ஸ்வர்ண லோகம் (23)- சில ஜென் குட்டிக் கதைகள்!

இரண்டே வார்த்தைகள்!

ஒரு ஜென் மடாலயத்தில் மௌனம் மிகத் தீவிரமாக அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. அங்கு இருக்கும் யாரும் பேச அனுமதிக்கப்படுவதில்லை. என்றாலும் கூட, பத்து வருடங்களுக்கு ஒரு முறை இரண்டு வார்த்தைகள் மட்டும் பேசலாம் என்று விதிமுறை இருந்தது மடாலயத்தில்.

புதிதாக ஒரு துறவி அங்கு வந்து வசிக்க ஆரம்பித்தார். பத்து வருடக் காலம் கழிந்தது. அவரை அழைத்த தலைமைப் பிக்ஷு "நீ வந்து பத்து வருடம் ஆகி விட்டது. நீ இரண்டு வார்த்தைகள் பேசலாம். என்ன கூற விரும்புகிறாய்?" என்று கேட்டார். அதற்குத் துறவி, "படுக்கை… கடினம்.." என்றார்.

"ஓஹோ" என்றார் தலைமைப் பிக்ஷு. பத்து வருடங்கள் கழிந்தன. துறவி மறுபடியும் தலைமை பிக்ஷுவின் அறைக்கு வந்தார்.

"நீ பேச விரும்பும் இரண்டு வார்த்தைகளைப் பேசலாம்" என்றார் அவர்.

துறவி, "உணவு… மோசம்" என்றார்.

"ஓஹோ" என்றார் தலைமைப் பிக்ஷு. இன்னும் பத்து வருடங்கள் கழிந்தன. துறவி மறுபடியும் தலைமைப் பிக்ஷுவின் அறைக்கு வந்தார்.

"நீ பேச விரும்பும் இரண்டு வார்த்தைகளைச் சொல்" என்றார் அவர்.

"நான்.. போகிறேன்" என்றார் அவர்.

"சரி! நீ ஏன் போக விரும்புகிறாய் என்று எனக்குத் தெரியும். நீ எப்போதும் சொல்ல விரும்புவது புகார்தான்!" என்றார் தலைமைப் பிக்ஷு.

இதில் அடங்கியுள்ள போதனையையும் நீதியையும் அவரவர் மனப் பக்குவத்திற்குத் தக்கபடி உணர்ந்து பயனடையலாம்.

புத்தகங்கள்

ஜென் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த தத்துவ ஞானி ஒருவர் நெடுங்காலம் ஜென் நூல்களை நன்கு பயின்று வந்தார். ஒரு நாள், திடீரென்று அவருக்கு உயரிய ஞானம் கிடைத்தது. உடனே அவர் தனது எல்லாப் புத்தகங்களையும் கொல்லைப் பக்கம் கொண்டு சென்று குவித்தார். அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தினார்.

தியானத்தில் அமரும்போது!

டைடோ கோகுஷி ஒரு பெரிய ஜென் மாஸ்டர். 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அவர். அவரது பெயருக்கு ‘பெரிய விளக்கு – தேசிய ஆசார்யர்’ என்று பொருள். ஓ-டோ-கான் முறையிலான ரின்ஜாய் ஜென் பிரிவை அவர்தான் நிறுவினார். அவர் உயரிய ஞானம் அடைந்த பின்னர் தன் மடாலயத்தை விட்டு, அந்தக் கால வழக்கப்படி -வெளி உலகத்திற்குத் தன் ஞானம் தெரியக்கூடாது- என்ற சம்பிரதாயப்படி மறைந்து போனார். சில காலம் சென்ற பிறகுதான் அவர் இருக்கும் இடம் தெரிய வந்தது. ஆர் க்யோடோ என்ற இடத்தில் ஒரு பாலத்தின் கீழே அவர் வாழ்ந்து வந்தார். அங்கிருந்தபடியே அவர் சக்கரவர்த்திக்கு ஆசானாக ஆனார். ஒரு நாள், தன் ஒதுங்கி இருக்கும் வாழ்க்கை பற்றி அவர் ஒரு கவிதையை எழுதினார்:

ஒருவர் தியானத்தில் அமரும்போது
பாலத்தின் மீது
வருகின்ற போகின்ற
மக்களைப் பார்க்கிறார் –
அடர்ந்த காடுகளில் வளரும்
மரங்களைப் போல!

பிறப்பு, இறப்பிலிருந்து விடுதலை பெறுவது எப்படி?

கோஷு என்பவர் யூ-இ என்ற ஒரு ஜென் மாஸ்டரிடம் வந்தார்.

"நான் பல வருடங்களாக ஜென் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஆனால், இன்னும் வெற்றி பெறவில்லை எனக்கு வழிகாட்டி அருளுங்கள்" என்று கூறினார்.

யூ-இ கூறினார்:- ஜென் பயிற்சியில் ஒரு ரகசிய ஜால வேலையும் கிடையாது. பிறப்பு, இறப்பிலிருந்து விடுதலை பெறுவதே அது!

கோஷு கேட்டார்:– பிறப்பு-இறப்பிலிருந்து ஒருவர் எப்படி விடுதலை பெறுவது?

யூ-இ சற்றுக் குரலை உயர்த்திச் சொன்னார்:- உன்னுடைய ஒவ்வொரு எண்ணமுமே பிறப்பு, இறப்புதான்!

இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் கோஷு பரவசமடைந்தார். ஒரு பெரும் சுமையைக் கீழே இறக்கி வைத்த உணர்வு அவருக்கு ஏற்பட்டது!

நிஜமான அற்புதம் எது?

மாஸ்டர் பாங்கெய் ருயுமோன் ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தபோது, அன்பைப் போதிக்கும் புத்தரின் பெயரைச் சொல்லி நிர்வாண நிலையை அடையலாம் என்று நம்பி வந்த ஒரு ஷின்ஷு போதகர், மாஸ்டரின் பேச்சைக் கேட்கத் திரளாக மக்கள் வந்து கூடுவதைக் கண்டு பொறாமை கொண்டார். அவரிடம் வாதம் செய்ய வந்தார். அவர் வந்தபோது மாஸ்டர் உரை ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அந்தப் போதகரோ பெரிதாகச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். அதனால் உரையை நிகழ்த்த முடியாமல் தடை ஏற்பட்டது. பாங்கெய் தனது பேச்சை நிறுத்தினார். என்ன சத்தம் என்று கேட்டார்.

அந்தப் போதகர், "எங்கள் பிரிவை நிறுவிய ஸ்தாபகர் ஒரு கரையிலும் அவரது சீடர் எதிர்க் கரையிலும் நின்றபோது அவர் ஓர் அற்புதம் புரிந்தார். கையில் ஒரு பிரஷை என் குரு இந்தக் கரையில் வைத்திருக்க, சிஷ்யர் எதிர்க்கரையில் பேப்பரை வைத்திருக்க, எனது குரு புனித நாமமான அமிதா என்ற நாமத்தை வானத்தின் வழியே எழுதி அனுப்பினார். உங்களால் அப்படிப்பட்ட அற்புதத்தை நிகழ்த்த முடியுமா?" என்று கேட்டார்.

பாங்கெய் பதில் கூறினார் இப்படி:
– ஒருவேளை உனது நரி அப்படிப்பட்ட வித்தையைச் செய்து காட்டி இருக்கலாம். ஆனால், அதற்குப் பெயர் ஜென் இல்லை! நான் நிகழ்த்தும் அற்புதம் என்னவென்றால் எனக்குப் பசி ஏற்படும்போது நான் சாப்பிடுவேன். எனக்குத் தாகம் எடுக்கும்போது நான் தண்ணீரைக் குடிப்பேன்!

சின்ன உண்மை

ஜென் பொன்மொழிகளில் ஒன்று:-

என் பின்னால் வராதே! ஏனெனில் நான் உன்னை வழி நடத்திச் செல்ல மாட்டேன்.
எனக்கு முன்னால் போகாதே! ஏனெனில் நான் உன்னைப் பின் தொடர்ந்து வர மாட்டேன்.
எனக்குப் பக்கத்திலும் வராதே! எனது வழியை விட்டு விலகிப் போ, என்னைத் தனியே விடு!

–மின்னும்…

About The Author