அமானுஷ்யன்-51

ஆச்சார்யாவின் மனைவி லலிதா ஆனந்திற்குப் போன் செய்து அவன் தம்பி கிடைத்து விட்டானா, ஏதாவது தகவல் அவனிடம் இருந்து கிடைத்ததா என்று கேட்டு போன் செய்திருந்தாள். ஆனந்த் அவன் கிடைத்து விட்டான், ஆனால் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்லி நேரில் ஒருமுறை வந்து எல்லாவற்றையும் விவரமாகச் சொல்வதாக உறுதியளித்து விட்டு போனை வைத்தான்.

பின் அம்மாவிற்குப் போன் செய்தான். அவன் போன் செய்த போது அக்‌ஷய் கிளம்பிப் போயிருந்தான். சாரதா தான் பேசினாள். அவள் குரலில் உயிரில்லை. அம்மாவின் துக்கம் அவனையும் சங்கடப்படுத்தியது.

அவள் ஆதங்கத்துடன் மகனைக் கேட்டாள். "அவன் ஏன் ஆனந்த் என்னமோ மாதிரி பேசுகிறான். இனி திரும்பியே வராதவன் மாதிரி எல்லாம் பேசுகிறான். ஏனப்படி?"

ஆனந்திற்குத் தொண்டையை அடைத்தது. கஷ்டப்பட்டு வார்த்தைகளைத் தேடிப் பேசினான். "அவன் ஞாபக சக்தி போனதில் இருந்து அவனுக்கு மறுபடி அது போய் விடுமோ என்று பயம் அம்மா. அதனால் தான் அப்படி பேசுகிறான்…"

சாரதாவுக்கு ஓரளவு மனம் சமாதானம் அடைந்தது. பின் கேட்டாள். "அவனுக்கு சிகிச்சை செய்யப் போகிற டாக்டர் என்ன ஆனந்த் சொல்கிறார்?"

ஆனந்திற்கு எதுவும் விளங்கவில்லை. "எந்த டாக்டர்?"

"அவன் ஞாபக சக்தியை திருப்பிக் கொண்டு வர மருத்துவம் பார்க்கிற டாக்டர். அந்த டாக்டர் என்ன சொல்கிறார்?"

அக்‌ஷய் என்ன காரணம் சொல்லி அங்கிருந்து கிளம்பி இருக்கிறான் என்பது ஆனந்திற்கு விளங்கியது. "கண்டிப்பாய் குணப்படுத்த முடியும் என்று சொல்லி இருக்கிறார் அம்மா. நல்ல கைராசிக்கார டாக்டர்"

சாரதா மனம் நிம்மதி அடைந்தது. "அது போதும் ஆனந்த் எனக்கு"

ஆனந்த் மெல்ல சொன்னான். "அம்மா….."

"என்ன ஆனந்த்?"

"நீங்களும் வழக்கம் போல் கடவுளை நல்லா பிரார்த்தனை செய்யுங்கள்"

ஆனந்த் போனை வைத்து விட்டான். ஆனந்திற்கு என்றுமே அவளுடைய அதிகப்படியான கடவுள் பக்தி, பிரார்த்தனைகள், விரதங்கள் எல்லாம் பிடித்ததில்லை. அவனே இப்போது அப்படி சொன்னது அவளை ஆச்சரியப்பட வைத்தது. ஒருவேளை அவளுக்குத் தெரியாமல் எதையோ இருவரும் மறைக்கிறார்களோ? ஆனால் அவளுக்கு அந்த எண்ணம் வந்த வேகத்திலேயே போய் விட்டது. ‘இது நாள் வரை தம்பியை அவன் பார்க்கவில்லை. அதனால் பெரியதாக அவனுக்கு அக்கறை இருக்கவில்லை. இப்போது தம்பியைப் பார்த்த பிறகு அவனுக்கு பாசம் அதிகமாகி விட்டது. அதனால் தான் அவன் வேகமாக குணமடைய வேண்டும் என்று ஆசைப்பட்டு பிரார்த்தனை செய்யச் சொல்கிறான்’ என்ற எண்ணம் எழுந்தது. மனதில் இளைய மகன் கிளம்பிப் போன வருத்தம் இருந்தாலும் அதையும் மீறி ஒரு நம்பிக்கையும் தைரியமும் வந்தது. எல்லா வேலைகளையும் விட்டு விட்டு பூஜையறைக்குப் போனாள்.

 

********

சிபிஐ மனிதன் ஆனந்தின் செல்போனில் இருந்து பேசப்பட்ட எண்களையும், அவனுக்கு போன் வந்த எண்களையும், பேசப்பட்ட நேரங்களையும் ஆராய்ந்து கொண்டு இருந்தான். அவன் கவனத்தை முக்கியமாகக் கவர்ந்தது ஆனந்த் தன் வீட்டுக்குப் பேசிய நேரங்கள் தான். ஆனந்த் சென்னையில் இருந்து டெல்லிக்கு வந்த நாள் முதல் ஆரம்பத்தில் தினமும் தன் தாயிற்குப் போன் செய்து வந்த சமயம் இரவு நேரங்கள் தான். அதுவும் பேசப்பட்ட நிமிடங்கள் பெரும்பாலும் மூன்று நிமிடங்களுக்குள் தான். ஆனால் கடந்த மூன்று நாட்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை பேசியிருக்கிறான். ஒவ்வொரு முறையும் பேசியதும் குறைந்தது பத்து நிமிடங்களாகவாவது இருந்தது.

மேற்போக்காகப் பார்த்தால் அது ஒரு பெரிய விஷயமில்லை என்றே தோன்றியது. ஏதாவது குடும்ப விவகாரம் அல்லது தாயின் ஆரோக்கியக் குறைவு போன்ற விஷயங்கள் இருந்தது கூட காரணமாக இருக்கலாம். ஆனால் இன்று காலை ஆச்சார்யா மனைவியிடம் பேசி முடித்து உடனடியாக அவன் தன் வீட்டுக்குப் போன் செய்தது தெரிந்த போது ஏனோ உள்ளுணர்வு எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்தது. இது அமானுஷ்யனால் வந்த அனாவசிய பயமா, இல்லை உள்ளுணர்வு தானா என்று அவனுக்கே குழப்பமாக இருந்தது. ஏனென்றால் இதே மாதிரி தான் சஹானா வீட்டில் இருந்த அவளுடைய மாமியாரின் தங்கை மகனும் ஒரு நெருடலான சந்தேகத்தைக் கிளப்பி இருந்தான். ஆனால் அதன் பின் அவர்கள் வீட்டு போனை ஒட்டுக் கேட்டும் பெரிதாக ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

ஆனால் ஆனந்த் விஷயத்தில் அலட்சியமாக இருப்பது நல்லதல்ல என்ற எண்ணம் அவனுக்கு பலமாகத் தோன்ற ஆரம்பித்தது. போனை எடுத்தான்.

மந்திரி குரல் பரபரப்பாகக் கேட்டது. "என்ன? ஏதாவது தகவல் கிடைத்ததா?"

"இல்லை. அந்த தாடிக்காரன் ஆள்களும் ஆனந்த் தங்கியிருக்கும் ஓட்டல் பக்கம் அலைகிறார்கள் என்ற தகவல் எனக்கு வந்திருக்கிறது. நீங்கள் எதற்கு அமானுஷ்யன் அங்கு வரலாம் என்று நமக்கு வந்த சந்தேகத்தை அவர்களிடம் சொன்னீர்கள்"

"நாம் சும்மா இருக்கிறோம் என்கிற மாதிரி அந்த தாடிக்காரன் சொல்லிச் சொல்லி என் உயிரை எடுத்தான். அதனால் தான் நீங்கள் சொன்னதை நான் அவனிடம் சொன்னேன். ஆனால் அந்த காட்டான்கள் அங்கே வந்து கூட்டம் போடுவார்கள் என்று யாருக்குத் தெரியும்."

பொங்கி வந்த கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு சிபிஐ மனிதன் சொன்னான். "அமானுஷ்யன் எப்படிப்பட்டவன் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருக்கையில் அவர்களும் அங்கு வந்து திரிவது அவனைப் பிடிக்கிற வேலைக்கு இடைஞ்சல் தான்"

"எனக்குப் புரிகிறது. ஆனால் அவர்களிடம் யார் பேசுவார்கள்? எனக்கே அவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்தால் சில நேரங்களில் ஆழம் தெரியாமல் காலை வைத்து விட்டோமோ என்று தோன்றுகிறது."

"எதற்கும் அந்த ஆனந்தின் செல்போன் பேச்சையும் டேப் செய்வது நல்லது என்று நினைக்கிறேன். அதிகாரபூர்வமான வழியில் போவதானால் எங்கள் டைரக்டருக்கும் தகவல் சொல்லி அனுமதி பெற வேண்டும். ஆனால் பணத்திற்காகவும், பயத்தினாலும் வெளியே யாருக்கும் தெரியாமல் நமக்கு செய்து தருகிற ஆள்கள் கிடைப்பார்கள்……"

"ஏன் திடீரென்று….?"

"இன்றைக்கு காலையில் ஆச்சார்யா மனைவி ஆனந்திடம் பேசி இருக்கிறாள். அவளிடம் பேசி முடித்தவுடனேயே ஆனந்த் தன் வீட்டுக்குப் போன் செய்து பேசி இருக்கிறான்….இதெல்லாம் என்ன என்று தெரியாமல் அவனைப் பின் தொடர்வதும், கண்காணிப்பதும் அர்த்தமில்லாதது என்று தோன்றுகிறது…."

ஒரு நிமிட மௌனம் சாதித்த மந்திரி பின் சொன்னார். "சரி அதையும் செய்து விடலாம்"

**************

டெல்லியின் புறநகர்ப் பகுதியில் ஆள் நடமாட்டமில்லாத வீதி ஒன்றின் கடைசி வீட்டிற்கு பன்னிரண்டு பேர் வேறு வேறு நேரங்களில் வந்து சேர்ந்தனர். அந்த வீட்டின் ஹாலில் வைக்கப்பட்டிருந்த நாற்காலிகளில் வந்து அமர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. ஒரு சிலர் தெரிந்த முகங்களைப் பார்த்து லேசாகத் தலையசைத்தார்கள். மற்றவர்கள் அதைக் கூடச் செய்யவில்லை.

குறுந்தாடி மனிதன் கடைசியாக வந்து சேர்ந்தான். வந்தவன் ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் அவர்களைக் கூர்ந்து பார்த்தான். பின் சொன்னான்.

"நமக்கு ஆனந்த் என்கிற அந்த சிபிஐ அதிகாரியை அந்த சைத்தான் எப்படியும் தொடர்பு கொள்வான் என்கிற தகவல் வந்திருக்கிறது. நம் ஆள்களை ஆனந்த் தங்கி இருக்கும் ஓட்டல் பகுதிக்கு அனுப்பி இருக்கிறேன். அவர்கள் எல்லோரும் அந்த சைத்தானை அருகில் இருந்து பார்த்து பழகியவர்கள். அவன் அங்கே ஒரு வேளை வந்து, அவர்கள் அவனை அடையாளம் தெரிந்து கொண்டு விட்டால் அவர்கள் உங்களில் மூன்று பேரைத் தொடர்பு கொள்வார்கள்……."

குறுந்தாடி மனிதன் பேரைச் சொல்லாமல் அவர்களில் மூன்று பேரை சுட்டிக் காட்டினான். "உங்கள் மூன்று பேருக்கும் இங்கிருக்கும் ஆட்களில் மூன்று மூன்று பேரை உதவிக்குத் தருகிறேன். இந்த மூன்று நால்வர் குழுவிற்கும் ஒரே ஒரு வேலை தான். அந்த சைத்தானைக் கொல்வது. பணம், ஆயுதம், உபகரணங்கள் எல்லாம் நீங்கள் எத்தனை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். என்ன வேண்டும் என்று கேளுங்கள். நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன். அவன் சாக வேண்டும் என்பது தான் நம் குறிக்கோள்… உங்களில் யார் அவனைக் கொன்று காண்பிக்கிறீர்களோ அவர்களுக்கு வாழ்நாள் எல்லாம் பணம் பற்றிய கவலையில்லாமல் வாழ வழி செய்யப்படும்….."

அவர்கள் அனைவரும் அவன் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

அவன் தொடர்ந்து சொன்னான். "…இந்த முயற்சியில் நீங்கள் இறக்க நேரிட்டால் உங்கள் குடும்பத்தினர் பணக் கவலை இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழ வழி செய்யப்படும். இறந்த உங்களுக்கு சொர்க்கத்தில் ஒரு சிறப்பிடமும், பூமியில் பெரும்புகழும் இருக்கும் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை….."

About The Author

2 Comments

  1. தோழி

    இந்த வலை தளத்திற்க்கு நான் வந்தது இதுவே முதல் தடவை.. இந்த தொடர் சிறப்பாக இருக்கின்றது.. அனால் இதன் பாகத்துக்கு முதல் பாகமான 50 வது பாகத்துக்கு கொண்டு செல்லும் சுட்டி இணைக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..

  2. prakash

    அடிக்கடி சொன்னதே சொல்லி ரம்பம் …..மேற்போக்காகப் பார்த்தால் அது ஒரு பெரிய விஷயமில்லை என்றே தோன்றியது. ஏதாவது குடும்ப விவகாரம் அல்லது தாயின் ஆரோக்கியக் குறைவு போன்ற விஷயங்கள் இருந்தது கூட காரணமாக இருக்கலாம். ஆனால் இன்று காலை ஆச்சார்யா மனைவியிடம் பேசி முடித்து உடனடியாக அவன் தன் வீட்டுக்குப் போன் செய்தது தெரிந்த போது ஏனோ உள்ளுணர்வு எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்தது. இது அமானுஷ்யனால் வந்த அனாவசிய பயமா, இல்லை உள்ளுணர்வு தானா என்று அவனுக்கே குழப்பமாக இருந்தது. ஏனென்றால் இதே மாதிரி தான் சஹானா வீட்டில் இருந்த அவளுடைய மாமியாரின் தங்கை மகனும் ஒரு நெருடலான சந்தேகத்தைக் கிளப்பி இருந்தான். ஆனால் அதன் பின் அவர்கள் வீட்டு போனை ஒட்டுக் கேட்டும் பெரிதாக ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

Comments are closed.