சீதை (2)

‘சீதை’ முன்பகுதி இங்கே! https://www.nilacharal.com/ocms/log/05121406.asp
வெயிலுக்கு இந்த உக்கிரம் இருக்கும் என்று நாச்சியார் அறியாள். நந்தவனத் தென்றல் கவரி வீசி வாழ்ந்தவள் அவள். அக்காலங்களில் மரம் சூழாத வீடு உண்டா! மரம் அணிவகுக்காத வீதி உண்டா! தெருவோரப் பூங்காக்கள். மர சமூகத்தில் கர்ப்பப்பைக்குள் போல இருந்தான் மனிதன். பாதுகாப்பாக. தேரோடும் வீதிகளில் இரவில் உயர ஸ்தம்பங்களில் விளக்கு ஏற்றுவார்கள். இரவுக்கு தீபப்பொட்டு. இயற்கை தானே பொட்டு வைத்துக் கொள்வதும் உண்டு. முழுநிலாக் காலங்கள் அற்புதமானவை! அப்படி தினங்களில் கோவில் பிராகார மண்டபத்தில் பாட்டும் கூத்துமாய் விடிய விடியக் கொண்டாட்டம். ஊருக்குள் இருள் நுழைய படுத்துறங்க உடம்பைச் சாத்திவிடும் ஜனங்கள் அரைத் தூக்கமும் குறைத் தூக்கமுமாய்க் கூத்து பார்ப்பார்கள்.

எந்தக் காலத்து விக்கிரகம் தெரியலையே!

முதலாம், இரண்டாம் என்று மன்னன் பெயர்கள் நாச்சியாருக்குப் புதியவை. விஷயங்களை விட இப்படி விவரங்களையும் அடையாளங்களையும் தேடி மனிதன் இந்நாட்களில ஏன், எப்படி மாறிப்போனான்! எல்லாம் தெரியும் என்று சொல்ல ஆசை. எல்லாவற்றையும் வெளிப்படையாக்கு. ரகசியம் அற்று இரு. பிய்த்து வீசி உண்மையை வெளிக்கொணர். வானத்தைச் சட்டைப் பைக்குள் அடைக்கிற ஆவேசம். அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டும் யத்தன மோகம். மூர்க்கம்.
யாராரோ வந்தாப் போலிருக்கிறது. அரசு அதிகாரிகள். அவர்கள் வந்த வாகனம் புதியது அவளுக்கு. குதிரைகள், ஆநிரைகள் என்கிற குளம்படிகள் ஒழிந்த காலம், என்பதே ஆச்சரியம்தான். வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள், சிறு பசுக்களாய், சொம்பு நிறைக்கிற காலமா இது! உழவு படுத்த காலமா இது? உழவர் இன்று தொழுதுண்டு பின் செல்கிறார்கள். மழை பொய்த்த காலம். பெய்யென மழை பெய்விக்கிற காலம் காலாவதி ஆகியிருந்தது. என்னாயிற்று? இயற்கையை இப்படி திசைதிருப்பி விட்டவர் யார்? நாச்சியார் அழுதுவிடுவாளாய் இருந்தது. ஏன் நான் இப்போது இப்படி மீண்டும் வந்தேன்? மீண்டு வந்தேன்?

கையில் வைத்திருக்கிற பூதக் கண்ணாடியால் விக்கிரகத்தை நெருக்கமாய்ச் சோதிக்கிறார்கள். நரைத்த தலையும், குறுந்தாடியுமாய் அவர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர். அந்தப் பகுதி ஜனங்கள் அவரையே ஆர்வத்துடன் உற்றுப் பார்க்கிறார்கள். இந்த விக்கிரகத்தின் வயதை அவரால் சொல்ல முடியுமா? இது எந்த மன்னனின் காலம் என்று அவரால் கணிக்க முடியுமா?

"சார், கிணறெடுக்கலாம்னு நல்ல வாஸ்து நாள் பார்த்து நான் வயலைத் தோண்ட ஆரம்பிச்சனுங்க…"

அவர்கள் பேசும் மொழியில் எத்தனையோ விளங்காத வார்த்தைகள் இருந்தன. நாச்சியாருக்குப் பல வார்த்தைகள் புரியத்தான் இல்லை. பல பிரதேச மனிதர்களின் சங்கமத்தில் பல மொழிகள் ஊடறுத்து, புழக்கத்துக்கு எனப் பல மொழிகளின் வார்த்தைகள் கலந்து முயங்குகின்றன. ஆனால் இந்தப் பிரதேச மக்கள் அந்நிய மொழியின் வார்த்தைகளைத் தாங்களும் ஏன் கையாள ஆரம்பிக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை. நம்மிடம் இல்லாத சொற்கள் எனில் பரவாயில்லை. அந்நியச் சொற்களை இப்படி சகஜமாக, அதாவது தன்னைப்போல அனுமதிக்கிறார்கள்.
சேதி மெல்ல காற்றுத் தீ போலப் பரவி எல்லை விரிகிறது. அடியே உனக்கு விஷயம் தெரியுமா? ஏண்டி நீ கேள்விப்பட்டியா? (இல்ல, நான் கோவில்பட்டி.) உலை வாயை மூடலாம். ஊர் வாயை மூட முடியுமா? அவளவள் அடுப்பில் கொதிக்கிற உலையை, விறகை இழுத்து அமர்த்திவிட்டு மாரிமுத்து வயலுக்கு அணிவகுத்தார்கள். ஊர் சுவாரஸ்யத்துக்குக் காத்துக் கிடந்தது.
யார் நீங்க?

தினத்தந்தி.

அவன் பெட்டியில் இருந்து, அட மின்னல் வெட்டியது! நாச்சியாருக்குக் கண் கூசியது. என்னதான் நடக்கிறது இங்கே, என்று கண்ணைச் சுருக்கினாள் நாச்சியார். இடை சிறுத்த தனம் பெருத்த நாச்சியார், வதங்கிய வெற்றிலையாய்த் தெரிந்த அந்தப் பெண்களையிட்டு இரக்கப்பட்டாள். தொடை வரை கால் வரை தொங்கும் கூந்தல் காலங்களை அவர்கள் அறிய மாட்டார்கள். உழைப்பு சார்ந்து வாழ்க்கை வசதிகளை அவர்கள் மெத்தையாய்ச் சுருட்டி வைத்துவிட்டு வெளியே இறங்கியதாகத் தெரிந்தது. கட்டாந் தரைப் படுக்கை. மெத்தையே அவர்கள் அறியார்.

வாஸ்தவத்தில் கோவிலுக்குள் அவர்கள் அனுமதிக்கப்பட்டவர்களே அல்ல. பட்டும் பீதாம்பரமும் உடுத்திய வணிகர்களும், பெருந்தனக்காரர்களும், பிராமணர்களும், அரசனுமே வந்துபோவதாய் இருந்தது அக்காலம். பூக்களாலும், கற்பூராதி வாசனை திரவியங்களாலும் கோவில் எப்பவும் மணத்துக் கிடந்தது. வெளிப் பிராகார நந்தவனங்களின் காற்று நாய்களாய் உன்மத்தக் கிறுகிறுப்புடன் சுற்றித் திரிவதாய் இருந்தது.

பாமர ஜனங்களைப் பார்க்க வந்ததே நல் அனுபவமாய்த் தோன்றியது நாச்சியாருக்கு. இந்த உழைத்த உடம்பின் வியர்வை நெடி, இதுவும் இயற்கை பூசிய நெடிதானே? நாம் இதற்கும் பழகிக்கொண்டுதானே ஆகவேண்டும்? உழைப்பை அறிவிக்கிற இந்தப் புனித நீர் தீர்த்தமே அல்லவா?
புதிர்களைப் போட்டபடி, புதிர்களை விடுவித்தபடி நகர்கிறது காலம். மாற்றங்களை கணந்தோறும் நிகழ்த்தியபடி நகர்கிறது அது. சித்திரங்கள் கணந்தோறும் மாறுகின்றன. அதை அறிகிறவர்கள், உணர்கிறவர்கள் பாக்கியவான்கள். இந்த உலகில் எதுவும் நிரந்தரம் அல்ல. சாஸ்வதம் அல்ல. எதுவும் அற்பமும், நிலையற்றதும் அல்ல. சில நம் கண்ணுக்கு முன்னே வருவதும், சில பின்தள்ளப்படுவதுமாய் வேடிக்கைக் கிலுகிலுப்பை. நம்மைக் குழந்தையாய் ஆக்கி நமக்குக் காட்டுகிறது காலம்.

"ஊரில் தண்ணி இல்லை. வெயில் படு போடு போடுது. ஆறு குளம் வத்திட்டது. மழை பெய்வது அடியோடு குறைஞ்சிட்டது. தாயே, நாங்க என்ன பண்ணுவது? நீ வந்திருக்கே… எங்களுக்கு என்னமாச்சிம் நல்லது பண்ணிட்டுப் போ!"

அதிகாரி புன்னகை செய்து கொள்கிறார். திரும்பிக் கூட்டத்தில் நிற்கிற வேறொரு நபரிடம் பேச ஆரம்பிக்கிறார். இப்படித்தான் அம்பாசமுத்திரத்தில்…

எல்லாரிடமும் கதைகள் கிளைக்க ஆரம்பித்த வேளை அது.

"யாருப்பா வயல் ஆளு?"

"நாந்தானுங்க" என மாரிமுத்து முன்வருகிறான்.

"நீ சொன்னதையெல்லாம் இந்த ஸ்டேட்மெண்டுல எழுதியிருக்கோம். கையெழுத்து போடு…"

"ஐய! நான் கைநாட்டுங்க. விரல் ரேகை…"

"இப்ப என்னய்யா பண்றது?"

"என் பையன் படிச்சவன். அவன் போடுவான் என் சார்பா. படித்துக் காட்டப்பட்டதுன்னு
எழுதிப்பிடுங்க."

"உன் பேர் என்னப்பா?"

"தம்பிதுரைங்க சார்!"

வெயிலின் உக்கிரத்தில் ஜனங்களும் மெல்ல ஆர்வம் சுருங்குகிறார்கள். “விக்கிரகத்தை நம்ம தாலுக்காபிஸ் கொண்டுபோயி வெச்சிரலாம். பிறகு முறைப்படி தொல்பொருள் ஆய்வில் இருந்து கடிதம் கொடுத்து வாங்கிக்கட்டும்” என்கிறார் அதிகாரி. அவர் பேசவே அலுப்பாய் உணர்ந்தார். உடம்புரீதியான அநேக உபாதைகள் அவருக்கு இருந்தாப் போலிருந்தது. ஆனால் பேசினால் அதில் ஒரு அதிகார தொனியைப் பிரயோகிக்க அவர் தவறவில்லை.

அந்தக் கூட்டம் மெல்ல வழிவிடுவதாய் இருந்தது. ரெண்டு சாரியிலும் ஜனங்கள். விக்கிரகத்தை யாரோ எடுத்து அணைத்துக் கொள்கிறார்கள். அவளுக்கு ஞானதேசிகன் ஞாபகம் வந்தது. அந்த ரெண்டு சாரி ஜனங்கள் வழியே போகையில் தட்டுப்பட்ட அந்த முகம் வித்தியாசமாய் இருந்தது. அவளுக்கு ஞாபகத்தில் இருந்தது அந்த முகம்.

முகமே மயிர்ப்புதரான முகம். கண்ணில் அந்த ஆசை வெறி. அட! இது இங்க இருக்கிற விவரம் தெரியாமப் போச்சே… என்பதான ஆதங்கம் அது. காதுகளைத் தீட்டிக்கொண்டாள் நாச்சியார். அவள் எதிர்பார்த்தது சரி. திரும்பி அவளால் அவனைப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் காதில் கேட்டது.
"நல்ல ஐம்பொன் சிலை! நான் தேடிட்டிருக்கேன்டா இதை. எப்படியும் கடத்தினால் லட்சத்துக்கு மேல போகும்."

அன்றைய ராத்திரி விசித்திரமாய் இருந்தது நாச்சியாருக்கு. அலுவலக அறையின் வாசனைகள் வேறு மாதிரி. கோவிலின் கர்ப்பகிரகம் அல்ல இது. பழைய காகிதங்களின் நெடி இங்கே. வாசலில் பணியாள் ஒருவன் தூக்கக் கலக்கத்துடன் உட்கார்ந்திருக்கிறான். பொழுது மெல்ல குளிர்ந்து, சூரியனில் இருந்து மீண்டு இருட்டு சூழ்ந்துவிட்டது.

அந்தப் பணியாள் திடீரென்று உள்ளே வந்து விளக்கைப் போடுகிறான். தாயே, என்னால் உன்னைக் கோவிலுக்குள் வந்து கும்பிட முடியாது. நீயே என்னைத் தேடி வந்துவிட்டாய். அப்படியே விழுந்து வணங்கினான் அவன். "என் பொண்ணுக்கு வயசு 36 ஆயிட்டது. இன்னமும் கலியாணம் ஆகலை. நீதான் மனசு வெச்சி…"

வெளி வராந்தா விளக்குகள் தவிர வேறு வெளிச்சம் இல்லாத நிலை. சாத்தப்பட்ட கதவுகளிலும் ஜன்னல்களிலும் நிறுத்தி வைத்த நூலாய் வெளிச்சம். உள்ளே கசிகிற வெளிச்சம். திடுதிப்பென்று கதவு மெல்ல, சத்தம் இல்லாமல் திறந்தது கேட்டது. அவள் தூங்கவில்லை. பணியாளா? இல்லை. அவன்… அந்தத் திருடன். அவனை அவள் எதிர்பார்த்திருந்தாள். அவன் கண்ணின் அந்த வெறி, அது அவனை இங்கே வரை இழுத்து வந்துவிடும் என்று நினைத்திருந்தாள்.

பணியாள் எங்கே போனான், தெரியவில்லை. இவன் எப்படியோ அவனை ஏமாற்றிவிட்டு உள்ளே வந்திருக்கிறான். அப்படியே நாச்சியாரை அணைத்துத் தூக்கியபடி வெளியே அடிமேலடி வைத்து வந்தான். சுவர்க் கடிகார ஒலிகளை விட மென்மையாய் அவன் நடந்துபோனான்.

கூட யாரோ வெளியே காத்திருக்கிறார்கள்.

"இப்பவே வெளியே கொண்டுபோய் வித்தால், போலிஸ் உஷாராய் இருக்கும்டா. மாட்டிக்குவோம்."

"அப்ப?."..

"தோட்டத்தில் கொஞ்சகாலம் இதைப் புதைச்சு வைக்கலாம். ஊர்ப் பரபரப்பு அடங்கிய பிறகு வெளிய எடுத்துப் போயி விக்கலாம்."

அவர்கள் தோட்டப்பக்கமாய்ப் போனார்கள். இன்னுங் கொஞ்சகாலம் நிம்மதியாய் உறங்கலாமாய் இருந்தது நாச்சியாருக்கு.

(முடிந்தது)

About The Author