தானம் (2)

ஆஸ்பத்திரிலேருந்து வந்திண்டிருக்காளாம். கூப்பிடுவா. மூணு பேரைக் கூட்டிக்கோ. கனமான பாடி – என்ன பண்றது பிணம் தூக்கறது கூடுதல் உத்யோகம்… முந்தி போகமாட்டோம். இப்ப போறோம் வயிறு ரொம்பனுமே…

"பாபத்திலே மகா பாபம் இலுப்பச்சட்டி தானம் வாங்கறதுதான். பத்தாவது நாள்ளே கொடுப்பா சில பேர் பதிமூணாவது நாள்ளே. துக்கமும் பாபமும் போற நாளாம். செத்துப்போனவா வீட்டைச் சுத்திச் சுத்தி வருவாளாம் ஆவி ரூபத்திலே. இலுப்பச்சட்டியிலே நல்லெண்ணைய ஊத்தி வீட்டிலே உள்ளவா அதப் பாக்கனும். முக பிம்பம் தெரியும். செத்துப் போனவன் பண்ணின பாபம், வீட்டிலே உள்ளவாளோட தோஷம் எல்லாம் எண்ணெயிலே எறங்கிடும். அந்த இலுப்பச் சட்டிய தானமா நாங்க வாங்கிக்குவோம். அத்தனை பேருடைய பாவத்தையும் ஏத்துண்டதா அர்த்தம். தயிர் சாதம் கட்டிக் கொடுப்பா.

எல்லாத்தையும் தூக்கிண்டு யார் கண்ணிலேயும் படாம போயிடனும். வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு எண்ணெய் ஸ்தானம் பண்ணனும். பாவ மூட்டையை சுமக்கறவனுக்கு அறுவது ரூவாய்க்கு பேரம் பேசறா. லட்ச ரூவா கொடுத்தாலும் விஷயம் புரிஞ்சவா இலுப்பச்சட்டி தானம் மட்டும் வாங்கவே மாட்டா. வேற வழி – வேறு தொழில் தெரியாது. என் தல மொறயோட இது முடிஞ்சுடும். ஒரு பையன் எனக்கு ரகுராமன், பி.ஏ. கடைசி வருஷம். ஏதாவது கம்பெனியிலே இழுத்துவிடனும்.
இலுப்பச்சட்டி தானம் வாங்கறவனுக்கு ஏழு தலைமுறைக்கு பாபம் விடாதாம்.

உடம்பிலே ஓடறது ரத்தமில்லே பாபம். பாப வெள்ளம். என்னோட இது முடிஞ்சுடனும். பிரேத போஜனம்னு கேள்விப்பட்டிருக்கேளா. பெரிய ஜமீந்தார், ராஜாக்கள் செத்துப்போனா கொடுக்கறது. பிரேதம் கூடத்திலே கிடக்கும். பக்கத்திலே தலவாழ இலையிலே ருசி ருசியான பதார்த்தங்களோட ராஜ சாப்பாடு பரிமாறியிருக்கும். ஒரு கையால் பிரேதத்தை அணைச்சுண்டு சாப்பிடனும். சாப்பிட முடியுமோ… நிறைய சம்பாவனை நிலம் நீச்சுன்னு எழுதி வைப்பாளாம். செத்தவன் மோட்சத்துக்குப் போனா பட்டினி கிடக்கக்கூடாதாம்… எங்க தாத்தா சாப்பிட்டிருக்கார்…."

"எனக்கு நாழியாச்சு… அவா அவா காரியத்த முடிச்சுண்டு கான்பூர் கல்கத்தா நாக்பூர் தில்லின்னு ரயிலேறனும். சரியா அஞ்சு மணி…" அதட்டலாகச் சொல்லிவிட்டு மோட்டார் சைக்கிளை உதைத்துக் கிளப்பினார். இன்னிப் பொழுதுக்கு அறுபது ரூபாய் நிச்சயம்.இலுப்பச்சட்டிய சக்ரவர்த்தி நாடார் கடையிலே போட்டா ஒரு இருவத்தஞ்சு தருவார். ஆக எம்ளத்தஞ்சு.

ரகுராமன்கிட்டே முனை முறியாம கொடுக்கனும். கம்யூட்டர் சம்பந்தமா ஒரு புத்தகம் வாங்கனும்னான். கெட்டிக்காரன். குடும்பக் கஷ்டம் தெரிஞ்சவன். இந்த பொணம் பாக்கற பொழப்பு என்னோட தொலயட்டும். மூணு தலமொறயா ஒடம்பு முழுக்க பொண வாசனை.

மங்களம் பரம சாது. இந்த பேரங்களையும் பேச்சுக்களையும் கேட்டா உடைஞ்சு போயிடுவாள். மெல்லிசான மனசு. ரகுராமனைப் படிக்கவச்சு கரையேத்திடனும்னு குறி. எல்லாத்தையும் மனசுக்குள்ளே போட்டு முழுங்கிடறா எரிச்சுக்கறா. ரகு பிறந்தப்புறம் அவ வாசனையே மறந்து போச்சு. தொடவே மறந்தாச்சு. கிட்டபோனா பிரேத வாடை வீசும்னு பயம். இதிலென்ன சிருங்காரம் வேண்டியிருக்கு?

பாதி தூரம் வரைக்கும் ஒழுங்காக சமர்த்தாகப்போன ஓட்டைச் சைக்கிள் நடுவில் மக்கர் செய்தது. மேம்பாலம் ஏறியபோதே கிறீச் கிறீச்சென தீனமாக சப்தமிட்டது. அப்போதே கவனிச்சிருக்கனும். அதுவும் என்ன பண்ணும். அப்பா வயசு. டயர் ட்யூப் மாத்தனும். பணம்? பச்சண்ணா சந்தில் இருக்கற ரிடைர்ட் ஜட்ஜ் சுப்ரமண்ய அய்யர் மூணு மாசமாக் கிடக்கார். தொன்னூத்தி ரெண்டு தாண்டியாச்சு. உடம்பு முழுக்க வியாதி. சகலமும் படுக்கையிலேதான். கோடீஸ்வரர். தினம் தினம் டாக்டர் வந்து பார்த்து உதட்டைப்பிதுக்கிட்டுப் போறார். போன பாடில்லே. ஏதாவது ஆச்சுன்னா என்னத்தான் கூப்பிடுவா. கோதானம் பண்ணுவா. பசுமாட்டு வாலப் புடிச்சுண்டு நேரே மோட்சத்துக்குப் போயிடறதா ஐதீகம். கோதானத்திலே வர பசுமாட்ட நவநீதக் கோனார்கிட்டே வித்தா ரெண்டாயிரம் வரும். ரகுராமனுக்கு நல்லதா ஒரு சட்டை பாண்ட்… மங்களத்திற்கு ஒரு ஜோடிப் புடவை. சின்னதா கல்லுவச்ச மூக்குத்தி – மரணத்துக்குப் பின்னால் வாழ்க்கை உண்டுன்னு பெரிய கோயில்லே ஒரு உபன்யாசகர் பேசினது ஞாபகத்திற்கு வந்தது. நெஜமாலும் யாருக்கு இருக்கோ இல்லையோ மரணத்திற்குப் பின்னாலே எனக்கு ஜீவனம் உண்டு. மரணம் முக்கியம்.

சைக்கிளைக் கடாசிவிட்டு நடந்தே போக வேண்டியது தான். ஓட்டமாக ஓடி சிவகங்கைப் பூங்காவிற்கு குறுக்கு வழியிலே போனா மேலவீதி வந்துடும். சகாநாயக்கன் தெரு கிட்டதான். இப்பவே நாலே முக்கால்…. திட்டுவாங்கறது சகஜம். வருமானம் போயிடுமே… ரகுவிற்கு புஸ்தகம் வாங்கனுமே. வியர்த்துக் கொட்டியது. அதப்பாக்க முடியுமோ.

வாசல்லே ஏகப்பட்ட மனுஷர்கள். தெருநெடுக கார்கள். உள்ளே சாஸ்திரிகளின் மந்திரம் கேட்டது. எல்லாம் முடிஞ்சு போச்சோ. மனுஷன் குதறிடுவானே… பெண்கள் பளபள வென்று ஓரமாக நின்று கொண்டிருந்தனர். பெரிய படம் அலங்கார ஃபிரேம் போட்டு ரோஜாப்பூ மாலையில் – மனுஷன் சிரிப்பது போலிருந்தது.

சாஸ்திரிகள் அதட்டினார். "திரும்புடா… பொம்மனாட்டிங்க வரிசையா வந்து இலுப்பச்சட்டி எண்ணெயிலே பிம்பம் பாருங்கோ… புருஷாள்ளாம் பார்த்தாச்சா. எலே திரும்பி சுவத்தப் பார்த்து நில்லு… சோத்து மூட்டையைத் தூக்கிக்கோ… இலுப்பச்சட்டிய ஜாக்கிருதயா எடுத்துக்க… யாரையும் பார்க்கப்படாது. விடுவிடுனு போயிடனும்… யாரும் இவனப் பார்க்காதீங்கோ.. எலே புதுசாடா நீ… சின்னப் பய்யனா இருக்கே…."

"ஆரு ஆரு ஆரது… யாரு தொழிலுக்குப் போட்டியா…"

அழுக்கு வேஷ்டி துண்டோடு எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தவனை, "சீக்கிரம் சீக்கிரம்" என்று அவசரப் படுத்தினார் சாஸ்திரிகள்.

"யாரது… யாரு அது அடே…"

"ரகு… ரகு ரா…மா…ரகு… ரகு…!"

About The Author

1 Comment

  1. sri

    What a great story. I think this is the best of all stories in nilacharal. What a signature of writing. It definitely has the theme for a cinema..

Comments are closed.