அவன் பறந்து போனானே!

தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டதையொட்டிக் கலைஞர் கருணாநிதி எழுதிய பாட்டு நாம் அனைவரும் அறிந்ததே! ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பாடகர்கள் பலர் இப்பாடலைப் பாடியிருந்தார்கள். இதை முதல்முறை கேட்கும் சமயத்தில், மிகுந்த ஆவல் எனக்கு – யார் முதல் வரியைப் பாடப் போகிறார்கள்?! இசைப் புயலின் பதில் எனக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது – முதலில் கேட்ட குரல் டி.எம். சௌந்தரராஜன் என்ற ‘துகுலுவ மீனாட்சி ஐயங்கார் சௌந்தரராஜ’னின் சிம்மக் குரல்!

அப்படியே ரஹ்மானைத் தழுவி முத்தமிட வேண்டும் போலிருந்தது – அதாவது, இரண்டாவது வரியில் ரஹ்மான் ‘கேளீர்’ என்று குறிலுக்குப் பதிலாக நெடிலைப் பாடியிருந்ததை மறக்கும் அளவுக்கு! சௌந்தரராஜன் தமிழ்த் திரையுலகுக்குச் செய்திருக்கும் சேவையைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அவரைத் தவிர, அப்பாடலைத் தொடங்குவதற்குச் சரியான ஆள் வேறு யாராக இருக்க முடியும் என்ற எண்ணம் எழுகிறது.

தமிழ்த் திரையுலக இசையை, பாடகர்களைச் சார்ந்த முறையில், இரண்டு காலங்களாகப் பிரிக்கலாம் – டி.எம்.எஸ் வரும் முன், டி.எம்.எஸ் வந்த பின் என்று. பழங்காலத் திரைப்படங்களில், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளுக்கு முன் (டி.எம்.எஸ் முதலில் பாடியது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்து ஆறில்) கர்நாடக இசையில் கைதேர்ந்தவர்களே திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்கள். படத்திலும் நிறையப் பாடல்கள் இடம்பெற்றிருக்கும். அதை நடிகர்களே பாடவும் செய்வார்கள்.

இப்படி, பாடகர்களையே நடிகர்களாய்ப் பார்த்து விட்டதால், நடிகர்கள் அல்லாத பின்னணிப் பாடகர்கள் திரையிசைக்கு வரத் தொடங்கிய பொழுது, அவர்களுக்கு அத்தனை அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதாவது, தியாகராஜ பாகவதர் போன்ற பாடகர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் பின்னணிப் பாடகர்களுக்குக் கிடைக்கவே இல்லை. இதை மாற்றி, பின்னணிப் பாடகர்களின் பெயர்களும் தனியாக டைட்டிலின்போது இடம்பெறும்படிச் செய்த பெருமை டி.எம்.சௌந்தரராஜனையே சேரும். அது ஓரிரவில் நடந்த காரியம் இல்லை. முதலில், ‘கிருஷ்ண விஜயம்’ படத்தில் பாகவதர் பாணியில் பாடத் தொடங்கினார் டி.எம்.எஸ். பிறகு, மெல்ல மெல்லத் தமிழ்த் திரையிசையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். அதன் பின், தன் சகாக்களுக்கும் பின்னணிப் பாடகர்கள் எனும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தரப் பெரும் பாடுபட்டு, வெற்றியும் பெற்றார். ஆனால், இதற்கிடையில் நடந்த சம்பவங்களும், அவருக்கு ஏற்பட்ட இடையூறுகளும் ஆயிரக்கணக்கானவை!

அது மட்டுமில்லை, தமிழ்த் திரையிசையில் தனி ராஜ்யமே நடத்திய டி.எம்.எஸ், தொடக்கத்தில் தனக்கான அங்கீகாரத்தைப் பெறவே பலகாலம் போராட வேண்டியிருந்தது. அவர் முதலில் பாடிய, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தி ஆறில் பதிவு செய்யப்பட்ட ‘கிருஷ்ண விஜயம்’" படப் பாடல்கள் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு வெளிவரவில்லை. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதிலிருந்து அவருக்குக் கொஞ்சம் வாய்ப்புகள் வரத் தொடங்கின. சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், சுசர்லா தக்‌ஷிணாமூர்த்தி, சுதர்சனம், கே.வி.மஹாதேவன் போன்ற மாமேதைகளிடம் ஆங்காங்கே சில பாடல்களைப் பாடினார் டி.எம்.எஸ். இதில் நிறையப் பாடல்கள் பதிவு செய்யப்பட்டுப் பல ஆண்டுகளுக்குப் பிறகே வெளிவந்தன. கடின உழைப்புக்குப் பிறகும் பெரிய அங்கீகாரம் எதுவும் இல்லாமலே காலம் போய்க்கொண்டிருந்தது.

அப்பொழுதுதான், எம்.ஜி.ஆரு-க்குப் பாடும் வாய்ப்பு டி.எம்.எஸ் அவர்களுக்குக் கிட்டியது ‘மந்திரிகுமாரி’ படத்தில். ஒரு பாட்டுப் பாடினாலும், "ஆஹா, இது என்ன அற்புதமான ஒரு புதுக் குரல்!" என்று தமிழகமே வியந்தது.

இதற்கிடையில், நடிகர் திலகத்துக்கும் பாட வாய்ப்பு வந்தது – ‘தூக்கு தூக்கி’ படத்தின் ஒலிப்பதிவின் சமயத்தில், பாடலாசிரியர் மருதகாசியின் மூலம். அப்போது சிவாஜி கணேசன் சொன்னதைக் கேட்டால், இன்று நமக்குக் கொஞ்சம் சிரிப்பு வரலாம். "ஜெயராமன் அண்ணன்தானே வழக்கமாக எனக்குப் பாடுவார்! ஏன் புதுக்குரலை வைத்துப் பரிசோதனை செய்ய வேண்டும்? புதுக்குரல் பொருந்துமோ, பொருந்தாதோ?" என்பது போல நடிகர் திலகம் பதிலளித்தாராம். சௌந்தரராஜனோ, இதைச் சவாலாக ஏற்றுக்கொண்டு, சிவாஜியின் குரலை நன்றாகப் படித்துவிட்டு, படத்தின் மூன்று பாடல்களைச் சன்மானம் பெற்றுக்கொள்ளாமலேயே பாடிக்கொடுத்தார். சிவாஜிக்குப் பிடித்திருந்தால் பார்க்கலாம் என்று எல்லோரும் முடிவு செய்து விட்டனர். இன்று, ‘தூக்கு தூக்கி’ படத்தைப் பார்த்தால் எல்லாப் பாடல்களையும் பாடியது டி.எம்.எஸ்-தான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

‘தூக்கு தூக்கி’ படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த அதே ஆண்டில், எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து ‘கூண்டுக்கிளி’ படத்தில் நடித்தார்கள். அப்படத்திலும் பாடும் வாய்ப்பு டி.எம்.எஸ்-ஸுக்கு வந்தது. ஒரு வித்தியாசம், இம்முறை வாய்ப்பு வந்தது கோரஸ் பாடுவதற்கு! ஆனால், எழுத்தாளர் தஞ்சை ராமையாதாஸுக்கு டி.எம்.எஸ் குரல் ரொம்பவும் பிடித்துப் போகவே, அவருக்கே முழுப்பாடல்களையும் பாடும் வாய்ப்பைக் கொடுத்து விட்டார். அப்பொழுது டி.எம்.எஸ்-ஸின் திறமையை முழுதாய்க் கண்ட எம்.ஜி.ஆர், "இனி இவர்தான் எனக்குப் பாட வேண்டும்!" என்று சொல்லிவிட்டார். அப்பொழுது, அடுத்த வந்த எம்.ஜி.ஆர் படம்தான் ‘மலைக்கள்ளன்’. அதற்குப் பிறகு, சிவாஜிக்கும் சரி, எம்.ஜி.ஆருக்கும் சரி, அவர் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார் – இருவரும் மறையும் வரை! இளையராஜாவின் இசையில் சிவாஜிக்குச் சில பாடல்களை எஸ்.பி.பி பாடினாலும், ராஜா – டி.எம்.எஸ் ஜோடியில் வந்த ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு’ போன்ற பாடல்களை மறக்க முடியுமா!!

கமலஹாசனும் சரி, ரஜினிகாந்தும் சரி, திரையில் பாடும்பொழுது, சில சமயம் அவர்களின் உடல்மொழியைப் பார்த்தால் (குறிப்பாக கமல்), எஸ்.பி.பி பாடுவது நம் மனக் கண்களில் தெரியும். ஆனால், சிவாஜி, எம்.ஜி.ஆர் பாடல்களை டி.எம்.எஸ் மேடையில் தோன்றிப் பாடினால் கூட, அங்கே சிவாஜியும், எம்.ஜி.ஆரும்தான் நம் கண்களுக்குத் தென்படுவார்கள். அத்தனை கச்சிதமாகப் பாடுவார் டி.எம்.எஸ்!!

டி.எம்.எஸ்-ஸின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணம் – தமிழ்மொழியின் மீது அவருக்கு இருந்த ஆளுமை! இத்தனைக்கும் அவர் தாய்மொழி சௌராஷ்டிரம். இன்று திரைப்படங்களில் எப்படியெல்லாமோ தமிழைப் பாடுகிறார்கள்; உச்சரிப்பு சகிக்கவில்லை! டி.எம்.எஸ் பாடல்களில், ஏதேனும் ஒரு வரியில், ஒரு சின்ன உச்சரிப்புப் பிழைக்குக் கூட வாய்ப்பே இல்லை! அதிலும் கண்ணதாசன் போன்ற அதிபுத்திசாலிகள் ஒவ்வொரு வார்த்தைக்கும் இரண்டு அர்த்தங்கள் இருப்பது போலெல்லாம் பாட்டெழுதுவார்கள், ‘அத்திக்காய் காய் காய்’ பாடலைப் போல. அந்த வரிகளையெல்லாம் கூட, முழு அர்த்தமும் புரியும்படி, ஸ்பஷ்டமாகப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!

மொழியின் மீது எத்தனை ஆளுமையோ, இசையின் மீதும் அத்தனை ஆளுமை உண்டு அவருக்கு. ‘அம்மா என்றழைக்காத’, ‘மலையோரம் மயிலே’ போன்ற எத்தனையோ பாடல்களைக் கல்யாணி ராகத்தில் விதவிதமாக இளையராஜா தரட்டுமே, தமிழ்த் திரையிசையுலகின் ஈடு இணையில்லாக் கல்யாணி, ‘அம்பிகாபதி’ படத்தில் இடம்பெற்ற ‘சிந்தனை செய் மனமே!’ பாடல்தான்! சொல்லப்போனால், அப்பாடலின் பதிவின்போது இசையமைப்பாளர் ஜி.ராமநாதன், "ரொம்ப கர்னாடிக்கா பாடற! சினிமாக்குக் கொஞ்சம் லைட்டாப் பாடணும்" என்று சொன்னாராம்! ‘மாதவிப் பொன் மயிலாள்’ பாடலில் அற்புதமான ஒரு கரஹரப்ரியா, ‘நீயே உனக்கு என்றும்’ பாடலில் குதூகலமான ஒரு ‘சுத்த தன்யாசி’ என்று அவருடைய இசைத் திறமையைப் பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். ஒருமுறை, தன் பெயரின் மூலமாகவே சங்கீத மும்மூர்த்திகள் தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்த்ரி ஆகிய மூவரின் அருளும் தனக்கு கிடைத்துவிட்டது என்று சொன்னார் டி.எம்.எஸ். அதுதான் மூவரின் பெயர்களிலிருந்தும் முதல் எழுத்தை எடுத்துச் (ஆங்கிலத்தில்) சேர்த்தால் டி. எம். எஸ் வந்துவிடுமே! அவருடைய கர்னாநாடக இசைப் சங்கீதப் பாடலொன்றைலை நீங்கள் கேட்டதேயில்லை எனில், பின்வரும் தொடுப்பினைசொடுக்கவும்!.

http://www.youtube.com/watch?v=h–sHLpguvA

எத்தனை விதமான பாடல்கள் – அப்பப்பா!! காதல், பாசம், சோகம், தத்துவம், சமத்துவம் என்று நீண்டு கொண்டே போகும் பட்டியலில் எல்லா வகையான பாடல்களிலும் தூள் கிளப்பியிருக்கிறார் மனிதர்! இதற்கிடையில், ‘உள்ளம் உருகுதய்யா!’ என்று கேட்போர் மனதை உருகவைக்கும் ஆன்மிகம் வேறு! தீவிர முருக பக்தரான டி.எம்.எஸ், பல பக்திப் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியுமுள்ளார். ‘பலப் பரிக்‌ஷை’ எனும் படத்திற்கு இசையமைத்ததோடு, ‘பட்டினத்தார்’, ‘அருணகிரிநாதர்’ போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். கிட்டத்தட்ட பத்தாயிரம் திரைப் பாடல்களும், மூவாயிரம் பக்திப் பாடல்களும் பாடியிருக்கிறார்.

முக்தா வி.ஸ்ரீநிவாசன் அவர்கள் ஓர் உரையாடலின்போது சொன்னதாவது, "ராஜீவ் காந்தியின் முதல் ஆண்டு நினைவஞ்சலி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த சமயத்தில், நினைவு மண்டபத்தில் சோனியா அமைதியாய் அஞ்சலி செலுத்திக்கொண்டே நடந்துகொண்டிருந்தார். "உள்ளம் உருகுதய்யா" என்று அங்கு நின்றுகொண்டிருந்த டி.எம்.எஸ் பாட, ஸ்தம்பித்து நின்றுவிட்டார் சோனியா! பாடுபவரைப் பற்றி முழுவதும் விசாரித்து விட்டுத்தான் தன் நடையைத் தொடர்ந்தார். அதுவே டி.எம்.எஸ்-ஸின் குரல் உண்டாக்கக்கூடும் தாக்கம்" என்று முக்தா விவரித்தார்!

மொத்தத்தில், ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ என்று ‘பாட்டுக்குப் பாட்டெடுத்து’ப் பாட, ‘ஆண்டவன் படைச்சான்’ சௌந்தரராஜனை. ‘பொன்னை விரும்பும் பூமியிலே’ ‘திருடாதே பாப்பா திருடாதே’ என்று அவர் மூலம் நல்லறிவு புகட்டினான். ‘வாழ நினைத்தால் வாழலாம்’ என்றும், ‘வாழ்ந்து பார்க்க வேண்டும்’ என்றும் போதனைகள் தந்தான். ‘உலகம் பிறந்தது’ நமக்காக என்று புரியவைத்தான். இவையனைத்தும் செய்தும் ‘கடவுள் செய்த பாவம்’, சௌந்தரராஜனைப் பறித்துக்கொண்டு நமக்குச் ‘சோதனை மேல் சோதனை’ தந்ததுதான். ‘ஆறு மனமே ஆறு’ என்று நம்மைத் தேற்றிக்கொண்டாலும், ‘போனால் போகட்டும் போடா’ என்று விட்டுவிட முடியவில்லை. ஆனால், இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால், முருகனடி சேர்ந்துவிட்ட சௌந்தரராஜன், இனி ‘உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை’ என்று சொல்லி ‘அழகென்ற சொல்லுக்கு’ப் பொருளாய் இருக்கும் கந்தன் அரவணைப்பிலேயே இருந்துவிடுவார் என்பதுதான்.

இத்தருணத்தில், பல நாட்களாக என் மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு சிறிய விஷயத்தைச் சொல்லத் தோன்றுகிறது. வட இந்தியாவின் இளந்தலைமுறையினர் பழைய இந்திப் பாடல்களை அறிந்து கொண்டு பாராட்டும் அளவிற்கு, நம்மூர் இளைஞர்கள் தமிழ்த் திரைப்படங்களின் பழமையைப் பாராட்டுவதில்லை என்பதே அது! கர்ணன் திரைப்படம் அண்மையில் வெளியானபொழுது நன்றாக ஓடியதென்பது உண்மைதான். ஆனால், படத்தைப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியவர்களில் எத்தனைபேர் தமது ஐ-பாடுகளில் ‘இரவும் நிலவும் வளரட்டுமே’, ‘நான் பேச நினைப்பதெல்லாம்’, ‘கண் போன போக்கிலே’ போன்ற பாடல்களைக் கேட்கிறார்கள்? வட இந்தியாவில் நிலைமையே வேறு – இன்னும் ‘மேரே சப்னோன் கி ராணி’, ‘குன்குனா ரஹீ ஹேன்’ போன்ற பாடல்களை இன்னும் தேடிப்போய்க் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். வட இந்தியாவின் கிஷோர் குமார், முஹமது ரஃபி, மன்னா டே போன்றவர்களுக்கு நம்மூர் சௌந்தரராஜனும், பி.பி.ஸ்ரீநிவாசும் எந்த விதத்திலும் இளைத்தவர்கள் இல்லை என்பதை இத்தலைமுறையினர் உணர வேண்டும்! முதலில், நம் பழமையை நன்கு அறிந்து உணர வேண்டும்! வரலாற்றுப் புத்தகங்களை எப்படிப் புத்தக அலமாரியிலேயே தூசி படிய வைத்துவிட்டோமோ, அது போலப் பழைய தமிழ்ப் பாடல்களையும் விட்டுவிடக் கூடாது! ரஹ்மானுக்கும், ராஜாவுக்கும் மத்தியில் பழைய பாடல்களையும் அவ்வப்போது தேடிச்சென்று கேட்க வேண்டும்! டி.எம்.எஸ் காலத்திற்கு முன் வந்த ‘பூமியில் மானிட ஜென்மம்’, ‘காண வேண்டாமோ’ போன்ற பாடல்களையும் கேட்க வேண்டும்!

இளைஞர்களுக்கு இப்பாடல்கள் பிடிக்காதென்பதில்லை – இப்பாடல்களைப் பற்றி அறியும் வாய்ப்புகள் அவர்களுக்கு அதிகம் இல்லை என்பதுதான் உண்மை! அறியாமையால் பல நல்ல பாடல்களை நாம் மறந்துவிடக்கூடாது! சௌந்தரராஜன் போன்ற நல்ல பாடகர்களின் புகழ் அடுத்தடுத்த தலைமுறைகளைச் சென்று சேரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால், புகழ் மட்டுமின்றி அப்பாடல்களும் சென்றடைய வேண்டும்! பிற்காலத்தினர், டி.எம்.எஸ் என்றொரு அற்புதப் பாடகர் இருந்தார் என்று தெரிந்துகொண்டால் மட்டும் போதாது, அவருடைய பாடல்களையும் கேட்டு அனுபவிக்க வேண்டும்! அப்படி, நாளைய தலைமுறையினருக்கு இப்பாடல்களை எடுத்துச் செல்லும் பொறுப்பும் கடமையும் நம்மையே சாரும்!

About The Author