ஸ்வர்ண லோகம் ( 22)-சில ஜென் குட்டிக் கதைகள்!

ஜென் பிரிவில் குட்டிக் கதைகள் ஏராளம். ஒரு மாஸ்டரைப் பார்க்கும்போது அவர் வாயிலாக வெளிவரும் உபதேசங்களும் இதில் அடங்கும். சில குட்டிக் கதைகளைப் பார்க்கலாம்.

மனதின் உள்ளேயா அல்லது வெளியேயா?

ஹோஜென் என்ற சீன ஜென் மாஸ்டர் கிராமப்புற மடாலயம் ஒன்றில் தங்கி இருந்தார். ஒரு நாள் பயணம் மேற்கொண்டு வந்த நான்கு பிக்ஷுக்கள் அவரிடம் வந்து, அவரது முற்றத்தில் கதகதப்பிற்காகத் தீ மூட்டிக் குளிர் காயலாமா என்று கேட்டனர். அவர்கள் தீயை மூட்டிக் கொண்டிருந்தபோது பருப்பொருள் எது நுண்பொருள் எது என்று விவாதத்தில் ஈடுபட்டனர். ஹோஜென் இந்த விவாதத்தில் கலந்து கொண்டார். "அதோ பாருங்கள்! ஒரு பெரிய பாறை இருக்கிறது. அது உங்கள் மனதின் உள்ளே உள்ளதா அல்லது வெளியில் உள்ளதா" என்று ஹோஜென் கேட்டார். ஒரு பிக்ஷு, "ஒரு புத்தத் துறவியின் பார்வையில் பார்த்தால் எல்லாமே மனதின் வெளிப்பாடுதான். ஆகவே, அந்தப் பாறை என் மனதின் உள்ளே இருக்கிறது" என்றார். உடனே ஹோஜென், "உங்கள் தலை மிகவும் கனத்து இருக்க வேண்டும். ஏனெனில், இப்படிப்பட்ட பாறையை நீங்கள் உங்கள் மனதில் சுமந்தால் தலை கனமாகத்தானே இருக்கும்!" என்றார்.

உலகில் மிகவும் மதிப்பு வாய்ந்தது எது?

சோஜென் என்ற சீன ஜென் மாஸ்டரை ஒரு மாணவர், "உலகில் எது மிகவும் மதிப்பு வாய்ந்தது?" என்று கேட்டார். உடனே மாஸ்டர், "இறந்த பூனையின் தலைதான்" என்றார். மாணவர், "ஏன்?" என்று கேட்டார்.

"ஏனெனில், அதன் விலையை யாராலும் சொல்ல முடியாது!" என்றார் சோஜென்.

எங்கிருந்து வந்தது கோபம்?

யமாகா டெஸ்ஸு என்ற ஜென் மாணவர் ஒவ்வொரு மாஸ்டராகச் சந்தித்து வந்து, கடைசியில் டோகுவான் என்ற மாஸ்டரை அடைந்தார். தனது உயரிய நிலையைக் காண்பிப்பதற்காக அவர் மாஸ்டரிடம், “மனம், புத்தர், உலக ஜீவராசிகள் அனைத்துமே கிடையாது என்பதுதான் உண்மை. உண்மையான நிலை என்னவெனில் சூன்யம்தான்! மெய்ஞான நிலையும் கிடையாது, மாயையும் கிடையாது! மகானும் கிடையாது, முட்டாளும் கிடையாது. எதுவும் கொடுக்கப்படத் தேவையில்லை; எதுவும் பெறப்படவும் தேவையில்லை” என்று தன் ஞானநிலையைத் தெரிவித்தார். புகைபிடித்துக் கொண்டிருந்த மாஸ்டர் டோகுவான் ஒன்றுமே பேசாமல், திடீரென்று தனது புகைபிடிக்கும் மூங்கில் குழாயால் யமாகா டெஸ்ஸுவை ஓங்கி ஓர் அடி அடித்தார். இதனால் அந்த இளைஞர் மிகவும் கோபமடைந்தார்.

அவர் கோபத்தைப் பார்த்த மாஸ்டர், "எதுவுமே இல்லை என்றால் உன்னுடைய இந்தக் கோபம் மட்டும் எங்கிருந்து வந்தது?" என்று கேட்டார்.

பேசுகின்ற வாயும் கேட்கின்ற காதுகளும்

கெட்டன் என்ற பெரியவர் தனது சகாக்களிடம் இப்படிச் சொல்வதுண்டு:-

"பேசுகின்ற வாய் இருக்கும்போது உங்களிடம் கேட்கின்ற காதுகள் இருக்காது. கேட்கின்ற காதுகள் இருக்கும்போது உங்களிடம் பேசுகின்ற வாய் இருக்காது. இதைப் பற்றிச் சற்றுத் தீவிரமாக யோசனை செய்யுங்கள்!"

சுட்டிக் காட்ட உதவுவதே சுட்டிக் காட்டப்படுவதாக ஆகுமா, என்ன?

ஜென் மாஸ்டருடன் மாலையில் உலாவுவது அவரது நாய்க்கு நிரம்பவும் பிடிக்கும். அப்போது அந்த நாய் முன்னால் ஓடி ஒரு கழியை எடுக்கும், பிறகு திரும்பி ஓடி வரும், தன் வாலை ஆட்டும். பிறகு, அடுத்த விளையாட்டுக்காகக் காத்திருக்கும்.
ஒரு நாள் மாலை நேரத்தில், ஜென் மாஸ்டர் தனது மாணவர்களுள் புத்திசாலியான ஒருவனைத் தன்னுடன் வருமாறு அழைத்தார். மிகவும் புத்திசாலியான அவனுக்குச் சில புத்த மதக் கொள்கைகள் எதிரும் புதிருமாக இருப்பது போலத் தோன்றவே அதைப் பற்றிச் சிறிது சந்தேகம் வந்திருந்தது. அதைக் கேட்ட மாஸ்டர், "வார்த்தைகளைப் பற்றி நீ நன்கு புரிந்து கொள்ள வேண்டும்! வார்த்தைகள் ஒரு வழிகாட்டிதான். வார்த்தைகளோ அல்லது அடையாளக் குறிகளோ உண்மையை அறிவதற்கான வழி அல்ல! இதோ பார், நான் உனக்குக் காண்பிக்கிறேன்" என்று கூறிய மாஸ்டர், சந்தோஷத்துடன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த தனது நாயை அழைத்தார். அதனிடம் சந்திரனை விரலால் சுட்டிக் காட்டி, "சந்திரனைப் பிடித்து வா!" என்றார். கூடவே,"எனது நாய் எங்கு பார்க்கிறது?" என்று தனது மாணவனை நோக்கிக் கேட்டார்.

"அது உங்கள் விரலைப் பார்க்கிறது!" என்றான் மாணவன்.

"சரியாகச் சொன்னாய்! நாயைப் போலக் குழம்பாதே! சுட்டிக் காட்டிய விரலைச் சுட்டிக் காட்டிய பொருளான சந்திரனாக எண்ணாதே! புத்தக் கொள்கையில் உள்ள அனைத்து வார்த்தைகளும் வழிகாட்டுபவையே! சாதாரணமாக, ஒவ்வொருவனும் மற்ற மனிதர்களின் வார்த்தைகளின் வழியே தனக்கு வேண்டிய உண்மையைக் கண்டு அறிய முற்படுகிறான்" என்றார் மாஸ்டர்.

உண்மையை அறி!

ஒரு முறை, புத்தரின் கொள்கைகளை நன்கு அறிந்து அவற்றைக் கடைப்பிடித்து வந்த ஒரு துறவி, இரவு நேரத்தில் ஒரு பாதை வழியே நடந்து சென்று கொண்டிருந்தார். பாதையில் ஏதோ ஒன்றின் மேல் காலை வைக்க, சரக் என்று ஏதோ உடையும் சத்தம் கேட்டது. தான் தவளை முட்டை ஒன்றின் மீது காலை வைத்துத் தவளைக் குஞ்சு ஒன்றைக் கொன்று விட்டோம் என்று அவருக்குத் தோன்றியது. ‘ஓர் உயிரை அநியாயமாகக் கொன்று விட்டோமே’ என்று அவர் வருந்தினார். இரவில் தன் இருப்பிடம் சென்று படுத்தபோது அவர் கனவில் ஆயிரக்கணக்கான தவளைகள் ‘க்வாக் க்வாக்’ என்று கத்தி, அவரது உயிரைப் பதிலுக்குப் பலியாகக் கேட்டன. விழித்தெழுந்த துறவி பெரிதும் வருந்தினார். காலையில் எதன் மீது தான் காலை வைத்தோம் என்று பார்ப்பதற்காக அந்த இடத்திற்குச் சென்றார். அங்கே அவர் பார்த்தது முற்றிய ஒரு புடலங்காயைத்தான். அது முறிந்துதான் சத்தம் வந்திருக்கிறது. அந்தக் கணத்தில் அவரது சந்தேகம் முற்றிலுமாக நீங்கியது. எதுவுமே உலகில் ஸ்தூலமாக இல்லை என்ற புத்தமதக் கொள்கை அவருக்கு நினைவிற்கு வந்தது. பெரிய உண்மை ஒன்றை உணர்ந்த மகிழ்ச்சி நிலவ, அவர் தன் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றலானார்.

சின்ன உண்மை

சிரிப்பதுதான் ஜென் பிரிவின் மொத்த சாரமும் என்கிறார் ஓஷோ! "சந்தோஷமாக இரு; தியானம் பின்னால் தானே வரும்" என்பது அவரது உபதேச உரை.

–மின்னும்...

About The Author

1 Comment

Comments are closed.