ஒரு அடிமையின் கதை-7

அதனால் வாடிக்கையாக வர்ஜீனியா மாநிலத்தில் நடக்கும் கதை இதுதான். இளைஞர்கள் தங்கள் நிலத்தை உழுது பாடுபடுவதை விட்டு மைனர் போல ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள். இளைஞிகளோ ஏதாவது உதவாக்கரைப் புத்தகத்தை வைத்து வாசித்துக் கொண்டிருப்பார்கள்.

இல்லாவிட்டால் அக்கம் பக்கத்தவருடன் வம்பு. ஏதாவது உருப்படியாக மாடுகளைப் பாதுகாத்து பால் கறப்பது அல்லது வீட்டுக்கு வேண்டிய வேலைகளைச் செய்வது என்று செய்யமாட்டார்கள். தந்தையோ தான் பட்ட கடனுக்காக வக்கீலுக்கும் கோர்ட்டுக்குமாக அலைந்து கொண்டிருப்பார். பழைய ஆடம்பரத்தை விட்டொழித்துத் தாங்களே தங்கள் நிலத்தில் பாடுபடலாம் என்ற எண்ணமே தோன்றாது, தங்கள் குழந்தைகளுக்கு உடல் உழைத்துப் பாடுபட்டு நேர்மையாக வாழவேண்டும் என்று வாழ்க்கைக் கல்வியைக் கற்றுத்தர மாட்டார்கள். இதனால் யாருக்குமே தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாது. வறட்டு கெளரவம் அவர்களைத் தங்கள் அடிமைகளை விற்பதற்கு அனுமதிக்காது. அதனால் முடிந்தவரை ஏதோ கஞ்சியோ கூழோ கொடுத்து அடிமைகளைத் தன்வசம் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். அக்கம் பக்கத்தவர்கள் "இவனால் அடிமைகளைக் கூட வேலைக்கு வைத்துக் கொள்ள முடியவில்லை " என்று இழிவாகப் பேசிவிடக்கூடாது என நினைப்பார்கள். தன்னை முதலில் பாதுகாத்துக் கொள்வதுதான் இயற்கையின் நியதி என்று சொல்வதற்கேற்ப எப்போது தனக்கே சாப்பிட வழியில்லை என்ற நிலை வருகிறதோ அதுவரை அடிமைகளை விற்பதைத் தள்ளிப் போடுவார்கள். உழைப்பிற்கும் புத்திசாலித்தனத்திற்கும் எதிராக கவுரவமும் முட்டாள்தனமும் போடும் சண்டையில் அவசியமில்லாமலே பரம்பரை பரம்பரையாக அடிமைகள் வேலையில் தொடர்வார்கள்.

பட்டுப்போன நிலத்திலிருந்து தங்கள் சுகமான சோம்பேறித்தனமான வாழ்க்கைக்குத் தேவையான விளைச்சலைப் பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்- அது வானத்தை வில்லாக வளைக்கும் முயற்சி என்று அறியமாட்டார்கள். அந்த நிலங்களைமட்டும் கருத்துடன் வளப்படுத்தியிருந்தால் நிச்சயமாக நல்ல பலனைத் தந்திருக்கும். ஆனால் இடைவெளிவிடாமல் பயிரிடப்பட்ட புகையிலைப் பயிர்களும் கொடுமைப்படுத்தப்பட்ட அடிமைகளும் தந்த சாபங்கள் வறண்ட நிலமாக காட்சி தந்தன. அந்த நிலச்சுவாந்தார்கள் சுதந்திர மனிதர்கள் வாழும் பூமிக்கும் அடிமைகளைப் பயன்படுத்தும் பூமிக்கும் உள்ள வித்தியாசத்தை உணரும்வரை இப்படித்தான் வறுமையில் வாடுவார்கள். இது அவர்களின் சோம்பேறித்தனத்திற்கும் அடிமைகளுக்கு இழைக்கும் கொடுமைகளுக்கும் கடவுள் தரும் பரிசு.

அடிமைகள் அனுபவிக்கும் கொடுமைகள் எல்லா இடங்களிலும் பொதுவானதுதான். ஆனால் கொடுமையின் உச்சம் என்றால் கரோலினா மற்றும் வர்ஜீனியாவிலுள்ள பருத்தித் தோட்டங்களில் வேலை பார்ப்பவர்கள் நிலைமையைத்தான் சொல்ல வேண்டும்

மாரிலான்ட் மற்றும் கரோலினா பகுதிகளில் புகையிலைத் தோட்டங்களில் வேலை பார்ப்பவர்கள் சந்திக்கும் கொடுமைகள் ஏராளம். இதற்கெல்லாம் அந்தத் தோட்டத்து முதலாளிகளை மட்டும் குறை சொல்ல முடியாது. அடிமைகளின் மேற்பார்வையாளர்கள் இழைக்கும் கொடுமைகள்தான் அதிகம். புகையிலைத் தோட்டங்களில் பருத்தித் தோட்டங்களைப் போல அதிகம் வேலைப்பளு என்று சொல்ல முடியாது. வருஷம் முழுவதும் வேலை இருக்கும் என்று கூற முடியாது. புகையிலைத் தோட்டங்களில் புகையிலை பயிரிடத் தொடங்கியதிலிருந்து அது முதிர்ந்து பறிக்கும் நாள் வரை தொடர்ந்து இடைவெளியில்லாமல் வேலையிருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அவை மே மாதத்தில் பயிரிடப்பட்டு பனிக்காலம் வருவதற்குள் பறித்து எடுத்துவிட வேண்டும். புகையிலையைக் காயவைத்த பிறகு அவற்றைப் பதப்படுத்தி சுருட்டுவது போன்றவை சாவகாசமாகவும் சுலபமாகவும் செய்யக்கூடியவைதான். எல்லா வேலையும் ஜனவரி மாதத்தில் முடிந்து விடுவதால் பனிக்காலத்தில் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். அந்த இடைப்பட்ட காலத்தில் வீட்டுக்குத் தேவையான மரவேலைகள் செய்வது, வேலிகளை சரி செய்வது, தோட்டத்தை அடுத்த பயிருக்காகத் தயார் செய்வது போன்று வேலைகள் இருந்தாலும் அவை ஒன்றும் அவ்வளவு சிரமமானவை அல்ல. மாரிலான்ட் வர்ஜீனியா இரண்டு இடங்களிலும் அடிமையாக இருந்ததால் இரண்டு இடங்களுக்கும் அடிமைகளை நடத்தும் விதத்தில் ஒன்றும் வித்தியாசமில்லை – ஒன்றைப்பார்த்தால் இன்னொன்றைப் பார்க்க வேண்டாம் என்றுதான் சொல்லுவேன்.

(தொடரும்)

About The Author