மனிதரில் எத்தனை நிறங்கள்! (26)

To be in love is merely to be in a state of perceptual anesthesia–to mistake an ordinary young man for a Greek god or an ordinary young women for a goddess.  – H. L. Mencken

சாப்பிடும் நேரத்தில் டைனிங் ஹாலில் எல்லோரும் ஒன்று கூடினார்கள். அப்படிப்பட்ட அழகான நீண்ட டேபிளையும் நேர்த்தியாக வைக்கப்பட்ட உணவுகளையும் பார்க்கையில் ஆர்த்திக்கு எப்போதோ பார்த்த ஒரு ஹிந்திப் படத்தில் இது போன்ற டைனிங் ஹாலைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. சிவகாமி தன் கணவனுடன் வந்து அமர்ந்ததும் சாப்பிடும் படலம் ஆரம்பமானது.

ஆர்த்திக்கு அருகில் ஆகாஷ் வந்து அமர்ந்ததும் அவளுக்கு ஹிந்தி சினிமாவும், என்ன சாப்பிடுகிறோம் என்பதும் மறந்து போனது. இருவரும் மற்றவர்களை மறந்து ஏதேதோ பேசியபடி சாப்பிட்டார்கள். அவர்களை மற்றவர்கள் பார்ப்பதைக் கூட அவர்கள் கவனிக்கவில்லை.

சந்திரசேகர் மகளை மிகுந்த சந்தோஷத்துடன் பார்த்தார். ஆகாஷ்-ஆர்த்தி ஜோடிப் பொருத்தம் நன்றாக இருப்பதாக அவர் மனம் கணக்குப் போட்டது. சிவகாமி பக்கத்தில் அமர்ந்திருந்த பார்வதியிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தாலும் அவ்வப்போது ஆகாஷ் ஆர்த்தியை கூர்ந்து பார்த்துக் கொண்டுதானிருந்தாள். சங்கரன் நீலகண்டனிடம் பாண்டிச்சேரி லைப்ரரியைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தார்.

எல்லோரிடமிருந்தும் விலகி மூலையில் அமர்ந்திருந்த மூர்த்திக்கு ஆகாஷ் ஆர்த்தி நெருக்கம் வயிறெரிய வைத்தது. அவர்களுக்கு இடையே ஏற்பட்டிருந்த ஈர்ப்பு அவனால் ஜீரணிக்க முடியாததாக இருந்தது. இப்படியே விட்டால் பாட்டியின் திட்டம் எல்லாம் தவிடு பொடியாகி விடும் என்று அவன் கணித்தான். அவனைப் போலவே பார்த்திபனும் ஆர்த்தி ஆகாஷ் நெருக்கத்தை ரசிக்க முடியாமல் நெளிந்தான்.

அமிர்தம் ஆர்த்தியை அவன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சூசகமாகத் தெரிவித்த போது அவள் பார்க்க எப்படி இருப்பாளோ என்று அவன் சந்தேகப்பட்டது உண்மை. ஆனால் அவளை நேரில் பார்த்த பின் அவன் அவளழகில் மயங்கிப் போனான். அத்தனை அழகான பெண்ணுடன் அத்தனை சொத்தும் சேர்ந்து வருவதால் அவளைக் கல்யாணம் செய்து கொள்பவன் அதிர்ஷ்டசாலி என்று நினைத்து அந்த அதிர்ஷ்டசாலி தானாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட ஆரம்பித்தான். ஆனால் ஆர்த்தி மனம் ஆகாஷ் திசையில் இருக்கிறது என்று தெரிந்த போது கசப்பாக இருந்தது.

அந்த வீட்டில் சிவகாமிக்கு இருக்கும் மரியாதையில் பத்தில் ஒரு பாகம் கூட அவன் தாயிற்கு இல்லை என்ற வருத்தம் அவனுக்கு உண்டு. அதே போல் ஆகாஷை நேசித்தது போல் மாமா சந்திரசேகர் தன்னை நேசிப்பதில்லை என்பதிலும் அவனுக்குக் கூடுதல் வருத்தம். இப்போது இந்த விஷயத்திலும் தனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தெரிந்த போது அவனுக்கு சாப்பாடு இறங்கவில்லை. அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அமிர்தம் அவனுக்காக வருத்தப்பட்டாள்.

மற்றவர்கள் சாப்பிட்டு எழ ஆரம்பித்த பிறகு தான் ஆகாஷூம் ஆர்த்தியும் அவசர அவசரமாக சாப்பிட்டார்கள். கைகழுவும் போது ஆகாஷ் ஆர்த்தியைக் கேட்டான். "உன் ரூம் சௌகரியம் எல்லாம் எப்படியிருக்கு?’

"நல்லாயிருக்கு. உங்க ரூம் எங்க இருக்கு?"

"உன் ரூமுக்கு அடுத்தது என் ரூம் தான்"

அந்த சின்னத் தகவல் அவளை மிகவும் சந்தோஷப்படுத்தியது. அவளது சந்தோஷத்தைப் பார்க்கையில் ஆகாஷிற்கு அவளை அப்படியே அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

"இத்தனை பெரிய வீட்டில் யார் யார் எங்கே இருக்கிறாங்கன்னு தெரியலை" ஆர்த்தி கையைத் துடைத்துக் கொண்டே சொன்னாள்.

"மாடியில் உன் ரூமுக்கு அடுத்தது என் ரூம். எனக்கு அடுத்து ரெண்டு ரூம் காலியா இருக்கு. அதுக்கு அடுத்தது மூர்த்தி ரூம். அடுத்தது அவங்க பாட்டி ரூம். அதுக்கு அடுத்த ரூம் காலியாய் இருக்கு. அதற்கு அடுத்தது உன் அப்பா ரூம். இதில் உன் ரூமும் உன் அப்பா ரூமும் பெரிய ரூம்கள். கீழே எங்கப்பா அம்மா ரூம் தான் பெருசு. அமிர்தம் அத்தை, பார்த்திபன், உங்க தாத்தா பாட்டி இருக்கிற ரூம்கள் தவிர எக்ஸ்ட்ராவா இன்னும் ரெண்டு ரூம் காலியா இருக்கு."

"நான் இத்தனை பெரிய வீட்டை நேரில் பார்க்கிறது இப்ப தான்"

"நம்ம தாத்தா கட்டினது இது. எல்லாம் பார்த்துப் பார்த்துக் கட்டியிருக்கார். அவருக்கு நல்ல டேஸ்ட் இருந்துருக்கு"

ஆகாஷ் சொன்னதைக் கேட்டுக் கொண்டே வந்த சந்திரசேகர் சொன்னார். "அந்த டேஸ்ட் எல்லாம் சரிதான். ஆளு மட்டும் டெர்ரர். நானும் சின்னக்காவும் அவர் முன்னால் வந்து நிக்கக் கூட பயப்படுவோம். பெரியக்கா ஒருத்தி தான் அவரை தைரியமா ஃபேஸ் செய்வா. என்ன சின்னக்கா நீ சொல்றே?"

அவருக்குப் பின்னால் வந்து நின்ற அமிர்தம் தலையசைத்தாள். "அவரைப் பொருத்த வரை அக்கா ஒருத்தி தான் செல்லம். நாங்க ஒரு கணக்கே இல்லை"

சந்திரசேகர் சொன்னார். "என்னைப் பிரசவிச்சவுடனேயே எங்கம்மா இறந்துட்டாங்க. ஒரு வேலை அவங்க இருந்திருந்தா எல்லாமே வேற மாதிரி இருந்துக்குமோன்னு நான் நினைக்கிறதுண்டு"

ஒவ்வொருவர் வாழ்விலும் தாயின் ஸ்தானம் எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது என்று ஆர்த்தி நினைத்துக் கொண்டாள். அவளுடைய அம்மாவும் இருந்திருந்தால்…..? அவளுடைய முகத்தில் திடீர் என்று சோகம் படர்ந்ததைப் பார்த்த சந்திரசேகருக்கு அதற்கான காரணம் விளங்கவில்லை. பிறகு ஆகாஷ் ஏதோ ஆர்த்தியிடம் சொல்ல அவள் முகம் பழையபடி மலர ஆரம்பித்தது. சந்திரசேகர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். அவர்கள் இருவரும் ஜோடியாக மாடிப்படி ஏறுவதை ரசித்துப் பார்த்தபடி சிறிது நேரம் நின்றார். அமிர்தம் தம்பியின் முகத்தையும், தள்ளி நின்று பார்த்துக் கொண்டு இருந்த மகன் முகத்தையும் பார்த்துத் தானும் பெருமூச்சு விட்டாள்.

ஆர்த்தியுடன் தானும் அவள் அறைக்குள் நுழைந்த ஆகாஷ் அந்த அறையைப் பார்வையிட்டான். "இது இத்தனை காலமாய் பூட்டி இருந்தது. உனக்காக தான் இதைத் திறந்து சுத்தம் செஞ்சிருக்காங்க. ரூம் நல்லா இருக்கு. ஆனா இன்டோர் ப்ளாண்ட்ஸ் இருந்தா இன்னும் நல்லா இருக்கும். ஒரு நிமிஷம் இரு…"

அவன் தனதறைக்குப் போய் சில செடிகளை எடுத்துக் கொண்டு வந்தான். அவனாகவே அதை இடம் பார்த்து வைத்தான். "இப்ப எப்படி இருக்கு?"

உண்மையாகவே அந்தச் செடிகள் அந்த அறையை இன்னும் அழகுபடுத்தின. சின்னச் சின்ன மாற்றங்கள் எப்படி பெரிய அளவுக்கு அழகு சேர்த்து விடுகின்றன என்று வியந்தபடியே ஆர்த்தி சொன்னாள். "தேங்ஸ்"

"இன்னும் நிறைய செடிகள் தோட்டத்தில் இருக்கு. அதுல சிலதைக் கொண்டு வந்து வைக்கலாம்… இந்த வீட்டுல எல்லா ரூம்ல இருந்தும் ஜன்னல் வழியா தோட்டம் பார்க்கலாம். பார் நல்ல வ்யூ" என்று சொல்லி ஆகாஷ் ஜன்னல் கதவைத் திறந்தான். குளிர்காற்று சில் என்று உள்ளே வந்தது.

தோட்டத்தில் ஒரு மின்கம்பத்திற்குக் கீழே ஒரு நாற்காலியில் சால்வையைப் போர்த்திக் கொண்டு சிவகாமியும் சங்கரனும் உட்கார்ந்து இருந்தார்கள். வயலின் இசை மெலிதாகக் கேட்டது. தன் பெற்றோரைப் பார்த்த ஆகாஷ் முகம் பெருமிதத்தில் மலர்ந்தது.

"ராத்திரி தூங்கறதுக்கு முன்னால் ஒரு மணி நேரம் இப்படி ம்யூசிக் கேட்டுகிட்டு சேர்ந்து உட்கார்றதும், அதிகாலை ஒரு மணி நேரம் சேர்ந்து வாக்கிங் போறதும் இவங்களோட ரொட்டீன். ஊரில் இருக்கிற நாட்கள்ல இந்த ரொட்டீன் மாறி நான் பார்த்ததே இல்லை."

தோட்டத்தில் இருவரும் அந்த இசை மழையிலும், இரவுப் பனியிலும் நனைந்தபடி உட்கார்ந்திருந்த விதம் உண்மையாகவே ஒரு வித்தியாசமான காட்சியாக இருந்தது. சிவகாமி கணவனுடன் அமர்ந்திருந்த போது வேறு விதமாகவே மாறி இருப்பது போல் ஆர்த்திக்குத் தோன்றியது. ஆகாஷ் அவர்களைப் பெருமிதத்தோடு பார்த்த விதம் ஒரு விதத்தில் அவள் வயிற்றைக் கலக்கியது. இவனுடைய தாயைப் பற்றி தங்களுக்குத் தோன்றி இருக்கும் சந்தேகம் இவனுக்குத் தெரிய வந்தால் இவன் தன்னிடம் நடந்து கொள்ளும் விதம் எப்படி இருக்கும்? நினைக்கவே பயமாக இருந்தது.

அவன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போய் விட்டான். அன்றிரவு நிறைய நேரம் ஆர்த்திக்குத் தூக்கம் வரவில்லை. பின் தூக்கம் வந்த போது அந்தப் பழைய கனவு மீண்டும் அவளுக்கு வந்தது.

வெளியே இடி மின்னலுடன் பேய் மழை பெய்து கொண்டு இருக்கிறது….அழைப்பு மணியை யாரோ விடாமல் அழுத்திக் கொண்டே இருந்தார்கள்…அந்த மழை சத்தத்துடன் சேர்ந்து கேட்கும் போது அந்த அழைப்பு மணியின் தொடர்ச்சியான சத்தம் நாராசமாக கேட்கிறது….ஒரு பெண் கலவரத்துடன் யாருடனோ போன் பேச முயன்று கொண்டிருக்கிறாள்…..

(தொடரும்)

About The Author