முட்டை (2)

சினிமாவுக்குப் பெண்கள் போவது இஸ்லாத்தில் விரும்பத்தகுந்தது அல்ல என்பதால், பாட்டி, இஸ்லாமியக் கொள்கைகளுக்குக் குந்தகமில்லாமல், பர்தா போர்த்திக் கொண்டு தான் த்யேட்டருக்குக் கிளம்புவார்கள்.

அதுவும் போக, சினிமாவுக்குப் போகிற பாவச் செயலை ஈடு செய்ய, ரெண்டு மூணு மாசத்துக்கொரு தடவை பாட்டி தர்காவுக்குப் போய் வருவார்கள்.

பாளையங்கோட்டையின் தெற்கு எல்லையில், சரோஜினி பார்க்கை ஒட்டியிருக்கிற தர்கா. பாட்டி தலைமையில் நாங்களும் ஜாலியாய் தர்காவுக்குப் போய் வருவோம்.

தர்காவில் ப்ரார்த்தனை செய்வதைக் காட்டிலும், சரோஜினி பார்க்கில் சறுக்கு, சீசா, ஊஞ்சல் விளையாடுவது எங்களுக்கு முக்கியம்.

பார்க்கில் ஒரே கூச்சல், குழப்பம், ஆர்ப்பாட்டம்தான். எங்களுடைய இந்த ஆர்ப்பாட்டமெல்லாம் வீட்டுக்குள்ளே செல்லுபடியாகாது.

வீட்டில் வாப்பா என்கிற கறார் கண்டிப்பான குடும்பத்தலைவர் இருக்கிறார். ஒரு சலசலப்பு எழுந்தாலும் திட்டு விழும் அல்லது குட்டு விழும். அல்லது ரெண்டும் விழும். வாப்பாவுக்கு எதிரே பாட்டி வரமாட்டார்கள். கடுமையான கோஷா.

மருமகனுக்கு மாமியார் முகங்காட்டாத இஸ்லாமியப் பண்பாடு பாட்டியின் தலைமுறையோடு காலாவதியாகிப் போனது.

கணக்குப் பாடத்தில் நான் சர்வசாதாரணமாய்க் கோழி முட்டை, வாத்து முட்டை எல்லாம் வாங்கிக் கொண்டு வருவேன். அன்றைக்கெல்லாம் விசேஷமான திட்டுகளும் குட்டுகளும் கிடைக்கும். திட்டுகள் மற்றும் குட்டுகள் என்னுடைய சகோதரிகளுக்கும் அவ்வப்போது கிடைக்கும்.

இந்த விஷயத்தில் வாப்பா ஒரு சமூக நீதிக் காவலர். பாரபட்சம் பார்க்காதவர். பெண்களுக்கு முப்பத்தி மூணு சதவீதம் என்பது கிடையாது. மாறாக, ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டி.

ஆணும் பெண்ணும் சரிசமம் என்கிற ஆணித்தரமான கொள்கை வாப்பாவுடையது. ஆண் வர்க்கத்துக்கும் பெண் வர்க்கத்துக்கும் குட்டுகள் சரிசமமாய்ப் பகிர்ந்து வாப்பாவால் வழங்கப்பட்டன. ஆணுக்கு நாலு குட்டு என்றால் பெண்ணுக்கும் நாலு குட்டு. ஆனால் விசேஷம் என்னவென்றால், பெண்களுக்கான நாலு குட்டுகளையும் நாலு சகோதரிகளும் பகிர்ந்து கொள்ள, ஆண்களுக்குப் பாத்தியப்பட்ட நாலையும் ஒரே பையனான நான் மட்டுமே தன்னந்தனியாய்த் தலையில் சுமக்க வேண்டியிருந்தது.

ஸ்கூலில் முட்டை வாங்கிக் கொண்டு வரும் நாட்களில், திட்டு குட்டு தவிர இன்னுமொரு தாங்க முடியாத வேதனையுமுண்டு. ஸ்கூலில் முட்டை வாங்கினால், வீட்டில் எனக்கு முட்டை கட்.

வட்டமான டைனிங் டேபிளில், வாப்பாவோடு குழந்தைகள் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, எல்லாத் தட்டுக்களிலும் முட்டைகள் வந்து விழும், என்னுடையதைத் தவிர.

முட்டைத் தட்டுகளை நான் ஏக்கத்தோடு பார்ப்பேன்.

என் மேலே இரக்கங் கொள்ளக் கூடாத கண்டிப்புக்குக் கட்டுப்பட்டு சகோதரிகளெல்லாம் என்னைப் பரிதாபமாய்ப் பார்க்கிற சூழ்நிலையில், கடைசியில் மனமிரங்கி வாப்பா தன்னுடைய முட்டையிலிருந்து கொஞ்சம் பிய்த்தெடுத்து என்னுடைய தட்டில் போடுவார்.

வாப்பாவுக்குக் கூட புல்ஸ் ஐ தான் ரொம்பப் பிடிக்கும்.

ஆனால், ஆங்கிலம் பேசுகிற அத்தை மகள்கள் யாரும் திருவனந்தபுரத்தில் அவருக்குக் கிடையாது என்பதால், தனக்குப் பிரியமான முட்டைப் பதார்த்தத்தின் பெயர் புல்ஸ் ஐ என்று அவருக்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போச்சு. "மஞ்சள் கரு நடுவுல பொடச்சிட்டு நிக்குமே அந்த மாதிரி வேணும்" என்று பாமரத்தனமாய்ச் சொல்லுவார்.

"வாப்பா, அதுக்குப் பேர் புல்ஸ் ஐ" என்று சொல்லி அவருடைய அறியாமையை அகற்றி என்னுடைய அறிவாற்றலை நிலை நாட்ட எனக்கு ஆவல் பிறக்கும்.

அனாவசியமாய் வாயைத் திறந்து இன்னுமொரு அடிஷனல் குட்டைப் பெற்றுக் கொள்வானேன் என்று வாய் மூடி மௌனியாய் இருந்து கொள்வேன்.

***

மெட்ராஸ் ஸ்டேட் எலக்ட்ரிஸிட்டி போர்டில், பாளையங்கோட்டையில், அஸிஸ்ட்டன்ட் இஞ்ஜினியராய்க் கொடி கட்டிப் பறந்தவர் வாப்பா.

சீஃப் இஞ்ஜினியர்களே இந்தக் காலத்தில் தெருவுக்கு ரெண்டு பேர் இருக்கிறார்கள், தெருவுக்கு ரெண்டு இஞ்ஜினியரிங் காலேஜ்கள் இருப்பது போல.

ஆனால், வாப்பா காலத்தில் பாளையங்கோட்டை ஊரிலேயே அவர் ஒருவர் தான் அஸிஸ்ட்டன்ட் இஞ்ஜினியர்.

வாப்பாவுடைய உபயோகத்துக்கென்று இடது பக்கம் ஸ்ட்டீரிங் வைத்த அட்டகாசமான வில்லீஸ் ஜீப் ஒன்று இருந்தது.
பக்கத்துக் கிராமங்களுக்குக் காம்ப் போகிறபோது, லீவ் நாட்களில் வாப்பா குழந்தைகளையும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போவார்.

தாதங்குளம் போன்ற சிற்றூர்களில் ஆறு பைசா முட்டை அஞ்சு பைசாவுக்குக் கிடைக்கும். அந்த அஞ்சு பைசா முட்டை விற்கிற வீடுகளை விசாரித்துக் கொண்டு புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஜீப் நகரும். சட்டையணியாத கிராமத்துச் சிறுவர்கள் ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும், ஜீப்புக்குப் பாதுகாப்பாய் ஓடி வருவார்கள்.

அஞ்சு பைசா முட்டை கணிசமாய்க் கொள்முதல் செய்யப்பட்ட காலக்கட்டங்களில், வீட்டில் முட்டைகள் ரொம்ப தாராளமாய்ப் புழங்கும்.

ஏஇ யாயிருந்த வாப்பா, டிஇ யாகி எஸ்இ யாகி ரிட்டயர் ஆன பின்னாலும், முட்டை ஓர் இன்றியமையாத சைட் டிஷ்ஷாய்த்தானிருந்தது, அவருக்கும், எனக்கும், எங்கள் எல்லோருக்கும்.

ஆனால், அப்போது பாளையங்கோட்டை, இப்போது மெட்ராஸ்.

***
(மீதி அடுத்த இதழில்)

About The Author