மனிதரில் எத்தனை நிறங்கள்! (64)

"Life is like writing with a pen. You can cross out your past but you cannot erase it." – Unknown

ப்ரசன்னா ஆர்த்தி சொன்னதை முழு கவனத்துடன் கேட்டான். அவள் சொன்ன விஷயங்களுக்கு இணையாக அவள் முகபாவனைகள், குரலின் ஏற்ற இறக்கங்கள் முக்கியத்துவம் வாய்ந்தன என்பதால் அவன் எதையும் கவனிக்கத் தவறவில்லை. அந்தக் கனவில் வரும் காட்சிகளைச் சொல்லி முடித்த போது அமைதியாகக் கேட்டான்.

"ஆர்த்தி நீங்க சொன்னதெல்லாம் ஒரே மாதிரி சீக்வென்ஸ்ல வருதா, இல்லை மாறி மாறி வருதா?"

"ஒரே மாதிரி வர்றதில்லை. கொஞ்சம் முன்ன பின்ன வரும்"

"உங்க கனவுல வர்ற ரெண்டு பேர் முகமும் தெளிவாகத் தெரியுமா?"

"இல்லை. ஏதோ மங்கலாய், தெளிவில்லாமல் தான் தெரியும்"

"ஆனா அந்த ரெண்டு பேரும் யாருன்னு உங்களால யூகிக்க முடியுதா?"

ஆர்த்தி தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள். அவன் வேறு விதமாகக் கேட்டான். "….இல்லை அந்த ரெண்டு பேரும் கற்பனை மனிதர்கள்னு நினைக்கிறீங்களா?"

ஆர்த்தி மெல்ல சொன்னாள். "இல்லை அதில் ஒருத்தி எங்கம்மாவாய் இருக்கலாம்னு நினைக்கிறேன்"

"இன்னொருத்தி?"

"எங்கம்மாவைக் கொலை செஞ்சவளாய் இருக்கும்னு தோணுது"

"அந்த இடம் எது என்று நினைக்கிறீர்கள் ஆர்த்தி"

"ஊட்டியில் இருக்கும் எங்கள் வீடாகத் தான் இருக்கணும்"

ப்ரசன்னா சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். சிறு வயதில் இருந்தே அவன் ஆகாஷ் வீட்டுக்குப் பல முறை போய் இருக்கிறான். அப்போதெல்லாம் சந்திரசேகருக்கு ஒரு மகள் இருப்பதாகக் கூட அவன் யார் சொல்லியும் கேள்விப்பட்டதில்லை. அப்படி இருக்கையில் திடீர் என்று சென்ற வாரம் ஆகாஷ் போன் செய்து தன் மாமன் மகளுக்காக அப்பாயின்மெண்ட் வாங்கிய போது ப்ரசன்னா அவள் ஏதோ தூரத்து உறவு மாமன் மகளாக இருக்கலாம் என்று தான் நினைத்தான். இப்போது இவள் சொல்வதைப் பார்த்தால்….. உடனடியாக ப்ரசன்னா கேட்டான். "நீங்க ஆகாஷுக்கு எப்படி கசின்?"
"நான் சந்திரசேகர் மகள்"

"எனக்கு எல்லாத்தையும் ஆரம்பத்தில் இருந்து சொன்னால் நல்லாயிருக்கும் ஆர்த்தி"

ஆர்த்திக்கு எதை எப்படி எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தீர்மானிக்க முடியவில்லை.

அதைப் புரிந்து கொண்ட ப்ரசன்னா சொன்னான். "இத்தனை நாள் நீங்க எங்கே இருந்தீங்க? ஏன் இங்கே இருக்கலைங்கிறதுல இருந்து ஆரம்பியுங்களேன்"

அவன் வெறும் டாக்டர் மட்டுமல்ல, ஆகாஷின் நெருங்கிய நண்பனும் கூட என்பதால் ஆர்த்திக்கு சிவகாமி சம்பந்தமான விஷயங்களை எப்படி சொல்வது என்ற தயக்கம் எழுந்தது.

ப்ரசன்னா சொன்னான். "ஆர்த்தி, நீங்க சொல்லப் போகிற எதுவும் என் வாயில் இருந்து இன்னொருத்தர் காதுக்குப் போகாது, அதை நீங்க நம்பலாம். ஆகாஷ் கிட்ட கூட நான் நீங்க சொல்ற எதையும் சொல்ல மாட்டேன். ப்ரொஃபஷனல் எதிக்ஸ் விஷயத்துல நான் இது வரைக்கும் காம்ப்ரமைஸ் செய்ததில்லை. இனியும் செய்யப் போறதில்லை…"

அவன் அவள் மனதைப் படிக்கிறானா என்ற சந்தேகம் அவளுக்கு ஒரு கணம் வந்தது. ரகசியமாய் இருப்பதில் அவன் உறுதியாகச் சொன்ன விதம் அவளை நம்பத் தூண்டியது. மேலும் அவள் இப்போது சொல்லாமல் விட்ட விஷயங்கள் கூட ஒருவேளை அவன் ஹிப்னாடிசம் செய்தால் வெளியே வந்து விடக்கூடும்.

தயக்கத்தை உதறித் தள்ளி விட்டு அவள் சொல்ல ஆரம்பித்தாள். பாண்டிச்சேரியில் தாத்தா வீட்டில் வளர்ந்த தனக்கு தன் தந்தை உயிரோடு இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது என்றும் ஒரு நாள் பாட்டி சொல்லித் தான் தெரிய வந்தது என்றும் சொன்னவள் பார்வதி சொன்னது, நீலகண்டன் கோபித்தது, நீலகண்டனுக்கு மாரடைப்பு வந்தது என்று வரிசையாக நடந்ததைச் சொன்னாள். ஆனால் பொதுவாக ஆனந்தியின் மரணத்தில் அவர்களுக்கு சந்தேகம், அதனால் தான் தன்னை எடுத்துக் கொண்டு தலைமறைவானார்கள் என்று சொன்னாளே தவிர சிவகாமி மேல் தான் தாத்தாவிற்கு சந்தேகம் என்று குறிப்பிட்டு அவள் சொல்லத் துணியவில்லை. ஆனந்தியின் முகத்தைக் கூட பார்க்க விடாததால் அவர்களுக்கு சந்தேகம் என்று மட்டும் சொன்னாள். அதோடு சிறு வயதில் இருந்தே தன்னை யாரோ கண்காணிப்பது போன்ற உணர்வு அடிக்கடி தனக்கு வருகிறது என்பதையும் இப்போது கூட வெளியில் இருந்த காரில் இருந்து தன்னை யாரோ கவனிப்பது போல் தோன்றியது என்பதையும் சொன்னாள்.

ப்ரசன்னா கேட்கும் கலையில் வல்லவனாக இருந்தான். ஒரு முறை கூட அவன் இடைமறிக்கவில்லை. கவனத்தை வேறிடத்திற்கு சிதற விடவில்லை. அவள் கண்களில் இருந்து தன் கண்களைத் திருப்பவில்லை. அவ்வப்போது கருத்து தெரிவிக்கவில்லை. அவள் சொல்லாமல் விட்டது நிறைய இருக்கிறது என்பதை அவனால் சுலபமாக ஊகிக்க முடிந்தது. ஆனால் அவன் எதையும் கட்டாயப்படுத்தி அவள் வாயிலிருந்து வரவழைக்க விரும்பவில்லை. அதே சமயம் அவள் சொன்னதைப் பற்றி என்ன நினைத்தான் என்பதையும் அவன் வெளிக்காட்டவில்லை.

அவள் சொல்லி முடித்த பிறகு ப்ரசன்னா கேட்டான். "வெளியே உங்களைக் கண்காணித்தது போலத் தோணியது எந்த மாதிரி காரில் இருந்துன்னு சொல்ல முடியுமா ஆர்த்தி?"

ஆர்த்தி சற்று யோசித்து விட்டு சொன்னாள். "வெள்ளை நிற டாட்டா இண்டிகா"

ப்ரசன்னா இண்டர்காமில் தன் செகரட்டரியிடம் பேசினான். "நளினி, எனக்கு ஒரு சின்ன உதவி செய்றீங்களா? வெளியே ஒரு வயிட் டாட்டா இண்டிகா நம்ம க்ளினிக் முன்னாடி இருக்கான்னு பார்த்து சொல்றீங்களா?. ஓகே. ஐல் வெயிட்….. என்ன இல்லையா. ஓகே நளினி தேங்க் யூ"

பின் ஆர்த்தியிடம் திரும்பி சொன்னான். "இனிமேல் எப்ப சந்தேகம் வந்தாலும் நீங்க தயங்காம போய் பார்த்துடுங்க. ஆள் உள்ளே இருந்தா கேட்டுடுங்க. தயக்கமே வேண்டாம். அடுத்தவங்க என்ன நினைப்பாங்களோன்னு பயப்படாதீங்க. உங்க சந்தேகம் தப்பாயிருந்தா "சாரி" கேட்டுடுங்க. சரியா இருந்தா ஏன் என்னைப் பார்க்கறேன்னு கேட்டுடுங்க. எல்லாத்தையும் முடிஞ்ச அளவு அப்பப்பவே சால்வ் செஞ்சுக்கறது நல்லது ஆர்த்தி."

ஆர்த்தி தலையசைத்தாள்.

"எதையெல்லாம் சால்வ் செய்யலையோ, அதெல்லாம் உங்களை தொந்தரவு செய்துகிட்டே இருக்கும். அது மட்டுமல்ல உங்களால் ஏத்துக்க முடியாத நிஜங்கள், ஜீரணிக்க முடியாத விஷயங்கள் கூட அப்படித்தான். அதெல்லாம் உங்க ஆழ்மனசுல தங்கிக்கும். எதிர்பாராத சமயங்கள்ல, எதிர்பாராத விஷயங்கள்ல, எதிர்பாராத விதங்கள்ல எல்லாம் வந்து பாதிக்கும். இதனால தான் இப்படி உங்களுக்கு ஆகுதுன்னு கூட உங்களுக்குப் புரியாது. உங்க இந்தக் கனவுகள் கூட அப்படித்தான்னு சொல்லலாம். மூணு வயசுக் குழந்தையா பார்த்த அந்த நிகழ்ச்சி உங்களோட அந்தப் பிஞ்சு வயசுல ஜீரணிக்க முடியாத ஒன்னாய் இருந்திருக்கலாம். அந்த நினைவு மனசுக்கு ரொம்பவும் வலி தர்றதாய் இருந்திருக்கலாம். அந்த நினைவோட இருக்கறது தாங்க முடியாததால அதை ஆழ்மனசுல புதைச்சுட்டு வாழ உங்கள் மேல்தள மனசு முடிவெடுத்து இருக்கலாம். ஆனா நான் முன்னமே சொன்ன மாதிரி இதையெல்லாம் நிரந்தரமாய் அப்படி புதைச்சுட முடியாது. அது ஏதாவது ஒரு வழியில தலை தூக்கிகிட்டே இருக்கும். அப்படி தலை தூக்கறது தான் அந்தக் கனவுகளாய் இருக்கலாம்……"

(தொடரும்)

About The Author