விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம் (16)

3.6. நல்லெண்ண இசை மீட்டுவோம்!

நாம் ஏன் நல்ல காரியங்களையே செய்ய வேண்டும் என்பதற்கு, சுவாமி விவேகானந்தர் இன்னும் ஒரு நுட்பமான காரணத்தைச் சொல்லி விளக்குகிறார்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை இருக்கிறது. அது நம்மை நோக்கித் திரும்பி வருகிறது. இதே போல, நம் செயல்கள் மற்றவர்கள் மீதும், மற்றவர்களின் செயல்கள் நம் மீதும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. தீமை செய்பவர்கள் மேலதிகத் தீவிரத்துடன் தொடர்ந்து தீமைகள் செய்து கொண்டிருப்பதையும், நன்மை செய்பவர்கள், அதே போலத் தொடர்ந்து மேலதிக நன்மைகள் செய்து கொண்டிருப்பதையும் நாம் கவனித்திருக்கலாம். நாம் பலரும் செய்யும் செயல்கள், ஒருவர் மீது ஒருவருக்குத் தாக்கத்தை உருவாக்குகின்றன என்பதே இதற்குக் காரணம்.

நடைமுறை உதாரணம் ஒன்றைக் காட்டி இதை விளக்க முடியும். ஓர் அறையில் பலவகை இசைக்கருவிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் ஒரே போல சுருதி சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு கருவியை மீட்டினால், அங்குள்ள அனைத்துக் கருவிகளும், அதே ஸ்வரத்தில் அதிரக் காண்போம். இதேபோல, நான் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்கிறேன். அப்போது என் மனம், ஒரு குறிப்பிட்ட அதிர்வு நிலையில் இருக்கிறது. இதே அதிர்வு நிலையில் உள்ள அத்தனை மனங்களும் என் மனத்தின் எண்ண அதிர்வால் தாக்கப்படும் போக்கைக் கொண்டிருக்கின்றன. ஒரே அதிர்வு நிலையில் உள்ள அத்தனை மனங்களும், ஒரே எண்ணத்தால், ஒன்று போலவே பாதிக்கப்படுகின்றன. எண்ணத்தின் தாக்கம், அதன் தீவிரத்தையும், தூரத்தையும், மற்ற சில புறக்காரணங்களையும் பொறுத்து மாறுபடும் என்றாலும் அடிப்படைக் கோட்பாடு, மனித மனம் புறத் தாக்குதலுக்கு ஆட்படக் கூடியது என்பதே!

நான் ஒரு தீய செயலைச் செய்கிறேன். அப்போது, என் மனம் ஒரு குறிப்பிட்ட அதிர்வு நிலையில் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில், அதே அதிர்வு நிலையிலுள்ள எல்லா மனங்களுக்கும் என் எண்ண அதிர்வலைகளால் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அதே போல, நான் ஒரு நல்ல செயலைச் செய்கையில், என் மனம் வேறோர் அதிர்வு நிலையிலிருக்கிறது. இதே ஒத்திசைவான அதிர்வலைகள் கொண்ட மற்ற மனங்களில் என்னுடைய இந்த எண்ணத்தின் தாக்கமும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மனத்தின் மீது மனத்துக்கு ஏற்படும் இந்தத் தாக்கம் அதிர்வலையின் தீவிரத்துக்கேற்ப அமையும்.

இன்னும் சிறிது சிந்திப்போம்! வானில் இன்று நாம் காணும் பல நட்சத்திரங்கள், லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்தவை; உண்மையில் இப்பொழுது அவை அங்கு இல்லை என்கிறார்கள். அவற்றிலிருந்து புறப்படும் ஒளி அலைகள் நம்மை வந்தடைய அத்தனை காலம் பிடித்திருக்கிறது. அதே போல, எண்ண அலைகளும் ஒத்த அலைவரிசையுள்ள மற்றொரு மனத்தை வந்தடைய நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கலாம்! ஒவ்வொரு மனத்திலிருந்தும் எழும் ஒவ்வொரு எண்ணமும், அதற்கு இசைவான மனத்தை அடையும் வரையில் வான்வெளியில் சஞ்சரித்துக் கொண்டே இருக்கும். இப்படி, வான்வெளியில் நல்லதும் தீயதுமான பல எண்ண அலைகள் உலாவிக்கொண்டே இருக்கும். அந்த எண்ணத்தை வாங்கிக் கொள்ளத் தயார் நிலையிலுள்ள எந்த மனமும் அதை உடனடியாகப் பிடித்துக் கொள்ளும். மனிதன் ஒரு தீய செயலைச் செய்யும்போது, ஒரு குறிப்பிட்ட அதிர்வு நிலையில் இருக்கிறான். வான்வெளியில், அதே அதிர்வு நிலையில் உலா வந்து கொண்டிருக்கும் அத்தனை எண்ணங்களும் அப்பொழுது அவன் மனத்துக்குள் நுழைய முண்டியடித்துக் கொண்டு முயலும். தீயவன், தொடர்ந்து தீவிரமாகத் தீய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதற்கு இதுவே காரணம். நல்லது செய்பவனின் மன வாசலும், இப்படியே நல்லெண்ண அதிர்வலைகளுக்காகத் திறந்து கிடக்கிறது. அவனது நல்லெண்ணங்கள் வலுப்படுகின்றன. நல்ல செயல்கள் தீவிரமாகத் தொடர்கின்றன.

ஆக, நாம் தீய செயல்களைச் செய்வதில் இரண்டுவித ஆபத்துகள் இருக்கின்றன. முதலாவதாக, நம்மைச் சுற்றியிருக்கும் அத்தனை தீய எண்ண சக்திகளும் நம் மனத்துக்குள் நுழைய வழி திறந்து வைக்கிறோம். அது மட்டுமில்லாமல், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அவை சஞ்சரித்து, பிறரைத் தீமையில் தீவிரப்படுத்த வழி வகுக்கிறோம். அதே போல நல்ல செயலைச் செய்யும்போது நமக்கும், கால அளவு கடந்து மற்றவர்களுக்கும் நன்மை பயக்கிறோம்.

மனிதனுடைய மற்ற சக்திகளைப் போல நன்மை தீமை என்கிற சக்திகளும் வெளியிலிருந்து ஊக்கமும் உரமும் பெறுகின்றன.

(ஆதாரம்: C.W – Volume 1 – Chapter VI – Pages 81 – 82).

— பிறக்கும்

About The Author