தில்லு முல்லு – இசை விமர்சனம்

இருபது ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த படம் இப்போது அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் மீண்டும்!!! இதில் பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனும், இளந்தலைமுறை இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்திருப்பது குறிப்பிட வேண்டிய புதுமை! மெட்டுக்கு எம்.எஸ்.வி, இசைக்கு யுவன் என வித்தியாசமாக வந்திருக்கும் பாடல்களைப் பற்றிப் பார்ப்போம்.

தில்லு முல்லு

இது ஒரிஜினல் பாடலின் ரீ-மிக்ஸ் வடிவம். எம்.எஸ்.வி-யுடன் இதை யுவன் இணைந்து பாடியிருக்கிறார். இடையில் ஆங்கில வார்த்தைகளால் ஜிகினா தூவியிருக்கிறார்கள். அதைத் தவிர்த்திருக்கலாம். இசை முன்னதிலிருந்து மாறுபட்டு நிற்கிறது. யுவனின் குரலில் புதிய குதூகலம் தெரிகிறது!

துளி:
சத்தியத்தைச் சொல்லிவிட்டு
தத்துவத்தை விட்டுவிட்டு
போவதும் வாழ்வதும் லாபமா பாவமா?

கைபேசி எண் கூட

தன்னவளின் பார்வை போதுமாம் வாழும் காலம் வரை. காதல் ததும்ப கவிஞர் வாலி எழுத, உருகிப் பாடியிருக்கிறார் ரஞ்சித். காதலுக்குச் சமகால ஊழலையும் உவமை ஆக்கியிருக்கிறார்கள். வார்த்தைகளை உறுத்தாத இசை, மென்மையான மெலடி. நிச்சய வெற்றி இதற்கு உறுதி!

துளி:
விடையில்லாக் கேள்வி நீ நிலக்கரி ஊழல் போல் நீள்கிறாய்!
தடைகளைத் தகர்த்து நீ அடிமையை அரசி போல் ஆள்கிறாய்!

ராகங்கள் பதினாறு

அதே இசை, அதே வரிகள்! இது ரீ-மிக்ஸ் இல்லை, மறு உருவாக்கம்! குரல் மட்டும் எஸ்.பி.பி-க்குப் பதில் கார்த்திக். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக முன்னதை விட இதில் துல்லியம் அதிகம். கிட்டத்தட்ட நான்கு நிமிடம் நாமும் ராகங்கள் பயிலலாம். இன்னும் காலம் கடந்து எம்.எஸ்.வி-யின் புகழ் பாடும் பாடல். இன்றைய இளைய தலைமுறை இரசிக்க வித்தியாசமான படைப்பு.

துளி:
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா!

ஆஜா ஆஜா

இப்பாடலை நா.முத்துகுமார் எழுத, ஹரிச்சரண் மற்றும் பிரியா ஹிமேஷ் இணைந்து பாடியிருக்கிறார்கள். தொடக்க இசை யுவனின் முந்தைய படைப்புகளை நினைவுபடுத்துகிறது. பாடல் மெதுவாகக் கடக்கிறது. புதிய முயற்சி என்று எதுவும் இல்லை. வரிகள் கொஞ்சம் ரசிக்க வைக்கின்றன.

துளி:
"கள்ளப் பார்வைகள் போதும் செல்லச் சண்டைகள் வேண்டும்
வேறு என்ன நான் கேட்டேன், கண்களால் மோதடி
சின்ன பிள்ளைகள் போலே உன்னைக் கொஞ்சிட தோன்றும்
கன்னம் கிள்ளிட வேண்டும், அன்பே வா வா"

தில்லு முல்லு – பழைய ஒயின் புதுக் கோப்பையில்!

About The Author