்வா. நம்பிக்கையைக் கொலை செய்யற மாதிரின்னு அவ சொல்வா. அதுல என்ன தப்பு சொல்லு பார்ப்போம். உப்பு போட்டு சாப்பிடறவன் எவனும் அப்படி நினைக்கிறது சகஜம் தானே?"

பார்வதி கணவனை முறைத்தாள். "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைன்னு பழமொழி சொல்லுவாங்க. யார் தான் தப்பு செய்யறதில்லை. அப்படி ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு தப்புக்காக வெறுக்க ஆரம்பிச்சா உலகத்துல நாம் நேசிக்க ஒரு ஜீவன் மிஞ்சுமா?"

"அவ எல்லார் கிட்டயும் அப்படி எதிர்பார்க்கலை. அவ நெருங்கி நேசிச்சவங்க செஞ்ச துரோகத்தை அவளால் மன்னிக்க முடிஞ்சதில்லை. அதைத் தெளிவா சொல்லு"

பார்வதி பெருமூச்சு விட்டாள். பின் பேத்தியைப் பார்த்து சொன்னாள். "உன் தாத்தாவுக்கு மகள் செய்யற எதுவுமே தப்பு இல்லை. அப்படி செல்லமா வளர்த்ததால் உங்கம்மா சிலதை மாத்திக்க முயற்சி செஞ்சதேயில்லை. நான் கத்தி என்ன பிரயோஜனம் சொல்லு…. உங்கம்மாவுக்கு சின்ன வயசுல இருந்து ஒரு ஃப்ரண்ட் இருந்தா. எப்ப பார்த்தாலும் ஒண்ணாவே இருப்பாங்க. ஒண்ணாவே சுத்துவாங்க. காலேஜ் வரைக்கும் அப்படியே இருந்தாங்க. அப்புறமா ஏதோ சின்ன விஷயத்துல பொய் சொல்லிட்டாளோ, ஏமாத்திட்டாளோ தெரியலை. அதுக்கப்புறம் உங்கம்மா அவ முகத்தைக் கூட பார்க்கலை. அந்தப் பொண்ணு சாரின்னு சொல்லிகிட்டு பல தடவை வந்துது. இவ பேசவேயில்லை. அப்புறம் அவளும் வர்றதை நிறுத்திட்டா."

"மூணு மாசம் கழிச்சு அந்தப் பொண்ணு ஒரு விபத்துல செத்துட்டா. தகவல் வந்துச்சு. உங்கம்மா அப்பக் கூட பார்க்கப் போகலை. எத்தனையோ சொல்லிப் பார்த்தேன். அவ போகலை. கடைசியா நான் போய் பார்த்துட்டு வந்தேன். எத்தனையோ நாள் என் கையால அந்தப் பொண்ணுக்கு சாதம் போட்டுருக்கேன். அதனால் என் மனசு கேக்கலை. செத்தப்ப கூட மன்னிக்க முடியலைன்னா அது என்ன மனசுன்னு தான் நான் கேட்கறது"

ஆர்த்திக்கு பாட்டி சொல்வதில் அர்த்தம் உள்ளது என்று தோன்றியது.

நீலகண்டன் மகள் சார்பாகப் பேசினார். "அவ சரியா இருந்துட்டு தான் அடுத்தவங்களும் அப்படி இருக்கணும்னு எதிர்பார்க்கிறா. அதுல என்ன தப்பு? அந்தப் பொண்ணு செத்துட்டாங்கறதால் அவள் செஞ்சது சரியின்னு ஆயிடுமா?"

தாத்தா சொன்னதிலும் உண்மை இல்லாமல் இல்லை என்றாலும் இயல்பாகவே இளகிய மனம் உள்ள ஆர்த்திக்கு பாட்டி சொன்னது போல் அத்தனை வருடம் பழகிய தோழியின் மரணத்தின் போதாவது அம்மா மன்னித்துப் போய் பார்த்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

அம்மா அப்படி இங்கும் வெறுக்க ஆரம்பித்ததால் தான் உயிரை விட நேர்ந்ததா என்ற கேள்வி அவள் மனதில் விஸ்வரூபம் எடுத்தது.

அதே நேரத்தில் சந்திரசேகர் சிவகாமியிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். "அக்கா ஆர்த்தி எதனாலோ நிறையவே பயந்து போயிருக்கிற மாதிரி இருக்கு. எப்பவுமே ஏதோ யோசனையாவே இருக்கா"

சிவகாமி தன் தம்பி குரலிலும் முகத்திலும் தெரிந்த கவலையைப் பார்த்து புன்னகை செய்தாள்.

"நீ ஏன் சிரிக்கிறாய் அக்கா?"

"எதைப் பத்தியும் கவலைப்படாத ஆள் புதுசா கவலைப்படறதப் பார்த்தா வேடிக்கையாய் இருக்கு. ரத்த பந்தம் ரத்த பந்தம் தான்னு நினைச்சேன்"

சந்திரசேகரும் புன்னகை செய்தார். ஆனால் தொடர்ந்து ஒரு கேள்வியைக் கேட்டார். "அவ ஏன் பயப்படறாள்னு நினைக்கிறாய்க்கா"

சிவகாமி முகத்தில் புன்னகை தேய்ந்து தீவிர சிந்தனை தெரிந்தது. "தெரியலை சந்துரு"

"ஆர்த்திக்கு ஆகாஷை நிறையவே புடிச்சுருக்குன்னு தோணுது. அவனுக்கும் அப்படித்தான்னு தோணுது. அவங்க ரெண்டு பேரும் பாத்துக்கறதைக் கவனிச்சியாக்கா"

"எதையும் ஆரம்ப கட்டத்துலயே முடிவு பண்ணிட முடியாது சந்துரு. கொஞ்ச நாள் போனால் தான் எதையும் நிச்சயமா சொல்ல முடியும்"

தன் சந்தோஷத்தை அதே அளவில் தமக்கை பகிர்ந்து கொள்ளாதது சந்திரசேகருக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் எப்போதும் உணர்ச்சிகளால் அதிகமாகப் பாதிப்படையாதவள் அவள் என்பதால் சந்திரசேகர் அந்த ஏமாற்றத்தை உடனடியாக உதறித் தள்ளினார். சிறிது நேரம் தமக்கையுடன் பேசிக் கொண்டு இருந்து விட்டுக் கிளம்பினார்.

அவர் போய் சில நிமிடங்கள் சிந்தனையில் ஆழ்ந்திருந்த சிவகாமி பிறகு எழுந்து தன் மேசையின் கடைசி டிராயரை சாவி போட்டுத் திறந்து அடியில் இருந்த ஒரு ஃ பைலை எடுத்தாள். பல வருடங்களுக்கு முன் பாண்டிச்சேரி டாக்டர் ஒருவர் ஆர்த்தியின் கனவுகள் பற்றித் தந்திருந்த மூன்று பக்க ரிப்போர்ட்டைப் படிக்க ஆரம்பித்தாள்.

அந்த டாக்டர் கடைசியில் எழுதியிருந்தார். "இந்தக் கனவுகள் கடலில் தெரியும் பனிப்பாறை முகடுகள் போல் ஆழ்மனதில் பதிந்துள்ள ரகசிய நினைவுகளின் வெறும் எட்டிப் பார்த்தல் மட்டும் தான். முழுவதும் தெரிந்து கொள்ள ஹிப்னாடிசம் செய்வது நல்லது. அப்படிச் செய்து அந்த ஆழ்மனதில் பதிந்துள்ள பயத்தையும் காயங்களையும் போக்கினால் ஒழிய ஆர்த்தியை அந்தக் கனவுகளின் சித்திரவதையில் இருந்து காப்பாற்ற முடியாது. ஆனால் அந்தப் பெண்ணின் தாத்தா அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை…"

"ஆர்த்தியின் ஆழ்மனதில் என்னென்ன பதிந்திருக்கக் கூடும் என்று யாருக்குத் தெரியும்?"- சிவகாமி பெருமூச்சு விட்டாள்.

(தொடரும்)

About The Author