தருணம் (3.1)

வாழ்க்கையில் சில நாட்கள், சில பொழுதுகள், சில மணிகள், சில விநாடிகள் கூட – முகூர்த்த வேளைகளாக மீதி வாழ்க்கை முழுவதிலுமாய் நினைவுகூர்கிற அளவில் அழுத்தமான பதிவுகளாக, தழும்புகளாகவோ அல்லது நல்வாசனைகளுடனோ நிலைத்து விடுகின்றன. துரும்படியில் பானை படுத்திருந்து திடீரென்று எழுந்து வந்தாப்போல அந்தக் கணங்கள், வாழ்க்கையின் திசையைத் திருப்பி விடுவதுமான சந்தர்ப்பங்களும் உண்டு. மக்த்தான அந்தத் தருணங்களை, நித்தியத்துவம் பெற்றுவிடுகிற அந்த நிகழ்வுகளைக் கண்டுகொண்ட, உள் தரிசனப்பட்ட படைப்புகள் வாசிக்க அற்புதமான தனித்தன்மையான அனுபவங்கள் தான். அத்தகைய காத்திரம் மிக்க படைப்பாளிகள் மாத்திரம் அல்ல, அதை வாசிக்க வாய்க்கிற வாசகர்களும் அதிர்ஷ்டசாலிகள் தான்.

தொகுப்பு – எஸ். சங்கரநாராயணன்

தருணம் 3

கவர்னர் பெத்தா
மீரான் மைதீன்

"அஸ்ஸாலாமு அலைக்கும். இன்று காலை சுமார் ஒன்பது மணி அளவில் தமிழக கவர்னர் மாண்புமிகு பாத்திமாபீவி அவர்கள் நம்முடைய தர்ஹாவுக்கு வருகைதர இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எல்லோரும் கலந்து சிறப்பிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்."

சுபுஹ் தொழுகைக்குப் பிறகு விடிந்து கொண்டிருந்த அதிகாலைப் பொழுதில் தர்ஹா ரேடியோவிலிருந்து காலைக் காற்றில் கலந்துவந்த அறிவிப்பை எல்லோரும் கேட்டார்கள். தொழுகைப் பாயிலிருந்த பீர்மா பெத்தாவுக்கு இருப்பு வரவில்லை. உடனடியாக தர்ஹாவுக்குப் போக வேண்டும் என்ற தவிப்பும் துடிப்பும் அவளின் மனம் முழுவதும் பரவிக் கிடந்தது. பெரையில் கிடந்த களக்கம்பு ஏணியைத் தூக்கி சாய்த்து வைத்து மெல்ல தட்டுக்கு ஏறிவந்து கிழக்குப்பக்கம் சாயம்போன கலர் சேலையைப்போல ஒரு தினுசாய்ச் செவந்து கெடந்த ஆகாயத்தைப் பார்த்தாள். ஆகாயம் தொடுவது போலவே நின்ற தர்ஹா மினரா அவளின் கண்களுக்குள் வந்தது.

அலங்கரிக்கப்பட்டிருந்த மினரா உச்சியில் கொடி பறந்து கொண்டிருந்தது. தெருவைப் பார்த்தாள். யாருமில்லை. பீர்மா பெத்தாவுக்குக் கோபமாய் வந்தது.

"சே, என்ன ஜென்மங்கோ, கவர்னர் வாராவோ. நேரத்த முழிப்போம்னு பாக்குதுவளா. லெட்சணம் கெட்டதுவோ. சே.. சே…"

தெருவில் இறங்கி நடந்து விடலாமா. நினைப்பு வந்த உடனே மகனோ அல்லது பேரனோ.
"எங்களா போற துக்கே… வயசு காலத்துல ஒரு எடத்துல கெடவராதாளா?" என்று திட்டுவார்கள். பீர்மா பெத்தாவுக்கு மகனோ பேரனோ பேசுவது கூட கவலை தராது. ஆனால் மருமகள் தமாஷ் அடிப்பாள்.

பத்து நாட்களுக்கு முன்னால் கவர்னர் தர்ஹாவுக்கு வரப்போகிறார் என்ற செய்தி ஊருக்குள் குசுகுசுக்கப்பட்டாலும் பீர்மா பெத்தாவின் காதுக்கு அது எட்டவில்லை. அமலா கான்வெண்டு ஸ்கூல்டேக்கு பேரனின் இங்கிளீஸ் டிராமா பார்க்கப்போன மறியம் பெத்தா வந்த உடன் பீர்மா பெத்தாவிடம் ஒருவாடு பீத்தி விட்டுச் சொன்னாள்.

"பிள்ளா, பீர்மா, தர்ஹாரோட்ல ரோடுபோடுதானுவோ பாத்துக்கோ….. உனக்கு என்னமும் தெரியுமா?"

"என்ன நீக்கம்போ எனக்கென்ன தெரியும்…"

"உச்செக்கு ஒருவாடு போலீஸ்காரன்மாருவளும் தர்ஹா கிட்ட வந்தானுவளாம்…."

"அந்த களுசாம்பறையோ இங்கே எதுக்கு வந்தானுவோ…."

மறியம் பெத்தா கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியாமல் பீர்மா பெத்தா எதிர்கேள்வியாகவே கேட்டாள். பீர்மா பெத்தாவிடம் ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என வந்த மறியம் பெத்தாவிடம் ஏமாற்றமாகிப் போனது. மறியம் பெத்தாவின் முகத்தை உற்றுப்பார்த்த பீர்மா பெத்தாவுக்கு அவள் ஏமாந்து போனதை அறிய முடிந்தது. அந்த முகத்தோடு அவளை அனுப்ப பீர்மா விரும்பவில்லை.

"பீர்மாட்ட கேக்கலாம்னு போனேன், அந்த துக்கேக்கு ஒண்ணும் தெரியலே…" என்று வேறு யாரிடமாவது போய்ச் சொல்லுவாள். அது தனது கௌரவத்துக்கு இழுக்காகிவிடும் என்பதை பீர்மா உணர்ந்தவளாய் தாண்டிப்போன மறியத்தைப் பார்த்து"பிள்ளா மறியம் நில்லுளா. எம்பேரன்ட்ட கேப்போம்." பேரனை அழைத்து பீர்மா கேட்டாள்.

"லே வாப்பா… தர்ஹாகிட்ட, ரோடு போடுதானுவளாமே… போலீஸ்காரன் மாருவளும் வந்தானுவளாமே."

"உள்ளதுதான்."

"என்னத்துக்குலே…"

"அது… நம்ம தர்ஹாவுக்கு கவர்னர் பாத்திமா பீவி வாராங்களாம்."

"பாத்துமாயியா… இஸ்லாமானவளா?"

"பின்னே…" பேரன் தலையாட்டினான்.

பீர்மாவுக்கும் மறியத்துக்கும் முகங்களில் தவழ்ந்த புன்னகை காற்றில் கலந்து அவர்களின் வயதை ஒத்த அனைவரின் முகங்களிலும் அடுத்த அரைமணி நேரத்தில் தவழத் தொடங்கியது.

"இதுக்கு முன்னால அவா பெரிய ஜட்ஜியா இருந்தாளாம். கேரளத்துக்காரியாம். முட்டாக்கும் போட்டுட்டு எப்புடி இருக்கா தெரியுமா…. பேப்பர்ல போட்டுருக்கானுவோ…"

செய்தூன் பெத்தா வீட்டுத்திண்ணையில் நூரு பீவியும், சேனாம்மாவும் விசயங்களோடு அமர்ந்திருந்தனர். சுப்பிரமணி அண்ணாச்சியின் அம்மா வடுவாச்சியும் கூட இருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தூன் பெத்தா பேப்பரைக் கொண்டுவந்து பீர்மாவிடம் கொடுத்தாள். கவர்னர் பற்றிய செய்தியும் போட்டோவும் படிக்கத் தெரியாது. மறியத்துக்கும் அப்படித்தான், செய்தூனும், சேனாம்மாவும் எழுத்துக்கூட்டிப் படிப்பார்கள். எல்லோரும் முண்டியடித்து அந்த பேப்பர் துண்டை எச்சி ஒழுக உத்துப்பார்த்தனர்.

கவர்னரின் புன்னகையான முகமும் அதிலே கச்சிதமாக இருந்த கண்ணாடியும் கருப்புவெள்ளை படத்தில் மங்கலாகத் தெரிந்தாலும்கூட பட்டுச்சேலையின் பளபளப்பு, பட்டுச்சேலையின் ஒருபாகம் கவர்னரின் தலையில் முட்டாக்காய்க் கவிழ்ந்து கம்பீரமாய் கிடந்த விதமும் பீர்மாவை சிலிர்க்க வைத்தது. உற்றுப்பார்த்தாள். அவளின் பார்வையில் நிறையத் தேடல்கள் இருந்தன.

ஸலாம் சொல்லிவிட்டு கவர்னர் பாத்திமா பீவியின் கரங்களைப்பற்றி "என்னா சொகமா இருக்கியளா?" என்று உடனே ஒரு வார்த்தை கேட்க வேண்டும் போல இருந்தது.

ஊரின் அனேக வீடுகளிலும் கவர்னர் புராணம் தொடங்கி விட்டது. தெருவிலும், கடைப் பக்கத்திலும், குளத்திலும் எல்லா இடங்களிலும் கவர்னர் பற்றி எப்படியாவது ஒரு பேச்சு வந்துவிடும். ஒருவரை ஒருவர் எதிர் எதிரே பார்க்கும் போதெல்லாம்

"இன்னும் எட்டு நாள் பாக்கி…"

"எதுக்கு?"

"கவர்னர் வாரதுக்கு."

"படச்சவனே, மறந்தே போச்சி."

கசாப்புக்கடை மாஹீன் வீடுவீடாகப் போனார்.

"கவர்னர் வர அன்னைக்கு மூணு கிடாய் அறுக்கப்போறேன். கறி வேணும்னா சொல்லுங்கோ…"

எனக்கு ரெண்டுகிலோ எனக்கு ஒண்ணு என வீட்டுக்கு வீடு ஆடர் கூடிக் கொண்டே வந்தது. கசாப்பு மாஹீன் திங்கள் சந்தைக்குப் போய் மேலும் மூன்று கிடாய் பிடித்துவந்து தெருவில் அவர் வீட்டு முன்னால் தென்னை மரத்தில் கட்டிப் போட்டிருந்தார்.

சின்னப் பையன்மாரெல்லாம் கிடாயைச் சுற்றிச் சுற்றி வந்தனர். ஆடுபோல கத்தினார்கள். ஒரு பையன் தென்ன ஈக்கலை எடுத்து ஐந்தாறு சாத்து சாத்தினான். கிடாய் முன்னங்காலைத் தூக்கி முட்டுவதற்குத் தயாரானது.

"முட்டுதுக்கா பாக்கா. ஒன்னைய சங்கரபுங்கரயாக்கிப் போடுவேன்…" என தூரமாய் ஓடிப்போய் ஒரு கல்லெடுத்து சரியாக எறிந்து விட்டான்.

"மேய்.. ம்மேய்…." சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து கசாப்பு மாஹீன் பாய்ந்து வந்தார். அவரைக் கண்டதும் பயலுவ நாலா பக்கமும் சிதறி ஓடினார்கள். எதிரே வந்த மஸ்தான் பிள்ளை "என்னடே… சின்ன புள்ளய வெரட்டுதே…"

"பின்னே அவனுவோ கவர்னர் கிடாய கல்லெடுத்து எறியானுவோ…" இதன் பிறகு கசாப்பு மாஹீன் வீட்டு முன்னால் நின்ற ஆறு கிடாய்களையும் கவர்னர் கிடாய் என்றே ஊரில் எல்லோரும் கூப்பிட்டனர்.

கவர்னர் தர்ஹாவுக்கு வர இன்னும் ஐந்து நாட்களே மிச்சம் உள்ளது. இதற்கிடையில் தெருவில் நின்ற ஐந்தாறு பாடாவதி எலக்டிரிக் போஸ்டில் லைட்டு போட்டார்கள். புதிதாகப் போட்ட தெருவிளக்கு வெளிச்சம் எலாக்கரை வரை பரவிக்கிடந்தது. அவுசான் பிள்ளை தெருவிளக்கை நிமிர்ந்து பார்த்தபடி "நல்லா இருக்கட்டு கவர்னரு. அவ புண்ணியத்துல லைட்டாவது போட்டானுவளே…"பையன்மாரெல்லாம் வெளிச்சத்தில் பாட்டோ, இடியாண்டோ விளையாடினார்கள். பொட்டப்புள்ளைளுவ சைக்கிள் பாண்டி விளையாடினார்கள். கசாப்பு மாஹீன் வீட்டு முன்னால் விழுந்த வெளிச்சத்தில் கவர்னர் கிடாயின் கண்கள் மின்னூட்டம் பூச்சியைப்போல் மின்னின.

திண்ணையில் அமர்ந்து வெத்திலை தட்டிக் கொண்டிருந்த பீர்மாவுக்கு ஒரு பட்டு கசவு கவுணியும் ஒரு குப்பாயமும் எடுத்தால் கொள்ளாம் போல இருந்தது. வீட்டுக்குள் போய்ப் பார்த்தாள். ஈஸி செயரில் மகன் சாய்ந்து கிடந்தான். கண்கள் மருமகள் இருக்கிறாளா எனத் தேடியது. மருமகள் அடுக்களையில் வேலையாக இருந்தாள். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மகனிடம் கேட்டாள்.

"மௌனே…" நிமிர்ந்து பார்த்தான்.

"எனக்கொரு பட்டுகசவு வச்ச கவுணியும், சட்டையும் தச்சி தாலே…"

"இப்போ எதுக்கு…"

"எனக்கு வேணும்."

"பெருநாளுக்குத் தானே எடுத்தோம். அதுக்கெடையில இப்போ எதுக்கு…" பீர்மாவுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. மௌனமாக நின்றாள். மகன் அவளின் மூஞ்சியைப் பார்த்தபடி இருந்தான்.

"கவர்னரு.. தர்ஹாவுக்கு வாரால்லா. அதான்…" தயங்கித் தயங்கிச் சொல்லி முடிக்கும் போது மருமகள் வந்துவிட்டாள்.

"ஆமா கவர்னரு வந்து நேர கையைப்பிடிச்சித்தான் குலுக்கப் போறாளாக்கும்…" எல்லோரும் கொல்லெனச் சிரித்தார்கள். பீர்மாவின் முகம் சுண்டிப் போனது. மகன் கண்களில் கண்ணீர் வருமளவு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். பீர்மாவுக்கு அழுகை வந்துவிட்டது.

–தொடரும்…

About The Author