ஸண்டே ஸண்டே ஸீ பாத் (1)

அபூர்வமாய், வீடு நிசப்தமாயிருந்தது.

ஆச்சர்யத்தோடு நம்ம ஆளைப் பார்த்தேன். என் பார்வையைப் புரிந்து கொண்ட அவள், நான் கேள்வி கேட்காமலேயே பதில் சொன்னாள்.

"எல்லாட் டிக்கட்டும் கடலுக்குப் போயிருக்கு. இன்னிக்கி ஸண்டே ஸீ பாத்."

"வெரிகுட்" என்றேன் நான்.

"கடலுக்குப் பக்கத்ல, நீலாங்கரைல வீடு கட்னது எவ்ளவு நல்லது பாத்தியா! இன்னிக்கி ஸண்டே, வாரம் பூராக் குளிக்காததுகள்ளாம் அழுக்குத் தேச்சுக் குளிக்கிற நாள். அத்தன உருப்படியும் ஸீ பாத்துக்குப் போயிருச்சுன்னா எத்தன லிட்டர் தண்ணி மிச்சம் பார். புத்திசாலி நீ."

"ப்ரமாதமா ஒண்ணும் மிச்சம் ஆயிராது. உப்புப் பிசுக்குப் போக நல்ல தண்ணில குளிக்கணும்னு எல்லாம் சொல்லும். ஆனா, நா அட்வான்ஸு சொல்லிட்டேன், ஆளுக்கு அரை பக்கெட் தண்ணி தான்னு."

"எப்டியோ ஓரளவாவது தண்ணி ஸேவ் பண்றோம்ல? இந்தக் கஷ்ட காலத்ல ஒவ்வொரு துளி தண்ணியும் ஒரு பொக்கிஷந்தானே. ஒன்ன மாதிரி ஒரு திறமையான உள்துறை மந்திரி கம் உணவு மந்திரி கம் தண்ணி மந்திரி கம் மஹாராணி எனக்குக் கெடச்சதால, நம்ம சாம்ராஜ்யத்ல மாதம் மும்மாரி பொழியாட்டியும் தண்ணிக் கஷ்டம் தெரியல."

"தங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி மஹாராஜா, பக்கத்து நாட்டுக்கு எப்பப் படையெடுக்கப் போறீங்க?"

"பக்கத்து நாட்டுக்குப் படையெடுப்பா? ஏன்? எதுக்கு? எப்படி? யார்?"

"மறந்திருப்பீங்களே! பக்கத்து வீட்டு ஓவர் ஹெட் டாங்க்ல தினமும் தண்ணி ஓவர் ஃப்ளோ ஆகி அஞ்சு நிமிஷத்துக்கு
அநியாயமாக் கொட்டுது. இதனால வீட்டுக்கு, நாட்டுக்கு, ஒலகத்துக்கே கேடு, அதனால நா போய் நறுக்னு நாலு வார்த்தை கேட்டுட்டு, மண்டைல நாலு குட்டு குட்டிட்டு வரப்போறேன்னீங்க? ஸண்டே வரட்டும், போய் ஒரு கை பாத்துட்டு வர்றேன்னு வேகவேகமா வீர வசனம் பேசினீங்க?"

"ஆமா, வேகவேகமாப் பேசினேன். ஆனா, வேகம் விவேகமல்லன்னு ஆம்னி பஸ்ல, நாஷனல் பர்மிட் லாரிலல்லாம் எழுதிப் போட்டிருக்காங்களேன்னு யோசிக்கிறேன்."

"அட இவ்ளோ தானா நீங்க! அப்ப, நாம் போய்க் கேட்டுட்டு வரட்டுமா?"

"ஐயோ, அது முறையல்ல மஹாராணி. இதோ நானே போகிறேன். என் நெற்றியில் வெற்றித் திலகமிட்டு வழியனுப்பி வை,
எதிரியைத் துவம்சம் செய்து விட்டு வருகிறேன்!"

*****

பக்கத்து வீட்டுக் கதவில் பஸ்ஸரை அழுத்தினேன். என் வயதேயிருக்கிற இளைஞர் ஒருவர் வந்து கதவைத் திறந்தார்.
"சார், நா பக்கத்து நாடு, ஐ மீன், பக்கத்து வீடு" என்று என்னை நான் அறிமுகப்படுத்திக் கொண்டதும், "வாங்கோ சார், உள்ள வாங்கோ" என்று வரவேற்று டிராயிங் ஹாலில் அமர வைத்தார்.

"மன்னிக்கணும் சார், இந்த ஆத்துக்கு நா குடி வந்து ரெண்டு மாசமாறது. ஒங்க நெய்பர்ங்கற முறையில ஒங்கள வந்து பாத்திருக்கணும். ஒங்காத்துக்குத் தம்பதி சமேதரா வர்றதுதான் முறை. அதுல பாருங்கோ, நா ஒரு பிஸி எக்ஸிக்யூட்டிவ். வாரத்ல ஆறு நாள் வேலை வேலை வேலை. ராத்திரி லேட்டா வருவேன், டயர்டா வருவேன். திரும்பக் கார்த்தால எந்திரிச்சி ஓடணும். ஸண்டே ஒரு நாள் தான் சித்த ஒழியும். ஆனா பாருங்கோ, ஸண்டே ஸண்டே இவொ என்ன அம்போன்னு விட்டுட்டுப் பொறந்தாத் துக்குப் போயிருவொ. அதனால நம்ம விஸிட் தள்ளிண்டே போயிடுத்து. இப்ப நீங்களே வந்துட்டேள். ஆத்துல எல்லாரையும் கூட்டிண்டு வந்திருக்கப்படாதோ? அட நா ஒரு அசடு பாருங்கோ. நம்ம ஆத்துக்காரி இங்க ஆப்ùஸன்ட், ஒங்காத்ல எல்லாரையும் கூட்டிண்டு வரப்படாதோங்கறேன். அட நாம தான் இப்பப் பழகிட்டோமே சார், அடிக்கடி மீட் பண்ணாமலா இருக்கப் போறோம்! திரும்பவும் பாருங்கோ, வந்தவாளை ஒக்கார வச்சுண்டு வளவளன்னு பேசிண்டே இருக்கேன். சார், என்ன சாப்புடறேள்? காஃபி? டீ? டீ இல்லை. காஃபி தான். என்னோட ஆத்துக்காரி ஃப்ளாஸ்க் நெறைய ஊத்தி வச்சுட்டுத்தான் போயிருக்கா. என்னோட ஒரு நாள் கோட்டா. நாம ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கலாம்."
ஒருவாறு பேசி ஓய்ந்து அவர் வாயை மூடினார். வாயை மூடினவர் என் வாயைப் பார்த்துக் கொண்டிருந்தார், என் பதிலுக்காக.

"வேண்டாம் சார். தாங்ஸ். நா காஃபி, டீ சாப்புடற பழக்கமில்ல" என்றேன்.

"ரொம்ப நல்ல பழக்கம் சார். ஐ அப்ரிஷியேட் தட். ஹார்லிக்ஸ் கரச்சுத் தரட்டுமா? இல்லாட்டி போண் வீட்டா?" என்று திரும்பவும் என் வாயைப் பார்த்தார்.

"அதெல்லாம் ஒண்ணுமே வேண்டாம் சார், கொஞ்சம் தண்ணி மட்டும் குடுங்க" என்று நான் சொன்னது தான் தாமதம், மனிதர் ஸ்தம்பித்துப் போய்ப் பின் வாங்கி, ஸோஃபாவில் சரிந்து விட்டார்.

சில விநாடிகளுக்கு அவரிடம் சலனமேதும் இல்லாமற் போகவே, "சார், சார், என்னாச்சு ஒங்களுக்கு?" என்று அவர் தோளைப் பற்றி நான் உலுப்பவும், "ஒண்ணுமில்லை சார், ஒண்ணுமில்லை சார்" என்று சகஜ நிலைக்குத் திரும்பினார்.
"இவ்ளோ காஸ்ட்லி ஐட்டமாப் பாத்து நீங்க கேப்பேள்னு நா எதிர்பார்க்கலை. ஒரு அபூர்வமான வஸ்துவோட பேரை சர்வ சாதாரணமா நீங்க உச்சரிச்ச வொடன நா ஸ்ட்டன் ஆய்ட்டேன்."

அவருடைய வளவளத்த பேச்சுக்கு ஊடே பொதிந்திருந்த நகைச்சுவையும், அந்த நகைச்சுவையின் பின்னணியிலிருந்த யதார்த்தமும் என் முகத்திலே புன்னகையைத் தோற்றுவித்தன. அந்தப் புன்னகை மாறாமலேயே நான் பாய்ன்ட்டைப் பிடித்தேன்.

"தண்ணி ஒரு அபூர்வமான வஸ்துன்னு அழகாச் சொல்றீங்க, ஆனா அந்தக் காஸ்ட்லி ஐட்டம் டெய்லி ஒங்க வீட்ல வேஸ்ட் ஆயிட்டிருக்கே சார், கவனிச்சீங்களா?"

"எதச் சொல்றேள்?"

"ஒங்க ஓவர்ஹெட் டாங்க் ரொம்பி வழியுது தினமும். அந்தத் தண்ணி ஓவர்ஃப்ளோ ஆகி வேஸ்ட் ஆகிறத நீங்க அவாய்ட் பண்ணலாமே."

"ஐயோ, ஆமா சார். I feel guilty about that.. தண்ணியோட அருமை பெருமை புரிஞ்சவன் நான். மத்தவாளுக்கு முன்னுதாரணமாயிருக்க வேண்டியவன் நான். நானே ஒரு லயாபிலிட்டியா இருக்கோம் பாருங்கோ. அதுல என்னன்னா சார், அந்த மோட்டர் ஸ்விட்ச் பக்கத்ல போறதுக்கே நம்ம ஆத்துக்காரிக்கு அலர்ஜி. மோட்டர் ஸ்விட்ச்ச நாந்தான் ஆன் பண்ணனும், ஆஃப் பண்ணனும். ஆன் பண்றது ஈஸி, அப்பறம் டாங்க் ஃபுல் ஆகறச்ச நா குளிச்சிண்டிருப்பேன், டாய்லட்ல இருப்பேன், இல்லாட்டி பூஜைல இருப்பேன். நா ஓடிப்போய் மோட்டரை ஆஃப் பண்றதுக்குள்ள நெறைய தண்ணி கொட்டிப் போயிடறது. ஆனா பாருங்கோ, இன்னிக்கி ஓவர்ஃப்ளோ ஆக நா விடலை. எப்டீன்னு கேளுங்கோ. ஆத்துல இருக்கேனோல்லியோ அப்பப்ப மேலே போய் வாட்டர் லெவலப் பாத்துண்டேன். ஆத்துல வாரிசுகள்னு ஒண்ணு ரெண்டு இருந்ததுன்னா இதையெல்லாம் கவனிச்சிப்பா…"

"வாரிசுக்குத் தான் வழியே இல்லாமப் போயிருச்சே சார்! வாரத்ல ஆறு நாள் நீங்க பிஸி, லேட்டா வர்றீங்க, டயர்டா வர்றீங்க, ஏழாவது நாள் ஆத்துக்காரி பொறந்தாத்துக்குப் போயிர்றா…."

"அதுக்கும் ஒரு ஐடியா பண்ணிட்டேன் சார்" என்று என்னைப் பார்த்துக் கண்ணடித்தார்.

(மீதி அடுத்த இதழில்)”

About The Author