மனிதரில் எத்தனை நிறங்கள்! (73)

O, photoprocessing machine, I command you to reveal to me that which is hidden!
– The Shutterbug Follies – Jason Little

தேசிகாச்சாரிக்கு ஆர்த்தி என்ற பெயரில் வந்திருக்கும் பெண் நிஜமாகவே சந்திரசேகரின் மகள் தானா என்பதில் இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் அவளை நேரில் பார்த்த பின் நீங்கியது. திடீரென்று ஆனந்தியே நிற்பது போன்ற உணர்வை ஆர்த்தி அவருக்கு ஏற்படுத்தினாள்.

தேசிகாச்சாரியை அமிர்தம் ஆர்த்திக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். "ஆர்த்தி, சார் நம்ம குடும்ப வக்கீல்."

ஆர்த்தி அவரைப் பார்த்து கை கூப்பினாள். தேசிகாச்சாரிக்கு அவளைப் பார்த்தவுடனேயே பிடித்து விட்டது.

"இது ஆர்த்தியோட தாத்தா, பாட்டி"

தேசிகாச்சாரி நீலகண்டனையும் பார்வதியையும் கடுமையாகப் பார்த்தார். சிறிதும் பொறுப்பில்லாமல் பேத்தியை தூக்கிக் கொண்டு ஓடிய அவர்கள் மீது அவருக்கு இருந்த கோபம் இன்னும் குறையவில்லை. பேத்தியைப் பின்பற்றி கைகூப்பிய அவர்களை கண்டிப்புடன் ஒரு பார்வை பார்த்து விட்டு ஆர்த்தி பக்கம் திரும்பியவர் பின் அவர்களைப் பார்க்கவில்லை.

"உங்களுக்கு இப்ப முன்னத்து மாதிரி முடியறதில்லை. அதனால எல்லாத்தையும் உங்க மகன் தான் பார்த்துக்கறார்னு கேள்விப்பட்டேன். உங்க ஆரோக்கியம் இப்ப எப்படி இருக்கு" அமிர்தம் கேட்டாள்.

"எல்லாம் போய் சேர்ற சமயம் வந்துடுச்சும்மா. பகவான் எப்ப கூப்பிடுவான்னு காத்துகிட்டிருக்கேன். இந்தப் பொண்ணு கிட்ட கொஞ்சம் தனியா பேச வேண்டி இருக்கு. சில பேப்பர்ஸ்ல கையெழுத்தும் வாங்க வேண்டி இருக்கு…"

‘தனியா’ என்ற வார்த்தையை அவர் அழுத்திச் சொன்னதும் அமிர்தம் ஆர்த்தியிடம் சொன்னாள். "அப்படின்னா பார்த்திபன் ரூமுக்குக் கூட்டிகிட்டுப் போம்மா. சாருக்குப் படியேறி உன் ரூமுக்கு வரக் கொஞ்சம் சிரமமாகும்"

ஆர்த்தியும் தேசிகாச்சாரியும் பார்த்திபன் அறைக்குச் செல்வதைப் பார்த்த மூர்த்தி பார்த்திபன் அறையில் நடப்பதை ஒட்டுக் கேட்க உள்புறத்தில் இருந்து முடியாது, பலரும் பார்ப்பார்கள் என்று கணக்குப் போட்டு அடுத்த நிமிடம் தோட்டத்துப் பக்கமாக சென்று பார்த்திபன் அறை ஜன்னலுக்கருகே வெளியே நின்றான்.

தேசிகாச்சாரி எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் தர்மலிங்கத்தின் உயிலின் சாராம்சத்தை ஆர்த்தியிடம் சொன்னார். கேட்டு ஆர்த்தி திகைத்துப் போனாள். முன்பே சுருக்கமாக மூர்த்தி சொல்லி இருந்தாலும் கூட வக்கீலின் வாயால் கேட்ட போது திகைப்பாய் தான் இருந்தது. திகைப்பை சமாளித்து மீண்ட போது ஒரு கேள்வியைக் கேட்காமல் இருக்க அவளால் முடியவில்லை. "தாத்தா ஏன் அப்படி எழுதினார்?"

"கேட்டேன். ஆனா அவர் சொல்லலை."

"அப்படின்னா பெரியத்தைக்கும் சின்னத்தைக்கும் கம்பெனியில் இருபதிருவது சதவீதம் தான் பங்கு இருக்கா"

"இல்லை. உங்க பெரியத்தைக்கு இப்ப நாற்பது சதவீதம் பங்கும், உங்கப்பாவுக்கும் உனக்கும் அறுபது சதவீதமும் இருக்கு"

ஆர்த்தி குழம்பினாள். "அப்படின்னா சின்னத்தையோட இருபது சதவீதம்"

"அமிர்தம் வீட்டுக்காரர் ஏதோ வியாபாரம் ஆரம்பிக்க பணம் தேவைப்பட்டதால் அவங்க தங்களோட 20 சதவீதத்தை சிவகாமிக்கு வித்துட்டாங்க. உங்க தாத்தா உயில்ல இன்னொரு அம்சம் இருக்கு. நீங்க யாருமே கம்பெனி பங்கை வெளியாருக்கு விற்க முடியாது. குடும்பத்துக்குள்ளே தான் விற்க வாங்க முடியும். அதனால் இப்ப சிவகாமி கிட்ட 40 சதவீத பங்கு இருக்கு. ஆனா அசையா சொத்து இப்பவும் உனக்கு தான் நிறைய இருக்கு….." அவர் சொத்து விவரங்களை சொல்லிக் கொண்டே போனார்.

ஆர்த்திக்குக் கேட்கக் கேட்க தலை சுற்றியது.

"ஆனா ஒரு விஷயத்தை நீ ஒத்துக்கத் தான் வேணும். இப்ப உங்க கம்பெனி மதிப்பு எங்கேயே போயிடுச்சு. இருக்கற சொத்தும் நல்லா பராமரிக்கப்பட்டு வருது. காரணம் சிவகாமியோட திறமை தான். உங்க தாத்தா ரொம்ப கஷ்டப்பட்டு செஞ்சதை எல்லாம் அலட்டிக்காம உன் பெரியத்தை செஞ்சு சம்பாதிக்கறா. உன் தாத்தா ரொம்ப கறாரான மனுஷன். முரட்டுத் தனமா இருப்பார். ஆனா அவரைப் புரிஞ்சுக்க முடிஞ்சுது. கணிக்க முடிஞ்சது. ஆனா உன் பெரியத்தையை என்னால் புரிஞ்சுக்க முடிஞ்சதில்லை…."

அதற்கு மேல் சிவகாமியைப் பற்றிச் சொல்ல தேசிகாச்சாரி துணியவில்லை. ஆனால் தன்னால் முடிஞ்ச எச்சரிக்கையை செய்தார். "நீ பொதுவாகவே ஜாக்கிரதையாய் இருக்கணும். யாரையும் கண்மூடித்தனமாய் நம்பிடக்கூடாது. எத்தனை பேருக்கு உன் சொத்து மேல கண், எத்தனை பேருக்கு நிஜமாவே உன் மேல் அக்கறைன்னு சொல்ல முடியாது. இப்ப சில பேப்பர்ஸ்ல நீ கையெழுத்துப் போடணும். சொத்து மேல் உனக்கிருக்கிற உரிமை முழுசா பதிவாக இந்த கையெழுத்து வாங்கறேன். இனி நீ எதையும் படிச்சுப் புரிஞ்சுக்காம எதிலும் கையெழுத்து போட்டுடக் கூடாது…"

தேசிகாச்சாரி நீட்டிய காகிதங்களை ஆர்த்தி வெறித்துப் பார்த்தாள். பாண்டிச்சேரியில் மிகச்சிறிய வீட்டில் வாழ்ந்த வாழ்க்கை சொர்க்கம் என்று தோன்றியது. "எனக்கு இந்த சொத்து எதுவுமே வேண்டாம்னு தோணுது…"

தேசிகாச்சாரிக்கு அவள் மீது பச்சாதாபம் தோன்றியது. "பணமும், சொத்தும் அதிகமாயிருந்தா அது தூரத்துக்குப் பகட்டா இருக்கும். அதை வச்சிருக்கறவனுக்குத் தான் அதை வச்சுக் காப்பாத்தறது எப்படிப்பட்ட கஷ்டம்னு தெரியும். ஆனாலும் பணம் இல்லாட்டி உலகத்துல எதுவும் கிடைக்காது. அதனால கையெழுத்து போடும்மா"

ஆர்த்தி தயக்கத்துடன் அவர் காட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டாள்.

தேசிகாச்சாரி அதை எடுத்து கையில் வைத்துக் கொண்டு சொன்னார். "நான் சொன்னதை நீ மறக்கக் கூடாது. படிக்காமல் கையெழுத்துப் போடறது இதுவே கடைசி தடவையாய் இருக்கணும். இப்ப கூட எதுக்கெல்லாம் கையெழுத்து போட்டிருக்கிறாய்னு நீ தெரிஞ்சுக்கணும்…" அடுத்த கால் மணி நேரம் கையில் இருந்த காகிதங்களில் எழுதப்பட்டிருப்பது என்னவென்று விளக்கினார்.

தேசிக்காச்சாரிக்கு அங்கிருந்து கிளம்பும் போது தன் கடமையை சரியாக செய்து விட்ட திருப்தி இருந்தாலும், இந்தப் பெண் மிகவும் மென்மையானவளாகவும், யதார்த்தமாகவும் இருப்பது மனதில் ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தியது. சிவகாமியைப் போன்ற ஒருத்தியை சமாளிக்க இவளால் முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு வரவில்லை. ‘எல்லாம் விதிப்படி தான் நடக்கும்’ என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டார்.

ஆர்த்தி பிறகு தாத்தா பாட்டியிடம் உயில் விவரத்தைச் சொன்ன போது நீலகண்டன் சொன்னார். "அந்த மூர்த்தி சரியாத் தான் சொன்னான் பார்த்தாயா. அது சரி பார்வதி, அந்த வக்கீல் ஏன் ஒரு மாதிரியா நம்மளைப் பார்த்தார்."

பார்வதி சொன்னாள். "அந்தாளைப் பொருத்தவரைக்கும் நாம் குழந்தையைத் தூக்கிகிட்டு ஓடுன ஆள்கள், அவ்வளவு தான்…."

"என்ன, குழந்தையைத் தூக்கிகிட்டு ஓடினமா. என்னமோ புள்ளை பிடிக்கறவனைச் சொல்ற மாதிரி சொல்றே. நம்ம பேத்தியை நாம எடுத்துகிட்டு போனோம். என்னமோ அந்தாள் பேத்தியைத் தூக்கிகிட்டு போன மாதிரி அவரு பார்க்கிறாரு. எனக்கு என் பழைய கணக்கு வாத்தியார் ஞாபகம் வருது. தப்பா கணக்கைப் போட்டுட்டா அவரும் இப்படித்தான் பார்ப்பார்"

"நீங்க மட்டும் என்னவாம். கல்யாணமான புதுசுல சின்னச் சின்ன தப்புக்கெல்லாம் என்னை அப்படித் தான் பார்ப்பீங்க…."

அவர்களது வாக்குவாதம் தொடர்ந்தாலும் ஆர்த்தி காதில் அதெல்லாம் விழவில்லை. தேசிகாச்சாரி சொன்ன வார்த்தைகளே காதில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. இந்த சொத்துகளை எல்லாம் வைத்துக் கொண்டு யாராவது மனநிம்மதியைக் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

(தொடரும்)

About The Author

1 Comment

  1. shyam

    Hello Ganesan ,
    The story has got a very nice plot..But somehow I feel the story is being dragged too much or I am growing impatient to know what happens next .. When will the story be updated again? Keep posting!

Comments are closed.