விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம் (7)

2.2 திறமைக்கேற்ற வாய்ப்புகள் தாமாய் வந்து சேரும்!

நாம் பிறந்துள்ள குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் இயைந்த வகையில் நமது கடமையைச் செய்ய வேண்டும். நமக்கு என்று வாய்த்த வேலையைப் பொறுப்புடன் செய்ய வேண்டும். இதுதான் கர்ம யோகம். இப்படி எல்லாம் சொல்வதும் கேட்பதும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், என் வேலை போரடிக்கும் வேலை.. அப்படி ஒன்றும் சிலாக்கியமானது இல்லை. என் தகுதிக்கும் திறமைக்கும் இன்னும் பெரிய பொறுப்புகள் கிடைத்திருக்க வேண்டும்.. என்னவோ எனக்கு அதிருஷ்டமில்லை என்று அங்கலாய்த்துக் கொள்வோர் பலர் உண்டு. அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் கருத்தில் நியாயம் இருக்கக் கூடும்.

இதை ஒட்டி சில சிந்தனைகள் வருகின்றன. கமல்ஹாஸனுக்கு அவர் தந்தையார் சொல்லுவாராம்: "நீ சவரத் தொழிலாளியானால் கூட அத்தொழிலில் தலைசிறந்தவனாக விளங்க வேண்டும்." ஜேம்ஸ் ஆலன் சொல்லுவது : "ஒரு தொட்டியில் ரோஜாச்செடி வைக்கப்பட்டிருக்கிறது. அது தொட்டியின் அளவை விடப் பெரிதாய் வளர்ந்ததும், உரிமையாளன் தானாகவே அதை பெரிய தொட்டிக்கு மாற்றி விடுவான்."

இருக்கட்டும். சுவாமிஜி இது பற்றி என்ன சொல்கிறார்?

"பிறப்பினால் நமக்கு ஏற்பட்ட கடமையை முதலில் செய்வோம். அதற்கு அடுத்தபடி, வாழ்க்கையிலும் சமுதாயத்திலும் நமக்கு அமைந்த இடத்தின்படி ஏற்பட்டுள்ள கடமையைச் செய்வோம். ஆனாலும் மனித இயல்பைப் பொறுத்தவரை, பெரிய அபாயம் ஒன்று இருக்கிறது. மனிதன் தன்னைப் பற்றிச் சோதித்துக் கொள்வதில்லை. ராஜாவாகத் தனக்குத் தகுதி இருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறான். அப்படியே இருந்தாலும் கூட, இப்போதுள்ள நிலைமையில் அமைந்த கடமையை முதலில் சரிவரச் செய்ய வேண்டும். அப்போது உயரிய பொறுப்புகள் தாமே வரும். உலகில் நம் வேலையை ஈடுபாட்டுடன் செய்ய ஆரம்பித்தோம் என்றால், இயற்கை நமக்கு வலமும் இடமுமாய் அனுபவ அடிகளைத் தந்து, நமக்குரிய இடத்தைக் கண்டுகொள்ள நமக்கு உதவும். தனக்குத் தகுதியில்லாத இடத்தில் யாரும் ரொம்ப நாள் திருப்திகரமாகத் தாக்குப் பிடித்து நிற்க இயலாது. இயற்கையின் ஏற்பாட்டுக்கு எதிராக முனகிக் கொண்டிருப்பதில் பயனில்லை. தாழ்வான வேலையைச் செய்கிறவன் தாழ்ந்தவன் என்பது கிடையாது. எவரையும் அவர் செய்யும் வேலையை வைத்து மதிப்பிடக்கூடாது. அதை எவ்வளவு கர்ம சிரத்தையுடன் செய்கிறார், எவ்வளவு சிறப்பாகச் செய்கிறார் என்பதைக் கொண்டே மதிப்பிட வேண்டும்" (சுவாமிஜி சொன்னதின் சரளமான மொழிபெயர்ப்பு.) இந்த சமயத்தில் சுவாமிஜி சொன்ன மற்றொரு கருத்தும் நினைவுக்கு வருகிறது. "வறட்டுத்தனமாகப் பாடம் நடத்தும் பேராசிரியரை விட, பளிச்சென்று காலணியைத் துடைக்கும் செருப்புத் தொழிலாளியே மேலானவன்!"

2.3 இலக்கு நிர்ணயம்

கர்ம யோகம் என்பது தன்னலம் இன்றிப் பணியாற்றுவது; இடைவிடாது பணியாற்றுவது; தனக்கென்று வாய்த்த கடமையை ஈடுபாட்டுடன் செய்வது. இதில் எந்தப் பணி நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ளத் தக்கது என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு இலட்சியத்தை முன்னிறுத்திக் கொண்டு அதை நோக்கிப் பணியாற்ற வேண்டும் என்கிறார் சுவாமிஜி. இந்தக் காலப் பயிற்சி வகுப்புகளிலும் இதைத்தான் சொல்லித் தருகிறார்கள். இலக்கு நிர்ணயம் பற்றிப் பேசும்போது SMART என்ற ஆங்கிலப் பதத்தைப் பயன்படுத்துவார்கள். இலக்கு என்பது Simple, Measurable, Attainable, Realistic,Time bound ஆக இருக்க வேண்டும் என்பார்கள். சுவாமிஜி சொல்வது, இத்தனைக்கும் அடிப்படையான ஒரு விஷயம். நமது இலக்கு நம்முடையதாக இருக்க வேண்டும். அதாவது நமது இயல்புக்கு இசைந்ததாக இருக்க வேண்டும். மற்றவர்கள் செய்கிறார்களே என்று அவர்களது இலட்சியம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அதைக் காப்பியடித்து இலக்கை வைத்துக் கொண்டு முட்டி மோதுவதில் ஒரு பயனுமில்லை.

என் நண்பர் ஒரு பாட்டுக் கச்சேரிக்குப் போய் விட்டு வந்து சொன்னார், "அந்த வித்வான் மூன்று மணி நேரக் கச்சேரிக்கு 50000 ருபாய் வாங்குகிறாராம். நாமும் பாட்டுக் கற்றுக் கொண்டு கச்சேரி செய்யலாம் என்று நினைக்கிறேன்," நண்பர் இதை நகைச்சுவையாகத்தான் சொல்லியிருக்க வேண்டும். ஏனென்றால் அவருக்குக் கர்த்தபக் குரல். இத்தகைய இலட்சியம்(?) சிறுபிள்ளைத்தனமானது. கண்டக்டராவேன், வாத்தியாராவேன், என்று சின்னக்குழந்தைகள் அவ்வப்போது சொல்லுமே அது போல. வயது முதிர்ந்த நமக்கு, இலக்கு நிர்ணயத்திலும் ஒரு முதிர்ச்சி வேண்டும்.

குடும்பத் தொழில் நமக்கு இயல்பாக வரும். சில பேருக்கு குடும்ப நிறுவனங்கள் இருக்கும். அவற்றை நிர்வகித்து முன்னுக்குக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு இருக்கும். குல வித்தை கல்லாமல் பாகம் படும் என்பார்கள். இயல்பாக அதில் நாட்டம் இருந்தால், குடும்ப சூழ்நிலையில் அதை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு இருந்தால், அதிலேயே ஒரு இலட்சியத்தை
மேற்கொள்ளலாம். இல்லை, நமக்கு எதில் இயல்பாக ஈடுபாடு இருக்கிறதோ அந்தத் துறையிலேயே நமது இலட்சியத்தை அமைத்துக் கொள்ளலாம். நமக்கு இயல்பாகக் கைவரும் தொழில்/கலை, சூழ்நிலை காரணமாக நமக்கு அமைந்த பணி இவை தொடர்பாகவே நமது லட்சியத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். சுருங்கச் சொன்னால் நமது லட்சியம், உண்மையில் நமது லட்சியமாக இருக்க வேண்டும்.

இதில் இன்னொரு விஷயம் பார்க்க வேண்டும். மற்றவர்கள் அவர்களது சுபாவத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து செய்யும் எந்தத் தொழிலையும் இழிவாகக் கருதக் கூடாது. ஏளனமாகப் பார்க்கக் கூடாது. பல்வேறுபட்ட தன்மைகளுக்கிடையே ஒற்றுமை என்பதுதான் படைப்பின் நியதி. மனிதர்கள் ஒருவர் ஒருவருக்கிடையே பல்வேறு குணங்கள், தன்மைகளில் வேறுபாடு இருந்தாலும் அத்தனை வேறுபாடுகளும், படைப்பின் இயல்பில் அமைந்த வேறுபாடுகளே. எல்லாரையும், எல்லாப் பணிகளையும் ஒரே தராசைக் கொண்டு எடை போடுவது, இயற்கைக்கு மாறான போராட்டங்களையும், பிணக்குகளையும் பேத உணர்வுகளையுமே வளர்க்கும். இப்படிச் செய்யும் போது பலருக்கும் தங்கள் மீதும் தங்கள் பணியின் மீதும் வெறுப்பு உண்டாகச் செய்யும் அபாயம் இருக்கிறது. கர்ம யோகத்தில் ஈடுபாடு கொண்டு பயிலும் நமது கடமை, அவரவர்களைத் தங்கள் இலட்சியத்தில் முன்னேறும்படி ஊக்குவிப்பதும், அந்த லட்சியங்கள் நேர்மையாக அமைய வழி காட்டுவதுமே ஆகும்.

(தொடரும்)

About The Author