முதல் தரம் (1)

திடீரென அப்பாவைப் பார்த்ததும் சுகந்தி மிகவும் பூரிப்பானாள்.

"என்னப்பா லெட்டரே இல்லை….திடீர்னு வந்து நிக்கறீங்க."

அதே நேரம் திவாகர் உள்ளே வந்தான். மாமனாரைப் பார்த்ததும் முகம் பரவசமானது.

"என்னங்க எப்ப வந்தீங்க….ஏய்…சுகந்தி….அப்பாவுக்கு டிபன், காபி கொடுத்தியா…" என்றான்.

ராமனாதனுக்கு உள்ளூர மகிழ்ச்சியாய் இருந்தது. இரண்டே பெண்கள். திவாகர் முதல் மாப்பிள்ளை.அதிர்ஷ்டவசமாய் நல்லவனாய் அமைந்து விட்டான். மாலதிக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளை அமைந்து விட்டால் போதும். அதற்குத்தானே இப்போது வந்தது.

திவாகர் முகம் கழுவி வந்து அமர்ந்தான்.

"வாங்க மாமா…..டிபன் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்…"

டைனிங் டேபிள் முன் அமர்ந்தனர். சுகந்தி திராட்சையைக் கழுவி ஒரு தட்டில் வைத்து அப்பாவின் முன் வைத்தாள். பிறகு அவளும் எதிரில் அமர்ந்து கொண்டாள்.

"மாலதிக்கு ஒரு வரன் வந்திச்சு…"

"அப்படியா….என்ன வேலையாம் அவருக்கு…"

"நல்ல வேலைதான்…. ஒரு கம்பெனில ஆபீசர் போஸ்ட். ஒரே பையன்…வேறெந்த பிக்கல்…பிடுங்கலும் இல்லே… சீர்ல எந்த டிமாண்டும் இல்லே…நீங்க செய்யிறபடி செய்யுங்க… அப்படின்னு சொல்லிட்டாங்க…"

"அப்புறம் என்ன…ரொம்ப நல்லதாப் போச்சு.." என்றான்.

"எந்தக் கம்பெனிப்பா? இவரை விட்டு விசாரிக்கச் சொல்லலாம்… " என்றாள் சுகந்தி.

"அதற்குத்தானம்மா…நான் இப்ப வந்தேன். மாலதிக்குப் பார்த்த வரன்…வேறெந்த கம்பெனியும் இல்லே. நம்ம மாப்பிள்ளை கம்பெனிதான். பெயர் அரவிந்தன் " என்றார் முகமலர்ச்சியுடன்.

திவாகர் உடனே பிரகாசமானான்.

"ஓ அரவிந்தனா…எனக்கு நல்லாத் தொ¢யுமே…."

"சொல்லுங்க… மாப்பிள்ளை….பையன் எப்படி….குணத்துல எப்படி…." என்றார் ராமனாதன் பரபரப்புடன்.

திவாகர் எழுந்து கைகழுவப் போனான். மாலதி பின்னாலேயே கை துடைக்க டவலுடன் போனாள்.

"இங்கே பாருங்க…அரவிந்தனைப் பத்தி இப்ப எதுவும் சொல்ல வேணாம். வேற ஏதாவது சொல்லி சமாளிங்க. அப்புறம் சொல்றேன்.." என்றாள் கிசுகிசுப்பான குரலில்.

"ஏன்…ஏன் அப்படிச் சொல்லணும்…." என்றான் புரியாமல்.

"அது அப்படித்தான்….நான் சொல்ற மாதிரி செய்யுங்க…விவரம் எல்லாம் அப்புறம் சொல்றேன்" என்றாள் மெல்லிய குரலில்.

ராமனாதன் ஆர்வமாய்க் காத்திருந்தார்.

"என்ன மாப்பிள்ளை…சொல்லுங்க…"

"அது வந்து….அவர் வேற செக்ஷன். சும்மா…பார்த்தவரை நல்ல மாதிரின்னு தோணும்…அது ஒண்ணும் பிரச்னை இல்லே… அந்த செக்ஷன்லயும் எனக்கு வேண்டியவங்க இருக்காங்க…நீங்க ரெண்டு நாளாவது இருப்பபீங்க இல்லையா…நாளைக்கு விசாரிச்சு முழு விவரம் சொல்லிடறேன்" என்றான் தயங்கிய குரலில்.

‘அப்படியா’ என்றார் ஏமாற்றத்துடன்.

பேச்சு பின்னர் வேறு திசையில் போனது. எப்படியும் நாளைக்குத் தொ¢ந்து விடும் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டார். அதுதான் சொன்னாரே பார்த்தவரை நல்ல மாதிரி என்று.

மாலதி அதிர்ஷ்டம் எப்படியோ அந்த மாதிரி அமைகிறது…என்று நினைத்துக் கொண்டார்.

சுகந்தி பேச்சோடு பேச்சாகச் சொன்னாள்.

"வெளியில பார்க்கிறது வச்சு…யாரைப் பத்தியும் ஒரு முடிவுக்கு வரமுடியாது…அந்த அரவிந்தன் உள்ளூர ஆள் எப்படியோ.." என்றாள்.

திவாகர் ஏதோ சொல்ல முயன்றான். சுகந்தி கண்ஜாடை காட்டியதும் அடங்கி விட்டான்.

இரவு சாப்பாடு ஆனதும்…படுக்கையில் கேட்டான்.

"ஏன் அந்த மாதிரி பேசினே…"

"என்னங்க விவரம் புரியாத ஆளா இருக்கீங்க…அந்த அரவிந்தன் யாரு…"

"ஏன்…எதுக்குக் கேட்கிறே…"

"சொல்லுங்க….அவர் போஸ்ட் என்ன?"

"எங்க கம்பெனி ஆபீசர்…"

"நீங்க…" என்றாள் பட்டென்று.

"நான் என்ன செய்ய முடியும்…கம்பெனி எக்சாம் எழுதிக்கிட்டேதான் இருக்கேன். பாஸ்தான் பண்ணலே" என்றான் அவமானமாக.

"உங்களைக் குறை சொல்லலீங்க. உங்க போஸ்ட்…அவரைக் காட்டிலும் குறைவு தானே."

"அ..ஆமா…அதனால என்ன?"

"ஏற்கனவே மாலதி கொஞ்சம் சிவப்பு…அதுலேயே அவ அலட்டுவா…இப்ப அவ புருசன் உங்க கம்பெனியிலேயே…பெரிய ஆபீசர்னா…என்னமா அலட்டிக்குவா தெரியுமா…"

"திவாகர் ‘இது என்னடா…புதுக்குழப்பம்’ என்பது போல பார்த்தான்.

(மீதி அடுத்த இதழில்)

About The Author