குதிரை (2)

உள்ளே நுழையும் போதே வராண்டாவை அடுத்த முதல் ஹாலில் சியாமளா அமர்ந்திருப்பாள். அந்த ஹாலில் மட்டும் அத்தனையும் புதிய காற்றாடிகள். எல்லாம் அவள் யோகம்.

முதல் நாள் நுழைகையிலேயே அவளைக் கண்டுபிடித்து விட்டேன். அவளுக்கு என்னைத் தெரியவில்லை. நாங்கள் தானே அவளைப் பார்த்தவாறே நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைந்தோம். அவள் என்றைக்காவது எங்களை நிமிர்ந்து பார்த்திருக்கிறாளா?

அவள் அப்படியிருப்பதில் அந்த அழகே பரிணமித்தது. அவள் பலரிடமும் அப்படித்தான் இருக்கிறாள் என்பதைப் பிறகு தான் தெரிந்து கொண்டேன்.

குடும்பத்தோடு நகரின் தொலைதூரத்தில் எங்கோ இருக்கிறாள். ஒரு பையன், என்றார்கள். தன் கட்டழகு குறைந்து விடும் என்று அத்தோடு நிறுத்திக் கொண்டாளோ என்னவோ? அவளை மாதிரி அழகியைக் கட்டிக் கொண்டவன் நிச்சயம் ஒரு குழந்தையோடு இருக்க முடியாது. ஆசை அவனை அப்படிப் பிடுங்கித் தின்னும் என்பது நிச்சயம்.

ஆனால் சியாமளா ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது நிச்சயம் அது அவற்றின்பாற்பட்ட விஷயம் தான் என்று தோன்றியது எனக்கு. ஒரே ஒரு குறை. அவளது அழகுக்கும் இருப்புக்கும் அவள் இந்தக் க்ளார்க் உத்தியோகத்திற்கு வந்திருக்கக்கூடாது.

படித்த படிப்பு அவளை அந்த அளவுக்குத் தான் கொண்டு நிறுத்தியிருக்கிறது. தன்னுடைய அழகிலும் வனப்பிலும் மட்டுமே கவனத்தோடு இருந்த ஒரு பெண்ணுக்கு வேறு முன்னேற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. இவைகளைப் பற்றிய கவனம் மட்டுமே முன்னெடுக்கப்படும் போது பிற முயற்சிகள் மூலையில் முடங்கிக் கொள்ளத்தானே செய்யும்? அப்படித்தான் சியாமளா, கிடைத்த இந்த க்ளார்க் உத்தியோகத்தில் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

கோப்புகளைக் கட்டிக்கொண்டு மாரடித்தாள் அங்கே. தலை நிமிராமல், எழுதிக் கொண்டிருந்தாள். அது ரொம்பவும் கட்டுப்பாடான அலுவலகம். லைப்ரரி மாதிரி அமைதியாக வேலை செய்து கொண்டிருப்பார்கள் எல்லோரும். பின்டிராப் சைலன்ஸ்‚
அந்த அலுவலகத்திற்குள் இயங்கிக் கொண்டிருந்த இன்னொரு கிளை அலுவலகத்தில் தான் நான் இயங்கிக் கொண்டிருந்தேன்.
எனக்கான அலுவலர், வாரத்தில் நான்கு நாட்கள் முகாம் சென்றுவிடக் கூடியவர். வெள்ளிக்கிழமை மட்டும் தான் தலைமையகம் வருவார். திங்கட்கிழமை இருந்தாரென்றால் பிறகு அந்த வாரம் பூராவும் இருக்க மாட்டார். அவர் இருக்கும் அன்று தான் வேலை எனக்கு. நோட்ஸ் எடுத்தல், தட்டச்சு செய்தல்… மற்ற நாட்களில் இதர அலுவலகப் பணிகள். நான் ரொம்பவும் ப்ரீயாக இருந்தேன். ஆகையால் என் கவனம் முழுமையும் சியாமளாவிடமே இருந்தது.

வெளியே போகையில், வருகையில், அவளை நோட்டம் விடாமல் வர இயலாது என்னால். அவள் அழகு அப்படி‚ உட்கார்ந்து எழுதுவது கூட என்னவொரு அழகு. கூந்தல் (அவளுக்கு இருப்பதற்குப் பெயர் கூந்தல் தான். தலைமுடி அல்ல.) இடது தோளில் முன்புறம் தொங்கிக் கொண்டிருக்கும், அத்தோடு சேர்ந்து பேன் காற்றுக்கு அசையும் மல்லிகைச் சரம்.

அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்கையில் கூலி தரும் அந்த இடத்திற்கு ஒரு மதிப்புக் கொடுக்க வேண்டாமா? பக்தி வேண்டாமா மனதில்? அப்படியா அதை முன்பக்கம் தூக்கிப் போட்டுக் கொள்வது? அதுவே அவளது அகங்காரத்தின் அடையாளம்‚ ஒரே மனசு, ரசிக்கவும் செய்யுது, இப்படியும் சொல்லுதே‚

அந்த ஹாலில் இருப்பவர்கள் எல்லோரும் ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் போல் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் எல்லோர் மனதிலும் சியாமளா இருந்தாள். படமாய் எந்நேரமும் ஓடிக் கொண்டிருந்தாள். நிச்சயம் அவளைத் தவிர்த்துவிட்டு அவர்களால் வேலை செய்ய முடியாது.

அவள் எழுந்து பாத்ரூம் போகப் பின்பக்கம் வரும்போதெல்லாம் எல்லோர் பார்வையும் அவள் மேல் தவறாமல் படியும். நான் அமர்ந்திருந்த கூண்டு அறையைத் தாண்டித்தான் அவள் போயாக வேண்டும். அப்பொழுது கூட அவள் பார்வை தெரிந்தவன்… ஒரே ஊர்க்காரன் – என்கிற அளவில் மருந்துக்குக் கூட லேசாக என்மீது விழாது.

அதுதான் எனக்கு வயிற்றெரிச்சல். ஆம். வயிற்றெரிச்சல் தான். அதனால் தான் அவள் பின்னழகையும், முன்னழகையும், இடையழகையும் நினைத்து நினைத்து ஏங்கி ஏங்கிப் பேசும் என் பக்கத்து இருக்கை நண்பர்களின் பேச்சை நானும் ரசிக்க ஆரம்பித்தேன்.

அலுவலகத்தில் எவரிடமும் நான் அவளைத் தெரிந்தவளாகக் காட்டிக் கொள்ளவேயில்லை. அவளின் இருப்பு மேலும் அந்த எண்ணத்தை என்னிடம் உறுதிப்படுத்தியது.

எல்லோரும் அவளை மறைமுகமாக சைட் அடித்தார்களேயொழிய ஒருவரும் அவளிடம் நெருங்கி அசடு வழியவில்லை. அந்த அளவுக்கான தைரியம் எவருக்கும் இல்லை என்று சொல்வதை விட எவருக்கும் அதற்கெல்லாம் அங்கு நேரம் இல்லை. அது ரொம்பக் கட்டுப்பாடான அலுவலகம். பணிபுரிபவர்கள் எல்லோருமே ரொம்பவும் பொறுப்பானவர்கள். கடைக்கோடி கன்னியாகுமரி வரை அந்த அலுவலகத்தின் அதிகார எல்லை நீண்டிருந்தது. வெறுமே வந்தோம், அமர்ந்தோம் என்ற கைக்கு அகப்பட்ட வேலையைச் செய்துவிட்டு எழுந்து போக முடியாது. பத்துமணி ஆபீஸ் என்றாலும், எல்லோரும் அநேகமாகக் காலை எட்டு எட்டரைக்கே வந்து வேலையை ஆரம்பித்து விடுவார்கள். இரவு அதே போல் எட்டரை ஒன்பது என்று தான் வீடு செல்வார்கள். சில சமயம் ராத்திரித் தங்கலும் கூட உண்டு அங்கே.

அப்படிப்பட்ட ஒரு இறுக்கமான அலுவலகத்தில் தான் அந்த இறுக்கத்தை நெகிழ்த்துவது போல் அசைந்து அசைந்து கொடிபோல் வந்து போயக் கொண்டிருந்தாள் சியாமளா. அவளை அந்த அலுவலகத்தில் போட்டிருக்கக்கூடாது என்பது தான் என் எண்ணம். சொல்லப்போனால், அங்கு முக்கியப் பொறுப்பில் உள்ளோர் எவரின் விருப்பத்திலும் அங்கு வந்ததாகத் தெரியவில்லை. அவள் அந்த அலுவலகத்திற்கு மாறுதலில் வந்ததும் எவரின் விருப்பத்திற்கும் உகந்ததாக இல்லை என்பது தான் உண்மை.

இதை இந்த ரீதியில் யோசிக்க முனைந்த போது தான் மெல்ல மெல்லச் சில விஷயங்கள் புலப்பட ஆரம்பித்தன.
“அவ கிடக்கா தேவிடியா… வேறே எதையாவது பேசுங்க…” என்று கரகரத்த குரலில் தாடிக்கார ராமலிங்கம் என்னிடம் கூறியபோது நான் விழித்துக் கொண்டேன்.

என் மனதில் அதுநாள் வரை ஓடிக்கொண்டிருந்த சில அடையாளங்கள் அப்பொழுது தான் உறுதிப்பட ஆரம்பித்தன.
இவளோடு சேர்ந்து வேலை பார்க்கும் மற்ற பெண்கள் எப்படியிருக்கிறார்கள்? இவள் எப்படியிருக்கிறாள்? ஏன் எல்லோரோடும் சேர்ந்து இவள் வருவதோ, செல்வதோ இல்லை? மற்றவர்கள் எல்லாம் ஒன்றாயச் சேர்ந்து சாப்பிடுகிறார்கள்… இவள் மட்டும் ஏன் தனியாய் அமர்ந்து சாப்பிடுகிறாள்?

இப்படியெல்லாமான சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்த என் மனதில் அந்தக் கொக்கி கிடைத்தபோது பலமாகப் பற்றிக் கொண்டேன் நான்.

எனக்கென்ன வேறு வேலை இல்லையா என்ன?

இருந்தாலும் இதை அறிந்து கொள்வதில் ஒரு ஆர்வமும், சுவாரஸ்யமும் இருந்தது எனக்கு. மேலும் அவள் என் ஊர்க்காரியாயிற்றே?

படுபாவி‚ ஒரு அப்பாவியை மடக்கித் தன் கைக்குள் போட்டுக் கொண்டாளே? வசதி வாய்ப்பு பார்த்து தன் திருமணத்தைக் கச்சிதமாய் முடித்துக் கொண்டாளே? போகட்டும். அத்தோடு அடங்கிக் கிடக்க வேண்டியதுதானே?

காரியங்கள் சாதிக்க வேண்டுமென்றால், அதற்கு எவ்வகையிலேனும் துணிந்து விடுவதா?

இப்படியெல்லாம் இவளை நோக்கி வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறதே? அப்படியென்றால் அவள் பேரில் என்ன கோளாறு?

"தம்பி‚ உங்களுக்குத் தெரியாது… தெரிஞ்சிக்கிட்டீங்கன்னா, நம்ப ஜாதியில இப்படியொருத்தியான்னு ஆச்சரியப்படுவீங்க…"

"என்ன சொல்றீங்க?" – வியப்போடு வாய் பிளந்தேன் நான்.

"பொம்பளைல நாலு வகை. யானை, குதிரை, முயல், மான்னு சொல்வாங்க… ‘அடங்காத’ குதிரை வகையைச் சேர்ந்தவ இவ. அடங்காதன்னு நான் சொல்ற வார்த்தைக்குப் பல அர்த்தம் உண்டு…"

அவரின் பேச்சும், அந்த அலுவலகத்தில் உள்ள மற்ற எல்லோரின் ஒதுங்கலும், குறிப்பாகப் பிற பெண் பணியாளர்களின் ஒதுக்கலும், உண்மை தான் என்பதை அன்று ஒருநாள் தற்செயலாகக் கடைவீதியில் போய்க் கொண்டிருந்த போது என் பார்வையில் பட்ட காட்சியை வைத்து உறுதி செய்து கொண்டேன்.

"அட, கண்றாவியே? இவ்வளவு நெருக்கமும், அந்நியோன்யமுமா? இவனுடனா? எப்படி இது?"

"தெரியாதா ஒங்களுக்கு? சின்னப்புள்ள நீங்க… அட, போங்க… ரொம்ப பழைய விஷயமாச்சே இது…"

"எனக்கு புதுசாச்சே… சொல்லுங்களேன்…" என்றேன்.

"எந்நேரமும் கை தீவட்டியோட, பொகை விட்டுக்கிட்டே, இருமிக்கிட்டு அலைவானே… அவன் தான் அவளோட புருஷன்… அதாவது வச்சிக்கிட்டவன்… அவன அவ வச்சிக்கிட்டாளா இல்ல அவள அவன் வச்சிக்கிட்டானா… இத அவுங்ககிட்டதான் கேட்கணும்… ஆளப் பார்த்திருக்கீங்ல்ல? என்ன பர்சனாலிட்டின்னு? இவளுக்கு அவங்கிட்ட நோங்கியிருக்கு. என்னத்தச் சொல்றது? ஆனாப் புடிச்சிப்புட்டான்ல? விழுந்துட்டால்ல அவளும்? அதான் தெறமை… இங்க நம்ம ஆபீஸ்ல எவனுக்காச்சும் முடிஞ்சிச்சா? எத்தனை பேர் அலையுறான் நாய் கணக்கா நாக்கத் தொங்கப் போடடுக்கிட்டு அவ குண்டியவே பார்த்துப் பார்த்து ஏங்குறானுங்களே… எவனுக்காச்சும் படிஞ்சிச்சா? அதத்தான் நீங்க அங்க கவனிக்கனும்… காரியக்காரிங்க அவ… காரியக்காரி… நினைச்சா முடிச்சுப்புடுவா… இல்லன்னா எடுத்த எடுப்புல எந்த அப்ளிகேஷனும் கொடுக்காம அவ இந்த மாவட்டத்துல அதுவும் இந்த ஆபீஸ்ல காலடி வைக்க முடியுமா? சரி, கெடந்துட்டு போகட்டும்னு விட்டுட்டாகல்ல…?"

"என்ன தம்பி, நல்லாயிருக்கீங்களா? சரி, போயிட்டு வாங்க…" இதுதான் அவன் அவளோடு சேர்ந்து எதிர்ப்பட நேர்ந்த அந்தர்ப்பங்களில் பேசும் பேச்சு…!

"என்ன தம்பி நல்லாயிருக்கீங்களா? சரி, போயிட்டு வாங்க… இதுதான் அவன அவளோடு சேர்ந்து எதிர்ப்பட்ட நேர்ந்த சந்தர்ப்பங்களில் பேசும் பேச்சு…"

ஊருக்கும் வெட்கமில்லை, உலகுக்கும் வெட்கமில்லை… அத்தனையும் உதிர்த்தவர்களுக்கு என்ன இருக்கு? துணிஞ்ச கட்டைக்கு துக்கமேது?

அட, எல்லாம் போகட்டுமய்யா… அந்தப் புருஷன்காரன்னு ஒருத்தன் எதுக்கு இருக்கான்? எதுக்குத் தான் அவன் புருஷனாயிருக்கான்?

படிச்சவன், ஒரு நல்ல கௌரவமான உத்தியயோகத்துல இருக்கிறவன் இப்படியாயிருக்கிறது?

அந்த மாதிரி கௌரவமான பொசிஷன்ல இருக்கிறதுனாலதான் இப்படி கண்டுக்காம இருக்காரோ?

(தொடரும்)

(‘திரை விலகல்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author