மனிதரில் எத்தனை நிறங்கள்!-67

"Probable impossibilities are to be preferred to improbable possibilities."
~ Aristotle ~

ஆர்த்தியும் ஆகாஷும் வீடு வந்து சேர்ந்த போது இரவு பத்தரை மணி ஆகியிருந்தது. சிவகாமி தன் வழக்கமான நேரத்தில் படுக்கப் போயிருந்தாள். பத்து மணிக்கு அவள் தூங்கப் போகாமல் இருக்க வேண்டும் என்றால் அசாதாரணமான நிகழ்வுகள் ஏதாவது நடக்க வேண்டும். சந்திரசேகருக்குத் தான் இருப்புக் கொள்ளவில்லை. மகளைப் பார்த்துப் பேசாமல் கண்களை மூட முடியாது என்று அவருக்குத் தோன்றியது. பவானியும் ஏதோ ஒரு ஆங்கில நாவலைப் படிக்க முயன்று கொண்டிருந்தாள். மனம் படிப்பதில் இல்லை. ஆர்த்தியிடம் டாக்டர் என்ன சொன்னார் என்றறியும் ஆவலில் அவளும் காத்திருந்தாள்.

கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு சந்திரசேகர் வேகமாகப் படியிறங்கி வந்தார். உள்ளே நுழைந்த மகள் களைத்துப் போய் இருந்ததை அவர் கவனித்தார். ஆகாஷின் முகம் கடுகடுவென்று இருந்தது. யாரிடமும் எதுவும் பேசாமல் தனதறைக்கு ஆகாஷ் சென்றதையும் கவனித்தவர் ‘என்ன இவன் கோபம் இன்னும் குறையவில்லை. அப்படியென்ன இருவருக்கும் சண்டை?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டார். தனக்காகக் காத்து நிற்கும் தந்தையைப் பார்த்த போது ஆர்த்திக்கு சந்தோஷமாக இருந்தது.

"என்னப்பா தூங்கலையா?"

"இல்லை உன்னைப் பார்த்துட்டு தூங்கலாம்னு இருந்தேன். டாக்டர் என்ன சொன்னார்?"

நீலகண்டன், பார்வதி, அமிர்தம், பவானி, பார்த்திபன், மூர்த்தி என ஒவ்வொருவராக ஹாலில் அதற்குள் வந்திருந்தார்கள். அவர்களும் அவள் பதிலைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது அவளுக்குத் தெரிந்தது.

"டாக்டர் நான் சொன்னதை எல்லாம் கேட்டுகிட்டார். அடுத்த புதன்கிழமை தான் ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கப் போகிறார். டாக்டர் ரொம்ப நல்லவராய்த் தெரியறார்"

"இந்த ஃபீல்டில் அவன் பெஸ்ட் ஆர்த்தி" என்றார் சந்திரசேகர்.

அமிர்தம் சொன்னாள். "நம்ம ஆகாஷோட எத்தனையோ நாள் இங்க வந்து தங்கி இருக்கான். நல்லா பேசுவான். யாருக்குமே அவனைப் பிடிக்காம போகாது."

சுற்றிலும் நின்றவர்களைப் பார்த்த சந்திரசேகர் விட்டால் இவர்கள் ஒவ்வொருவராகப் பேசி மகள் தூக்கத்தைக் கெடுத்து விடுவார்கள் என்று எண்ணி சொன்னார். "சரி ஆர்த்தி நீ போய்த் தூங்கு. நேரமாயிடுச்சு. ‘லேட்டாகற மாதிரி இருந்தா நம்ம கோயமுத்தூர் பங்களாவிலேயே தங்கிட்டு நாளைக்குக் காலைல வாங்கன்னு ஆகாஷ் கிட்ட சொன்னேன். அவன் கேட்கலை….’"

"ஆனா நாம அன்னைக்குப் போறப்ப கூட அங்கே தங்கலையேப்பா"

"அப்ப அங்கே பெயிண்டிங் வேலை நடந்துகிட்டு இருந்தது. அதனால தான் அன்னைக்கு வந்துட்டோம். இப்ப அதெல்லாம் முடிஞ்சு வீடு க்ளீன் ஆயுடுச்சு"

உண்மையில் ஆகாஷுக்கு ஆர்த்தியுடன் தனிமையில் இருக்க விருப்பமிருக்கவில்லை. அதனால் தான் சந்திரசேகர் சொன்னதை அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஆர்த்திக்கு அவன் மறுத்த காரணம் நன்றாகத் தெரிந்ததால் முகம் வாடியது.

"சரிம்மா…நீ போய்த் தூங்கு. நாளைக்குப் பேசிக்கலாம்"

ஆர்த்தி தன் அறைக்குப் போக நீலகண்டன் பார்வதி மட்டும் பேத்தியைப் பின் தொடர்ந்தார்கள். சந்திரசேகருக்கு அவர்களைப் பார்த்து எரிச்சல் வந்தது. ‘இதை விட இவர்களுக்கு எப்படி சுட்டிக் காட்டுவது. இன்னைக்கு ராத்திரி அவளை ரெஸ்ட் எடுக்க விடமாட்டார்கள் போல் இருக்கு’ என்று மனதினுள் எரிந்து விழுந்தார். தம்பியின் முகபாவனையைக் கண்ட அமிர்தம் மகனை பார்வையால் அனுப்பி விட்டுத் தானும் தூங்கக் கிளம்பினாள். சந்திரசேகரும் பவானியும் தங்கள் அறைக்குச் செல்ல மூர்த்தியும் கூட இடத்தைக் காலி செய்தான்.

தனதறைக்குச் சென்றவன் சந்திரசேகர், ஆகாஷ் அறைக் கதவுகள் சாத்தப்படும் வரை காத்திருந்து விட்டு ஒட்டுக் கேட்க ஆரத்தி அறைக்கு விரைந்தான்.

ஆர்த்தி அப்போது தான் ஆரம்பித்திருந்தாள். "….பொறுமையா கேட்டுக்கறார். பாட்டி. நான் எல்லாத்தையும் அவர் கிட்ட மனசு விட்டு சொன்னேன். என்னை யாரோ வெளியே கவனிச்சுட்டு இருக்கற மாதிரி தோணுதுங்கறதைக் கூட அவர் கிட்டே சொல்லிட்டேன்….."

சொன்ன பிறகு தான் இந்த விஷயத்தை இவர்களிடம் கூட இது வரை தெரிவிக்கவில்லை என்ற உண்மை அவளுக்கு உறைத்தது. நீலகண்டனும், பார்வதியும் அவளைத் திகைப்புடன் பார்த்தார்கள்.

"என்ன ஆர்த்தி சொல்றே?" பார்வதியின் குரல் நடுங்கியது.

ஆர்த்தி தன்னையே நொந்து கொண்டாள். இனி மறைப்பதில் பயனில்லை என்று தோன்ற எல்லாவற்றையும் சொன்னாள். ஆரம்பத்தில் இருந்து தன்னை யாரோ கண்காணிப்பது போல் தோன்றி வருவதையும், சமீப காலத்தில் கூட பாண்டிச்சேரி ஆஸ்பத்திரி கேண்டீனில், கோயமுத்தூர் ஜவுளிக்கடைக்கு வெளியில், தற்போது டாக்டர் ப்ரசன்னாவின் க்ளினிக்கிற்கு வெளியில் தனக்குத் தோன்றியதை விவரித்தாள்.

கேட்டு விட்டு பார்வதி தனக்குத் தானே சத்தமாகச் சொல்லிக் கொண்டாள். "அப்படின்னா பாண்டிச்சேரி ஆஸ்பத்திரில நான் பார்த்ததும் தற்செயலா நடந்ததில்லை"

நீலகண்டன் மனைவியைக் கேட்டார். "நீ என்ன பார்த்தாய்?"

"ஆஸ்பத்திரில இவள் கேண்டீனில் பார்த்ததா சொன்னதுக்கு முந்தின நாள் நாம மூணு பேரும் ஆஸ்பத்திரி ரூமில் தூங்கிக்கிட்டு இருந்தோம். நான் ராத்திரில எழுந்து பாத்ரூம் போயிட்டு வந்த போது உங்க கட்டிலுக்கும் ஆர்த்தி கட்டிலுக்கும் நடுவுல யாரோ ஒருத்தி நின்னுகிட்டு இருந்தா. என்னைப் பார்த்தவுடனே ஒண்ணும் சொல்லாம வேகமா வெளிய போயிட்டா. நான் நினைச்சேன் அவள் ரூம் மாறி வந்துட்டான்னு. யாரோன்னு நினைச்சு உங்களைப் பார்த்துட்டு நின்னதா நினைச்சேன். இப்ப யோசிச்சா அவள் ஆர்த்தியைப் பார்த்துட்டு கூட நின்னுருக்கலாம்னு தோணுது. அப்ப கூட ரூம் தாழ்ப்பாள் எப்படிப் போட மறந்துட்டோம்னு புரியலை. இப்ப யோசிச்சா எல்லாமே வேற அர்த்தத்துல தெரியுது…."

"எல்லாம் அந்த சிவகாமி வேலை." – நீலகண்டன் கொதித்தார்.

"ஆண்டவன் குடுத்த மூளையைக் கொஞ்சம் உபயோகிச்சுப் பாருங்க மனுஷா. பாண்டிச்சேரில வேணும்னா அவ ஆர்த்தியைக் கண்காணிக்க ஏற்பாடு செஞ்சாள்னு சொன்னா நம்பலாம். இங்க வந்தப்புறமும் அவள் ஆர்த்தியைப் பின் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு ஏன் செய்யணும்? இவள் கோயமுத்தூர்ல ஜவுளி எடுக்கப் போனது அவள் தம்பியோட. இப்ப டாக்டர் கிட்ட போனது அவள் மகனோட. கூட அவளோட ஆளையே அனுப்பிச்சுட்டு இன்னொரு ஆளை தூரத்துல இருந்து பார்க்க அனுப்ப அவள் என்ன லூசா?"

நீலகண்டனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மூர்த்திக்கு மீதியைக் கேட்கும் பொறுமை இருக்கவில்லை. உடனடியாக பஞ்சவர்ணத்திடம் ஓடினான்.

பேரன் சொன்னதைக் கேட்ட பஞ்சவர்ணமும் திகைத்துப் போனாள். வரிக்கு வரி அப்படியே ஆர்த்தி சொன்னதையும் பார்வதி சொன்னதையும் பேரனைத் திரும்ப சொல்ல வைத்தாள். எழுந்து தனதறையில் நடக்க ஆரம்பித்தவள் நிறைய நேரம் யோசித்தாள். கடைசியில் பேரனிடம் சொன்னாள்.

"அந்தக் கிழவி அகங்காரியானாலும் சொன்னதுல தப்பில்லை மூர்த்தி. கண்டிப்பா ஆர்த்தியைப் பின் தொடர்றது சிவகாமியோட ஆளாயிருக்காது. ஒண்ணு ஆர்த்திக்குத் தோணுனது எல்லாம் கற்பனையா இருக்கணும். கிழவி ஆஸ்பத்திரில பார்த்தது அவள் முதல்ல நினைச்ச மாதிரி ரூம் மாறி வந்த ஆளா கூட இருக்கலாம். ஆர்த்திக்குத் தோணுனது கற்பனை இல்லைன்னா களத்துல சிவகாமியையும், நம்மளையும் தவிர வேற யாரோவும் இருக்காங்க மூர்த்தி…"

(தொடரும்)

About The Author