ஹிந்துஸ்தான்

வெள்ளிக்கிழமை பக்ரீத்.
வாப்பாவும் ஹுசேனும் பெருநாள் தொழு கைக்குப் போய்விட்டு வீட்டுக்குள் பிரவேசிக்கையில் மஞ்சள் நீரைக் கொண்டு தலையைச் சுற்றிப் போட்ட பர்வீன், தொடர்ந்து ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள்.

”வாப்பா, இன்னிக்கி டின்னருக்கு என்னோட ஃப்ரண்ட் சாதனா வர்றா.”

குண்டு வாப்பாவுக்கில்லை. ஹுசேனுக்குத்தான். அதிர்ந்து போன அவன் உடனே ஆட்சேபக் குரலெழுப்பினான்.

”நோ நோ. நா ஒரேயொருநாள் லீவ்ல திருச்சியி லிருந்து மெட்ராஸ்க்கு வந்திருக்கேன், நம்ம ஃபாமிலி யோட இருக்கலாம்னு, இன்னிக்கி அனாவசியமா எதுக்கு இன்னொரு தர்ட் பார்ட்டி?”

”ஐம் ஸாரி பிக் பிரதர். நா சாதனாவ ஏற்கனவே இன்வைட் பண்ணியாச்சு. அவ வர்றா. ஷி இஸ் கமிங்.”

”நோ மேடம். ஷி இஸ் நாட் கமிங். இரும்பு அடிக்கிற எடத்துல ஈக்கு என்ன வேலை?”

”அம்மா அவளுக்குன்னு ஸ்பெஷலா வெஜிடபிள் பிரியாணி செய்யப் போறாங்க. என்னம்மா?”

”வெஜிடபிள் பிரியாணியா? பக்ரீத் அன்னிக்கி ஒரு முஸ்லிம் வீட்ல வெஜிடபிள் பிரியாணியா? ஹை, வாட் ய ஜோக்! இங்க பார் பர்வீன், நாளக்கி சனிக்கிழம, எனக்கு ஸெகண்ட் ஷிஃப்ட். ஸோ, காலைல சுபுஹ் தொழுதுட்டு பஸ் புடிச்சி நா திருச்சிக்கிப் போய்ச் சேரணும். இந்த ட்வென்ட்டி ஃபோர் அவர்ஸும் நா நம்ப ஃபாமிலியோட இருக்கணும்னு நெனக்கிறேன். இதுல ஒரு மூணாவது அணி தலையிட நா அலவ் பண்ண முடியாது. உன் ஃப்ரண்ட, சாதனாவா ரோதனவா, அவள நாளக்கி வரச் சொல்லு.”

”யூ ஆர் ஸோ ஸெல்ஃபிஷ்.”

”நீ என்னவேணா சொல்லு, நா அக்ரீ பண்ண மாட்டேன். பக்ரீத் அன்னிக்கி நம்ம வீட்ல ஒரு காஃபிருக்கு விருந்தா? வாட் நான்ஸென்ஸ்!”

‘காஃபிர்’ என்கிற வார்த்தைப் பிரயோகம் பர்வீனை உசுப்பி விட்டு விட்டது. படபடவென்று பொரிய ஆரம்பித்து விட்டாள்.

”காஃபிர்? யூ மீன் நான்பிலீவர்? ஹவ் கேன் யூ ஸே தட்? அவங்க அப்பா அம்மா காட்டிக் குடுத்த கடவுள அவ ஸின்ஸியராத் தொழறா. சாதனா நாஸ்திகி இல்லை. காஃபிர் இல்லை. நீ ஒரு ஃபனட்டிக் மாதிரிப் பேசற. நாம எல்லாரும் இந்தியால சர்வ சுதந்திரத்தோட வாழறோம்னா, அது இங்க உள்ள மெஜாரிட்டி ஹிண்டூஸ்ஸோட பெருந்தமையாலதான். இத ஏத்துக்க. ஒன்னோட வக்கிரம புத்திய மாத்திக்க.”

”நீ என்ன கத்தினாலும் நா சொன்னது சொன்னதுதான். இந்தப் புனிதமான பெருநாள நா ஒரு நான்முஸ்லிமோட பங்கு போட்டுக்கறதா இல்ல.”

”ஒனக்கு அறிவு மழுங்கிப் போச்சு. நீ ஒரு படிச்ச முட்டாள். நீ ஒரு எக்ஸ்ட்ரிமிஸ்ட். நீ ஒரு டெர்ரரிஸ்ட். நீ பாக்கிஸ்தானுக்குப் போக வேண்டிய ஆள்.”

தங்கையின் ஆவேசத் தாக்குதலை ரகசியமாய் ரசித்தபடி ஹுசேன் பின்வாங்கினான். பேப்பர் படிக்கிற மாதிரி இந்த வாக்குவாதங்களை அவதானித்துக் கொண்டிருந்த வாப்பா, வாயைத் திறந்தார்.

”காம் டௌன் பர்வீன். இன்னிக்கி வீடு பூரா ஒரே கவிச்சி வாடையா இருக்கும்மா. ஒன்னோட ஃப்ரண்ட் வெஜிடேரியன், ரொம்ப சங்கடப்படுவா. நீ கூப்ட்டதுக்கு மறுப்பு சொல்ல முடியாம சம்மதம் சொல்லியிருப்பா. ஒங்கண்ணன் திருச்சிக்குப் போய்ச் சேரட்டும். சாதனாவ நாளக்கி வரச் சொல்லு. நாம எல்லாரும் அவளோடு சேந்து வடை பாயசத்தோட லஞ்ச் சாப்புடுவோம். ஒனக்கு டெலிக்கேட்டா இருந்தா, அவ நம்பரக் குடு. நானே அவகிட்ட பேசறேன்.”

வாப்பா சொன்னதைக் கேட்டு ஹுசைன் ஆசுவாசப் பெருமூச்சு விட, அடுத்து வாப்பா அவனை முன்னிலைப்படுத்திப் பேசினார்.

”ஹுசேன். ஒன்னோட ஐடியாவையெல்லாம் நீ கொஞ்சம் மாத்திக்கணும். மத்த மதத்தவங்கள வெறுக்கச் சொல்லி இஸ்லாம் போதிக்கல. நாம ஒரு காஸ்மாபாலிட்டன் சொஸைட்டில வாழ்ந்துட்டிருக்கோம். நமக்குப் பரந்த மனப்பான்மை வேணும்.” வாப்பா பேசப்பேச, ஹுசேனுக்கு அப்பாடா என்றிருந்தது.

சாயங்காலம் திரும்பவும் உடம்பில் ஸென்ட் அடித்துக்கொண்டு ஹுசேன் வெளியே கிளம்பியபோது வாப்பா வழி மறித்தார். ”என்னமோ ட்வென்ட்டி ஃபோர் அவர்ஸ் ஃபாமிலியோட இருக்கப் போறேன்னு சொன்ன மாதிரியிருந்தது?”

"அதுக்கு? என்னோட ஃப்ரண்ஸ்ஸயெல்லாம் போய்ப் பாக்க வேண்டாமா" என்று நழுவினான் ஹுசேன்.

மெரினாவில் காத்திருந்தான்.
அவள் வந்தாள்.
சிகப்புச் சுரிதாரில் அட்டகாசமாயிருந்தாள்.
இவனைப் பார்த்ததும் மலர்ந்து சிரித்தாள்.
”வந்து ரொம்ப நேரமாச்சா ஹுசேன்?”
”போ. நா ரொம்பக் கோவமாயிருக்கேன்.”
”அத சிரிச்சிண்டே சொன்னா?”

”என்ன செய்யச் சொல்ற, ஒன்னப் பாத்தவொடன உருகிப் போயிர்றேனே. அதிருக்கட்டும், ஏய் மண்டு, நா எஸ்ஸெம்மெஸ் குடத்தேன்ல, நாம இன்னிக்கி பீச்ல மீட் பண்றோம், அப்பறம் சேந்து ஒரு ஹோட்டேல்ல டின்னர் சாப்புடறோம்னு? என்ட்ட நீ சரின்னுட்டு, வீட்டுக்கு வர்றேன்னு பர்வின்ட்ட சொல்லியிருக்க?”

”என்ன செய்ய ஹுசேன், பர்வீன் ரொம்பக் கம்ப்பல் பண்ணினா, நேக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. நல்ல வேள ஒங்க வாப்பா, மை வருங்கால மாமனார், ஃபோன் பண்ணினாரா நா தப்பிச்சேனா! ஆமா, பர்வீன எப்படி சமாளிச்ச?”

”அத ஏன் கேக்கற சாதனா, ஒரு ஆட்டம் ஆடிட்டா, என்ன பாக்கிஸ்தானுக்குப் போடான்னு சபிச்சிட்டா. ஆனா, இதுல ஒரு நல்ல காரியமும் நடந்திருக்கு. ஒரு டிராமா போட்டு வாப்பாவோட விசாலமான மனசத் தெரிஞ்சிக்கிட்டேன். நீ வேணா பார் சாதனா, வாப்பா நமக்கு ஓக்கே சொல்லிருவார்.”

”ஹுசேன்?”
”ம்ம்?”
”நீ பாக்கிஸ்தானுக்குப் போறச்ச என்னயும் கூட்டிண்டுதான போவ?”
‘ச்சீ மண்டு’ என்று சாதனாவின் மண்டையில் செல்லமாய் ஒரு குட்டு வைத்தான்.

ரெண்டு பேரும் கை கோர்த்துக் கொண்டு சுதந்திரமாய்ச் சிரித்தார்கள்.

(கல்கி, 09.03.2008)

About The Author